தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றான ஸ்வர ராக ஸூதாரஸவை செம்மங்குடியின் குரலில் கேட்டுக் கொண்டிருந்த போது இதை எழுதத் தோன்றியது. இந்தக் கீர்த்தனையில் செம்மங்குடியின் ஆலாபனையையும் நிரவலையும் ஸ்வரப் பிரஸ்தாரத்தையும் ரசிக்க முடியாதவர்கள் செவியின் பயன்பாட்டை இழந்தவர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கீர்த்தனையின் பொருளைக் கூட விட்டு விட்டு மேற்கூறிய மூன்றையும் கவனியுங்கள். தேன் வந்து பாயும் காதினிலே… ஆலாபனை என்பது கீர்த்தனைக்கு முன், வரிகள் இல்லாமல், ஸ்வரங்களை (ச, ரி, க, ம, ப, த, நி) மட்டும் பயன்படுத்தி, ராகத்தின் உணர்வையும் கட்டமைப்பையும் மெதுவாக விரிவாக்கி பாடப்படும் பகுதி. இப்போதைய சுவர ராக ஸுதாரஸ கீர்த்தனையில், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் சங்கராபரண ராகத்தின் ஆலாபனையைப் பாடி, அதன் ஆழமான உணர்வை வெளிப்படுத்துகிறார்
நிரவல் என்பது ஒரு கீர்த்தனையின் குறிப்பிட்ட வரியை (பொதுவாக பல்லவி அல்லது சரணத்தில் ஒரு வரி) எடுத்து, அதை ராகத்தின் அமைப்பிற்கு உட்பட்டு பலவிதமான மாறுபாடுகளுடன் (சங்கதிகள்) பாடுவது. நிரவல், குறிப்பிட்ட வரியின் பொருளையும், உணர்ச்சியையும் ஆழப்படுத்துவதோடு, பாடகரின் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது. ஸ்வர ராக ஸுதாரஸ கீர்த்தனையில், “ஸ்வர ராக ஸுதாரஸயுத” என்ற வரியை எடுத்து, செம்மங்குடி அதை வெவ்வேறு ஸ்வர சேர்க்கைகளுடன் பாடுகிறார்.
ஸ்வரப் பிரஸ்தாரம் என்பது கீர்த்தனையின் பாடல் வரிகளை விட்டுவிட்டு, ராகத்தின் ஸ்வரங்களை (ச, ரி, க, ம, ப, த, நி) மட்டும் பயன்படுத்தி, தன்னுடைய கல்பனா சக்திக்கு ஏற்பப் பாடுவது. இது முற்றிலும் இசை அமைப்பைச் சார்ந்தது. அதாவது, ஸ்வரங்களை வெவ்வேறு வேகங்களிலும், கலவைகளிலும், தாளத்திற்கு ஏற்பப் பாடுவது. ஸ்வர ராக ஸுதாரஸ கீர்த்தனையில், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் சங்கராபரண ராகத்தின் ஸ்வரங்களை (ச ரி க ம ப த நி) பயன்படுத்தி, வேகமாகவும், மெதுவாகவும், மற்றும் சிக்கலான வடிவங்களிலும் பாடுகிறார்.
கீர்த்தனையின் பொருளை தியாகராஜா நாவலின் ஊடாக நீங்கள் காணலாம். அதனால் இப்போதே கொடுப்பதைத் தவிர்க்கிறேன்.