ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். வெளியுலகத் தொடர்பே இல்லை. யாரோடும் பேசுவதில்லை. வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன். ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன். ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும். பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா). ஏழிலிருந்து எட்டரை வரை நடை. கோடை வந்தால் இந்த நடை நேரம் ஆறிலிருந்து ஏழரையாக மாறும். (தினமும் 10000 அடிகள். கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வரும்.) பிறகு வீட்டு வேலைகள் மற்றும் எழுத்து.
இங்கே இன்றைய நாட்குறிப்பை எழுதத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி எட்டரைக்கு வீட்டுக்கு வந்தேன். அநேகமாக 365 நாட்களும் இட்லிதான் காலை உணவு. ஒருநாள்கூட சட்னி கிடையாது. எல்லாம் முதல் நாள் செய்த சாம்பார் அல்லது மிளகாய்ப் பொடி. கொலைப்பசியோடு இருக்கையில் சட்னி செய்ய மெனக்கெடுவதற்குப் பொறுமை இருக்காது. மிளகாய்ச் சட்னி செய்யலாம். ஆனால் மிக்ஸி சத்தத்தில் அவந்திகா எழுந்து கொள்வாள். அதன் விளைவாக நாள் பூராவும் தலைவலியில் அரற்றுவாள். மற்றவர்களைத் துன்புறுத்தி நாக்கு ருசியோடு சாப்பிட வேண்டுமா என்று விட்டு விடுவேன்.
மிளகாய்ச் சட்னி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். 25 காய்ந்த மிளகாய், கொஞ்சூண்டு புளி, நாலு பல் பூண்டு (தோலோடு), தேவையான அளவு கல் உப்பு ஆகிய வஸ்துக்களை மிக்ஸியில் போட்டு சிறிதே அளவு நீர் ஊற்றி மைய அரைக்க வேண்டும். காரம் நெருப்பாக வெளியேறும். கோடை என்றால் முகம் வேர்த்து விடும். இதை எடுத்து வைத்துக்கொண்டால் பதினைந்து நாட்களுக்குக் கெடாது. சூடான இட்லிக்கு இந்தத் துவையலோடு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் எட்டு இட்லி வரை அடிக்கலாம்.
இன்றோ நாளையோ பகலில் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
எனக்கு சாம்பார் அறவே பிடிக்காது. எத்தனை நன்றாகச் செய்தாலும் பிடிக்காது. உணவு விடுதிகளில்கூட இட்லிக்கு சாம்பார் கொடுத்தால் அதை வைத்து விட்டு சட்னிகளைத்தான் தொட்டுக் கொள்வேன்.
ஆனால் கடவுளின் கணக்கு வேறு. எங்கள் வீட்டில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையல் நடக்கும். திங்கள் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று போகும். நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் சாம்பார்தான். எப்போதாவது என்னைப் பற்றி நினைத்து எனக்காக காரக்குழம்பு செய்வாள். இங்கே செய்வாள் என்பதை சமைப்பாள் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். இரண்டு பேருமேதான் சமைப்போம். அதைப் பிறகு பார்ப்போம்.
திங்கள் கிழமை மதியம் சாம்பார். திங்கள் கிழமை இரவு சாம்பார். அதனாலேயே அதைத் தவிர்த்து விட்டு பழத்தோடு நிறுத்திக்கொள்வேன். செவ்வாய் காலை இட்லிக்குத் தொட்டுக்கொள்ள திங்கள் கிழமை மதியம் செய்த சாம்பார். செவ்வாய் மதியமும் திங்கள் சாம்பார். செவ்வாய் இரவும் திங்கள் சாம்பார். புதன் கிழமை காலை இட்லிக்கு திங்கள் சாம்பார். புதன் கிழமை மதியம் புதிதாக சாம்பார் வைக்கப்படும்.
இதுதான் கடந்த பத்து ஆண்டுகளாக மென்யு. மீன் குழம்பு மற்றும் மற்ற அசைவங்கள் சமைத்துக்கொண்டிருந்தபோது இப்படி இல்லை. ராஜ சாப்பாடுதான். ஒருநாள் வாத்துக் கறி. ஒருநாள் பன்றிக் கறி. ஒருநாள் ஆட்டுக் கறி. ஒருநாள் கோழி. பல நாட்கள் மீன்.
ஆனால் இருபத்தைந்து வயது வரை தினமுமே ஒவ்வொரு வகையான உணவுதான் கிடைத்துக்கொண்டிருந்தது. பெண் விடுதலை அமலுக்கு வராத காலம் என்பதால் என் அம்மா எனக்கு ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் பெண் விடுதலை அமலுக்கு வந்த பிறகும்கூட அம்மாக்கள் தங்கள் மகன்களுக்கு இன்னமும் என் அம்மா மாதிரிதான் இருப்பதாகத் தெரிகிறது. ஏன், அவந்திகாவே அவள் மகனுக்கு என் அம்மா எனக்குச் செய்தது போல்தான் செய்து வருகிறாள்.
சரி, நம் கதைக்கு வருவோம். இப்போது கடந்த பத்து ஆண்டுகளாக இரண்டு தினங்களுக்கு ஒரு முறை சாம்பார். இந்தப் பத்து ஆண்டுகள் என்ற காலக்கணக்கு ஆள் ஆளுக்கு வேறுபடும் என்று ஐன்ஸ்டைனோ யாரோ சொல்லியிருக்கிறார்கள் இல்லையா? அதேபோல் அவந்திகாவைக் கேட்டால் “பத்து ஆண்டுகள் இல்லை, பத்து மாதங்கள்தான், சாரு எல்லாவற்றையுமே exaggerate பண்ணித்தான் சொல்வார் என்று தெரியாதா?” என்பாள்.
வீட்டில் சமைக்கும் நாட்களில் எப்போதும் சாம்பார் மட்டுமே செய்வதில்லை. நானும் அவந்திகாவும் இருவருமே ரசப்பிரியர்கள் என்பதால் சாம்பார் செய்யும் தினங்களில் ரசமும் செய்யப்படும். ஆக, மாதம் முப்பது நாட்களும் வீட்டில் ரசம் இருக்கும்.
காலையில் தினமும் நான்தான் இட்லி செய்வேன். இதற்கும் காலக்கணக்குதான் காரணம். ஒன்பதிலிருந்து ஒன்பதரைக்குள் எழுந்து கொள்ளும் அவந்திகா (அவள் உறங்கச் செல்ல நள்ளிரவு ஆகிவிடும்) வீடு பெருக்கித் துடைத்து விட்டு (பணிப்பெண் வந்தாலும் அவர் வருவதற்குள் அவந்திகா ஒருமுறை இந்தக் கைங்கரியத்தைத் தவறாமல் செய்து விடுவாள்) அவள் காலைச் சிற்றுண்டி செய்ய (அர்த்தம் பிறகு சொல்கிறேன்) ஆரம்பிக்கவே பத்தரை ஆகி விடும். அப்படியானால் பதினோரு மணிக்குத்தான் சாப்பிட முடியும். நானோ இரவு சாப்பிட மாட்டேன். ஒரே ஒரு வாழைப்பழம்தான் இரவு உணவு. ஆக, முந்தின நாள் மதியம் இரண்டு மணிக்குச் சாப்பிட்டிருப்பேன். இடையில் எத்தனை மணி நேரம்? இருபத்தோரு மணி நேரம் உண்ணாமல் இருந்திருப்பேன். பசியில் மயக்கம் வந்து விடும். அவந்திகா சமைத்தால் (அர்த்தம் பிறகு சொல்கிறேன்) வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரவா தோசை, உப்புமா (பத்து வகை உள்ளது), பணியாரம், பூரி என்று விதவிதமாகக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பெயர் காலைச் சிற்றுண்டி அல்ல, மதிய உணவு. அதனால்தான் நடைப்பயிற்சி முடிந்து வந்ததும் நானே இட்லியில் இறங்கி விடுவது. அவளுக்கும் போட்டு வைத்து விடுவேன். மாவு புளித்திருந்தால் மட்டும் தோசை.
நேற்று மாவு புளித்திருந்த்து. தோசை வார்த்தேன். எப்படி? நான் ஓர் ஆடம்பரப் பிரியன். எல்லா விஷயத்திலும். ஒரு பதினைந்து சின்ன வெங்காயத்தை எடுத்துத் தோல் உரித்து சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டேன். ரொம்பச் சின்னதாக இருக்க வேண்டும். அதேபோல் கொத்துமல்லிக்கீரையையும் பொடியாக வெட்டிக்கொண்டேன். ஒரு நாட்டுக்கோழி முட்டையை எடுத்து அடித்துக்கொண்டேன்.
மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதில் பாதி முட்டையை ஊற்றி, அதன் மேல் cayenne pepper பொடியைத் தூவினேன். அதன் மேல் கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் கொத்துமல்லிக்கீரை. தொட்டுக் கொள்வதற்குக் கூட எதுவும் தேவையில்லை. கெய்ன் பெப்பர் என்பது வேறொன்றுமில்லை. சிவப்பு மிளகாய். இந்த முட்டை தோசைக்குக் காரமான தக்காளிச் சட்னி இருந்தால் மஜாவாக இருக்கும். என்னுடைய பசியில் அதற்கெல்லாம் நேரமில்லை.
பிறகு தோசைக்கல்லை நன்றாகக் கழுவித் துடைத்து விட்டு (அவந்திகாவுக்கு முட்டைக் கவிச்சி பிடிக்காது) அவளுக்கும் மூன்று தோசை வார்த்தேன். அவளுக்கு மட்டும் கெய்ன் பெப்பர் பொடி தூவவில்லை. அவளுக்குக் காரம் அலர்ஜி. வெறும் வெங்காயமும் கொத்துமல்லிக்கீரையும் மட்டும் தூவினேன்.
நேற்று தோசை சாப்பிட்டதும், நாளை பொங்கல் செய்யலாமா என்று கேட்டாள் அவந்திகா. ஆஹா என்றேன்.
பொங்கல் தயாராக பதினொன்றரை ஆகும். அதுவரை சாப்பாட்டுக்கு வழி? சரி, பழங்களைக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு கட்டினேன்.
பொங்கல் காரணமாக எட்டே காலுக்கே எழுந்து வந்தாள். வீடு பெருக்கும் வேலை தொடங்குவதற்கு முன்பே சொல்லி விட்டாள். ”பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம் சாம்பார் பண்ணலாம், நறுக்கிக் கொடுத்து விடு.”
சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து வைத்தேன். ஒரு ஐம்பது வெங்காயம். ஆனால் அது போதவில்லை என்பது சாம்பாரில் வெங்காயத்தைத் துழாவித் துழாவி எடுத்தபோது தெரிந்தது. வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் கடல். இத்தனைக்கும் வெங்காயத்தைத் தண்ணீரில் போட்டுத்தான் உரித்தேன். பிறகு நான்கு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி வைத்தேன். கறிவேப்பிலையைக் கழுவி வைத்தேன். கொத்துமல்லிக்கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி வைத்தேன். இரண்டு தக்காளியையும் பொடியாக நறுக்கினேன். பொங்கலுக்கு இஞ்சி வேண்டும். இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் உரித்து, பொடிப் பொடியாக நறுக்கி வைத்தேன். பொங்கலுக்குத் தேவையான முந்திரிப் பருப்பை இரண்டு இரண்டாகப் பிளந்து வைத்தேன்.
இதற்கெல்லாம் எனக்கு சுமார் முக்கால் மணி நேரம் எடுத்தது. அப்போதெல்லாம் எனக்கு ஸ்ரீயின் ஞாபகம் வரும். கல்லூரியிலும் படித்துக் கொண்டு, ஃப்ரெஞ்சும் படித்துக்கொண்டு, கணவருக்கும் பணிவிடை செய்துகொண்டு, வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரம் கழுவி, இட்லிக்கு மாவு அரைத்து (வெளியிலிருந்து இட்லி மாவு வாங்காமல் வீட்டிலேயே மாவு அரைக்கும் ஒரே தியாக மங்கை இவளாகத்தான் இருக்கும்!) – இந்தப் பெண் எப்படித்தான் இவ்வளவையும் சமாளிக்கிறாள் என்று மலைப்பாக இருக்கும். (ஏன், ரெண்டு குழந்தையும் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே அம்மிணி?) ஒரு மணி நேரத்தில் சமையல் முடிந்து விடுமாம். இத்தனைக்கும் அவந்திகாவைப் போல் ருசியாக சமைக்கும் ஒரே ஜீவன் ஸ்ரீதான் என்பது என் அனுபவம்.
இந்த இருபத்தாறு வயதில் இந்த ருசியான சமையலை எங்கே கற்றாய் என்று கேட்டால், கற்றுத் தெரிவதில்லை சமையல் கலை என்றாள். யூட்யூபைக் கூடப் பார்ப்பதில்லையாம். இத்தனைக்கும் இருபத்திரண்டு வயதில்தான் சமைக்க ஆரம்பித்தாளாம்.
பத்து மணி அளவில், பசி தாங்காமல் ஒரு கொய்யாவை வெட்டி, அதில் உப்பும் கெய்ன் பெப்பரும் தூவி சாப்பிட்டேன். அப்படியும் பசி அடங்காததால் நாலைந்து முந்திரியைத் தின்றேன். அப்படியும் பசி அடங்காததால் ஒரு வாழைப்பழத்தை முழுங்கலாமா என்று யோசித்தேன். மணி பத்து. இன்னும் அரை மணியில் பொங்கல் ஆகி விடும். இப்போது வாழைப்பழத்தையும் முழுங்கினால் பொங்கலுக்கு இடம் இருக்காது என்று புத்திசாலித்தனமாக யோசித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். தொட்டுக்கொள்ள சாம்பாரோடு தேங்காய்ச் சட்னியும் இருந்தால் நலம் என்று சட்னியும் அரைத்தாள் அவந்திகா.
என் மேஜைக்கு வந்து, விட்ட இடத்திலிருந்து தியாகராஜாவைத் தொடர ஆரம்பித்தேன். இரண்டு வாக்கியம் எழுதுவதற்குள் சாரூ… என்ற குரல் கேட்டது. கறிவேப்பிலை போதாது, இன்னும் கொஞ்சம் கொடு என்றாள். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கழுவிக் கொடுத்தேன்.
வந்து தொடர்ந்தேன்.
பொங்கல் உலகத் தரம்.
முந்தாநாள் சமையலையும் சொன்னால் (சாம்பார்), ”பிறகு சொல்கிறேன்”, ”பிறகு சொல்கிறேன்” என்று போட்ட சஸ்பென்ஸ் உங்களுக்கு விளங்கும்.
அரிசியைக் களைந்து குக்கரில் வைத்தேன். சாம்பாருக்கு பருப்பு வைக்க வேண்டும். பருப்பு என்றால் பருப்பை மட்டும் வைப்பதில்லை. பருப்பைக் கழுவி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி விட்டு, ஒரு முழுப் பூண்டை தோல் உரித்து அதில் போட வேண்டும். ஒரு தக்காளியையும் வெட்டிப் போட வேண்டும். கொஞ்சம் மஞ்சள் பொடியும், கொஞ்சம் ஜீரகமும் போட வேண்டும். ஆக, பருப்பு, பூண்டு, தக்காளி, மஞ்சள், ஜீரகம். அடப் பாவி, இதை இப்படியே தாளித்து விட்டால் சாம்பார் ஆயிற்றே? (ஏன், செய்துதான் பாரேன்?)
இதை முடித்து விட்டு, நூல்கோலை வெட்டினேன். சாம்பாருக்கு நான்கு தக்காளியும், ரசத்துக்கு இரண்டு தக்காளியும் வெட்டினேன். சாம்பாருக்குத் தக்காளியைப் பொடியாக நறுக்க வேண்டும். ரசத்துக்குப் பெரிது பெரிதாக வெட்ட வேண்டும். பிறகு ரசத்துக்குப் பூண்டு உரித்தேன். பிறகு வழக்கம் போல் கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை இரண்டையும் தயார் பண்ணினேன். தொட்டுக் கொள்ள மஷ்ரூம் வெட்டினேன். மஷ்ரூமுக்கு ஒரு வெங்காயம் வெட்டினேன். கீரையும் இருக்கிறது என்று சொல்லி கழுவிக் கொடுத்தாள். கீரைக்காகக் கொஞ்சம் பூண்டு உரித்தேன். நல்ல காலம், கீரையைக் கழுவும் வேலை இல்லை. பிறகு கீரையையும் பொடிப் பொடியாக வெட்டினேன்.
இத்தனைக்கும் எனக்கு ஒன்றரை மணி நேரம் ஆகி, நாக்கில் நுரை தள்ளி விட்டது.
மதியத்துக்குப் பிறகு இரவு பத்து மணி வரை என் பக்கமே வர மாட்டாள் அவந்திகா. அதனால்தான் இரண்டு நாவல்களை ஒரே நேரத்தில் எழுத முடிகிறது.
யாரோடும் பேசுவதில்லை. புறாவின் கண்களே குறி. இதுதான் என் குகை வாழ்க்கை. என்னை வெளியூரில் சந்திக்கும் நண்பர்கள் என்னை வைன் கிளாஸோடு பார்த்து ஏதேனும் முடிவுக்கு வந்தால் அது அவர்கள் பாடு.
நண்பர்களை சந்தா அல்லது நன்கொடை அளிக்க நினைவூட்டுகிறேன்.
நன்றி. வொணக்கம்.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai