உலகத் தரமான ஒரு படைப்பு…

லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்கள் என்ற நாவலை சற்று முன்னர்தான் படித்து முடித்தேன்.  இப்படி ஒரு வாசிப்பை இரண்டே இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமே எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.  ஒருவர், மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa), இன்னொருத்தர் தருண் தேஜ்பால்.  லக்‌ஷ்மி சரவணகுமார் மூன்றாவது நபர்.

ஓரான் பாமுக் நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  யோசா நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  இப்போது இந்தியாவிலிருந்து தருண் வாங்கலாம்.  லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்களும் கானகனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இவரும் நோபல் வாங்குவார்.  குறைந்த பட்சம் ஏஷியன் புக்கர் நிச்சயம்.  God of Small Things, White Tiger போன்ற நாவல்களை உப்பு நாய்களோடு ஒப்பிடக் கூட முடியாது.  உப்பு நாய்கள் அவ்வளவு உயரத்தில் இருக்கிறது.  சர்வதேச அளவில் உப்பு நாய்களை தருணின் The Story of My Assassins நாவலோடு மட்டும்தான் ஒப்பிடலாம்.  ஒரு மூத்த எழுத்தாளர் உப்பு நாய்கள் முன்னுரையில் இதை ஜி. நாகராஜனோடு ஒப்பிட்டிருக்கிறார்.  தற்கொலைதான் செய்து கொள்ளத் தோன்றியது.

லக்‌ஷ்மி சரவணகுமாரை தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டும்.  கொண்டாட வேண்டும்.  காரணம், யோசாவைப் போலவே இவர் ஒரு ரிக்‌ஷாக்காரனுக்குக் கூட புரியும் படி எழுதியிருக்கிறார்.  வேசிகளும், பிக்பாக்கெட்டுகளும், கொலைகாரர்களும் நிரம்பியுள்ள இந்த நாவலை அந்த மனிதர்களுக்கே படித்துக் காண்பித்தாலும் அவர்களுக்கு விளங்கும்.  ஏன், இந்த நாவலை வாரந்தோறும் தினத்தந்தியில் தொடராகப் போடலாம்.  அதாவது, இதன் புரியக்கூடிய தன்மைக்காகச் சொல்கிறேன்.  ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இங்கே நடந்து விடாது.  ஆபாச நாவல் என்று சொல்லி சனாதனிகள் ஒரே வாரத்தில் தொடரை நிறுத்தி விடுவார்கள்.  இவ்வளவுக்கும் நாவலில் ஒரு கெட்ட வார்த்தை இல்லை.

என்னுடைய ஒரே ஆச்சரியம், இத்தனை நாளாக ஏன் யாருமே என்னிடம் லக்‌ஷ்மி சரவணகுமார் பற்றிச் சொல்லவே இல்லை?  நானே நண்பர்களுக்கு ஃபோன் போட்டுச் சொன்னாலும், அப்படியா, அவரா, பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் சொன்னதால படிக்கிறேன் சாரு என்று சொல்லி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ், மரியோ பர்கஸ் யோசா, ஓரான் பாமும் போன்றவர்களுக்கு நிகராக இங்கே ஒரு இளைஞர் எழுதி விட்டு அவர் பாட்டுக்கு அமைதியாக கோடம்பாக்கத்தில் துணை இயக்குனராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.  என்ன தேசம் இது என்று எண்ணத் தோன்றுகிறது.  உலகின் மிகப் பெரிய கதைசொல்லியான யோசாவுக்கு நிகராகக் கதை சொல்லக் கூடிய ஒரே ஒரு ஆள் இங்கே உண்டா என்று நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருந்தேன்.  இதோ இங்கே லக்‌ஷ்மி சரவணகுமார்.

லக்‌ஷ்மி, நான் எவ்வளவு உசத்தியாக எழுதினாலும் உன் எழுத்து அதை விட உயரத்தில் நிற்கிறது.  உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.  விரைவில் நீ உலக அளவில் கொண்டாடப்படுவாய்

Comments are closed.