புருஷன் – மீண்டும்

புருஷன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். பத்தாயிரம் வார்த்தைகள். அரம்யா என்பவளின் கதை. அவளைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட ரகுராம் என்பவனின் பார்வையில் சொல்லப்படும் கதை.

இந்த முறை படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் கம்மியான எதிர்பார்ப்புதான் இருந்தது. ”என்னத்தெ எழுதிடப் போறாரு, தம்பி கிட்ட மொழி ஆளுமை கிடையாது, மொழிதான் இலக்கியத்துக்கே ஆணி வேர், கதையைச் சொல்வாரு, அது பயங்கரமாத்தான் இருக்கும், பாத்துக்குவோம்” என்றே நினைத்திருந்தேன்.

ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. ரகுராம் என்ற சராசரி மனிதனின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டிருப்பதால் ஆடம்பரமான அல்லது இலக்கியத்தரமான மொழி தேவைப்படவில்லை.

கதை?

நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன். உதாரணமாக, ஹங்கேரியின் நம்பர் ஒன் எழுத்தாளர் László Krasznahorkai. விரைவில் இவர் நோபல் பரிசு பெற்றால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். அவருடைய நாவல்களை நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே படித்து விட்டேன். ட்யூரின் ஹார்ஸ் படத்தின் கதை, திரைக்கதை எல்லாம் இவருடையதுதான்.

அந்த அளவுக்கு விரிவானது என் வாசிப்பு அனுபவம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், புருஷன் மாதிரி ஒரு நாவலை நான் படித்ததில்லை. இந்த நாவல் மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல பிரபலமான சர்வதேசப் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டால் உடனடியாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தமிழில் எழுதுவதால் அதற்கான சாத்தியத்தை யோசித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது. ராஸ லீலாவை வைத்துக்கொண்டே நான் ஊ… சே… தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.

தமிழில் இந்த நாவல் ஒரு புரட்சி. ட்ரெண்ட் செட்டர். ஜானகிராமன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாவலை என்னைப் போலவே கொண்டாடியிருப்பார். anti-மோகமுள்.

நாவலிலிருந்து மேற்கோள் காண்பிக்க முடியாது. என் ப்ளாகை முடக்கி விடுவார்கள். வேண்டாம், விஷப் பரிட்சை என்று மேற்கோள் காண்பிக்காமல் விட்டு விடுகிறேன்.

இந்த நாவலை அராத்து ஏலம் விட்டிருந்தால் பத்து லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கலாம். பயங்கரம். அதகளம். ரகளை. கலவரம். எனக்கே கூட யாராவது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக அனுப்பிப் படிக்கக் கொடுக்கலாமா என்று தோன்றுகிறது. ஆனால் நான் சார்வாகன் மாணவன். முடிவற்ற பாதை தபால்காரர் மாதிரி. பணக் கஷ்டத்தில் அப்படித் தோன்றுகிறதே தவிர, செய்ய மாட்டேன். இப்படியெல்லாம் அறம் பிறழ்ந்து தோன்றும் அளவுக்கு புருஷன் ஒரு தங்கப் புதையலாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், புருஷன் – ஒரு பின்நவீனத்துவ கிளாஸிக்.