இலக்கியம் என்ன செய்யும்?

பொதுவாக என்னுடைய விடுமுறை நாட்கள் புத்தகங்களுடன்தான் செலவாகும். இது விரும்பி எடுத்த விடுப்பு அல்ல. கட்டாய விடுப்பு.

விடுப்பில் இவ்விரண்டையும் வாசித்து முடித்துவிட்டேன்.

பொதுவாக சாருவின் எழுத்து ஒவ்வொருவரையும் ஒருமாதிரி influence செய்யும். அது அவரவரின் அன்றைய வரையிலான தனிப்பட்ட குணங்கள் பழக்கவழக்கங்கள் சார்ந்ததாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு மனதளவில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்தேன். லௌகீக வாழ்வின் மிக மோசமான தோல்வியில் சுருண்டிருத்தேன். அதிலிருந்து நான் மீள எனக்காக ஏதேதோ செய்துவந்த என் அம்மா ஒரு கேள்வி கேட்டார். உனக்கு எல்லா வகையான உதவியும் செய்தாகிவிட்டது. இதற்கு மேலும் உனக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியவில்லை என்று‌.

என் அலமாரிகளில் இருந்த சாருவின் புத்தகங்களை எடுத்த வாசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப காலத்துக்கு முன்பு படித்தது. அதாவது 2011-ல். எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தவன் என்ற மிதப்பில் இருத்த காலம். (அதிகளவில் சுய முன்னேற்றப் புத்தகங்களை படிப்பதினால் வரும் Mental status. சுய முன்னேற்றத்தில் பல பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று. பணக்காரன் ஆக வேண்டும் என்றால் பணக்காரனைப் போல நடந்து கொள்.)

இரண்டு நேரெதிர் மனநிலையில் சாருவை சந்தித்திருக்கிறேன். இன்றைக்கு சினிமாவில் அடுத்தகட்ட நகர்வுக்கு அவரின் எழுத்து எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. அன்பு குறித்து சாரு எழுதியிருக்கும் புது புத்தகத்தின் சாரம் என் வாழ்க்கையில் இருப்பதாக உணர்கிறேன்.

சாருவின் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்தபிறகு என் அடிப்படைத் தேவையை மிகச் சரியாக புரிந்துக் கொள்ள முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் என் அம்மாவின் தேவையை அவர் விருப்பத்தையும் மிக சரியாக புரிந்துக்கொள்ள முடித்தது.

சுருக்கமாகச் சொன்னால், மனத்தெளிவு பெற்றேன். எத்தனை கோடி செலவு செய்தாலும் கிடைக்கப் பெறாத மனத்தெளிவு. இரண்டாவது முறையாக இலக்கியம் என்னை காப்பாற்றியிருக்கிறது.

நவீன் குமார்