சமஸ் எழுதிய கடல் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடியேன் எழுதிய முன்னுரை. என் பெயரைச் சொல்லவே தயங்கும் சூழலில் என்னிடம் முன்னுரையே கேட்ட சமஸின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். இந்த நூல் தி இந்து அரங்கில் கிடைக்கும். நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். தி இந்து அரங்கு எண்: 343 A &B இனி முன்னுரை:
சமஸின் ‘நீர், நிலம், வனம்’ கட்டுரைகள் ‘தி இந்து’வில் தொடராக வெளியானபோது அதை ரசித்துப் படித்த ஏராளமான வாசகர்களில் நானும் ஒருவன். அப்போது நான் அடைந்த பரவச உணர்வை வார்த்தைகளில் சொல்வது கடினம். மூன்று காரணங்கள் உண்டு.
இந்தியாவின் மத்திய தர வர்க்கமும், மேட்டுக்குடியினரும் அறவே அறிந்திராத கோடிக்கணக்கான மக்கள் கூட்டம் சமூகத்தின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான மொழியும் கலாச்சாரமும் இருக்கிறது என்ற விஷயமே அவர்களைச் சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளிவிட்டு வாழும் ஏனைய மனிதர்களுக்குத் தெரியாது. சரியாகச் சொல்லப்போனால், இப்படி ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்துகொண்டிருப்பதே மற்றவர்கள் அறியாத செய்தி. ஊடகங்களுக்கும் இவர்களைப் பற்றிய எந்த அக்கறையும் இருப்பதில்லை. அநேகமாக என் வாழ்நாள் வாசிப்பில் அப்போதுதான் ஒரு நாளிதழில் – அதுவும் தமிழில் – இப்படி ஒரு தொடரைக் கண்டேன். இது என்னுடைய பரவச உணர்வுக்கு முதல் காரணம்.
நான் நெய்தல் நிலத்துக்காரன். கடல்தான் என் வாழ்விடம். கடலில்தான் நீச்சல் அறிந்துகொண்டேன். கடலை நாங்கள் கடல் மாதா என்றே அழைப்போம். எங்கள் உணவையும் கடலே அளித்தது. கடலின் சப்தம்தான் எங்களுக்கான இசை. கடலின் பிரம்மாண்டம்தான் இந்தப் பிரபஞ்சத்துக்கும் எங்களுக்குமான உறவைக் கற்றுக் கொடுத்தது. எத்தனையோ காலை நேரங்களை எங்கள் நாகூர் கடற்கரையான சில்லடியில் சூரியனின் உதயத்தைத் தரிசிக்க வேண்டிக் கழித்திருக்கிறோம். நான் தில்லி போனதும் கடல் வாழ்க்கை காணாமல் போனது. பிறகு மீண்டும் சென்னைக்கு வந்ததுகூட என் கடல் மாதாவின் ஈர்ப்பு விசைதானோ என்று தோன்றுகிறது. இப்போது பத்து ஆண்டுகளாக மீண்டும் கடலின் அண்மை. இந்தத் தொப்பூழ்கொடி பந்தம் இந்தத் தொடரோடு நான் ஒன்றிப்போனதற்கு இரண்டாவது காரணம்.
என் வாழ்வில் என்னை அதிகம் பாதித்த ஒரு நூல் ஆஸ்கார் லூயிஸ் எழுதிய ‘லா வீதா’ (La Vida – வாழ்க்கை). மானுடவியல் நூலான இதில் எல் சால்வதோரின் கடலோர மக்களின் வாழ்க்கையை ஒரு மிக நீண்ட ஆவணமாகப் பதிவுசெய்திருக்கிறார் லூயிஸ். பின்னர் அந்த நூலை இலக்கியவாதிகள் ஒரு மகத்தான இலக்கியப் படைப்பாகக் கொண்டாடினர். அதனால் ‘லா வீதா’ மானுடவியல்/இலக்கியம் என்ற பிரிவில் இப்போது வாசிக்கப்படுகிறது. அந்த நூலுக்குப் பிறகு அந்த நூலின் தரத்துக்கு வந்துள்ள ஒரு நூல் சமஸின் இந்தக் கடல் கட்டுரைகள். மேலும் இதில் மானுடவியல் மட்டுமல்லாமல் மொழியியல், புவிவியல், வரலாறு, பயணம், சாகசம் என்று எல்லா துறைகளையும் உள்ளடக்கியதான ஒரு அபூர்வத்தை சாதித்திருக்கிறார் சமஸ். இது மூன்றாவது காரணம்.
பொதுவாக வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ ஆய்வோ இன்றி காமா சோமா என்று டெஸ்கில் வைத்து எழுதப்பட்டவையாகவே இருப்பது தமிழின் நடைமுறை. பரபரப்புக்கு வேண்டுமானால் எப்போதாவது போலீஸுக்குத் தண்ணி காண்பித்து காட்டில் வாழும் நபர்களை நேரில் கண்டு புகைப்படத்துடன் கூடிய கட்டுரைகள் வரும். மற்றபடி ஆய்வுபூர்வமான கட்டுரைகளுக்கு நாம் போக வேண்டிய இடம் சிறுபத்திரிகைகளாகவே இருந்துவந்தன. இந்த நிலையில், தமிழ்ப் பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முதலாக நமக்கு மிக அண்மையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் சக மனிதர்களைக் குறித்து எழுதியிருக்கிறார் சமஸ். அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் சிரமங்களை இந்தத் தொடரில் காண முடிகிறது. பல இடங்களில் ஒரு சாகசப் பயணத்தை வாசிப்பதுபோல் இருக்கிறது. உயிரையும் பணயம் வைத்துத்தான் எழுதியிருக்கிறார் என்பதை சமஸின் ஒவ்வொரு வாக்கியமும் உணர்த்துகின்றன.
பொதுவாக இது போன்ற கட்டுரைகளை ஆங்கிலத்தில் – அதுவும் இந்தியாவுக்கு வெளியேதான் – வாசித்திருக்கிறேன். தமிழில் இதுவே முதல் முறை. இத்தொடரை வாசித்தபோது எனக்கு எண்பதுகளில் நான் வாசித்த ‘சபால்டர்ன் ஸ்டடீஸ்’ (Subaltern Studies) தொகுதிகள் ஞாபகத்துக்கு வந்தன. சபால்டர்ன் என்ற வார்த்தையின் பொருள் சாதி, மதம், இனம் போன்றவற்றின் காரணமாக சமூகத்தின் தாழ்ந்த நிலையில் வாழ்பவர்கள் என்பது. இவர்களின் வரலாற்றைச் சொல்வதுதான் ‘சபால்டர்ன் ஸ்டடீஸ்’ குழுவின் பணியாக இருந்தது. பாடப் புத்தகங்களில் கற்பிக்கப்படும் வரலாற்றுக்கு மாற்றாக வரலாற்றைக் கீழேயிருந்து பார்த்தது இந்தக் குழு. தெற்காசியாவைத் தனது ஆய்வுக் களனாகக் கொண்ட இந்தக் குழுவை உருவாக்கியவர் ரணஜீத் குஹா.
சமஸின் இந்தக் கட்டுரைகளும் நம் சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றைச் சொல்பவைதாம். அதனாலேயே இந்தக் கட்டுரைகளை ‘சபால்டர்ன் ஸ்டடீஸ்’ என்ற வகையில் சேர்க்கலாம்.
நிலவியலுக்கும் மொழியியலுக்கும் இந்தக் கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம்? தொடரின் ஆரம்பக் கட்டுரையில் சமஸ் சொல்கிறார்: “நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி.”
இந்தப் பெயர்களெல்லாம் இந்தக் கட்டுரையின் காரணமாக மக்களின் ஞாபக ஏட்டில் சாகாவரம் பெற்றுவிட்டன. இப்படி இந்தத் தொடர் முழுவதுமே நம்முடைய ஆயுளில் அறிந்துவிட முடியாத பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் அறிந்துகொள்கிறோம். பொதுவாக இவையெல்லாம் இலக்கியத்தில்தான் இடம்பெறுவதைக் கண்டிருக்கிறேன். இப்போதுதான் முதல்முதலாக ஒரு கட்டுரைத் தொடரில் காண்கிறேன். இது தவிர, இந்தக் கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய அம்சம், இதில் வரும் மக்கள்மொழி. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்கு செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். இந்த நூலின் வாயிலாக பொதுத் தமிழின் பயன்பாட்டுக்குச் சேர்ந்திருக்கும் புதிய வார்த்தைகள் ஏராளம்.
சுருக்கமாகச் சொன்னால், தமிழனின் சபால்டர்ன் வரலாற்றைக் கூறும் இந்த நூல் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்; என் தமிழ் வாசிப்பில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை நல்கிய நூல். இதை எழுதிய சமஸ் மானுடவியலையும் இலக்கியத்தையும் இணைத்து ஒரு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறார். வாழ்த்துகள்.
சாரு நிவேதிதா
மைலாப்பூர்
7-1-2015