காலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு உரிய சரியான ஆடைகள் இல்லாததால் நான் வழக்கமாக எடுக்கும் ரேர் ரேபிட் கடை இருக்கும் ஃபீனிக்ஸ் மாலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். யாரோடு செல்வது? சென்னையில் எனக்கு அதற்குத் தோதான நண்பர்களே இல்லை என்பதை முதல் முதலாக உணர்ந்தேன். இந்த வேலைக்கெல்லாம் செல்வா சரிவர மாட்டார். மட்டுமல்லாமல் அவர் ஊருக்குப் போயிருந்தார். சீனி கொலை பிஸி. அவரை இதற்கு இழுத்தடிக்க முடியாது. சுரேஷ் நெடுஞ்சாலைப் பயணம் சென்றிருக்கிறார். எங்கே அழைத்தாலும் வரக்கூடிய ராஜா காஞ்சீபுரத்தில் வசிக்கிறார். ஸ்ரீராம் ஞாபகம் வந்தது. வருகிறேன் என்றார்.
எடுத்த எடுப்பில் கட்டையைப் போட்டாள் அவந்திகா.
“ஏன், அடையாறிலேயே ஏகப்பட்ட கடைகள் இருக்கே?”
அதற்கு நான் ஒரு விளக்கம் கொடுத்து விட்டு (நான் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே எடுப்பேன்) ஸ்ரீராமுடன் ஃபீனிக்ஸ் கிளம்பினேன்.
ஸ்ரீராம் அவரது மருத்துவமனை பணிகளை முடித்து விட்டு வருவதற்கு மாலை ஏழு மணி ஆகி விட்டது. அதற்குள் நான் தூங்கி விழ ஆரம்பித்து விட்டேன். காரணம், அதற்கு முந்தின நாள் ஐந்து மணி நேரமே உறங்கியிருந்தேன்.
அதற்கான பின்னணி இதுதான்: முந்தின நாள் என் நண்பர் பாரிசாகரனின் கவிதை வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். விழா ஒன்பதுக்கு முடிந்தது. சிறையில் பதினோரு மணி வரை அனுமதி தரப்பட்டிருந்தது. அதாவது, பதினோரு மணிக்கு ஆஜராகி விட வேண்டும். அதற்கு இன்னும் ஒன்றரை மணி இருக்கிறது. அதாவது, பத்தரைக்குக் கிளம்பினால் பதினொன்றுக்கு சிறையைத் தொட்டு விடலாம்.
சீனியும் செல்வாவும் வந்திருந்தார்கள். இருவரும் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் செல்பவர்கள் இல்லை. நான்தான் அவர்களோடு பேச வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தேன். வெளியீட்டு விழா முடிந்ததும் தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சங்கம் ஓட்டல் மதுபானக்கூடத்துக்குப் போனோம். மொட்டை மாடி. நான் மட்டன் சூப் மட்டும் குடித்தேன். சூப்பில் கிடந்த மட்டன் துண்டுகளைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய பிரபலமான உணவகங்களில்கூட அவ்வளவு ருசியாக இருக்காது. அப்படி ஒரு ருசி. ஒரு கிளாஸ் வைன் அருந்துகிறீர்களா என்று கேட்டார் சீனி.
இதற்கு சற்று நேரம் முன்னால் விழா நடந்த கோடம்பாக்கத்திலிருந்து தி. நகருக்குக் காரில் வந்து கொண்டிருந்தபோது எனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு பற்றிச் சொல்ல வேண்டும். விழா நடக்கும்போது நான் தொலைபேசி அழைப்பை ஏற்பதில்லை. ஆனால் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பலரும் – ஆம், பலரும் – தங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததும் அதை எடுத்துக்கொண்டு வெளியே போய் பேசி விட்டு வந்து அமர்ந்ததை கவனித்தேன். நான் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது என் தொலைபேசி சைலண்ட் மோடில்தான் இருக்கும்.
காரில் சென்று கொண்டிருக்கும்போது எட்டரை மணிக்கு அவந்திகா அழைத்திருப்பதை அறிந்து, சீனியிடம் “அவந்திகாவிடம் பேசப் போகிறேன்” என்றேன். இப்படிச் சொன்னால் நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் வாயே திறக்கக் கூடாது என்று பொருள்.
அவந்திகாவிடம் நான் சாப்பிடப் போவதாகவும் பதினோரு மணிக்கு வந்து விடுவதாகவும் சொன்னேன்.
சீக்கிரம் வந்துடுப்பா என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள்.
அவந்திகா எப்போதுமே பன்னிரண்டரைக்குத்தான் படுப்பாள்.
எப்படி இருந்தாலும், வீட்டின் சாவியை வெளியே காலணிப் பெட்டியில் வைத்து விட்டு, வீட்டின் கதவை மூடி விட்டால் வெளியிலிருந்து சாவி போட்டால் ஒழிய யாராலும் திறக்க முடியாது. நான் வரும்போது சாவியை எடுத்துத் திறந்து கொண்டு வரலாம். அவந்திகாவின் உறக்கம் கெடாது.
ஆனால் இது பற்றியெல்லாம் வாயைக்கூடத் திறக்க முடியாத சூழல். விவாதிப்பது இருக்கட்டும். வாயைக்கூடத் திறக்க முடியாது.
எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் இறங்கியது. பதினோரு மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லியும், சீக்கிரம் வந்து விடு என்று உத்தரவிட்டால் என்ன அர்த்தம்?
இத்தனைக்கும் நான் முப்பது நாளும் வீட்டிலேயேதான் அடைந்து கிடக்கிறேன். எதற்காகவும் வெளியில் செல்வதில்லை. முப்பது நாளும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால்தான் என்னால் ஒருசில மாதங்களில் ஒரு நாவலை எழுதி முடித்து விட முடிகிறது.
ஆனால் ஒரு அவசிய காரியமாக வெளியே போக வேண்டும் என்பதற்குக்கூட அனுமதி இல்லை என்றால், இது சிறையில்லாமல் வேறு என்ன?
என் தோழி எக்ஸைல் படித்திருக்கிறாள். நான்கு ஆண்டுகளுக்கு முன் எக்ஸைல் படித்து விட்டு ஃபேஸ்புக்கில் எனக்காக ஒரு கவிதை எழுதியிருக்கிறாள். அதை இன்றுதான் எனக்கு அனுப்பி வைத்திருந்தாள். இன்றுதான் அதை நான் பார்த்தேன். எழுதப்பட்ட போதே பார்த்திருந்தால் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் வண்ணமயமாக இருந்திருக்கும்.
என்னைப் பற்றி அவளுக்கு மிகவும் கவலை. அந்தக் கவலையின் உந்துதலில், அவந்திகாவைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றாள்.
சிறையில் சுதந்திரக் காற்றுக்காக ஏங்கும் சிறைவாசியிடம் போய் ”உன் கண்காணிப்பாளரைப் பற்றிக் கொள்” என்று சொன்னால் எப்படி இருக்கும்?
சில ஆண்டுகளுக்கு முன் சீனியிடமிருந்து எனக்கு ஃபோன். நான் எடுப்பதற்குள் அவந்திகா அதை எடுத்து, “இனிமேல் சாருவுக்கு ஃபோன் செய்யாதீர்கள்” என்று கடுமையான தொனியில் மிரட்டும் குரலில் சொல்லி ஃபோனைத் துண்டித்தாள். நான் பக்கத்தில்தான் நின்றேன். நான் ஒன்றுமே சொல்லவில்லை.
இதைப் படிக்கும் நண்பர்களுக்கும் அவந்திகாவைப் ”பற்றிக் கொள்ளும்படி” சொன்ன என் தோழிக்கும் ஒரு கேள்வி. இப்படி உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் உங்களிடம் – அதாவது, உங்கள் உற்ற நண்பரிடம் நடந்து கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நான் தெரிந்து கொள்ள் விரும்புகிறேன். அடுத்த நிமிடம் விவாகரத்துதான். இல்லையா? இல்லையென்றால் ஒரு போர்க்களம்.
நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் வாழ்வில் சந்தித்த அவமானகரமான சந்தர்ப்பங்களில் அதுவே முதல் இடம் பெறும். ஏனென்றால், சீனி இல்லையெனில் நான் இந்நேரம் உயிரோடே இருந்திருக்க மாட்டேன். பல தருணங்களில் அவர் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். உயிரை விட முக்கியமானது, பணப் பிரச்சினை. என் பூனைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்குப் பெரும் பணம் தேவை. எப்போதெல்லாம் எனக்குப் பணத்தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சீனி ஒரு யோசனை சொல்வார். அவர் இதுவரை எனக்கு ஒரு பைசா கொடுத்ததில்லை. ஆனால் அவர் யோசனையைச் செயல்படுத்திய அடுத்த நிமிடம் என் பணத்தேவை சரியாகி விடும்.
இப்படி நூறு சந்தர்ப்பங்கள். ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். ஒருமுறை பணத்தேவை கடுமையாக இருந்தபோது சீனி ஒரு யோசனை சொன்னார். பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் வெளியிடுங்கள் என்றார். பத்து லட்சம் கிடைத்தது. இப்படி நூறு முறை நூறு யோசனைகள். இல்லாவிட்டால் நான் எப்போதோ கோபி கிருஷ்ணனைப் போல் பட்டினி கிடந்து செத்து சுண்ணாம்பாகி இருப்பேன்.
சங்கம் ஓட்டல் மொட்டைமாடியில் மதுபான விடுதியில் சீனி சொன்னார். ”ஒரே ஒரு கிளாஸ் வைன் அருந்துங்கள். ஒரே ஒரு கிளாஸ்.”
ஒரு கிளாஸ் அருந்தினாலும் வாசம் வரும். ஒரு பாட்டில் குடித்தாலும் வாசம் வரும். அவந்திகாவுக்கு இரண்டும் ஒன்றுதான். அதனால் நான் ஒரு கிளாஸ் கூட குடிக்காமல் சூப் குடித்தேன்.
இதைவிட அவமானகரமான, பரிதாபகரமான சந்தர்ப்பம் ஒன்று உண்டா?
உண்டு. அதையும் சொல்கிறேன், கேளுங்கள்.
சங்கம் ஓட்டல் மொட்டை மாடியில் மணி பத்தரை ஆயிற்று. பதற்றத்துடன் எழுந்தேன். பதினோரு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும்.
ஏங்க சாரு, நீங்கள்தான் குடிக்கவில்லையே? ஒரு பதினொன்றரை மணிக்குக் கிளம்புங்களேன், வீட்டுக்குப் பன்னிரண்டுக்குப் போய் விடலாம் என்றார் சீனி.
முக்கியமான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது.
வேண்டாம், பதினோரு மணிக்குக் கிளம்புகிறேன் என்றேன்.
சரியாக பதினோரு மணிக்குக் கிளம்பி விட்டேன்.
பதினொன்றே காலுக்கு வீடு.
வீட்டுக்கு வந்து பூனை வேலை. பூனைகளின் மலஜல மண்ணை மாற்றுவது போன்ற வேலைகளை முடித்துவிட்டுப் படுக்கும்போது பன்னிரண்டரை.
காலையில் ஐந்தரைக்கே எழுந்து நடைப் பயிற்சி. பத்து கிலோமீட்டர்.
அதனால்தான் நேற்று ஒரே சோர்வு. ஆனால் நடைப் பயிற்சிக்கான ஆடைகள் எடுக்க வேண்டும்.
அதனால்தான் ஸ்ரீராம் வந்தபோது ஒரே தூக்கக் கலக்கம். எழுந்து நிற்கிறேன். கால்கள் தள்ளாடின.
அந்த நிலையிலும் இரவு உணவுக்கு சோறு தயார் பண்ணி வைத்தேன். இல்லாவிட்டால் அவந்திகா பட்டினி கிடப்பாள்.
இரண்டு மாதுளம் பழங்களை உரித்து வைத்தேன்.
இல்லாவிட்டால், “நீ மாதுளை உரித்துத் தரவில்லை அல்லவா, அதனால்தான் இன்று பூராவும் வயிற்று வலி” என்பாள் அவந்திகா.
இப்படி வாழும் என்னைத்தான் என் நண்பர் கேட்டார், “அவந்திகாவை நீங்கள் அடிப்பதுண்டா?” என்று.
ஸ்ரீராமின் மனைவி சிநேகா ஸ்ரீராமிடம் கேட்டாராம், சாருவால் யாரையாவது அடிக்க முடியுமா என்று.
எனக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது என்றார் ஸ்ரீராம். என்னை ஓரிரு முறை சந்தித்த சிநேகாவுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது.
அவந்திகாவுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமேதான் நான் பணி செய்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை பாண்டிச்சேரியில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு நூறு சிகரெட் துண்டுகள் கிடந்தபோது ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து குப்பைக் கூடையில் போட்டேன்.
ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாள் ஸ்ரீ.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்றேன்.
இதை ஒரு சேவையாக நினைத்துச் செய்யவில்லை. மற்றவருக்கான பணியைச் செய்யும்போது என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. என் மகிழ்ச்சியே என் மதம். அதற்காகவே செய்கிறேன்.
எனவே, நான் பற்றிக் கொள்வதற்கு நூறாயிரம் தோள்கள் உள்ளன. எனக்கு முகம் தெரியாத என் வாசகர்களாகிய நீங்களும் என் நண்பர்களுமே அந்தத் தோள்களுக்கு உரியவர்கள்!