மூவாயிரம் ஆண்டுகளாய் ஒரே கதை!

ஏற்கனவே எழுதிய ஒரு சம்பவத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.  இடம், ஒரு பெருநகர். என் வாசக நண்பர் ஒருவர் என்னைக் காண வேண்டும், புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார்.  நான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொன்னேன்.  சுமார் முப்பது புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  எல்லாம் நான் எழுதிய நூல்கள்.  மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினார்.  அவருக்கு நாலைந்து சினிமா தியேட்டர்களும், ஒரு பஸ் கம்பெனியும் இருந்தது.  ஊரறிந்த கோடீஸ்வரர்.

வேசியிடம் கூட இப்படி ஓசி ஓள் போட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.  மிகவும் நல்லவர்கள்.  அறம் சார்ந்து வாழ்பவர்கள்.  யாருக்கும் ஒருபோதும் பொல்லாங்கு நினையாதவர்கள்.  நியாயமானவர்கள்.  என்னிடம் ஒரு புத்தகத்தை வாங்குவார்கள்.  ஔரங்ஸேப் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  அதன் விலை என்ன?  ஒரு 950 ரூபாயா?  ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள்.  நானும் நல்லவன் இல்லையா?  கஷ்டப்பட்டு பாக்கெட்டுகளைத் தேடி ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுப்பேன்.  சேச்சே, என்ன சாரு, வைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.   வைத்துக் கொள்வேன்.

உண்மையில் முதலில் குறிப்பிட்ட தனவந்தருக்கும் இந்த நியாயவான்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

புத்தகத்தின் விலையை என்னிடம் கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு நான் என்ன புத்தக வியாபாரியா?  உங்களிடம் புத்தகம் விற்பதற்கா ஊரிலிருந்து புத்தகத்தைச் சுமந்து கொண்டு வந்தேன்?  முப்பதாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் பல வாசகர்கள் எனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார்கள்.  என் புத்திரன் பத்து லட்சம் மாத ஊதியம் வாங்கிக் கொண்டு ஒரு பைசா அனுப்புவதில்லை.  பல வாசகர்கள் மூணு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாய் அனுப்புகிறார்கள். 

ஆகவே, என்னிடம் புத்தகத்தை நீட்டி கையெழுத்து வாங்கினால் தாரளமாகப் பண உதவி செய்யுங்கள்.  நான் புத்தக விழாவைச் சொல்லவில்லை.  அங்கே நீங்கள் பல ஆயிரங்களுக்குப் புத்தகம் வாங்க வேண்டும்.  மற்றபடி என்னிடம் தனிப்பட்ட முறையில் புத்தகம் வாங்குபவர்களை மனதில் வைத்து இதைச் சொல்கிறேன்.

இதை விட வெளிநாட்டில் வாழ்பவர்கள் பலர் நிஜமான பரதேசிகளாக இருக்கிறார்கள்.  2000-இல் நான் பாரிஸ் சென்ற போது ஐம்பது பிரதி ஸீரோ டிகிரி நாவலை எடுத்துச் சென்றிருந்தேன்.  நூறு ரூபாய் விலை.  அதை ஏழால் வகுத்து 15 ஃப்ராங்க் கொடுத்தார்கள்.  அதாவது, ஒரு ஃப்ராங்குக்கு ஏழு ரூபாயாக இருந்தது அப்போது. 

நான் அந்த 15 ஃப்ராங்கைத் திருப்பிக் கொடுத்து விட்டு, நூறு ஃப்ராங்க் கேட்டேன்.  என் ஊரில் நூறு ரூபாய் என்றால், இங்கே நூறு ஃப்ராங்க் என்றேன்.  நூறு ஃப்ராங்குக்கு யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.  அங்கே அப்போது கெட்டி அட்டை நூல்களின் விலை 80 ஃப்ராங்க் என்று இருந்தது.  பிறகு ஒருவழியாகப் பேரம் படிந்து 60 ஃப்ராங்க் வாங்கினேன். 

எனவே, புத்தகத்தை பதிப்பகத்திடமிருந்தோ கடையிலோ வாங்கினால்தான் புத்தகத்தின் விலையைத் தர வேண்டும்.  எழுத்தாளனிடமிருந்து வாங்கினால் நன்கொடையாகத் தருவதே சிறப்பு.

ஏன் என்று விளக்குகிறேன்.

தமிழ் எழுத்தாளன் மட்டுமே இலவசத்துக்கு உழைக்கிறான்.  வணிகப் பத்திரிகையில் எழுதினாலும் இதே கதிதான்.  உதாரணமாக, நான் ஒரு பயணக் கட்டுரைத் தொடர் எழுதினேன்.  நான்கு வாரத்துக்கு 900ஐ நாலால் பெருக்கி 3600 ரூ கொடுத்தார்கள்.  மீதி நானூறு வரிக்கு எடுத்துக் கொண்டார்களாம்.  நான் அந்தப் பயணத்துக்கு செலவு செய்தது பத்து லட்சம்.  (சீலே பயணம்)  இதையே இலக்கியப் பத்திரிகையில் எழுதினால் ஒரு பைசா தர மாட்டார்கள்.  ஏனென்றால், ஆசிரியர் தன் பொண்டாட்டி தாலியை விற்றுத்தான் பத்திரிகையே நடத்துகிறார்.  நான் ஒரு இலக்கியப் பத்திரிகையில் பதினைந்து ஆண்டுகள் மாதாமாதம் கட்டுரை எழுதுவேன்.  ஊரே படித்துக் கொண்டாடியது.  ஒரு திரைப்பட விமர்சனம் எழுதினால் சினிமா உலகில் உள்ள அத்தனை பேரும் படித்தார்கள்.  கமல்ஹாசன் பத்திரிகை ஆசிரியருக்கு ஃபோன் போட்டு என்னை அரை மணி நேரம் திட்டினார்.  (தசாவதாரம் விமர்சனம்!)  ஆனால் அதை வெளியிட்ட ஆசிரியர் தன் தோழியின் கைவளையை விற்றே அச்சகத்துக்குத் தர வேண்டிய பல மாத பாக்கியைக் கொடுத்தார்.  என் மனைவி கேட்பாள், என்னது, ஓசியிலா எழுதுகிறாய்? 

அடப் போம்மா, வணிகப் பத்திரிகைக்கே நான் ஓசியில்தான் எழுதுகிறேன் என்பேன்.  ஆமாம், பத்து லட்சம் செலவு செய்து கட்டுரை எழுதினால் 900 ரூ. தருகிறார்கள்.  அதுவும் ஓசியில் எழுதுவதும் ஒன்றுதானே?

பா. ரஞ்சித் இப்போது நன்றியுடன் நினைவு கூர்கிறார்.  எனக்கு சாருவின் சினிமா கட்டுரைகள் ஆரம்பத்தில் சினிமாவைக் கற்றுக் கொள்ள பெரிதும் உதவின.  பாருங்கள், என் பெயரை நன்றியுடன் உச்சரிக்கும் ஒரே இயக்குனர் ரஞ்சித் தான். 

இதனால்தான் நான் வாசகர்களாகிய உங்களிடம் யாசகம் கேட்கிறேன். 

என் மொழிபெயர்ப்புக்கு மட்டும் கடந்த இருபது ஆண்டுகளாக ஐம்பது லட்சம் ரூபாய் செலவிட்டிருக்கிறேன்.  ஔரங்ஸேபுக்கு மட்டும் அஞ்சு லட்சம்.  பெட்டியோவுக்கு மூணு.  வீண் செலவு அல்ல.  இப்போது என் பெயர் இந்தியா முழுவதும் பிரபலம்.   

நண்பர்களே, கடந்த 3000 ஆண்டுகளாக புலவர்கள் பிச்சைதான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  கீழே உள்ள பாடல் ஒரு உதாரணம்:       

ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்

ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,

பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,

இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை

சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,

நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என்

மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,

நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!

என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத்

தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய

பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,

மண் அமை முழவின், வயிரியர்

இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

பெருந்தலைச் சாத்தனார் பாடிய இப்பாடலின் பொருள்:  வீட்டில் உணவு இல்லாமல், குழந்தைகள் பசியால் அழுது தவிக்கின்றனர்; என் மனைவி கண்ணீர் வடிக்கிறாள். நீ என் நிலையை அறிந்திருந்தும் உதவி செய்யவில்லை. இன்மையைத் தீர்க்கும் குடிபிறந்த வள்ளலே, இசைக்கருவிகளைப் போல என் துயரைத் தாங்கி, உதவு!

இன்னொரு பாடல்:

புறநானூறு 182 – அவ்வையார்

“நீயே பெரும! நின் புகழ் மாண்டது;

நின் தாள் வாழி! நின் உள்ளம் உயர்ந்தது!

புலவர் பாடல் பரிசில் தருவோய்!

என்னைப் புரந்து, பொன்னும் பொருளும் தா!”

ஆனானப்பட்ட ஔவைக்கே இதுதான் நிலை! நானெல்லாம் எம்மாத்திரம்!