nothing else matters…

ஏற்காடு பயணம் இனிதே முடிந்தது.  சென்னையிலிருந்து நானும், அராத்துவும், நடிகர் பார்த்திபனும், அவரது உதவியாளர் ஒருவரும் சென்றிருந்தோம்.  பல நண்பர்கள் ஸ்டோரி டிஸ்கஷனா என்று கேட்டார்கள்.  என் சினிமா உலக நண்பர்கள் என்னோடு என்றுமே சினிமா சம்பந்தமாகப் பேசியதில்லை.  ஒரே விதிவிலக்கு கௌதம் மேனன்.  கௌதம் மேனனும் பார்த்திபனும் மிக நன்றாகப் பழகும் நண்பர்கள்.  ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா பார்க் ஓட்டலில் நடந்த போது – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – கௌதம் வந்திருந்தார்.  பிறகு ஒருநாள் சென்னை அமேதிஸ்டில் நண்பர் ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.  நண்பர் அமேதிஸ்டைக் கண்டு பிடிக்க முடியாமல் மவுண்ட் ரோட்டையும் ஒயிட்ஸ் ரோட்டையும் முட்டை வடிவத்தில் காரில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.  ஒருவழிப் பாதை என்பதால் கொஞ்சம் தாண்டி விட்டாலும் நாலு கி.மீ. சுற்ற வேண்டும்.  நேற்று கூட ஈரோடு ரமேஷை அமேதிஸ்ட் வரச் சொல்லியிருந்தேன்.  தினமலர் அலுவலகத்துக்குப் பக்கத்துக் கட்டிடம்.  சத்யம் தியேட்டர் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு எதிரே; ஒயிட்ஸ் ரோட் என்றெல்லாம் சொல்லி இருந்தேன்.  ஐந்தரை மணிக்குச் சந்திப்பு.  சரியாக ஐந்தேகால் மணிக்கு தினமலர் அலுவலக வாசலில் நிற்கிறேன்; இங்கே அமேதிஸ்ட் இல்லை; பக்கத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்; எதிரே ஸ்பென்ஸர் கட்டிடம் என்றார் ரமேஷ்.  எனக்கு செம குஷியாகி விட்டது.  இதுவரை ஒருவர் கூட அமேதிஸ்டுக்கு மவுண்ட் ரோட்டையும் ஒயிட்ஸ் ரோட்டையும் ரெண்டு வட்டம் போடாமால் வந்து சேர்ந்ததில்லை.  நான் வந்து விடுவேன் என்று சொல்லியிருந்தார் ரமேஷ்.  ஆட்டோக்காரர் அவரை பழைய தினமலர் அலுவலகம் பக்கம் கொண்டு போய் விட்டிருந்தார்.  நீங்கள் நின்று கொண்டிருக்கும் ரோட்டுக்குப் பெயர் மவுண்ட் ரோடு.  அந்த இடமாக இருந்திருந்தால் ஸ்பென்ஸர் எதிரே என்று சொல்லி இருக்க மாட்டேனா? மறுபடியும் சுற்றிக் கொண்டு ஒயிட்ஸ் ரோட் வாருங்கள் என்றேன்.  ஆனால் மனிதர் சரியாக ஐந்தரைக்கு வந்து விட்டார்.

சென்ற ஆண்டு ஒருநாள் இப்படி அமேதிஸ்டில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்த போது மென்யு கார்டை மேய்ந்து கொண்டிருந்தேன்.  திடீரென்று பின்னாலிருந்து மென்மையான குரலில், நுனிநாக்கு ஆங்கிலத்தில் “May I help you, Sir?” என்று கேட்டது.  திரும்பிப் பார்த்தால் கௌதம் மேனன்.

பார்த்திபன் எனக்குப் பல ஆண்டுகள் பழக்கம்.  ஆனால் நான் எதுவுமே எழுதியதில்லை. என்னை எங்கே பார்த்தாலும் தன் காரில் வீட்டுக்குக் கொண்டு வந்து விடாமல் போக மாட்டார்.  அது போல் நிறைய நண்பர்கள் செய்வார்கள்.  ஆனால் பார்த்திபனின் விசேஷம் என்னவென்றால், நாம் காரை விட்டு இறங்கியதும் அவர் பாட்டுக்கு டாட்டா சொல்லி விட்டுக் காரைக் கிளப்பி விடாமல் காரிலிருந்து இறங்கி வந்து என்னிடம் கை கொடுத்துப் பேசி விட்டுத்தான் போவார்.

சேர்வராயனை தர்ஸிக்கப் போகிறேன் என்றேன்.  கூடவே கிளம்பி விட்டார்.  அவ்வளவுதான்.

22-ஆம் தேதி அராத்துவுக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தது.  21-ஆம் தேதி ஏற்காட்டில்தான் விஷயத்தைச் சொன்னார்.  நாங்கள் இருந்த இடத்தில் கடை கண்ணி எதுவும் கிடையாது.  அது ஒரு மலை முகடு.  சுற்றி வர மலைகள்.  கீழே குனிந்தால் அதல பாதாளம்.  எனக்கு உறங்குவதற்கு எந்நேரம் ஆனாலும் காலையில் விழித்து விடுவேன் என்பதால் 22-ஆம் தேதியும் ஆறு மணிக்கே எழுந்தேன்.  வெளியே குளிர் பின்னி எடுத்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சரி, ஒரு நடை போய் விட்டு வரலாம் என்று கிளம்பினேன்.  அராத்துவுக்கு என்ன பரிசு தர முடியும் என்று குழப்பமாக இருந்தது.  காட்டுப் பூக்கள் மனசை அள்ளிக் கொண்டு போனது.  ஒவ்வொரு பூவாகப் பறித்து சிறியதொரு பூங்கொத்தாக ஆக்கினேன்.  வந்து அவரது தலையணை அருகே வைத்து விட்டு வந்தேன்.  இதையே ஒரு பெண் செய்திருந்தால் அவரது பிறந்த நாள் இனிதே ஆகியிருக்கும்.  அவர் துரதிர்ஷ்டம்.

ஆனாலும் அவருக்கு அந்தப் பூங்கொத்து ஒரு மறக்க முடியாத அற்புத அனுபவத்தைக் கொடுத்து விட்டது.  நான் கொடுத்த பூங்கொத்தில் ஒரே ஒரு பூ மட்டும் மிக அற்புதமான முறையில் வட்டம் வட்டமாக, அடுக்கு அடுக்காக – கிட்டத்தட்ட ஒரு maze மாதிரி – வடிவமைக்கப்பட்டிருந்தது.  கடவுளின் அற்புதம்.  அதை அவர் கவனித்துச் சொன்னார்.

தொழிலதிபர்கள் பாரதி, அவரது தம்பி ராஜா, விஜி, ரமேஷின் பார்ட்னர் ஸ்ரீதர், பிரகாஷ், சந்த்ரு என்று ஏகப்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர்.  சேலத்திலிருந்து சுரேஷ் (சு.ரா.) பலவிதமான பறப்பன, நடப்பன வகையறாக்களைத் தோல் உரித்துக் கொண்டு வந்திருந்தார்.  உயிரோடு கொண்டு வந்தால் எங்கள் எதிரே கொலை நடப்பதை நாங்கள் பார்த்தால் சாப்பிட மாட்டோம் என்பதால் தோல் உரித்தே கொண்டு வரச் சொன்னதாக அராத்து சொன்னார்.

மூன்று தினங்களும் பிரமாதமாக இருந்தது.  சமையல் செய்தவர்கள் அருமையாகச் செய்தனர்.  ஒரே ஒரு விஷயத்தைத்தான் அடுத்தடுத்த சந்திப்புகளில் தவிர்க்க வேண்டும் என்று வலுவாக நினைத்துக் கொண்டேன். ஒருநாள் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் பத்துப் பதினைந்து பேர் வந்து விட்டனர்.  நான் விருந்தாளியாகவே இருந்தாலும் என்னைச் சந்திக்க புதிய நண்பர்களை அனுமதிப்பதில்லை.  அதிலும் ஒரு நண்பர் “இளையராஜா விஷயத்தை வைத்து என்னை மடக்க வேண்டும்” என்ற திட்டத்தில் நூறு கேள்விகளோடு வந்திருக்கிறார்.

வந்தவுடனேயே அவரை நாக்-அவுட் செய்து விட்டேன்.  இளையராஜாவை விமர்சித்தேனா?  நானா?  எனக்கு அவரை ரெம்ப ரெம்பப் பிடிக்குமே?  குணாவிலும் ஹே ராமிலும் அவர் மாதிரி வேறு யாரால் அப்படிப் போட முடியும்?  ஏ. ஆர். ரஹ்மானா?  அவர் பாடல்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது.  கடல் மட்டுமே விதிவிலக்கு.

இப்படி ஐந்து நிமிடம் பேசியதுதான் நாக்-அவுட்.  நான் மேலே எழுதியதெல்லாம் பொய் அல்ல.  நிஜம்தான்.  ஆனாலும் எனக்கு இளையராஜாவைப் பிடிக்காது.  ஏனென்றால், அவரை விட ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள்.  அவர் பொன்மலை என்றால் இங்கே பல இமயங்கள் இருந்திருக்கின்றன.  விஸ்வநாதன் ராமமூர்த்தி duo-வை என்னவென்று சொல்வது?  ஒரு படம் என்றால் அதில் வரும் ஐந்து பாடல்களையும் சூப்பர் ஹிட் பண்ணுவார்கள் அவர்கள்.  உதாரணம் ஆனந்த ஜோதி, கர்ணன். கே.வி.மகாதேவனும் அப்படியே.   இது போக, தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா போன்றவர்களின் படங்களுக்கெல்லாம் இசை அமைத்தவர்கள் யார்?  இன்றைக்கு யாருக்காவது பெயர் ஞாபகம் இருக்கிறதா?

என்னைப் பலருக்கும் பிடிக்காமல் போனதற்குக் காரணம், நான் இளையராஜாவை விமர்சித்ததுதான் என்று தெரிகிறது.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  ஏனென்றால் உங்களுக்கு இளையராஜாவை மட்டுமே தெரியும்.  எனக்கோ உலக இசை உள்ளங்கையில். உதாரணமாக, மெட்டாலிகாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள்.  இதைக் கேட்பதால்தான் என்னால் இன்னமும் 15 வயது இளைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்க முடிகிறது.  பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என் விசிறிகள்.  புத்தகம் அல்ல; இசை தான் எங்களை இணைப்பது.

ஓகே. இளையராஜா பற்றிக் கூட என்னோடு விவாதிக்கலாம்.  ஆனால் அதற்கு எனக்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டும்.  என் நேரத்தை என்னால் ஓசியில் தர முடியாது.  அதிலும் முன் அனுமதி இல்லாமல், எனக்குத் தெரிந்த உங்கள் நண்பர்களின் துணை கொண்டு என்னை சந்திப்பதை அத்துமீறல் என்றே நான் கருதுகிறேன்.  திபுதிபுவென்று இருபது பேர் புதிதாக வந்ததும் நான் மிரண்டே போனேன்.  எங்கள் வாசகர் வட்டக் கூட்டங்களில் அப்படி ஒருவர் கூட புதிய நபராக அனுமதி இல்லாமல் வருவதில்லை.  வருவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.

ஒரே காரணம்தான்.  எழுத்து என்பது தமிழ்நாட்டில் மிக மிக மிக அதிக பட்ச தியாகத்தைச் செய்து செய்ய வேண்டிய பணியாக உள்ளது.  ஒரு கெரில்லா நடவடிக்கை போல் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  கூலியே இல்லாத வேலை இது.  எனவே, திடீர் திடீரென்று முன் அனுமதி இல்லாமல் யாரையும் சந்திக்க அனுமதி கிடையாது.  நண்பர்கள் இதைக் குறித்துக் கொள்ளவும்.

இன்னொரு விஷயம்.  ஓரிரு நண்பர்கள் எந்நேரமும் சளசளவென்று பேசிக் கொண்டே இருந்தனர்.  இது என்னை பாதிக்கவில்லை.  எனக்கு எதுவுமே காதில் விழாது.  எனக்கு மரங்களின் சப்தமும் மிருகங்களின் சப்தமும் மட்டுமே கேட்கும்.  மனிதர்களின் மொழியைக் கேட்க நான் ரொம்ப மெனக்கெடுவது கிடையாது.  ஆனால் சில நண்பர்கள் இந்த இடைவிடாத மனித இரைச்சலால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்று கேள்விப்பட்டேன்.

இந்த இரண்டு விஷயங்கள் தவிர, ஏற்காடு அனுபவம் அற்புதமாக இருந்தது.  சேர்வராயன் பெருமாளை தர்ஸித்தேன்.

பல நண்பர்கள் ராஜா என்னைப் போலவே இருப்பார் என்றார்கள்.  பாரதியின் தம்பி.  பார்க்க மட்டும் அல்ல; மற்றபடியும் என்னைப் போலவே என்றார்கள்.  நேரில் பார்த்ததும்தான் அது உண்மை என்று தெரிந்தது.  நான் ரொம்ப கெட்ட வார்த்தை பேசுவேன்.  பழக்கம் இல்லாத நண்பர்கள் அதிர்ந்து விடுவார்கள்.  அது எங்கள் ஊர்ப் பழக்கம்.  நம் அம்மாவையும் அக்கா தங்கைகளையும் உறவு கொள்ள அழைத்து விட்டுத்தான் என்ன செய்தி என்றே விசாரிப்பார்கள். நான் அந்த அளவுக்குப் போவதில்லை.  சும்மா பு, சு.வோடு சரி.  ராஜா என்னையும் மிஞ்சி விட்டார்.  என்ன மயிர் பு… பேசுறே நீ? என்று யாரிடமோ பேச ஆரம்பித்தார்.

உடனே அராத்து, சார், அது மயிர் பு… இல்ல… பு… மயிர் என்று இலக்கணம் திருத்தினார்.

ஆனால் அப்புறம்தான் புரிந்தது… அவர் ஒவ்வொரு வார்த்தைக்குமே பின்னால் பு… போட்டார்.  இந்த எங்க அண்ணன் புண்ட இருக்கார்ல?

”இருக்கார்ல” என்று என்ன மரியாதை பாருங்கள்.  ஆனால் அண்ணன் பு… அண்ணனுக்கே பு… போடுகிறார் என்றால் மயிருக்குப் பு… போட வேண்டாமா அராத்து என்று நான் விளக்கின பிறகுதான் அராத்து கொஞ்சம் சமாதானம் ஆனார்.  ஏனென்றால், அது அவர் ஏரியா. அங்கே இலக்கணப் பிழை வந்தால் அராத்து சும்மா இருக்க மாட்டார்.

இன்று பர்த்ருஹரி படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு இடத்தில் சொல்கிறான்.

உன்னைப் பற்றி நினைத்தாலே தேகம் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.  நேரில் பார்த்தாலோ பைத்தியமே பிடித்து விடுகிறது.  உன்னைப் போய் எப்படி நான் கண்ணே மணியே என்று கொஞ்சுவது?

நான் மேலே குறிப்பிட்ட பாடல் லிங்க்:

http://www.youtube.com/watch?v=wUK2QmdUXas

 

 

 

 

 

 

Comments are closed.