புத்தக அறிமுகம்

பின்வரும் பத்திகளை எழுதியிருப்பது கணேஷ் அன்பு:

அந்தப் பகுதியின் அரசாங்க உயரதிகாரி நீங்கள். கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகரான மதிப்பும், அதிகாரமும் கொண்டவர். கடும் சிரமங்களையும், புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் கடந்தபிறகே இந்நிலைக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு உயரதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் மீது இன்றளவும் கடுஞ்சினம் உங்கள் ஆழ்மனதில் படிந்துள்ளது. இந்த உயரதிகாரி – சாமானியன் பாகுபாட்டை ஓரளவிற்கேனும் களைந்து எறிந்து மனிதநேயத்தை சகமனிதர்களிடம் விதைக்கவேண்டும் என்பதே உங்கள் அவா! இதைப் பற்றி உங்கள் முன்னாள் உயரதிகாரிகளிடம் ஷாம்பெய்ன் பருகியபடியே விவாதிக்கிறீர்கள். நள்ளிரவு 11:30 வரை நீடித்த விவாதம் முற்றுபெறாமலே உங்களை முட்டாள் என முடிவெடுக்கிறார்கள் உங்கள் உயரதிகாரிகள்.

அவர்களை நொந்துகொண்டே வெளியேவந்தால், உங்களது சாரட் வண்டி காணவில்லை. உங்கள் உத்தரவையும் மீறி, ஓட்டுனர் அவரது வீட்டு விசேஷத்திற்கு வண்டியை ஓட்டிசென்றுவிட்டார். மீண்டும் நொந்துகொண்டு, முக்கால் போதையில் நள்ளிரவில் நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறீர்கள். சற்று நேர நடைப்பயணத்துக்கு பிறகு எதிர்பட்ட சாலையோர மரவீடு ஒன்றில் வாத்திய இசையும், கூச்சலும், கும்மாளமுமாக இருக்கிறது. ஆர்வத்துடன் அருகில் இருந்த காவலாளியிடம் விசாரிக்கிறீர்கள். உங்களை அடையாளம் கண்டுகொண்ட காவலாளி, மரியாதையுடன் சொல்கிறார். உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவரின் திருமண விழா கொண்டாட்டம் என தெரிந்துகொள்கிறீர்கள். சற்றுமுன்பு உங்கள் உயரதிகாரிகளிடம் விவாதித்த ”மனிதநேயம்” அத்தனை போதையிலும் உங்கள் கண்முன்னே காட்சிகளாக விரிவடைகிறது. தனது மனிதநேயத்தையும், சகமனிதர்களிடம் பாகுபாடின்றி பழகு விரும்பும் பழக்கத்தையும் பறைசாற்ற இதைவிட தகுந்த தருணம் வேறொன்றும் இல்லை என உணர்ந்து, அவர்களது கேளிக்கைகளில் கலந்துகொள்ள வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைகிறீர்கள். இங்கு ஆரம்பமாகிறது ஆட்டம்!

// தனது இதயத்தில் இருப்பதை இவர்கள் எல்லோருக்கும் காட்டிவிட வேண்டும் என்றும் எல்லாவற்றையும் இவர்களிடம் கூற வேண்டுமென்றும் விரும்பினார். தான் எப்படிப்பட்ட அன்பு உள்ளம் கொண்ட தங்கமான மனிதர், எவ்வளவு ஆற்றலும் திறமையும் மிக்கவர், நாட்டுக்கு எப்படியெல்லாம் பணிபுரியக்கூடியவர், பெண்களை எப்படி மகிழசெய்யக் கூடியவர், இன்னும் முக்கியமாக எவ்வளவு முற்போக்கானவர், மிகமிக அடிநிலையில் இருப்போரிடத்தும், எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருபவர் என்றெல்லாம் இவர்களிர்களிடம் சொல்ல வேண்டுமென விரும்பினார். //

// மணப்பெண் சிறு பெண். அவள் நெற்றியில் முத்தமிடுவேன். பெத்ரோவிச்சும் ரொம்ப நல்லவர். பிசெல்தனீமவ் காலப்போக்கில் மேம்பாடுற்றுவிடுவான். மேன் மக்களின் சமுதாயத்துக்குரிய சிறப்பு அவனிடம் இல்லை. புதிய தலைமுறையினர் அனைவருமே அந்த ஆத்மார்த்த நயம் இல்லாதோராகவே இருக்கிறார்கள், என்றாலும் நான்… இவர்களிடம் பேசுவேன், ஏனைய ஐரோப்பிய அரசுகளிடையே ருஷ்யா தற்போது ஆற்ற வேண்டியுள்ள பணியினை இவர்களுக்கு எடுத்துரைப்பேன். விவசாயிகளுடைய பிரச்சினை குறித்தும் சில வார்த்தைகள் சொல்வேன். இவர்கள் எல்லோருக்கும் என் மீது தனிப்பாசம் பிறந்துவிடும். சீரும் சிறப்பும் மிக்க சூழலில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுச் செல்வேன் //

இந்த மாதிரியெல்லாம் தனக்குள் சிந்தித்துக்கொண்டு மணவீட்டில் சந்தோஷமாக ஷாம்பெய்ன் பருகிய உயரதிகாரியின் நிலை என்ன ஆனது?

மீதியை நாவலில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

கதை நடைபெறும் காலகட்டம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக… இடம் ருஷ்யா!

நாவல்: தஸ்தயேவ்ஸ்கியின் “அழையா விருந்தாளி ”
தமிழில் : கான்
பதிப்பகம் : ஹெட்லைன்ஸ்
நாவலை எனக்கு அறிமுகப்படுத்தி ஓர் இரவு முழுக்க விவாதித்தவர் : சாரு

மணமகன் பெயர் பிசெல்தனீமவ். இந்தப் பெயரை முன்வைத்து உயரதிகாரிக்கு ஏற்படும் ஐயமும், அதற்கு விளக்கம் அளிக்கும்பொருட்டு இலக்கியமும், ரஷ்ய மக்களின் அறியாமையையும் தொடர்படுத்தி விவாதிப்பது சுவாரஸ்யமான கேலிக்கூத்து. நமக்கே சிரிப்பு சிரிப்பாக வருகிறது, கலாசாரமும், வரலாறும் அறிந்த ரஷ்ய மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

***

அழையா விருந்தாளியை கணேஷிடம் கொடுத்த போது அந்தக் கதையில் வரும் கதாநாயகர்  – அவர் ஒரு உயர் அதிகாரி – இந்தியாவிலும் பலர் உண்டு என்று சொன்னேன்.  அதுவும் தமிழ்நாட்டில் ரொம்பப் பேர்.  ஞாநி, நீதிபதி சந்த்ரு, தில்லியில் கெஜ்ரிவால்…  அவர்களெல்லாம் இந்த நாவலைப் படிக்க வேண்டும்.

சாரு

Comments are closed.