பெங்களூரு இலக்கிய விழா

பெங்களூரில் ஆட்டா கலாட்டா என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது ஆண்டு தோறும் இந்திய அளவில் எழுதப்படும் நூல்களுக்குப் பல பிரிவுகளில் விருது வழங்குகிறது. அதில்தான் 2024க்கான மொழிபெயர்ப்பு நூல்களின் நெடும்பட்டியலில் நான் எழுதிய ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Conversations with Aurangzeb: A Novel) இடம் பெற்றிருக்கிறது.

விருது வழங்குவதோடு அல்லாமல் ஆட்டா கலாட்டா பெங்களூரில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய விழாவையும் நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். டிசம்பர் 14, 15 தேதிகளில் பெங்களூர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள லலித் அஷோக் ஓட்டலில் விழா நடைபெறுகிறது. எந்த செஷனில் பேசுவேன் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

நண்பர்கள் அனைவரும் விழாவுக்கு வந்து விடுங்கள். பொதுவாக இது போன்ற இலக்கிய விழாக்களில் நான் கலந்து கொள்ளும்போது என் நெருங்கிய நண்பர்களை நானே தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம், ஹருகி முராகாமி அளவுக்கு என் எழுத்து தமிழ்நாட்டுக்கு வெளியே பிரபலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான் தமிழில் எழுதுவதால் அப்படி நடக்கவில்லை. இந்த நிலையில் எனக்கு எழுபது வயது முடிந்து எழுபத்தோராம் வயது தொடங்கும்போதுதான் இப்படிப்பட்ட சிறிய அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இதை என்னை விட நீங்கள்தான் அதிகம் கொண்டாட வேண்டும். ஏனென்றால், இது என்னை விட என் எழுத்தை ரசிக்கும் உங்களுக்கான அங்கீகாரம் என்று உங்களுக்குத் தோன்ற வேண்டும்.

ஒரு உதாரணம் தருகிறேன். மரியோ பர்கஸ் யோசாவுக்கு மிகத் தாமதமாக நோபல் விருது கிடைத்தபோது எனக்கு சுமார் நூறு நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள், ஏதோ எனக்கே நோபல் கிடைத்து விட்டது போல. காரணம், யோசாவின் எழுத்தை என் அளவுக்கு வேறு யாரும் கொண்டாடியதில்லை.

ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பு வந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இப்போதுதான் முதல் முதலாக ஒரு நெடும்பட்டியலில் என் நூல் இடம் பெறுகிறது.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள Ubud என்ற ஊரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சர்வதேச இலக்கிய விழா நடைபெறுகிறது. தமிழ் எழுத்துலகில் என்னை விட முப்பது வயது சிறியவர்களெல்லாம் அங்கே அழைக்கப்பட்டு சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் எழுபத்தோரு வயது ஆகியும் எனக்கு அழைப்பு இல்லை. அதோடு விட்டிருந்தால் இங்கே அது பற்றி நான் எழுதி இருக்க மாட்டேன். உலகில் நூற்றுக்கணக்கான இலக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. அங்கிருந்தெல்லாமா எனக்கு அழைப்பு வருகிறது? ஏன் Ubud இலக்கிய விழா பற்றி எழுதுகிறேன் என்றால், அங்கிருந்து எனக்கு ஒவ்வொரு ஆண்டும் இருபது மின்னஞ்சல்கள் வருகின்றன, அந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி. பேச்சாளனாக அல்ல, பார்வையாளனாக. நான் செலவு செய்து கொண்டு போக வேண்டும். இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.

ஏன் நான் பேச்சாளனாக அழைக்கப்படவில்லை என்றால், அந்த இலக்கிய விழாவில் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஓரிருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த மு.வ. கோஷ்டி. அதாவது, புலவர் கோஷ்டி. அவர்கள்தான் என் பெயர் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் என் பெயர் எந்தப் பட்டியலிலோ, எந்த விழாவிலோ தென்பட்டால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். அந்த அளவுக்கு என் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் ஆட்டா கலாட்டா விழாவில் நான் கலந்து கொள்வது நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்குரிய விஷயம் என்கிறேன்.

இன்னும் இரண்டு குறிப்புகள்: இந்த விழாவின் இலக்கியப் பிரிவில் கலந்து கொள்ளும் அமீத் சௌத்ரி எனக்குப் பிடித்த இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர். இது பற்றி நான் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். இந்திய ஆங்கில இலக்கியம் வெறும் சராசரி எழுத்தாளர்களால் நிறைந்தது. அவர்களின் ஒரே பலம், ஆங்கிலத்தில் எழுதுவதுதான். உள்ளே இருக்கும் வஸ்துவைப் பார்த்தால் அது தமிழில் எழுதும் அத்தனை பேருமே தேவலாம் என்று தோன்றும். உதாரணம் வேண்டுமானால் நூறு பேரைச் சொல்லலாம். சொன்னால் எல்லோரும் சேர்த்து கட்டி என்னை அடிப்பார்கள். அதனால் இரண்டு பேரைச் சொல்கிறேன். அருந்ததி ராய், அரவிந்த் அடிகா. விதிவிலக்குகள் ரொம்பக் கம்மி. தருண் தேஜ்பால், ரோஹிந்த்தன் மிஸ்த்ரி, ஆலன் சீலி. இந்தப் பின்னணியில்தான் அமீத் சௌத்ரி எனக்குப் பிடித்த இந்திய ஆங்கில எழுத்தாளர் என்ற வாக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்னொன்றும் இருக்கிறது. உலக அளவில் எழுத்தாளர்கள் என்று பேர் பெற்றவர்கள் இன்னொரு துறையிலும் நிபுணராக இருப்பது வெகு அரிது. வ்ளதிமீர் நபகோவ் வண்ணத்துப்பூச்சி ஆய்வில் பெரும் நிபுணர். அத்துறையில் அவரது கண்டுபிடிப்புகள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளன. சார்வாகனும் அப்படியே. தொழுநோய் மருத்துவத்தில் நிபுணர். ஹருகி முராகாமி மாரத்தன் ஓட்டக்காரர். அதேபோல் அமீத் சௌத்ரி உலகப் புகழ்பெற்ற ஒரு ஜாஸ் கலைஞர். அமீத் சௌத்ரி பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவரோடு இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

ஆட்டா கலாட்டாவின் இயக்குநர்களில் ஒருவர், விக்ரம் சம்பத். இவர் எழுதிய My Name of Gauhar Jaan என்ற நூலைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

இது தவிர எல். சுப்ரமணியன், நாடக இயக்குனர் எம்.கே. ரெய்னா, கிரிஷ் காஸரவள்ளி போன்ற கலைஞர்களும், வரலாற்று ஆசிரியர்கள் மனு பிள்ளை, வில்லியம் டால்ரிம்பிள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.