அருணின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எழுதியிருக்கும் அறிவிப்பு இது. ஆனால் அருண் இப்போது மிக மிக மிக மிக சந்தோஷப்பட வேண்டிய தருணம் இது. அஸாஞ்ஜே, தருண் தேஜ்பால் போன்றவர்களுக்கு செய்ததைப் போல் அருணுக்கு செய்யவில்லை என்பது பற்றி அவர் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும். இனி அருண் பேசுகிறார்:
நண்பர்களே இதுநாள் வரை தொடர்ந்து பல்வேறு விசயங்களில் பல்வேறு நபர்களை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கமல், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா என பலரையும் விமர்சிக்க முடிந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் பற்றி ஒருமுறை ஒரே வரியில் ஒரு வார்த்தை எழுதியிருந்தேன். அதற்காக, பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் பல்வேறு அதிகாரிகள் வரை அந்த பதிவிற்காக என்னைக் கடிந்துக் கொண்டார்கள். நேற்றும் அதற்கு முந்தைய நாளும், ரஜினிகாந்த் பற்றி என்னுடைய விமர்சனத்தை எழுதியிருந்தேன். நேற்றோடு என்னுடைய முகநூல் கணக்கை முடக்கிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான நபர்கள் புகார் அளித்ததால், நீங்கள் இனி உங்கள் கணக்கில் தொடர முடியாது. உங்கள் கணக்கிலிருந்து ஒரு பக்கத்தை நிர்வகித்துக் கொள்ளலாம் என்று முகநூல் நிர்வாகம் அறிவிப்பு அனுப்பிவிட்டது.
என்னுடைய முகநூல் கணக்கு என்பது சாதாரணமான ஒன்றல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அதில் தீவிரமாக எழுதி வருகிறேன். தவிர தமிழ் ஸ்டுடியோவின் பெரும்பாலான செயல்பாடுகளை பதிந்து வைத்திருக்கும் வரலாற்று ஆதாரமாக என்னுடைய முகநூல் கணக்கே இருந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். எனக்கு ஒரு சிறு பிரச்சனை என்றால் கூட, ஓடி வந்து உதவக் கூடிய பல நண்பர்கள் எனக்கு முகனூலில் உண்டு. தவிர, உலகம் முழுக்க எனக்கு ஒரு நெட்வொர்க் இருந்தது. பல நண்பர்களின் பெயரே எனக்குத் தெரியாது. முகநூல் கணக்கில் சென்று search செய்துதான் அவர்களின் பெயரையே கண்டுபிடிப்பேன். என் மீது அளவற்ற பிரியம் வைத்திருக்கும் பல நண்பர்களை இப்போது எப்படி தேடித் பிடிப்பது என்று தெரியவில்லை. நல்ல வேலையாக நண்பர் யுகேந்தர் என்னுடைய முகநூல் பதிவுகளை சேமித்து வைத்திருந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நான் எழுதிய பதிவுகளை சேமிக்க வில்லை. தவிர நேற்று எழுதிய ரஜினிகாந்த் பற்றிய பதிவும் இப்போது என்னிடம் இல்லை.
எத்தனையோ தடைகள் வந்தாலும், பல அவமானங்களை சந்தித்திருந்தாலும், கொலை மிரட்டல், மோசமான வசை சொற்களால் பலர் அர்ச்சனை செய்தபோதும், கடுமையான பண நெருக்கடி ஏற்பட்டபோதும் கூட நான் சோர்ந்து போனதே இல்லை. ஆனால் இப்போது மிக சோர்வாக இருக்கிறது. இந்த சமூகத்தில் இயங்குவதற்கே வெட்கமாக இருக்கிறது. ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் இருக்கக் கூடிய இந்த சமூகத்தில் சமூக செயல்பாடுகள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதே எல்லாவற்றையும் தாண்டி, எதற்கெடுத்தாலும் பொங்கி எழும் நண்பர்கள் இப்படி ஒரு நிகழ்வு நடந்தையே கண்டுகொள்ளவில்லை.
இனி என்னுடைய கட்டுரைகளை இந்த பக்கத்தில்தான் எழுதுவேன். ஆனால் இது எத்தனை பேருக்கு போய் சேரும் என்று தெரியவில்லை. என்னுடைய முகநூல் கணக்கில் இருந்த நண்பர்களுக்கு இந்த பதிவு தெரிந்தால், தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.