ஸ்ரீவில்லிப்புத்தூர்

நேற்று இரவு எக்ஸைலை முடித்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன்.  இனிமேல் அதைத் தொடுவதாக இல்லை.  தில்லி UNI கேண்டீன் பற்றி எழுதிச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.  வேண்டாம் என்று தோன்றியது.  வேறு எப்போதாவது எங்காவது எழுதலாம் என்று விட்டு விட்டேன்.  மொத்தம் 1700 பக்கங்கள் அல்லது இரண்டு லட்சம் வார்த்தைகள் உள்ளன.  இதுவே எனக்கு கதைச் சுருக்கம் என்றே தோன்றுகிறது.  பல இடங்களில் விரிவு படுத்த வேண்டும் என்று மன உந்துதல் ஏற்பட்டது.  ஆனாலும் விரிவாக எழுதிப் பழக்கம் இல்லையாதலால் எழுதவில்லை.

நிர்மல் இதில் intellectual gimmicks இல்லையே என்றார்.  gimmicks என்பதை நல்ல அர்த்தத்தில் விளையாட்டு என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லைதான்.  ஏனென்றால், இந்த நாவல் செவ்வியல் மரபில் எழுதப்பட்டது.  மட்டுமில்லாமல் Baroque பாணியில் எழுதப்பட்ட நாவல் எக்ஸைல்.  தமிழில் புயலிலே ஒரு தோணியும் விஷ்ணுபுரமும் மட்டும்தான் பரோக் பாணி நாவல்கள் என்று சொல்லலாம்.  ப. சிங்காரம் நிச்சயம் அப்படித் திட்டமிட்டிருக்க மாட்டார்.  ஜெயமோகன் விஷயம் தெரியவில்லை.  ஆனால் நான் baroque பாணியில் எழுதுவது என்று திட்டமிட்டே செய்தேன்.  alejo carpentier-இன் The Lost Steps என்ற நாவல் பரோக் பாணியில் எழுதப்பட்டது.  1953-இல் எழுதப்பட்ட இந்த நாவலை நான் 1980-இல் படித்தேன்.  படிக்காத யார் பெயரையும் நான் பிரஸ்தாபிப்பது இல்லை.  (மலேஷியாவில் உள்ள ஒரு மூட ஜென்மம் என் உலக இலக்கிய வாசிப்பு பற்றி ஏதோ உளறி இருக்கிறது.  அந்த ஜென்மத்துக்கு விரைவில் பதில் எழுத வேண்டும்.) பரோக் பாணி நாவல்களில் விளையாட்டு எதுவும் இராது.  பெர்க்மன் படம் பார்ப்பது போல் சீரியஸாக இருக்கும்.  பெர்க்மனுக்கும் பரோக் பாணிக்கும் சம்பந்தம் இல்லை.  சீரியஸ் தன்மைக்காக உதாரணம் சொன்னேன்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலுக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.  வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளம்புகிறேன்.  ஏழு, எட்டு, ஒன்பது தேதிகளில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோவில் விழா.  அதைப் பார்த்து விட்டு ஒன்பது இரவு ஒன்பது மணி அளவில் மதுரை வருவேன்.  ஒன்பது இரவும், பத்தாம் தேதி பகலும் மதுரையில் இருந்து விட்டு, பத்து இரவு சென்னை பயணம்.

தமிழ் ஹிந்து.காமில் ஒரு நல்ல கட்டுரைத் தொடர் ஆரம்பித்திருக்கிறார்கள்.  LGBT என்று மேற்கில் சொல்லப்படும் மாற்றுப் பாலினத்தவரை நம் இந்தியப் பாரம்பரியத்தில் எல்லோருக்கும் சமமானவராகவே கருதி இருக்கின்றனர்.  ஆனால் மேற்கில் அவர்களைக் கொலை செய்தார்கள்.  ஹிட்லர் ஆயிரக் கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்களைக் கொன்றார்.  இன்றுதான் அதுவும் தென்னகத்தில்தான் திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்களே தவிர வரலாற்றில் அவர்கள் அரசர்களின் பக்கத்தில் இருந்தவர்கள்.  அந்தத் தொடரைப் படித்துப் பார்க்கவும்.  இணைப்பு கீழே.

http://www.tamilhindu.com/2014/07/spiritualgendervariants/

Comments are closed.