புதியவர்கள்

வாசகர் வட்ட சந்திப்பில் புதியவர்களைச் சேர்க்க எப்போதுமே தயக்கமாக இருக்கும்.   மீறி சேர்த்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விபரீதம் வந்து சேரும்.  நேற்று செல்வா, அராத்து, டிமிட்ரி ஆகியோரை செல்வா வீட்டில் சந்தித்தேன்.  அவந்திகா காலை பத்தரை மணிக்கு ஒரு ஆன்மீக சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்தது.  எப்படியும் பத்து மணிக்கு வந்து விடுவேன் என்று ஆயிரம் முறை சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினேன்.  காலை நான்கு மணி வரை பேச்சும் விவாதமும்.  ஒன்பதுக்கு எழுந்தேன்.  பரபரவென்று கிளம்பினேன்.  ஒன்பதரைக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.  ஆட்டோ பிடித்தால் பத்துக்கு வீடு.   அப்போதுதான் சித்தார்த் நான் உங்களை பைக்கில் விட்டு விடுகிறேன் என்றார்.  ஆட்டோ என்றால் 200 ரூ ஆகும்.  அதற்கு யோசித்தேன்.  சித்தார்த் எங்கிருந்து வந்தார் என்று கேட்கிறீர்களா?  புதியவர்.  என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.  என்பதால் நீங்களும் வாருங்கள் என்று அவரையும் சேர்த்துக் கொண்டிருந்தேன் நேற்று.  பைக் கிண்டியில் அராத்து வீட்டில் இருந்தது.  பைக்கை எடுத்துக் கொண்டு கத்திப்பாரா ஜங்ஷனில் அடையாறு வழியில் செல்லாமல் வட பழனி வழியில் பைக்கை விட்டு விட்டார் சித்தார்த்.    முடிந்தது கதை.  தலையில் விழுந்தது இடி.  வட பழனியிலிருந்து சாதாரணமாக என் வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆகும்.  அப்படியே ஆனது.  வீட்டுக்கு வரும் போது மணி 10.50.  அவந்திகாவிடமிருந்து ஃபோனே இல்லை.  இந்நேரம் போன் வரவில்லை என்றால் வீட்டில் விபரீதம் என்று பொருள்.  ஏதோ நிலநடுக்கம் போல் ஏதாவது ஆகியிருந்தால்தான் ஃபோன் வராது.  என்ன காரணம் என்று புரியவில்லை.  நானும் பைக்கில் இருந்ததால் போன் செய்ய முடியவில்லை.  வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, அவந்திகாவுக்கு என் நம்பர் கிடைக்கவில்லை.  அராத்துவுக்கு ஃபோன் செய்து அவரிடமிருந்து செல்வா நம்பரை வாங்கி அவருக்கு ஃபோன் செய்து….  ஏகப்பட்ட கலாட்டா.

ஏன் நண்பரே, நான் பாட்டுக்கு ஆட்டோவைப் பிடித்து பத்து மணிக்கு வீட்டுக்கு வந்திருப்பேன் இல்லையா?  புதியவரால் எந்தப் பிரச்சினையும் இல்லையே என்ற எண்ணத்துடன் நேற்று உறங்கச் சென்றேன்.  காலையில் வேலை காண்பித்து விட்டீர்களே?  என்னை என் போக்கில் விடுங்கள் சித்தார்த்.  அதுதான் எனக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவி.  ஒரு மணி நேரம் அவந்திகாவுக்கு நரகம்.  எனக்கும் தான்…

Comments are closed.