ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்…

பின்வருவது கணேஷ் அன்பு எழுதியது:

காமாலைக் கண் கொண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியுமாம். வாழ்நாளெல்லாம் சொம்பையே தூக்கி தூக்கி நசுங்கிப் போனவனுக்கு அடுத்தவனைப் பார்த்தாலும் சொம்பு தூக்குறாங்களோ என சந்தேகிக்கத்தான் தோன்றும். ஒரு சொம்பு நசுங்கிப் போய் சொன்னது இது

// வெள்ளை காக்கா பறக்கிறது என்று சாரு சொன்னால், “ஆமாம். வெள்ளை காக்காதான் பறக்கிறது” என்று அராத்து ஒப்புக் கொள்வார். “ஆமாம், ஆமாம். வெள்ளை காக்கா கூட்டமாக பறக்கிறது” என்று கூடவே பஜனை செய்ய நான்கு எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்ட்டுகளை சேர்த்து வைத்து இருக்கிறார்கள் //

நசுங்கிப்போன பழம்பெரும் சொம்பே…

ஒரு எழுத்தாளன் தனது ஜீவனாக கருதுவது தன்னுடைய படைப்பை. தனக்கான மரியாதையைக் கூட விட்டுக்கொடுத்து விடுவான், தன் படைப்பிற்கான மரியாதையை புனிதமாக கருதுவான். அத்தகைய படைப்பை இன்னொரு எழுத்தாளனிடம் படிக்க கொடுத்து செருப்படி வாங்கிக்கொள்வதுதான் இங்கே வழக்கம். ஆனால் சாரு தனது வாசகர்களிடம் படிக்க கொடுக்கிறார். அது பிடிக்கவில்லை என அவரிடமே சொல்கிறோம்.விரிவாக விமர்சனம் செய்கிறோம்.அத்தனையும் எதிர்மறை விமர்சனம். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டார். அனைத்து விபரங்களையும், யார் எப்படி எப்படி நன்றாக இல்லை என கூறினார்கள் என விளக்கமாக தனது ப்லாகில் பகிர்கிறார். இதான் சாரு. இதுதான் சாரு வாசகர் வட்டம். அங்கு நிலவுவது சுதந்திரம். கொண்டாட்டம். சாரு எழுதி விட்டார் என்பதற்காக ஆஹா ஓஹோ என புகழவில்லை. சொம்பு தூக்கியே நொந்துபோன ஒரு கேரக்டருக்கு கொண்டாட்டமும் சுதந்திரமும் ஆயுள் முழுக்க புரிய போவதே இல்லை. கடைசி காலம் வரை காழ்ப்புணர்ச்சியுடன் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! ஆனாலும் சொம்பு தூக்குவதும் ஒரு கலைதான். நயமாக சொம்பு தூக்க வேண்டிய ஆளுக்கு சொம்பு தூக்கி செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்கள்.இந்த சொம்பு இதிலும் வேஸ்ட். உருப்படவே உருப்படாத நசுங்கிப்போன சொம்புக்கே சொம்பு தூக்கி தூக்கி வீணாப்போன சொம்பு.

எக்ஸைல் வெளியீட்டின்போது சொம்பு அமர்ந்திருந்த அதே வரிசையில்தான் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது சாரு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.
“ நான் ஒரு முக்கியமான விஷயத்துக்கு சஜஸன் கேட்டால் என் கூட இருக்குற நாலு பேரும் நாலு விதமா கருத்து சொல்லுவாங்க. என் கூட யாருமே ஒத்துவர மாட்டாங்க” அரங்கமே சிரித்தது. இதையெல்லாம் சொம்பு சாதகமா மறந்துடுச்சி போல.

http://charuonline.com/blog/?p=1193

***

மேலே கணேஷ் அன்பு குறிப்பிட்டுள்ள விஷயம் பற்றி எழுதினால் இப்போது பத்து பக்கம் போகும்.   நானோ சோறு தண்ணி இல்லாமல் எக்ஸைல் எடிட்டிங் வேலையில் இருக்கிறேன்.  எப்படியென்றால், ஏன் இவ்வளவு நாள் இழுக்கிறது என்றால், முன்பெல்லாம் நாவலை எழுதி முடிக்காமலேயே வெளியீட்டு விழாவுக்கு அரங்கத்தில் தேதி குறித்து விடுவது என் வழக்கம்.  தமிழ்நாடு பூராவும் அப்படித்தான் நடக்கிறது.  ஆனால் இனி என் விஷயத்தில் அப்படி நடக்க அனுமதிக்க மாட்டேன்.  நாவலில் எல்லா வேலையும் முடிந்த பிறகுதான் வெளியீட்டு விழாவுக்கான தேதியே குறிக்கப்படும்.  அதுவும் நாவல் முடிந்த உடனே அல்ல; பதிப்பகமும் சம்மதிக்க வேண்டும்.  அதற்குப் பிறகுதான் எல்லாம்.  எடிட்டிங் ஒரு வாரத்தில் முடிந்து விடும்; மூன்றாம் முறை செய்யும் கடைசி எடிட்டிங் தானே என்று நினைத்தேன்.  ஆனால் அதுவே பயங்கரமாக இழுக்கிறது.  படித்துக் கொண்டே வந்த போதுதான் கொக்கரக்கோ எனக்கு எப்படி அறிமுகமானான்; கொக்கரக்கோ யார் என்றெல்லாம் எழுதவில்லையே என்று தோன்றியது.  எழுதினேன்.  50 பக்கம்.  அந்த இடம் எந்த ஒரு உலக இலக்கியத்திலும் பார்க்க முடியாது.  ஸோர்பா தெ க்ரீக் நாவலில் ஸோர்பாவும் எழுத்தாளனும் ஆட்டுக்கறி சுட்டு சாப்பிட்டு விட்டு டான்ஸ் ஆடுவார்களே அந்த இடத்தையும் தாண்டிய இடம், கொக்கரக்கோ தன்னைப் பற்றி உதயாவுக்கு எழுதும் அறிமுகக் கடிதம்.  அது ஒரு சாகசக் கதை போல் இருக்கும்.  இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.  இதுவரை 1,76,000 வார்த்தைகள் ஆகியிருக்கிறது.  A4-இல் 1400 பக்கங்கள் வந்துள்ளது.  நான் பக்கங்கள் பற்றியோ, எப்போது முடியும் என்பது பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை.  அது பற்றி நினைக்கவும் இல்லை.  இந்த நாவல் இவ்வளவு விரிவான எழுத்தைக் கோருகிறது.

ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.  நான் வெள்ளைக் காக்கா பறக்கிறது என்று சொன்னால் அது காக்காவே இல்லை; சிட்டுக் குருவி என்பார் கருப்பசாமி.  அதற்காகப் பந்தயம் எல்லாம் கட்டுவார்.  இப்போது கூட திமுக ரெண்டு சீட் கூட வராது என்று கனவு கண்டேன் என்று ஹைதராபாதில் வைத்துச் சொன்னேன்.  அட போங்க சாரு, நீங்க பேப்பர் கூடப் படிப்பது கிடையாது என்றார்.  நான் சொன்னதையே சொன்னேன்.  என்ன பந்தயம் என்றார்.  ஒரு முறை சீலே ட்ரிப் என்றேன்.  அவ்ளோ பணக்காரன் நான் இல்லை, ஒரு ரெமி மார்ட்டின் என்றார்.  முடிவு உங்களுக்கே தெரியும்.  ஆனால் சில சமயம் நான் வெள்ளைக் காக்கா பறக்கிறது என்றால் ஓரிருவர் ஆமாம் என்கிறார்கள்.  அது என்ன விஷயம் தெரியுமா?  நான் சொன்னவுடன் காகங்கள் வெள்ளையாகி விடுகின்றன.  பல்லுயிர் ஓம்பும் ஒரு தமிழ் எழுத்தாளன் நம்மைப் பார்த்து வெள்ளைக் காக்கா என்று சொல்லி விட்டான் நண்பர்களே, நம் வண்ணத்தை மாற்றிக் கொள்வோம் என்று அவை வெள்ளையாக மாறி விடுகின்றன.  என்ன செய்வது நண்பரே?  உங்களுக்கு சொம்பு தூக்கும் கலாச்சாரம் மட்டுமே தெரியும்.  அதனால்தான் யாரைப் பார்த்தாலும் அப்படித் தோன்றுகிறது.  உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.  உடம்புக்கு நோய் வரலாம்.  மனசுக்கு வந்தால் ரொம்பக் கஷ்டம்…  மனசைப் பார்த்துக் கொள்ளுங்கள்…

 

Comments are closed.