ப்ரியா
என் வாசகி. ஐஐடியில் படித்தவள். அமெரிக்காவில்
ஜாகை. வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி
விட்டார் கணவர். கணவரும் ஐஐடி. ஆனால் தங்க மெடல் வாங்கியவர். ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார். மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். காதல் மணம் இல்லை. பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம்.
”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது நல்லது இல்லையா?” என்று கேட்டு எனக்கு ப்ரியா ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.
அந்தக் கடிதம் ஒரு குறுநாவல் போல் நீளும். அதற்குள் இங்கே நான் செல்லப் போவதில்லை. ப்ரியாவுக்கு ஏன் பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது என்பதுதான் இங்கே நம் கேள்வி.
கணவன் அடிக்கடி அவளிடம் “நீ ஏன் நொண்டி நொண்டி நடக்கிறாய்? நேராக நடந்து பழகு” என்கிறான். அவளிடம் அதுவரை யாருமே அப்படிச் சொன்னதில்லை. கல்லூரியில், வீட்டில் அப்படி ஒரு பேச்சே வந்ததில்லை. சொல்லப் போனால், அவள் கால்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவள் நொண்டுவதும் இல்லை. அப்புறம் ஏன் கணவன் மட்டும் அப்படிச் சொல்கிறான்? அது மட்டுமல்ல, அவன் தன் அம்மாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டான். “ஏம்மா, ப்ரியா நொண்டி நொண்டிதானே நடக்கிறா?”
“நானே சொல்லணும்னுதான் நினைச்சேண்டா. அவொ ஆத்திலே நம்மை ஏமாத்தி ஒரு நொண்டிப் பொண்ணை உனக்குக் கட்டி வச்சுட்டா” என்ற ரீதியில் போனது மாமியாரின் பேச்சு.
ப்ரியாவுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது போல் இருந்தது. யாரிடம் கேட்பது? அமெரிக்காவில் அவளுக்கு நண்பர்களே இல்லை. ஆளுயரக் கண்ணாடி முன்னே நின்று நடந்து நடந்து பார்த்தாள். ம்… நொண்டுகிறோமா இல்லையா என்று அவளால் முடிவுக்கு வர முடியவில்லை. நொண்டுவது போலவும் இருந்தது. சரியாக இருப்பது போலவும் இருந்தது.
”நொண்டினால் என்ன, நொண்டா விட்டால் என்ன? மயிரே போச்சு என்று வேலையைப் பாருங்கள்” என்று ஒரு பதில் எழுதிப் போட்டேன்.
தான் சொல்வதை அவள் பொருட்படுத்துவதே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் ஒருநாள் கடுப்பாகி ப்ரியாவை அவள் கணவன் வீட்டை விட்டுத் துரத்தி விட்டான்.
பிறகு ப்ரியா அவனை விவாகரத்து செய்து விட்டு இந்தியா வந்து விட்டாள்.
இப்போது நான் ப்ரியாவின் நிலையில்தான் இருக்கிறேன். பைத்தியம் பிடிக்கும் நிலை இல்லை. ஆனால் நாள் பூராவும் நான் டல்லாக இருப்பதாகவே நினைக்கிறது மனம். அப்படி நினைக்கும் மனதை மனதின் இன்னொரு குரல் “இல்லை, நீ நன்றாகத்தான் இருக்கிறாய், டல்லாக இல்லை, நீ டல்லாக இருப்பதாகச் சொல்லும் பூமர்களை மறந்து விடு” என்கிறது. இருந்தாலும் முதல் மனம் மனதின் இரண்டாவது குரலைக் கேட்பதில்லை. திரும்பத் திரும்ப நீ டல்லாகத்தான் இருக்கிறாய் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கிறேன். டல்லாக இருக்கிறேனா, நன்றாகத்தான் இருக்கிறேனா? நன்றாக இருக்கிறேன் என்றால் ஏன் சதாசிவம் அப்படிச் சொன்னார். சதாசிவம் ஒரு மகாத்மா. எனக்கு எத்தனையோ ஒத்தாசை செய்திருக்கிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் எனக்கு ஹார்ட் அட்டாக் மாதிரியான அடையாளங்கள் உடலில் ஏற்பட்ட போது ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணாமல் அவருக்குத்தான் ஃபோன் பண்ணினேன். பெசண்ட் நகரிலிருந்து பத்தே நிமிடத்தில் வந்து என்னை காவேரி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றவர். இதுபோல நூற்றுக்கணக்கான உதவிகள்.
ஆனாலும் எனக்குப் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாரே? புத்தக விழாவின் உள்ளே நுழைந்ததும், “ஏன் சாரு, டல்லாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டு.
ஊரே என்னைப் பார்த்து “என்ன சாரு ஜொலிக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போது ”என்ன சாரு, டல்லாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் அது நம் கொட்டையில் உதைப்பது போல்தானே? உங்களுக்கு எப்படியோ, எனக்கு சதாசிவத்தின் கேள்விதான் என் செவிகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
இதுவாவது பரவாயில்லை, அந்தப் பெண் கவிஞர் வேறு அதே கேள்வியை அன்றைய தினமே கேட்டு வைத்தார். ”ஏன் சாரு, டல்லாக இருக்கிறீர்கள்?”
இருவருமே பூமர்கள் என்று ஒரு மனம் அவர்களைத் திட்டினாலும் இன்னொரு மனம் அந்தக் கேள்வியையே மொய்த்துக்கொண்டிருப்பதை விட மாட்டேன் என்கிறது.
சரி விடுங்கள். விதிப்படி நடக்கட்டும்.
இதை ஏன் நான் எழுதுகிறேன் தெரியுமா?
நேற்று பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் ஒரு சம்பவம் நடந்தது.
நண்பரின் பெயர் குமார். என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலிருந்து நாற்பத்தைந்தாவது வயது வரை என் நெருங்கிய நண்பராக இருந்தவர். இருபது ஆண்டுகள் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகினோம். அவர் வீட்டில் நான் ஒரு உறுப்பினன். அப்படி ஒரு நெருக்கம்.
குமார் ஒரு ப்ராடிஜி. அறிஞர் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டு. அவர் படிக்காத நூல்கள் இல்லை. நான் பொறாமை கொள்ளத்தக்க அளவுக்குப் படித்தவர் என்றால் அது குமார் ஒருவர்தான். எல்லோரும் ரெண்டாயிரம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்.
எங்களுக்குள் எந்த நட்புப் பிரச்சினையும் இல்லை. திடீரென்று ஒருநாள் ஃபேஸ்புக்கில் அவர் இப்படி எழுதியிருந்தார்.
”சாரு தருண் தேஜ்பாலுடன் ஏன் நெருக்கமாக இருக்கிறார் தெரியுமா? சாருவுக்கு ஆங்கிலத்தில் போக வேண்டும் என்று ஆசை. தருணைப் பிடித்தால் ஆங்கிலப் பதிப்பாளர்கள் கிடைப்பார்கள். அதனால்தான் தருணின் நாவல்களைப் பாராட்டி எழுதுகிறார் சாரு.”
இதை குமார் எழுதிய போது தருண் ரேப்பிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அவர் நிரபராதி என்று நான் எழுதியதற்காக இன்றளவும் வட இந்திய தருண் வெறுப்பாளர்கள் என்னை ரேப்பிஸ்டின் நண்பன் என்றே பழி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு நீதிமன்றமே தருண் நிரபராதி என்று சொல்லியும் பழி நீங்கவில்லை.
ஆனால் குமாருக்குக் கொஞ்சமாவது காமன்சென்ஸ் இருக்க வேண்டாமா? ரேப்பிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆதரித்தால் அவர் நிலைமை என்ன ஆகும் என்று தெரிய வேண்டாமா? தருணின் தெ ஸ்டோரி ஆஃப் மை அஸாசின்ஸ் என்ற நாவல் நெட்ஃப்ளிக்ஸில் பாதாள் லோக் என்ற பெயரில் தொடராக வந்தது. கதைக்காக தருணுக்குப் பணமெல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் தொடரில் தருணின் பெயரே இல்லை. பெயரைப் போட்டால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பயந்து விட்டார்கள் நெட்ஃப்ளிக்ஸும் தயாரிப்பாளரும். ஆனால் குமார் எழுதுகிறார், தருணின் நாவலை நான் பாராட்டியது எனக்கு ஆங்கிலப் பதிப்பாளர் கிடைப்பதற்காக என்று!
அன்றோடு குமாரின் நட்பை முறித்துக்கொண்டேன்.
இருபது ஆண்டுகளா, கணக்கு தெரியவில்லை. கூகிளில் பார்த்துக் கொள்ளுங்கள்.
நேற்று பன்னாட்டுப் புத்தக விழாவில் குமாரைப் பார்த்தேன். எப்போது விட்டோமோ அதேபோல் பேசிக்கொண்டிருந்தோம். அதே நட்பு. அதே அன்பு. வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் குமார்.
எப்படி வருவது? உம்முடைய தொலைபேசி எண் கூட என்னிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னைப் பற்றி இந்த அளவு கேவலமாக அவதூறு செய்த உம் வீட்டுக்கு நான் எப்படி வருவேன்?
சொல்ல மறந்து விட்டேன். குமார் என் சக எழுத்தாளர். தமிழ்நாட்டில் பாதி நாளும் ஜெர்மனியில் பாதி நாளும் வாழ்பவர். ஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர்.
பிறகு பழைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வட்ட மேஜையில் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தோம்.
நான் வழக்கம் போல் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தேன்.
“சாரு, உங்கள் கண்ணாடியைக் கழற்றுங்கள், உங்கள் கண்களைப் பார்க்க வேண்டும்” என்றார் குமார்.
கழற்றினேன்.
“அட்டா! கண்களுக்குக் கீழே bag வந்து விட்டதே!!!” என்றார் குமார்.