வளன்,
தியாகராஜாவை எழுதுவது என் வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஆக உச்சமானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீயும் உடன் வந்தபடியே இருக்கிறாய். தியாகராஜரை சந்திக்கும் ஃப்ரெஞ்சுப் பாதிரி எத்தியனின் நிஜ வடிவம் நீதான். நீதான் தியாகராஜரை சந்திக்கிறாய்.
இன்றைய அத்தியாயத்தில் வளன் தியாகராஜரிடம் ஹேண்டலின் மெஸையாவைப் பாடிக் காண்பிக்கிறான். அதற்கு தியாகராஜர் என்ன எதிர்வினை செய்கிறார் என்பதை நீ நாவலில் வாசித்துக் கொள்ளலாம். நாவலின் முதல் வாசகனாக நீதான் இருக்கப் போகிறாய். எத்தியனிடம்தானே எத்தியன் இடம் பெறும் நாவலைக் கொடுக்க வேண்டும்?
மெஸையாவை இன்று மீண்டும் கேட்டேன். “நீங்கள்தான் என் வாழ்வில் மிக அதிகமான வலியையும், கண்ணீரையும் தந்தீர்கள்” என்று சொல்லி இன்று ஒரு பெண் என்னிடம் இறுதி விடை பெற்றாள். மிகுந்த சந்தோஷத்தையும் பெரும் விடுதலை உணர்வையும் தந்த தருணம் அது. எனக்கு இது ஒரு நோய். மஸாக்கிஸம் என்று சொல்வார்கள். வளர்த்த கடா மாரில் பாய்ந்தால் அதை ஒரு இன்பமாய் எடுத்துக் கொள்வது.
நாம் தரும் அமுதம் அடுத்தவருக்கு நஞ்சாகப் போகிறது.
அந்த இன்பமான தருணத்தில் மெஸையாவைக் கேட்டேன். யேசுவின் பிறப்பு, அதைத் தொடரும் கொண்டாட்டங்கள் என்னை வானுலகுக்கு இட்டுச் சென்றன.
ஆரட்டோரியோவின் இரண்டாம் பகுதி யேசுவின் துன்பங்கள் மற்றும் சிலுவை மரணம். “He Was Despised” மற்றும் “Surely He Hath Borne Our Griefs” போன்ற ஆரியாக்களும் கோரஸ்களும் யேசுவின் துயரம், யேசுவின் வேதனை. அழுது கண்ணீர் விட்டபடியே கேட்டேன். இதற்கு நிகரான தியாகராஜரின் கீர்த்தனைகள் நாவலில் வரும்.
இன்னும் நிறைய சொல்லலாம். நாவலின் சுவாரசியம் கெட்டு விடும். நீ ஹேண்டலின் மெஸையாவைக் கேட்டிருப்பாய். மீண்டும் ஒருமுறை நான் சொன்ன பின்னணியோடு கேட்டுப் பார். ஹல்லேலூயா கோரஸைக் கேட்ட பிறகு தியாகராஜரின் நகுமோமு அல்லது ஜகதானந்தகாரக கீர்த்தனைகளைக் கேள். கேட்டால் என்ன நடக்கும் என்று ஃபோனில் சொல்கிறேன். இப்போது நான் சொல்வதே அதிக பட்சம்!
சாரு