நான் எப்பவும் சௌந்தர்ய லஹரியில் நீந்தித் திளைப்பவன். அதனால் ஓஷோவைப் பிடிக்கும். மற்றபடி அவர் பேச்சைக் கேட்டதில்லை; எழுத்தைப் படித்ததில்லை. பெண்களை விட ஆண் அழகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு சௌந்தர்யன் நிர்குண். அவர் கவிதைகள் நான் நிர்குண், இது நிர்ஹோஸ்தியஸ் என்று முடியும். ஒரு நாளில் பத்து கவிதைகள் எழுதுவார் போல. நள்ளிரவில் எழுதியது சில. அதிகாலையில் எழுதுவது சில. எப்படியெனக் கேட்டபோது இரண்டு மணி நேரமே உறங்கும் நேரம் என்றார் நிர்குண். ஆன்மீகவாதி. இலக்கியத்தில் ஆன்மீகவாதிகள் அரிதினும் அரிது. அதை விட அரிது, அவர்கள் சாருவை நாடி வருவது.
அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று பவானியில் வசிக்கும் நிர்குணனைச் சந்திக்கச் செல்கிறேன். ஈரோடு அருகில் இருக்கிறதாம் பவானி. நான்கு நாள் அவரோடு இருப்பேன். எனக்கு கடலை விட நதி பிடிக்கும். மேகாங் நதியைக் காண்பதற்காகவே தாய்லாந்தின் ஈசான மூலைக்குச் சென்றேன், இரண்டு முறை. என்னைப் பற்றிய ஆவணப்படம் (அவ்ட்ஸைடர்) மேகாங் நதிக்கரையிலும் எடுக்கப்பட்டது.
நிர்குணின் கவிதை ஒன்று கீழே தருகிறேன். அதற்கு அடுத்து வருவது நிர்குணின் புகைப்படம்.

