இன்று இரவு சேர்வராயன் மலைக்குக் கிளம்புகிறேன். சேர்வராயன் மலைக் கடவுளைப் பற்றி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் எழுதியிருக்கிறேன். பாப்பாத்தி அம்மாள் என்ற பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா? இருந்தால் சேர்வராயன் மலையும் ஞாபகம் இருக்கலாம். இதுவரை நான் போனதில்லை. இதுதான் முதல். குகைக் கோவிலில் தர்ஸனம் முடித்த பிறகு ஏற்காட்டில் இரண்டு நாள் தங்கி இருப்பேன். வாசகர் வட்ட நண்பர்களை இந்த முறை ஏற்காட்டில் சந்திக்க இயலாது. ஆனால் ஜூலை 12, 13 தேதிகளில் வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்தை முன்னிட்டு சிறுமலையில் (என்று நினைக்கிறேன்) ஒரு வட்டச் சந்திப்பு நடைபெற உள்ளது. அங்கே யார் வேண்டுமானாலும் வரலாம்.
இந்த ஏற்காடு சந்திப்புக்கு என்னுடன் சென்னை நண்பர் ஒருவர் வருகிறார். நேற்று அவருக்கு ஃபோன் செய்த போது throat infection, fever என்றார். இருந்தாலும் கவலை வேண்டாம்; மாத்திரை போட்டுக் கொண்டு வந்து விடுவேன் என்றார். காலையில் இஞ்சியும், இரவில் கடுக்காயும் உண்டால் ஏன் உடம்புக்கு வருகிறது? ஏன் இளைஞர்கள் எப்போதும் உடம்பு சரியில்லை என்றே சொல்லிக் கொண்டு வருகிறார்கள்? இதெல்லாம் எனக்குப் புரியாத சமாச்சாரங்கள். தமிழர்கள் எப்போதும் தங்கள் உடம்போடு போராடிக் கொண்டே இருக்கிறார்கள். அடிக்கடி உடம்புக்கு வந்து விடுகிறது; எங்கே பார்த்தாலும் டாக்டர்கள்; வீதிக்கு வீதி மருந்துக் கடைகள். ஜூரம், ஜலதோஷம், இடுப்பு வலி, உடம்பு வலி, கழுத்துப் பிடிப்பு, நுரையீரல் வீக்கம், ப்ரெஸ்ட் கான்ஸர், 35 வயதிலேயே ஹார்ட் அட்டாக் மரணம் – சமீபத்தில் மணிவண்ணன், வயது 59 – இதெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதில்லையே ஏன்? ஐரோப்பாவில் மருத்துவர்களையோ மருந்துக் கடைகளையோ பார்க்கவே முடிவதில்லையே ஏன்? சீனாவிலும் அப்படித்தான்; ஜப்பானிலும் அப்படித்தான். தமிழர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையே இல்லை. நான் ஒருநாளில் நாலு பேருக்கு ஃபோன் செய்தால் அதில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை. என் மகனும் விதிவிலக்கு அல்ல. அவனுக்கும் throat infection, நாக்குப் புண். தினமும் கேரட், பீட்ரூட், ஆப்பிள், மாதுளை நான்கையும் சாறு எடுத்துத் தருகிறேன், ஒரு வாரம் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன். ஐயோ ஆளை விடுங்கள் என்று ஓடி விட்டான். நாக்குக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் மக்கள்.
தொண்டைப் புண் வராமல் இருக்க தினமும் துளசி இலைகளைச் சாப்பிட வேண்டும். தொண்டைப் புண் வந்தாலும் துளசி சாப்பிட்டால் சரியாகி விடும். சொன்னால் யார் கேட்பார்? என் வீட்டில் ஏழெட்டு துளசிச் செடிகள் உள்ளன. கருந்துளசிச் செடியும் உண்டு. துளசி இலையில் இஞ்சியையும் மூன்று நாட்டுப் பூண்டையும் சேர்த்து பச்சையாக மென்று மென்று தின்பது என் வழக்கம். என் நண்பர்களைக் கேளுங்கள். என்றைக்காவது எனக்குத் தொண்டை வலி, ஜூரம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேனா? அதற்குக் காரணம், மூலிகைகள்தான். உணவே மருந்து.
எங்களோடு ஒரு (பிரபல) இயக்குனர் நண்பரும் வருகிறார். பெயரை எழுதலாம். ஆனால் ”சாரு கெட்டவர், அவரோடு சேராதீர்கள்” என்று நூறு போன் அவருக்குப் போகும். அதனால்தான் பார்க்கிறேன். அவர் எனது நீண்ட நாள் நண்பர். ஆனால் அவ்வளவாக வெளியே தெரியாது. அவர் எனக்கு பத்து வருடங்களுக்கு மேல் நண்பர். ஆனாலும் அவரைப் பற்றியோ எங்கள் சந்திப்பு பற்றியோ நான் எதுவும் எழுதுவதில்லை. உங்கள் வாசகர் சந்திப்பை ஒருமுறை பார்க்க வேண்டும் என்றார். அதோடு சேர்வராயன் மலை பற்றியும் சொன்னேன். கிளம்பி விட்டார். ஸிம்பிள் மேன். (எனக்கு இந்த ஸிம்பிள் மேன் என்ற வார்த்தையே பிடிக்காது. இருந்தாலும் சில சமயங்களில் சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது? மேலும், ரஜினிகாந்தையே ஸிம்பிள் மேன் என்றுதானே சொல்கிறார்கள்?)
Comments are closed.