வர்ஜீனியா வுல்ஃபும் ஸில்வியா ப்ளாத்தும்…

உல்லாசம் நாவல் வெளிவரும் வரை அது பற்றி ஒரு வார்த்தை எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாவலின் தலைப்பு மாறி மாறி உருண்டுகொண்டே இருக்கிறது. Ullasa: The Erotics of Being என்று ஒரு தலைப்பு சரியாக வரும் என்று தோன்றுகிறது.

நாவலின் நாயகி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் நானே ஒரு பெண்ணாக உருமாறிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ பெருமளவுக்கு உதவி செய்கிறாள். ஸஞ்ஜனாவை எழுதிக்கொண்டிருக்கும்போது தவிர்க்கவே முடியாமல் ஸில்வியா ப்ளாத் மற்றும் வர்ஜீனியா வுல்ஃபின் ஞாபகம் வந்தது. ஸில்வியாவுக்கு அவருடைய குடும்பமும் பிறகு கணவனும் (பிரபலமான கவிஞன் டெட் ஹ்யூஸ்) இது போதாமல் அவருடைய மனநலனும் தீராத பிரச்சினைகள். வுல்ஃப் பாவம், ஒரு சிட்டுக்குருவியின் மரணம் கூட அவரை நிலைகுலையச் செய்து விடும். இருவருமே ஐரோப்பியக் கூட்டு மனநோய்மைக்குப் பலியானவர்கள். ஒரு சிட்டுக்குருவியின் மரணமே ஒருவரை நிலைகுலையச் செய்யும் என்றால், தொண்ணூறு லட்சம் பேரின் படுகொலை அந்த மனதை என்ன பாடு படுத்தியிருக்கும்?

ஸஞ்ஜனாவுக்கு இந்த சமூகப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவள் குடும்பம்தான் அவள் சுமந்த சிலுவை. ஸஞ்ஜனாவின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கும்போது அவளை நான் ஸில்வியா ப்ளாத்துடன்தான் ஒப்பிட முடிந்தது. ஆனால் வுல்ஃபுக்கும் ஸஞ்ஜனாவுக்கும்தான் நிறைய இணைத்தன்மைகள் உள்ளன என்றாள் ஸ்ரீ. இப்படியாக வுல்ஃப், ஸில்வியா, ஸஞ்ஜனா, ஸ்ரீ என்ற பெண்களுக்கு இடையே ஊடாடி ஊடாடி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஸீரோ டிகிரி, அதற்குப் பிறகு பெட்டியோ ஆகிய நாவல்களை எழுதும்போதுதான் ஆகப் பரவசத்துடன் எழுதினேன். இப்போது உல்லாசம் நாவலை அதோடெல்லாம் ஒப்பிட முடியாத பரவசத்திலும் உன்மத்த நிலையிலும் எழுதி வருகிறேன். தகவல் தொடர்பில் மிகச் சரியாக இருக்கும் நான் இப்போதெல்லாம் மேலே குறிப்பிட்ட நான்கு பேரைத் தவிர வேறு யாருடனுமே தொடர்பில் இல்லை. நண்பர்கள் அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நாவலைப் படித்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகள் இந்திய ஆங்கில இலக்கியத்துக்கு ஒரு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அப்படி ஒரு பங்களிப்பு தருண் தேஜ்பாலின் ஆல்கெமி ஆஃப் டிஸைர் நாவலில்தான் நடந்திருக்கிறது. உல்லாசம் ஆல்கெமிக்கு அடுத்து வருவதால் ஆல்கெமியை அது மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாண்டியிருக்கும் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மொழியில் தருணைத் தாண்டுவது ஒரு சவால்தான். அந்த சவால் ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் முறியடிக்கப்பட்டு விட்டது.

In Sanjana’s Diaries, readers will discover a ‘prose Shakespeare’—a testament to how Shakespeare’s grandeur can be recreated in a modern, narrative-driven form.

And,

I am deeply indebted to Shree for her erudition and poetry, as she has, in many ways, been a co-traveler in this journey of words, of poetry, of this wonderful marvel called Ullasa: The Erotics of Being.