எக்ஸைல், ஸால்ஸா…

இன்று காலையிலிருந்து பல நண்பர்கள் போன் செய்து பத்து நாட்களாக சாரு ஆன்லைனில் ஒன்றும் எழுத்து இல்லையே என்று விசனத்துடன் கேட்டனர். இதோ இப்போது எழுதத் தொடங்கி விட்டேன்.

பத்து நாட்கள் ஒன்றும் இல்லாததற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று, எக்ஸைல் வேலை.  தமிழில் வெளிவந்த போது அதன் மொத்த வார்த்தைகள் 80,000 வார்த்தைகள் இருக்கலாம்.  இப்போது 1,50,000 வார்த்தைகள். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.  இன்னும் 50,000 வார்த்தைகள் சேர்க்க விஷயம் இருக்கிறது.  ஆனால் மொழிபெயர்ப்பாளர்களின் வசதி கருதியும் ஆங்கிலத்தில் விரைவில் வர வேண்டும் என்ற என் ஆசை காரணமாகவும் சுருக்கமாக முடித்து விட்டேன்.

எக்ஸைல் இப்படி ஆங்கில மொழிபெயர்ப்பில் இரண்டு மடங்காக ஆகி விட்டதற்கு ஒரே காரணம், தருண் தேஜ்பால் தான்.  அவருடைய alchemy of desire படித்த போது எக்ஸைலில் பல இடங்கள் மௌனமாக இருப்பதையும், அந்த இடங்கள் நிரப்பப்பட வேண்டியவை என்றும் உணர்ந்தேன்.  நாவலில் erotic விஷயங்களே இல்லை என்று தோன்றியது.  அதையும் சேர்த்தேன்.  காமாட்சி என்ற ஒரு அற்புதமான பாத்திரம் வருகிறது.  உதயா தஞ்சாவூரில் இருக்கும் காமாட்சி அம்மனிடம் நின்று “உன்னையே நினைத்து, உன் காலடியிலேயே கிடந்த காமாட்சி அம்மாளை ஏன் நீ கை விட்டாய்?” என்று கேட்கிறான் அல்லவா?  அந்தக் காமாட்சி என்ன கஷ்டப்பட்டாள்?  அவள் யார்?  உதயாவின் பெரியம்மா என்று சொன்னால் போதுமா?  அவளுடைய வாழ்க்கையே எக்ஸைலில் இல்லை.  இப்படி பல பாத்திரங்கள் ஒவ்வொரு பக்கமாகக் கரைந்து போய் இருந்தார்கள்.  அதையெல்லாம் எழுதினேன்.

எழுதி முடித்து ஐந்து நிமிடங்களே ஆகின்றன.  சாரு ஆன்லைனுக்கு வந்து விட்டேன்.

பல நண்பர்கள் என்னிடம் உங்களுக்கு ஏன் இளையராஜாவைப் பிடிக்கவில்லை என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்கிறார்கள்.  அவர்களெல்லாம் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  தவறு.  படித்தவர்கள்தான்.  ஆனால் வெறுமனே கடந்து சென்று விடுகிறார்கள்.  அந்த எழுத்து அவர்களை எதுவுமே செய்வதில்லை.  இளையராஜாவின் பெயர் தெரிந்தால் மட்டும் அவர்களுக்குப் புரிகிறது.  மற்றபடி கண்ணில்லாதவன் முன்னே வரைந்த ஓவியம் தான்.  இப்படி நான் எண்ணற்ற ஓவியங்களை வரைந்திருக்கிறேன் என்று மூன்று கோணல் பக்கங்கள் தொகுதிகளையும் மீண்டும் படித்துப் பார்த்த போது உணர்ந்தேன்.  உதாரணமாக, என்னிடம் கணினி வசதியே இல்லாத போது – 12 ஆண்டுகளுக்கு முன்பு – ஸால்ஸா பற்றியும் Argentenian Tango பற்றியும் அவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறேன்.  அதில் நான் குறிப்பிட்டிருக்கும் பாடகர்களை இன்று நீங்கள் கூகிளில் தேடிக் கேட்கலாம்.  கேளுங்கள்.  நான் அவற்றை சி.டி.வடிவில்தான் கேட்டிருக்கிறேன்.  அமெரிக்காவில் வாழும் என் வாசகர்கள் சிலர் எனக்காக தென்னமெரிக்க நாடுகளுக்கே சென்று வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.  அந்தச் சமயத்தில் அமெரிக்காவிலேயே இவர்களின் இசைக் குறுந்தகடுகள் கிடைக்காமல் இருந்தன.

நான் எழுதியிருந்ததற்குப் பதிலாக சத்யா கிருஷ்ணமூர்த்தி என்ற ஸால்ஸா நடனக் கலைஞர் ஐரோப்பாவிலிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அவர் குறிப்பிட்டிருக்கும் கலைஞர்களையும் இன்று நீங்கள் கூகிளில் தேடிக் கேட்கலாம்.  அந்தக் கடிதம் கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதியில் உள்ளது.  இன்று சென்னையில் பல ஸால்ஸா கிளப்புகள் உள்ளன.  அங்கே நான் எனது நண்பர்களைச் சந்திக்கப் போகும் போது பல பிரபல விஐபி நடிகர்களின் புத்திரிகளைப் பார்க்கிறேன்.  அந்த நடனப் பள்ளியில் இருக்கும் ஒருவர் கூட நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள ஸால்ஸா பற்றிய கட்டுரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை.  காரணம், அவர்கள் யாருக்குமே தமிழ் படிக்கத் தெரியாது.  தமிழர்கள்தான்.  இருந்தாலும் தெரியாது.  என் தமிழ் வாசகர்களுக்கோ நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதில் கவனம் இல்லை.  இளையராஜா பெயர் இருந்தால்தான் புரியும். இசை பற்றி நான் எழுதியிருப்பதை ஒருவர் ஆய்வு செய்து கேட்டால், அவருக்கு அதற்கு ஐந்து முழு ஆண்டுகள் ஆகும்.  ஆனால் யாருக்குமே அக்கறை இல்லை.  கோணல் பக்கங்கள் ஏதோ ஒரு சில நூறு பிரதிகள் விற்றுள்ளன.  நாவல் என்றால் மட்டுமே நாலாயிரம்.  கட்டுரை என்றால் அதிக பட்சம் 500 தான்.  என்ன செய்வது? கிழக்கு பதிப்பகத்தில் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகள் வெளியிட்டுள்ளனர்.  இதை மொபைல் போனிலும் டவுன்லோடு செய்து படிக்கலாம்.  கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

உடனே எனக்கு “கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கிறது?” என்று விசாரித்து டஜன் கடிதம் வரும் என்பதால் நானே அவர்களின் முகவரியைத் தருகிறேன்.

Reach  by Mail/Phone

New Horizon Media Private Limited
177/103, First Floor, Ambal’s Building, Lloyds Road,
Royapettah.
Chennai – 600014
Tamil Nadu, India

Ph: 91 92444 11119    (Note: When you call, pl call from the number that you have reigtered with us at the time of ordering the books.)
Fax: 91 44 4300 9701

nhm-shop@nhm.in

(எழுதாமல் போனதன் இரண்டாவது காரணம், நாளை சொல்கிறேன்…)

இனி வருவது ஸால்ஸா நடனக் கலைஞர் சத்யா கிருஷ்ணமூர்த்தியின் கடிதம்:

என் கடிதத்தை வெளியிட்டதற்கு நன்றி. ஆனால், மறுபடியும் இது சம்பந்தமாக உங்களுடன் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒன்று, லத்தீன் உறவுகளும் அவை ஸால்ஸா நடனத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதும். இரண்டாவது, த்தாங்கோ அர்ஹெந்தீனோ (Argentenian Tango) ஸால்ஸாவிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பது.

லத்தீன் உறவுகள் ஆணாதிக்கத் தன்மை (Machismo) கொண்டவை என்பது அனைவருக்கும் தெரியும். லத்தீன் அமெரிக்கச் சமூகம் ஆண்களால் ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்டது. இதுவே லத்தீன் நடனத்திலும் வெளிப்படுகிறது. ஆண் நடனக்காரனே நடனத்தை நடத்திச் செல்பவன். பெண் அவனைப் பின்பற்றிச் செல்பவள் மட்டுமே. நடன அரங்கில் தன்னை நடனத்துக்காக அழைக்கப்போகும் ஆணுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். நிச்சயமாக லத்தீன் பெண்களுக்கு தன்னை அழைக்கும் துணையை மறுப்பதற்குரிய உரிமை இருக்கிறது. இப்படி மறுக்கப்படும் ஆணின் ஈகோ காயப்படுகிறது. அவன் அவளைத் தன்னுடன் ஆடும்படி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான். அவள் மறுக்கிறாள். சமயங்களில் இது சச்சரவுகளையும் உண்டுபண்ணியிருக்கிறது.

இதுதான் லத்தீன் வாழ்க்கையிலும் அப்படியே பிரதிபலிக்கிறது. ஒரு ஆண் பலவிதமாக நயந்து பேசி பெண்ணை வசப்படுத்த முயற்சிக்கிறான். அவன் வாழ்க்கையின் குறிக்கோளே அவளை அடைவதுதான். ஆனால், ஒரு லத்தீனா (லத்தீன் பெண்) அவனை உதாசீனப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆனால், அவனோ தொடர்ந்து அவளிடம் இறைஞ்சுகிறான். அடிமையென நடந்துகொள்கிறான். எல்லாம் அவளை அடையும்வரைதான். அடைந்தவுடன் அடுத்த பெண்ணை நோக்கிய தனது சாகசத்தைத் தொடர்கிறான். இப்போது அந்த ஆண் மகனைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது பெண்ணின் கடமையாகி விடுகிறது. இப்படியாகப் பல உறவுகள் பாதியிலேயே முறிந்து போகின்றன. முறியாமல் தொடரும் உறவுகள் பெண்களின் கண்ணீர்க் கதைகளாக மிஞ்சுகின்றன. ஸால்ஸா நடனத்தில் இதை நீங்கள் வெகு அழகாகப் பார்க்கலாம்.

மனிதர்களைக் கவனிப்பதற்கு ஸால்ஸா க்ளப்பைப் போன்ற பொருத்தமான இடம் வேறு எதுவுமில்லை என்பது என் கருத்து. இது சம்பந்தமாக ஒரு அருமையான கூப படம் ஒன்றை உங்களுக்கு நான் சிபாரிசு செய்ய முடியும். அதன் பெயர் Hasta Certo Punto (Upto a certain point). இது ஒரு எழுத்தாளன் ஹவானாவின் துறைமுகத் தொழிலாளர்களிடம் கூபச் சமூகத்தில் ஆணாதிக்கம் எப்படியிருக்கிறதென்று பேட்டி காண்பது பற்றிய படம். துறைமுகத்தில் அவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அவள் ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட்டவள். எழுத்தாளன், அவளிடம் காதல் பேசிக் கசிந்து உருகி இறுதியில் திருமணமும் செய்துகொள்கிறான். ஆனால், அவனும் ஒரு ஆணாதிக்கச் சமூகத்திலிருந்துதானே வருகிறான்? அவனாலும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அவர்கள் உறவு முறிந்து போகிறது.

எனவே, ஒரு ஸால்ஸா நடனக் கலைஞன் தன்னை முன்னிறுத்தும் போது உண்மையில் அவன் தன்னுடன் ஆடும் பெண்ணைத் தன்னைப் பின்பற்றுமாறே அழைக்கிறான். பெண்ணும் அதற்குச் சம்மதிக்கிறாள். இதுதான் ஸால்ஸாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

ஆனால், த்தாங்கோ அர்ஹெந்தீனோ அப்படியல்ல. நடனத் தளத்தில் நீங்கள் ஸால்ஸாவிலிருந்து மிக வேறுபட்டதொரு நடனத்தைப் பார்க்கலாம். இங்கும் ஆணே முன்னிலை வகிக்கிறான். ஆனால், சமயங்களில் பெண்ணும் முன்னணிக்கு வருகிறாள். ஆணுக்கு அவளே நடனத்தின் திசைகளைக் காண்பிக்கிறாள். வழக்கத்துக்கு மாறான இந்தப் பாணி அர்ஹெந்தீனிய வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது.

த்தாங்கோ அர்ஹெந்தீனோ துறைமுக நகரமான புவெனோஸ் அய்ரஸில் தொடங்கியது. அதனுடன் ஜெர்மனியிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் Bandoneon வும் வந்து சேர்ந்துகொண்டது. துறைமுகத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதை ஆடவும் பாடவும் செய்தனர். பந்தோனியோனிலிருந்து கிளம்பும் இசை மிக உக்கிரமானது, வதைக்கக்கூடியது.

துறைமுகத் தொழிலாளர்களோ நாள் முழுதுமான கடும் உழைப்புக்குப் பிறகு மிகவும் தனித்திருக்கிறார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதலாகக் கிடைக்கக்கூடியது அங்கிருக்கும் வேசிகள் மட்டுமே. பணத்தைத் தேடித் துறைமுகத்துக்கு வரும் அந்த வேசிகளே தொழிலாளர்களின் சகாக்களாக இருக்கக்கூடியவர்கள். ஆனால், எந்த வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற உரிமை அவ்வேசிகளிடம் இருந்தது. எனவே, இசையைக் காண்பித்து என்னுடன் ஆட வா என அழைக்கும் ஆண் மகனைப் பற்றி அவளுக்குக் கவலையே இல்லை. நடனமாடும்போதுகூட அவள் தனது ஆதிக்கத்தையும் ஆண்களைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள உரிமையையும் நிலைநாட்டுகிறாள்.

இதுவே த்தாங்கோ அர்ஹெந்தீனோவில் வரலாற்றுப் பின்னணி. அதனால் த்தாங்கோவில் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே சம பங்கு இருந்து வருகிறது.

த்தாங்கோவை கேட்க விரும்பினால், நீங்கள் தேட வேண்டிய கலைஞர்கள் Carlos Gardel, Astor Pisazzola, Juan Maglio Pacho.

 

 

 

 

 

 

 

Comments are closed.