அன்பு

தலைப்பில் Empathy என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் அன்பு எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அன்பு என்ற பெயரில் என்ன்னென்ன அராஜகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அன்பு நாவலிலேயே விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். அன்பு என்பதை இன்றைய சமூகம் மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. புத்திமதிகள் சொல்வதும், போதனை புரிவதும்தான் அன்பு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அன்பு என்ற பெயரில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடும் வன்முறையும் நடக்கிறது. உதாரணம், எனக்குத் தேநீர் பிடிக்காது. குடித்தால் வாந்தி எடுத்து விடுவேன். (பால் கலக்காத தேநீரும், மவுண்ட் ரோடு புஹாரி ஓட்டல் தேநீரும் விதிவிலக்கு.) அப்படிப்பட்ட எனக்கு விருந்தோம்பல் செய்கிறேன் பேர்வழி என்று தேநீரைக் கொடுத்து உபசரித்தால் அன்றைய பொழுதே எனக்குக் காலி. என்னை விட சிறியவர் என்றால் என்னால் எளிதாக மறுக்க முடியும். என்னை விடப் பெரியவர் என்றால் மறுக்க இயலாது. இப்படிப் பல்லாயிரம் உதாரணங்கள் உள்ளன.

ஆனாலும் மற்றவர் சுதந்திரத்தில் குறுக்கிடாமல், மற்றவருக்கு போதனை புரியாமல் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்த முடியும். இதற்கு வள்ளுவர் ஒரு அற்புதமான விளக்கத்தைத் தருகிறார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

குறள்களிலேயே எனக்கு ஆகப் பிடித்த குறள் இது. அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்குரியதாகக் கருதுவார்கள். அன்புடையார் பிறருக்காகத் தம் எலும்பையும் தருவார்கள். இந்த இடத்தில் எலும்பு என்றால் உடல் பொருள் ஆவி என்று பொருள் கொள்ளலாம்.

எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே.

நான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கே இருந்த நூறு யென் கடைக்குப் போனேன். எதை எடுத்தாலும் நூறு யென். நூறு யென் என்பது ஐம்பது ரூபாய். சில பொருட்கள் வாங்கினேன். அதில் ஒன்று, நாற்காலியில் போடும் மெத்தை.

”இந்த மெத்தை சூட்கேஸில் எவ்வளவு பெரிய இடத்தை அடைக்கும்? இது நம் ஊரில் கிடைக்காதா?” என்று கடுமையாக ஆட்சேபித்தார் சீனி.

இங்கே கிடைக்கும்தான். யார் போய் வாங்குவது? நான் வெளியிலேயே போக மாட்டேன். அவந்திகாவிடம் சொன்னால் உதைக்க வருவாள். காரணம், இதோ சொல்கிறேன்.

நான் அந்த மெத்தையை எனக்காக வாங்கவில்லை. என் செல்லக்குட்டி டெட்டி என் நிழலைப் போல் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும். நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் என் அருகில் உள்ள ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் தூங்கும். அந்தப் பிளாஸ்டிக் நாற்காலியில் தூங்குவது அதற்கு அசௌகரியாக இருக்கும் என்று உணர்ந்தேன். நான் தூங்கும்போது என் பக்கத்திலேயே மெத்தையில் தூங்கும் பூனையல்லவா அது? பகலில் மட்டும் பிளாஸ்டிக் நாற்காலி எப்படி?

இப்போது அந்த மெத்தையை அதற்கான பிளாஸ்டிக் நாற்காலியில் போட்டு விட்டேன். ஹாயாகத் தூங்குகிறது.

இதை மானுடர் அனைவரும் செய்வார்கள்.

ஆனால் வள்ளுவர் சொல்லும் அன்புடையாரின் பொருள் அது அல்ல. நான் உங்கள் பூனைக்கும் செய்வேன். உங்கள் நாய்க்கும் செய்வேன். தெருப் பூனைக்கும் செய்வேன். தெரு நாய்க்கும் செய்வேன். மிஷ்கின் வீடு மாற்றியபோது அந்தத் தெருவில் இருந்த ஒரு நாய் (மிஷ்கின் வீட்டில் சாப்பிட்டிருக் கொண்டிருந்தது) இனிமேல் என்ன ஆகும் என்று அதைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுதவன் நான். மிஷ்கின் இப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். சாரு என்றால் அவருக்கு என் எழுத்து ஞாபகம் வராது. அந்தக் காட்சிதான் ஞாபகம் வரும்.

உங்களுக்காக என் எலும்பையும் உருக்கித் தருவேன். வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. தந்திருக்கிறேன். எனக்கு இதயத்தில் பைபாஸ் சர்ஜரி நடந்து முடிந்த போது ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்களின் உத்தரவு. சர்ஜரி முடிந்து இரண்டு தினங்கள் இருக்கும். ஐசியூவிலிருந்து ஜெனரல் வார்டுக்கு வந்து விட்டேன். அப்போது நான் மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தேன். மாத்ருபூமியில் உலக இசை, கலா கௌமுதியில் ராஸ லீலா, மாத்யமமில் அரபி இலக்கியம். அறுவை சிகிச்சை என்று ஒரு வாரம் கூட ஒரு பத்திரிகையில் கூட இடைவெளி விடவில்லை. நண்பர்களிடம் ‘டிக்டேட்’ செய்து அனுப்பி வைத்தேன்.

என் உயிர் என்னுடைய இந்த தேகத்தில் தரித்திருக்கும் வரை உங்களுக்காக என் எலும்பையும் தசையையும் உருக்கி உருக்கி எழுத்தாக மாற்றி அளித்துக்கொண்டேயிருப்பேன்.

உல்லாசம் நாவலில் ஒரு அத்தியாயத்தை காலையில் எழுதிக்கொண்டிருந்தபோது இது எல்லாம் என் மனதில் வந்தது. அன்பு நாவல் முழுக்க முழுக்க அன்பு என்ற பெயரில் செலுத்தப்பட்டு வரும் வன்முறைக்கு எதிரானது. உல்லாசம் அன்பின் சாசனம். அன்பு என்பது குறித்து எழுதப்பட்ட புனித நூல். அதை வாசித்து ஒருவர் நெக்குருகாமல் இருக்க முடியாது. சீக்கிரம் முடித்து விடுவேன். ஆனால் ஆங்கிலத்தில்தான் அதை நீங்கள் வாசிக்க வேண்டியிருக்கும்.