எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதை ஒரு துளியளவும் புரிந்து கொள்ளாமல் யார் யாரிடமோ போய் விளக்கம் கேட்டு, அவர்களும் ஒன்றுமே புரியாமல் ஏதோ உளறி வைப்பதையெல்லாம் பிரசுரித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வது புரியவில்லையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்று இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்களுக்காக இன்னும் விளக்கமாக எழுதுகிறேன். இப்போதாவது புரிந்து கொள்வார்களா அல்லது இப்போதும் புரிந்து கொள்ளாமல் தாத்தா பாட்டிகளிடம் போய் இதற்கு விளக்கம் கேட்பார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன்.
எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்றால் யானையில் வைத்து ஊர்வலம் போக வேண்டும் என்றா சொன்னேன்? இந்த சமூகம் எழுத்தாளனுக்கு உரிய சம்பளத்தைக் கொடுக்க மறுக்கிறது. சைரன் பத்திரிகை அதிபர் 5000 கோடிகளுக்கு அதிபர். இந்தியா முழுவதும் தெரிந்தவர். அதில் நான் முப்பது கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். 3000 ரூ கொடுத்தார்கள். எவ்வளவு கொடுத்திருக்க வேண்டும்? ஒன்றரை லட்சம். சரி, இருந்தாலும் நான் பணத்தை எதிர்பார்க்காமல்தான் எழுதினேன். அந்தப் பத்திரிகையில் நூறு கட்டுரைகள் எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதன் வாசகர்களுக்காக. அவர்களிடமிருந்து அந்த அளவுக்கு எதிர்வினை வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் குழுவினரின் அன்புக்காக. பத்திரிகை நின்று விட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள். இரவு முழுவதும் படப்பிடிப்பு நடக்கிறது. காலையில் ஆறு மணிக்கு வீட்டுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு பைசா கொடுப்பதில்லை. கேட்டால் என்னைத் தடை செய்கிறார்கள்.
புத்தகமோ 3000 பிரதிகள் போகிறது. இது அதிக பட்சம். செக்ஸ் ஒர்க்கரையும் பிச்சைக்காரனையும் கூட இந்த சமூகம் இதை விட நல்ல மாதிரி வைத்திருக்கிறதே ஐயா? எழுத்தாளனைத் தெரு நாய் மாதிரி அல்லவா இந்தத் தமிழ் சமூகம் நடத்துகிறது? இதை மாற்றுங்கள் என்று சொன்னால், பதிலுக்கு ஏதாவது உளறிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?
தி இந்துவில் (தமிழ்) வெளிவரும் கட்டுரைகளை நான் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனைப் போல் படிக்கிறேன். அதில் சில தினங்களுக்கு முன்பு ஒரு நல்ல கட்டுரையைப் படித்தேன். அதை எழுதியவர் தங்க ஜெயராமன். ஆல்பர் கம்யு எழுதிய முதல் மனிதன் என்ற நாவலை வெ.ஸ்ரீராம் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அந்த நூலுக்கான மதிப்புரையே அது. அதைப் படித்து விட்டு நான் பேராசிரியர் தங்க ஜெயராமனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம்:
Dear Sir,
என் பெயர் சாரு நிவேதிதா. தமிழிலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் எழுதி வருகிறேன்.
இன்று தி இந்துவில் உங்கள் கட்டுரை படித்தேன்.
ஃப்ரெஞ்ச் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கு இடையிலும் நடந்து வரும் மொழிபெயர்ப்புப் பரிமாற்றங்களை சுமார் முப்பது ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் தங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதன் பொருட்டுத் தங்களுடைய சில மணித்துளிகளைத் தர வேண்டும் என்று கோருகிறேன்.
ஃப்ரெஞ்ச் / தமிழ் பரிமாற்றம் என்பது இங்கே ஒருவழிப் பாதையில் தான் செல்வதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் எனக்கு வெர்லெய்ன், ஆர்தர் ரேம்போ, கம்யு, ஜெனே, ஜான் பால் சார்த்ர், மிஷல் ஃபூக்கோ என்று பலரும் மொழிபெயர்ப்பில் அறிமுகமாகி இருக்கிறார்கள். மிகச் சிறப்பான மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஃப்ரெஞ்சில் எழுதும் அத்தனை பேருமே தமிழில் எப்படியோ ஒருவகையில் பரிச்சயமாகி இருக்கிறார்கள். இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத Serge Doubrovsky-இன் Fils நாவல் பற்றிக் கூட தமிழில் கட்டுரைகள் வந்துள்ளன. குறிப்பாக அவரது autofiction பற்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுக்கு யாரும் போனதாகத் தெரியவில்லை.
அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் இப்போதுதான் ஸ்ரீராமானுஜரை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து வருகிறார்கள் என்று தெரிகிறது. My Dear Sir, உங்கள் கட்டுரையைப் படித்ததும் இதையெல்லாம் தங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது. தங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
சாரு நிவேதிதா
2.8.2014.
இந்தக் கடிதத்துக்கு பேராசிரியரிடமிருந்து ஒரு பதில் வந்தது. அது கீழே:
Dear Madame,
I got a little moved reading your mail. My best wishes and congratulations and also my very sincere thanks.
With regards
Yours sincerely,
Thanga Jayaraman
எனக்கு பேராசிரியர் மீது துளிக்கூட வருத்தமோ கோபமோ இல்லை. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் குறியீடு இது. இந்த அவலத்தைத்தான் கடந்த பல ஆண்டுகளாக சொல்லிக் கதறிக் கொண்டே இருக்கிறேன். நீ என்ன தான் சொல்ல வருகிறாய் என்று என்னிடம் கேட்காமல் ஊடக நண்பர்கள் முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே இருக்கும் தாத்தா பாட்டிகளிடம் போய் நான் சொன்னதற்கு விளக்கம் கேட்கிறார்கள். முதியோரை இப்படித் துன்புறுத்துவது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா நண்பர்களே?
பேராசிரியருக்கு என்னைத் தெரிந்திருக்காதது மட்டும் அல்ல; நான் என்னை அவன் என்று குறிப்பிட்டும் அவர் என்னை மேடம் என்றே விளித்திருக்கிறார். ஒரு கூகிளில் போய் பார்ப்பதற்குக் கூட பொறுமை இல்லை.
சரி, பேராசிரியர்களுக்கு ஏன் எழுத்தாளர்களைத் தெரியவில்லை? ஒன்று, சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களின் அக்கறையின்மை. இரண்டு, வெள்ளைக்காரனுக்குக் ——— கழுவியே பழக்கப்பட்டுப் போன காலனியாதிக்க அடிமை மனோபாவம். (இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் கம்யு, காஃப்கா என்று சொல்லிக் கொண்டிருப்பது? எப்போது ஐரோப்பியர்கள் நம் பெயரைச் சொல்வது?) மூன்றாவது, மிகவும் முக்கியமானது, ஊடகங்கள் எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் இருட்டடிப்பு செய்வது. அஞ்சான் பார்த்தேன். கேடு கெட்ட குப்பை. எந்த வார்த்தையால் திட்டுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு மோசமான குப்பை. இவ்வளவுக்கும் ரன் என்ற அட்டகாசமான பொழுதுபோக்கு சினிமாவை எடுத்த லிங்குசாமி இயக்கத்தில் இப்படி ஒரு குப்பை வந்துள்ளது. இந்தக் குப்பைக்குத்தான் என்னென்ன பில்ட் அப் எல்லாம் கொடுக்கப்பட்டது? ஆங்கில தினசரியில் ஒரு பக்கத்துக்கு சூர்யாவின் பேட்டி! திரும்பின இடமெல்லாம் அஞ்சான் தான். விளம்பரம் அல்ல… ஊடகங்கள் கொடுத்த வெளிச்சம். ஆனால் ஒரு எழுத்தாளனைப் பற்றி ஒரு செய்தி வராது. வந்தாலும் அவனை அவமானப்படுத்துவது போல் ஏதாவது வரும்! ஆனால் சினிமா என்றால்… மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்த ஒரு இயக்குனர் நான்காவது தோல்விப் படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவரைப் பிடித்து ஆறு பக்கத்துக்குப் பேச வைக்கிறார்கள். ஆனால் எழுத்தாளன் 2000 பேர் கொள்ளளவு கொண்ட காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் கூட அது பற்றி நக அளவு செய்தி கூட வராது. இப்படி இருந்தால் எழுத்தாளனை யாருக்குத் தெரியும்? மேடம் என்றுதான் கடிதம் எழுதுவார்கள்.
சமீபத்தில் ஒரு ரோட்டரி க்ளப் கூட்டத்துக்குப் பேச அழைத்திருந்தார்கள். போனேன். (வந்திருந்த 20 பேரில் பதினெட்டு பேர் பிராமணர்கள். அது அவர்களின் முகத்திலும் நெற்றிக் குறியிலும் தெரிந்தது. ஒருவர் இஸ்லாமியர். இன்னொருவர் மலையாளி போல் இருந்தார். மலையாளமா என்று கேட்டேன். நாகர்கோவில் என்றார். அவர் பிராமணர் அல்ல; பெயரிலேயே பிள்ளை இருந்தது.) ஒரு மணி நேர சந்திப்பு. அந்த ஒரு மணி நேரமும் எல்லோரும் ஆங்கிலத்திலேயே உரையாடினர். ஆங்கிலத்திலேயே மேடையில் பேசினர். நான் மட்டுமே ஒரு ஆள் தமிழில் பேசினேன். அவர்களும் என்னோடு பேசும் போது மட்டும் தமிழில் பேசினர்.
கூட்டம் ஆரம்பிக்கும் தருணத்தில் இரண்டு அதிர்ச்சிகள் எனக்கு. ஒரு வயதான பெண்மணி – 65 வயது இருக்கும். அமெரிக்கையாக இருந்தார். நல்ல உலக ஞானம் இருந்தது. பல நாடுகளுக்குப் போய் வந்திருப்பது பேச்சில் தெரிந்தது. என்னிடம் வந்து ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழில் பதில் சொல்ல அவரும் தமிழுக்கு மாறி, பிறகு தயங்கி, ஆங்கிலத்துக்குத் தாவினார். கூட்டம் ஆரம்பிக்கும் போது அவர் சம்ஸ்கிருதத்தில் பாடினார். அவருக்கு சம்ஸ்கிருதம் நன்கு தெரிந்திருந்தது உச்சரிப்பில் தெரிந்தது. அப்பேர்ப்பட்டவர் என்னிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டார். ரைட்டர் என்ற ஒரே வார்த்தையில் பதில் சொன்னேன். அப்போது அவர் முகத்தில் தெரிந்த குழப்பத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
சில நொடிகளுக்குப் பிறகு அப்படீன்னா என்று கேட்டார். கேட்ட போது புருவங்கள் சுருங்கின. ”நான் கதை எழுதுவேன். கட்டுரை எழுதுவேன். எழுதுவதுதான் வேலை” என்றேன். அப்போதும் அவருக்குப் புரியவில்லை. அவர் மனதில் ரொம்பவும் தாழ்வு மனப்பான்மை தோன்றியிருக்க வேண்டும். உலகமெல்லாம் சுற்றியிருக்கும் நமக்கு இந்த ஆள் சொல்வது புரிய மாட்டேன் என்கிறதே என்ற வேதனை அவர் முகத்தில் தெரிந்தது. பிறகு நானே அவரை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் விகடன், குமுதம் பத்திரிகையில் எல்லாம் எழுதுவேன் என்று ஒரு பொய் சொன்னேன். அப்போதாவது புரிகிறதா என்று பார்ப்போம். ம்ஹும். அவர் என் பொய்யைக் கண்டு பிடித்து விட்டார். ”அதிலேல்லாம் நான் உங்களைப் பார்த்ததில்லையே?” தினமலர், தி இந்து இரண்டிலும் எழுதுவேன் என்றேன். அந்த நேரம் பார்த்து கூட்டம் ஆரம்பிக்கவும் அவரிடமிருந்து தப்பினேன்.
இதுதான் ஐயா தமிழ்நாடு. இதனால்தான் சொல்கிறேன், எழுத்தாளனுக்கு இங்கே அடையாளம் இல்லை என்று.
இன்னொரு அதிர்ச்சி, அந்தப் பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. அந்த க்ளப்பின் செயலாளர் மேடையில் இருந்தார். மேடை என்றால் நிஜ மேடை அல்ல. பார்வையாளர்களுக்கு எதிரே இருந்த மேஜை. அப்படிக் கற்பனை செய்து கொள்ளுங்கள். செயலாளர் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இருந்தது. திடீரென்று அவர் யாரையோ பார்த்து இன்ஷா அல்லாஹ் என்று சத்தமாகச் சொன்னார். என்ன இது விபரீதம் என்று பின்னால் பார்த்தால் அங்கே தாடி வைத்த ஒருவர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் நம் செயலாளர் முகமன் கூறுகிறார், இன்ஷா அல்லாஹ் என்று. தாடி வைத்தவர் ஒரு மாதிரி முகத்தைச் சுருக்கிக் கொண்டு குட் ஈவினிங் என்றார் செயலாளரிடம். ஒருவர் கொடுமையாக இன்னொருவரை அறுக்கிறார் என்றால், ”ஒன்னய அல்லா வச்சுக் காப்பாத்த” என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். அந்த வார்த்தைதான் ஞாபகம் வந்தது. ம்ம்ம்… ஒரு இஸ்லாமியருக்கு ஸலாம் சொல்லக் கூடத் தெரியாமல்… தெரியாதது தவறு இல்லை. அதற்காக இப்படி உளறிக் கொட்டியா எரிச்சல் ஊட்ட வேண்டும்?
Comments are closed.