ஏதோ உள்மனதில் தோன்றியதால் தான் மாரல் சப்போர்ட் கொடுங்கள் அது இது என்று எழுதினேன். ஆனால் எவ்வளவு கெஞ்சியும் வாசகர் வட்ட நண்பர்கள் இரண்டே பேர்தான் வந்திருந்தார்கள். நான் எழுதியிருந்ததை மீண்டும் தருகிறேன்:
”இன்று 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன். ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது. நாளைய நிகழ்ச்சியை அந்தக் கலந்துரையாடலாக மாற்றுவோம்.
பொதுவாக இது போன்று நான் கலந்து கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில் வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்பதை கவனிக்கிறேன். கலந்து கொண்டால் எனக்கு ஒரு தார்மீக ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
புத்தகக் காட்சியில் சிற்றரங்கம் கிழக்கு மற்றும் காலச்சுவடு அரங்குகளுக்கு இடையே உள்ள வழிநடையைத் தாண்டியதும் உள்ளது.”
நாடகத்தின் அடுத்த காட்சி என்ன தெரியுமா? கொலை மிரட்டல். ஆம், சிற்றரங்கத்தில் அதுதான் நடந்தது. கீழே என் முகநூலில் பதிந்ததைத் தருகிறேன். படியுங்கள்:
”எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கருப்புசாமியையும் முத்துக்கிருஷ்ணனையும் தவிர வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் இன்றைய மூன்றரை மணி வாசகர் சந்திப்புக்கு வரவில்லை. ஒரு வாசகர் மாதொரு பாகன் பிரச்சினை பற்றிக் கேட்டார். நான் அது ஒரு அமெச்சூரிஷ், mediocre நாவல் என்று சொன்னேன். உடனே ஒரு பெரியவர் பெரும் கலாட்டா செய்து என்னைக் கண்டபடி அசிங்கமாகத் திட்டி, நானும் வாசகர்களுமாக உரையாடிக் கொண்டிருந்ததைக் கெடுத்து வன்முறையில் ஈடுபட்டார். அவரை நானும் பதிலுக்குத் திட்டியதும் நாலைந்து திடகாத்திரமான நபர்கள் வந்து பெரும் குரலில் என்னைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி அடிக்கப் பாய்ந்தனர். நான் தந்திரமாக எதுவும் பேசாமல் அமர்ந்திருந்ததால் உயிர் தப்பினேன். கடைசி வரை மாதொரு பாகன் பற்றிப் பேச விடவில்லை. பேசினால் புகுந்து அடிப்போம் என்று கத்தினார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ரெண்டாம் ஆட்டம் நாடகம் போட்ட போது நடந்த கலவரமும் வாங்கிய அடியும் ஞாபகம் வந்தது. அப்போது உடம்பில் வலு இருந்தது. இப்போது ஒரு தட்டி தட்டினால் மரணம். கிழக்கு அரங்கில் அமர்ந்து வாசகர்களுக்குக் கையெழுத்துப் போடலாம் என்று ஆர்வமாக இருந்தேன். இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டமும் அதிகம். ஆனால் போலீஸ் என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தனர். புரிந்தது. பெரும் ஜனத்திரளில் கொலை நடந்தால் அது பெரும் தள்ளுமுள்ளு ஆகி பல மரணங்களுக்கு வழி வகுத்து விடும். பிறகு ஐந்தாறு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டேன். நான் புத்தகச் சந்தையில் இருந்தால் அடிப்பார்கள் என்பதால் போலீஸே என் பாதுகாப்பு வேண்டி என்னைப் போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றியது…
நடந்தது அனைத்தும் திட்டமிட்டு நடந்ததாகவே தெரிகிறது. பெருமாள் முருகனுக்காக வரிந்து கட்டிய ஊடகங்கள் இப்போது என்ன செய்கின்றன என்று பார்க்கிறேன். ஒன்றுமே செய்யாது. ஏனென்றால், எனக்கு இலக்கிய மாஃபியா கும்பலின் ஆதரவு கிடையாது. மனுஷ்ய புத்திரனால் என்ன செய்ய முடியும்? எனக்காக ஒரு இரங்கல் கவிதை எழுதுவார். அவ்வளவுதான்.
நாளை காலை நடைப் பயிற்சிக்குப் போகலாமா என்று யோசனையாக இருக்கிறது. நாளை மாலை எந்தப் பாதுகாப்புடன் புத்தக விழாவுக்குப் போவது என்றும் புரியவில்லை.
கருத்துச் சுதந்திரம் வாழ்க…