திரும்பத் திரும்ப விஷயதானம்…

ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற என்னுடைய சமீபத்திய நாவலின் கடைசிப் பத்தியில் இதைச் சொல்லியிருக்கிறேன்.

என்னைச் சந்திக்கும் எல்லோருமே சொல்வது ஒன்றுதான். “என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள்.”

அதற்கு என்னுடைய வேண்டுகோள்: எனக்கு விஷயதானம் கொடுக்காதீர்கள்.

கொடுத்தால் எழுதுவேன். நான் விஷயதானம் என்று சொல்வது எதெல்லாம் என்றும் அதில் எழுதியிருக்கிறேன்.

ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் என்னை சந்தித்தான். என் எழுத்தோடு சம்பந்தம் இல்லாதவன். என் வாசக நண்பர் ஒருவரின் மகன். பிரியும்போது “என்னைப் பற்றி எதுவும் எழுதி விடாதீர்கள் அங்க்கிள்” என்றான்.

உடனே எழுதினேன். டேய் நீ யார்? உன்னைப் பற்றி எழுதுவதற்குத் தோதாக நீ என்ன செய்திருக்கிறாய்? பெரிய படிப்பு படித்து விட்டு, இன்னமும் அப்பன் ஆயாவை சுரண்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறாய். ரத்தத்தை விற்று உன்னைப் படிக்க வைத்த அவர்களுக்குத் திரும்ப எதுவும் செய்ய வேண்டும் என்ற நினைப்பு கூட – ஆம், வெறும் நினைப்பு கூட உனக்கு இல்லை – உன்னைப் பற்றி நான் என்ன எழுதுவது? நீ என்ன சாதனையாளனா, உன்னைப் பாராட்டி எழுத? உன்னைப் போன்ற ரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப் பற்றி எழுத என்ன இருக்கிறது?

ஆக, வருவோர் போவோர் எல்லோருமே சொல்லும் வாக்கியம், என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள்.

சரி, நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். எனக்கு விஷயதானம் அளிக்காதீர்கள் என்பதுதான்.

கிட்டத்தட்ட வாரம் ஒருமுறை ஒரு வாசகி எனக்கு விஷயதானம் அளித்துக்கொண்டிருக்கிறார். அவருக்காகவே நாவலில் ஒரு முப்பது பக்கம் செலவழித்திருக்கிறேன். அத்தனை விஷயதானம் அளித்தவர் நேற்றும் ஒரு விஷயதானம் அளித்திருக்கிறார்.

என்னிடம் முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது, அதை அனுப்பினால் நாவல் பிடிஎஃப் ஐ அனுப்புவீர்களா?

வாசகியிடம் தாராளமாக அனுப்புவேன் என்று எழுதினேன். அனுப்பினார். நாவல் பிடிஎஃப் ஐ அனுப்பினேன்.

மறுநாள் காலையில் வாசகியின் நண்பரிடமிருந்து எனக்கு வாட்ஸப் செய்தி, நாவலைப் படித்தேன், பிரமாதம்.

நண்பர் பணம் அனுப்பினாரா என்று ராஜாவுக்கு ஃபோன் போட்டுக் கேட்டேன். இல்லை என்றார்.

ஆக, வாசகிதான் பிடிஎஃப் ஐயும் அதற்கான பாஸ்வேர்டையும் அனுப்பியிருக்கிறார்.

நேற்று அவந்திகாவுக்கும் எனக்கும் ஒரு உரையாடல்.

நாவல் பிடிஎஃப் இல் எந்த விதத்தில் அனுப்புகிறாய் என்று கேட்டாள். சொன்னேன். நாவலை வாங்குபவர்கள் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்வார்களே என்றாள்.

மாட்டார்கள் என்றேன். ஏனென்றால், கௌபீனத்தைக் கூட கழற்றியெறிந்து விட்டு, திகம்பரமாக அலையும் சந்நியாசி ஃப்ராடு வேலை செய்வாரா? இலக்கியமும் அதே மாதிரிதான். இலக்கியத்தை உருவாக்குபவரும் சரி, அதை வாசிப்பவரும் சரி, ஓர் மகத்தான உலகில் வாழ்கிறார்கள். அங்கே ஏமாற்றுவேலைக்கே இடம் இல்லை என்றேன்.

வாசகி செய்தது ஏமாற்றுவேலை என்று சொல்லவே இல்லை. அவரும் அவர் நண்பரும் இது போன்ற விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்வது அவர்களது சுதந்திரம்.

ஆனால், நான் ஏன் இந்த நாவலை பிடிஎஃப் மூலம் விற்கிறேன் என்பதை அந்த வாசகியும் அவர் நண்பரும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் விளக்கமாகவே எழுதினேன்.

என்னுடைய நான்கு நாவல்களின் மொழிபெயர்ப்புக்காக எனக்குப் பதினைந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நாவலை நான் பதிப்பகத்தில் கொடுத்தால் இருநூறு பிரதி விற்கும். இருநூறு ரூபாய் விலை என்றால் ஒரு புத்தகத்துக்கு எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை இருபது ரூபாய். ஆக, இருநூறு பிரதிக்கு 4000 ரூ. இதை வைத்துக்கொண்டு நான் பேஸ்ட் பிரஷ்தான் வாங்க முடியும். அதனால்தான் பிடிஎஃப் இல் கொடுக்கிறேன். உங்களால் முடிந்ததைக் கொடுத்து வாங்குங்கள் என்றேன்.

ஒரு நண்பர் 50000 ரூ. கொடுத்து வாங்கினார். மனதுக்குள் அவருக்கு நன்றி சொன்னேன். ஒரு மாணவன் நூறு ரூபாய் அனுப்பினான். அவன் எனக்கு மிகவும் தெரிந்தவன். பிடிஎஃப் ஐ அனுப்பலாமா என்று கேட்டார் ராஜா. தாராளமாக அனுப்புங்கள் என்றேன்.

ஆனால் முந்நூறு கொடுத்து வாங்கி அதை நண்பரோடு பகிர்ந்து கொண்டால் அது நியாயமா? இது எப்படி நடந்திருக்க வேண்டும்? “முந்நூறு ரூபாய் அனுப்புகிறேன். இது எனக்கும் என் நண்பனுக்குமான தொகை” என்று எழுதியிருக்க வேண்டும்.

அல்லது, நான் அறியாமலாவது நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஒரு புத்தகம் என்றால் அதை எத்தனை பேர் வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசிக்க வேண்டும். ஆனால் பிடிஎஃப் – அதிலும் பாஸ்வேர்டெல்லாம் இருக்கிறது – அதைக் கண்டபடி பகிர்ந்து கொள்வது என்றால், நான் என்ன கேணையனா? ஏன் தான் இப்படி வாரம் ஒருமுறை விஷயதானம் அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?

நீங்கள் பிடிஎஃப் ஐ யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், என்னிடம் சொல்லுங்கள். நானே அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அனுப்பும் தொகை இரண்டு பேருக்கானது என்று எனக்கு சொல்லி விடுங்கள். ஏனென்றால், இது போன்ற செயல்களால் நான் எதற்காக பிடிஎஃப் மூலம் விற்கிறேனோ அந்த நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.

ஏன், உங்கள் நண்பரிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லையா?

என் தோழி ஒருவர் தன் பெற்றோர் வீட்டில் வாழ்கிறார். ஆனால் மாதாமாதம் பெற்றோருக்கு வாடகை கொடுத்து விடுகிறார். இத்தனைக்கும் ஒரே காம்பவுண்ட் தான். பெற்றோர் வீட்டிலும், என் தோழி அவுட் ஹவுஸிலும் வசிக்கிறார்கள். அவுட் ஹவுஸில் வசிக்க வாடகை கொடுக்கிறார் தோழி. இத்தனைக்கும் தோழிக்குப் பெரிய வருமானமும் இல்லை. தோழியின் செயலுக்குக் காரணம், பொறுப்புணர்வு. ஓசியில் வாழ்வது என்பது இன்றைய சமூகத்தின், குறிப்பாக இளைய தலைமுறையின் வாழ்முறையாக மாறி விட்டது.

திருவண்ணாமலையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி நடத்தினேன், உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அங்கே காரில் வந்த ஒரு இளைஞன் – மேலே குறிப்பிட்டேனே, என்னைப் பற்றி எழுதி விடாதீர்கள் என்று சொன்னவன் – தன் நண்பனோடு சென்னையிலிருந்து வந்தவன் பணமே கொடுக்காமல் கலந்து கொண்டான். தான் மட்டும் அல்ல, தன் நண்பனோடு. காரில் பெட்ரோல் போட்டது மட்டும் காசு கொடுத்தா, ஓசியிலா? தன் பெற்றோரை உறிஞ்சுவது போதாது என்று பெற்றோரின் நண்பனையும் உறிஞ்சும் செயல்.

ஓசியில் வாழப் பழகி விட்டால் அதை எப்போதுமே மாற்றிக் கொள்ள முடியாது. ஒரு மாணவன் நூறு ரூபாய் அனுப்பினான் பாருங்கள், அதுதான் பொறுப்புணர்வு.

***

நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai