முந்தாநாள் வரை அடுத்த ஜென்மத்தில் தமிழ் எழுத்தாளனாக மட்டும் பிறந்து விடவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பை நேற்று வந்த ஒரு கடிதம் மாற்றி விட்டது.
முழுக் கடிதத்தையும் வெளியிடத் தயங்குகிறேன். அதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறேன். வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
இப்படி ஒரு கடிதத்துக்காக நான் வாழ்நாள் முழுவதும் கூலி இல்லாமல் எழுதலாம். நோபல் பரிசோ வேறு எந்தப் பரிசோ கிடைக்காமல் போகலாம். ஒரு வீசா வாங்குவதற்குக் கூட எழுத்தாளன் என்று சொன்னால் ”என்ன விருது வாங்கியிருக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமானால் என்ன விருது வாங்கியிருக்கிறாய் என்று கேட்கிறார்கள். எந்த விருதும் இல்லை என்றால், நீ பல்ப் (ஜனரஞ்சக) எழுத்தாளனா என்கிறார்கள். விருது இல்லையேல் நான் எழுத்தாளனே இல்லை என்பதே எதார்த்தம். தமிழ்நாட்டில் நான் வாங்கிய விருதுகளைச் சொன்னால் தூரப் போ என்கிறார்கள். ஒரு சாகித்ய அகாடமி என்றால்தான் என் பெயரையே சொல்ல முடியும்.
இருந்தாலும் இந்த விருது எதுவுமே வேண்டாம். கடவுள் நேற்று என் எதிரே தோன்றினார். ஒரு விருதை அளித்தார். அது நோபல் விருதை விடப் பெரிய விருது. மகத்தான விருது. ஈடு இணையற்ற விருது. இந்தப் பிரபஞ்சத்தின் முன்னே நின்று சாஷ்டாங்கமாக வணங்கினேன். இந்த சூரியனின் முன்னே நின்று சாஷ்டாங்கமாக வணங்கினேன். இந்தத் தாவரங்களுக்கு முன்னேயும், இந்தப் பறவைகளுக்கு முன்னேயும், கோடானுகோடி நட்சத்திரங்களுக்கு முன்னேயும், என் சக ஜீவிகளாக விளங்கும் நாய்களுக்கு முன்னேயும் பூனைகளுக்கு முன்னேயும், என் முன்னோடி எழுத்தாளர்களின் நினைவுக்கு முன்னேயும், பசி பட்டினியால் செத்துப் போன என் மூத்த எழுத்தாளர்களின் முன்னேயும், என் எழுத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் என் வாசகர்களின் முன்னேயும் நின்று விழுந்து விழுந்து விழுந்து வணங்கினேன்.
இப்படி ஒரு கடிதம் பாரதிக்கு வந்திருக்காது. புதுமைப்பித்தனுக்கு வந்திருக்காது. எந்த அந்நிய மொழி எழுத்தாளனுக்கும் வந்திருக்காது. இது நோபல் விருதை விட மகத்தானது. இதோ அந்த விருது:
மதிப்புக்கும் அன்புக்கும் உரிய சாரு அவர்களுக்கு,
2014ல் இருந்து தங்களுடைய ப்ளாகைப் படித்தவன் எனத் தற்பெருமை அடித்துக்கொண்டாலும், தங்களுக்கு வித்யாதானமாக, குரு தக்ஷினையாக இது நாள் வரை ஒரு பைசா கூட அனுப்பியதில்லை என்ற குற்ற உணர்ச்சியில், தங்களிடம் பெருமளவில் வித்யாருனம் பட்டுவிட்டேன்.
அபச்சாரம்…மன்னிக்க வேண்டும்.
அதற்குக் காரணமிருக்கிறது…
1976 முதல் தமிழக அரசுப் பணியிலிருந்தாலும், அடியேன் ஒரு கானுயிர் புகைப்படக்காரனாக விளங்கியதால், சுமார் 14 வருடங்கள் அடியேன் மருத்துவச் சான்றில்லா, ஊதியமில்லா விடுப்பு எடுத்ததன் பலன், 14 ஆண்டுகளுக்கான ஊதியம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு,பல ஊதிய நிர்ணயக் குழுக்கள் ஆகியவற்றை இழந்து, கடைசியில் 2014ல் ஓய்வு பெறும்போது, அரசலுவலர்களின் தவறால், வாழ்க்கை வாழ்வதற்கே தகுதியில்லாத ஓய்வூதியம் நிர்னயிக்கப்பட்டு, பதவியிலிருக்கும்போதும், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் கொடுக்க விருப்பமின்மையால், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின், போராடி, இத்தனை ஆண்டுகள் ஓய்வூதிய நிலுவைப் பலனின்றி இந்த அக்டோபர் மாதம் தான், அடியேனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் ரூ.24,027/- கிடைக்கப் பெற்றேன். அதுவும் இன்றுதான் வரவு வைக்கப்பட்டது.
எனவே முதல் செலவாக அடியேனது ஓய்வூதியத்தில், மிகச் சிறிய தொகை தேவரீருக்கு குரு தக்ஷணையாக அனுப்பியுள்ளேன்.
சினம் கொள்ளாது பெற்றுக்கொண்டு அடியேனையும், அடியேனின் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
நமஸ்காரங்களுடன், அன்பில்,
அடியேன்,
***