Ullasa: An Erotic Tale நாவலில் சுமார் எண்பது பக்கங்களை எழுதி முடித்தேன். அதில் ஒரு இருபது பக்கங்களை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நாவல் மொத்தமாக இருநூறு பக்கங்கள் வரலாம். இந்த எண்பது பக்கங்களில் காமம் கொஞ்சம்தான். காதல்தான் நிரம்பி வழிகிறது. கடைசி ஐம்பது பக்கங்கள் காமம் மட்டுமே இருக்கும் என்கிறது நாவலுக்கான வரைபடம். ஒரு வரைபடத்தோடுதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால் தலைப்புகூட கடைசியில் மாறலாம். பதிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதுவே நடக்கும்.
நாவலின் நாயகன் ரிஷியும் நாயகி சஞ்ஜனாவும் நேற்று பேசிக்கொண்டார்கள்.
ரிஷி: நாளை காதலர் தினம்.
சஞ்ஜனா: ஆமாம், அதற்கென்ன?
ரிஷி: ஒரு பெண் என்னிடம் தன்னுடைய ஆயுளில் பாதியைத் தருகிறேன் என்றாளே, மறந்து விட்டாளா?
சஞ்ஜனா: இல்லையே, மறக்கவில்லையே? ஆனால் அதைக் காதல் என்று யார் சொன்னது? யாருக்கு நான் தேவையோ அவர்களுக்கு என் உயிரைத் தருவேன். உதாரணமாக, பிராணிகளுக்கு நான் தேவை. ஒரு பூனைக்கு அடிபட்டு விட்ட போது நான்கு தினங்கள் எனக்கு anxiety attack வந்து விட்டது.
இன்னும் உரையாடல் நீண்டு செல்கிறது. கடைசியில் ரிஷி தன் நண்பன் கொக்கரக்கோவின் வீட்டுக்குச் சென்று இதையெல்லாம் புலம்புகிறான்.
எத்தனை முறை அடிபட்டாலும் நீ திருந்தவே மாட்டாய் ரிஷி. எல்லா பெண்களுமே இப்படித்தான். அவள்களுக்கும் காதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எல்லாம் இந்தத் தடிப்பயல்களால் வருவது. தேவதாஸ் மாதிரி எவளாவது காதல் தோல்வியில் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறாளா, சொல்?
இப்படியே கொக்கரக்கோவுக்கும் ரிஷிக்குமான உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்த போது ரிஷி கொக்கரக்கோவிடம் குடிக்கலாமா என்று கேட்டான்.
“இன்று முக்கியமான அலுவலகப் பணிகள் இருக்கிறதே, நாளை குடிக்கலாமா?” என்றான் கொக்கரக்கோ.
”இன்றுதான் எனக்கு மன உளைச்சல். இன்றுதான் குடிக்க வேண்டும் போல் இருக்கிறது.”
“நீ மன உளைச்சலில் குடிக்கும் ஆசாமி இல்லையே? குடி கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று எழுதுபவன் ஆயிற்றே?”
“எழுத்து வேறு, வாழ்க்கை வேறு. இன்று குடிக்க வேண்டும். வருகிறாயா, இல்லையா?”
ரிஷி கேட்டால் கொக்கரக்கோ ஒருபோதும் மறுப்பு சொன்னதில்லை.
”சரி, கிளம்பு.”
அப்போது ரிஷிக்கு சஞ்ஜனாவிடமிருந்து வாட்ஸப் செய்தி. ஒரே வார்த்தைதான்.
Kisses.
ரிஷி சஞ்ஜனாவை தொலைபேசியில் அழைத்தான்.
“இப்போது உன்னை சந்திக்க முடியுமா?”
“முடியுமே?”
அந்த ஏகாரத்தில்தான் இந்தப் பிரபஞ்சமே அடங்கியிருப்பதாகத் தோன்றியது ரிஷிக்கு. இதயம் படபடத்தது. காற்றில் மிதப்பது போல் இருந்தது.
யோசிக்கவே இல்லை. “இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு கொக்கரக்கோவிடம் “பிறகு சந்திக்கலாம்” என்றபடி அங்கிருந்து பரபரப்பாகக் கிளம்பினான் ரிஷி.
***