புதிய எக்ஸைல் குறித்து நிர்மல் இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். நாவல் வெளிவருவதற்கு முன்பே மதிப்புரை வரலாமா என்ற நடைமுறையெல்லாம் எனக்குத் தெரியாது. அவருடைய இரண்டு கடிதங்கள் :
நிர்மலிடமிருந்து வந்த முதல் கடிதம்:
வாசித்துவிட்டேன், அன்பும் நேசமும் கொண்ட உதயா, உதயாவின் கதையைப் படிப்பது சுகமான அனுபவம். ஒரு காலத்தில் கலகக்காரனாக உணர்ந்த உதயா இன்று எப்படித் தன்னை எக்ஸைலாக உணர்கிறான் என்பது கதை. ஆனாலும் தன் வாழ்வின் மீதும், மற்றவர்கள் மீதும் தீராத பிரியமும் காதலும் கொண்டிருக்கிறான்.
எனது சின்ன விருப்பம் – நாவலை இன்னும் conceptual-ஆகக் கட்டியிருக்கலாம்; அல்லது வாசகர்களுக்கு அப்படிக் கட்டிப் பார்க்கும் கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்கலாம். ஒருவிதமான intellectual gimmicks are missing which I always expect. Metafiction எழுத்துக்களில் வருவது போன்ற புத்திஜீவி விளையாட்டுகளைச் சொல்கிறேன். Alchemy of Desire நாவலின் முதல் வரியும் கடைசி வரியும் விளையாடும் விளையாட்டைப் போல.
மேற்கண்ட கடிதம் வந்த ஒரு மணி நேரத்தில் வந்த இரண்டாவது கடிதம்:
சாரு,
உங்கள் நாவலை எனக்குப் படிக்கக் கொடுத்ததை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எக்ஸைல் படிக்கும் யாருக்கும் சாருவோடு உரையாடும் அற்புத அனுபவம் கிடைக்கும். உங்களின் அனுபவம், ஞானம், சிந்தனைகளைக் கொண்டு வாசகனை நெகிழ வைக்காமல், உணர்ச்சி பொங்க வைக்காமல் இவ்வளவு மேன்மையாகவும் மென்மையாகவும் சொல்வதற்கு அசாத்தியமான திறமை வேண்டும் என்றே நினைக்கிறேன். சிலர் தமது எழுத்தின் மூலம் நம் உணர்வுகளைத் தொட்டு விடுகிறார்கள். அதுவே எழுத்தின் வெற்றி எனவும் நம்புகிறார்கள். அப்படியான நம்பிக்கையோடு எழுதும் எழுத்தும் வெறும் பிரச்சாரமாகத்தானே இருக்கும்? ஆனால் உங்களின் எழுத்தில் பிரச்சாரம் இருக்காது. எழுத்தும் ஞானமும் காற்றில் மிதப்பது போல இருக்கும். எனக்கு எக்ஸைல் நினைவாகவே இருக்கிறது. மனைவியிடம் மட்டுமே இக் கதையைப் பற்றிப் பேச முடியும். அதனால் அவளிடம் கேசவனின் கதையை இன்று சொன்னேன். அற்புதம் என்றாள்.
வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதற்கான விடையை ஏதோ விஞ்ஞான சூத்திரம் போல சொல்லி விடுவது கலையல்ல என்பது உங்கள் எழுத்தை படித்த பின்பே எனக்குத் தெரியும். ஸோர்பாவின் வரிசையில் எக்ஸைலை வைக்கலாம். அன்பு, கொண்டாட்டம், துள்ளல், எள்ளல், துடிப்பு, இசை, காமம், இன்னும் பல விதமான அன்பின் வடிவங்களை எக்ஸைல் தன் உள்ளுக்குள் வைத்திருக்கிறது. அன்பு என்றால் ஏதோ அமைதியாக சாந்தமாக எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, வாழ்க்கையின் மீது ஆசையோ பற்றோ இல்லாமல், அதிர்ந்து பேசுவதைக் கூட விரும்பாத சாத்வீகமான நிலையில் மட்டுமே சாத்தியம் என நினைத்து சிலர் அப்படியே இருப்பது எனக்கு எப்பொழுதுமே அலுப்பைத் தருவதாக இருக்கிறது. வாழ்வை ரசனையாக ரசித்து வாழ்வதும் அந்த நிலையோடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் எக்ஸைல் சொல்கிறது. இன்றைய தமிழ்ச் சூழலில் இல்லாத ஒன்றைப் பற்றி மிக எளிமையாகப் பேசுவதால் எல்லோருக்கும் புரியுமா எனத் தெரியவில்லை.
சமூக ரீதியாக யோசித்துப் பார்த்தேன் – இது ஒரு alternate life style அது இது என புருடா விடவில்லை; ஆன்மிகம் எனப் பொய் சொல்லவில்லை; இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைப் பற்றி எந்த விசாரணையும் இல்லை. இப்படி இல்லாததை ரசிக்க வைக்கிறது எக்ஸைல். தமிழ் அடையாளம் என்பது இன்று திராவிடக் கட்சிகள் தந்த அடையாளமாகவே ஆகி விட்டது. ஆனால் உங்களின் அடையாளத்தை நீங்கள் சங்கத் தமிழ்ப் பாடல்க்ள் மூலமும் ஆண்டாள் முலமும் முன் வைத்திருப்பதை அற்புதமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
இன்னும் இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன் சாரு
again I admire your love and confidence on me to give this privilege.
நிர்மல்
Comments are closed.