ரௌத்ரம் பழகு…

ஒரு மனிதர் என்னை அவன் இவன் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டுத் திட்டிய போது அதை சிரித்துக் கொண்டே புறந்தள்ளி விட்டேன் என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கவனித்திருப்பீர்கள்.  ஆனால் என்னுடைய அமைதி பலகீனம் அல்ல. மகாத்மா காந்தி அடிக்கடி சொல்வார் அல்லவா, அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல என்று.  அதைப் போல்தான் அமைதியும்.

என் எழுத்தைப் படித்தவர்களுக்கும் என்னோடு பழகியவர்களுக்கும் தெரியும், என்னைப் பாராட்டினால் பதிலுக்கு அவர்களைப் பாராட்ட மாட்டேன் என்று.  பாராட்டத் தகுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் என் எழுத்தை வெறுத்தாலும் பாராட்டுவேன்.  சுஜாதா என் எழுத்தை மலம் என்று சொன்னதால் சுஜாதாவின் எழுத்தை நான் திட்டவில்லை.  அசோகமித்திரன் என் எழுத்து எதுவும் புரியவில்லை என்று சொல்லி நிராகரித்தார் என்பதற்காக அவரை நான் திட்டவில்லை.  இதற்குக் காரணம் என்னவென்றால், என்னுடைய கர்வம்தான்.  நான் உன்னைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை நீ தீர்மானிக்கலாகாது; அதை நான் தான் தீர்மானிக்க வேண்டும்.  என்னைப் பற்றி ஒருவர் கருத்து சொல்லி விட்டதாலேயே அவரைப் பற்றிய என் கருத்துக்கு அவருடைய கருத்து ஆதாரமாகி விடக் கூடாது.  நான் முதலில் என்னை நேசிக்கிறேன்.  அதுவே நான் நிதானமானவனாகவும் அதிக மனிதநேயம் உள்ளவனாகவும் இருக்கக் காரணம் ஆகிறது.

இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு என்றால், ஸீரோ டிகிரியைப் பாராட்டி விட்டார் என்பதற்காக நான் தருண் தேஜ்பாலின் நாவல்களைப் பாராட்டவில்லை.  அவருடைய alchemy of desire நாலு லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.  ஆனால் அவரை இந்தியாவில் இன்னமும் ஒரு பத்திரிகையாளர் என்றே கருதி வருகிறார்கள்.  நானுமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  தில்லி வந்தால் நேரில் சந்திப்போம் என்றார் தருண்.  சரி, ஒருவரை நேரில் சந்திப்பதற்கு முன்னால் அவருடைய ஒரு நாவலையாவது படித்து விட்டுப் போவேமே என்ற எண்ணத்தினால்தான் அவர் நாவலை வாங்கிப் படித்தேன்.  அது கூட ஒரு அவநம்பிக்கையோடுதான்.  ஏனென்றால், பிற துறைகளில் பிரபலமானவர்களின் இலக்கிய முயற்சிகளை நான் ரசிப்பதில்லை.  ஒரு நடிகருக்கு நாவல் எழுத ஆசை இருக்கிறது. இதேபோல் ஒரு டாக்டருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு, ஒரு விஞ்ஞானிக்கு எல்லாம் நாவல் எழுத ஆசை இருக்கிறது. அதையெல்லாம் நான் படிக்க ஆர்வப்பட மாட்டேன்.  நரசிம்ம ராவ் கூட ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.  சத்தியமாகப் படிக்க மாட்டேன்.  நம் கலாம் கூட ஏதோ ஒரு புத்தகம் எழுதி லட்சக் கணக்கில் விற்பதாகக் கேள்விப்பட்டேன்.  லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதைப் படிக்க மாட்டேன்.  ஆனால் தருணை பல காக்டெயில் இரவுகளில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி இருக்கிறேன்.  எனக்கு மிகப் பிடித்த பத்திரிகையாளர்.  தெஹல்காவின் முதல் பிரதியிலிருந்து நான் படித்து வருகிறேன்.  அது மட்டும் அல்ல; அதைப் பாதுகாத்தும் வருகிறேன்.  நான் வீடு மாற்றும் போதெல்லாம் என் பின்னால் லாரிகளில் வரும் புத்தகங்களோடு தெஹல்கா பிரதிகளும் உண்டு; அதோடு அந்தக் காலத்தில் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த granma பிரதிகளும் உண்டு.  இதற்காக அவந்திகாவின் தீராத பொல்லாப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.

இந்த நிலையில்தான் ஆல்கெமியைப் படிக்க எடுத்தேன்.  கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.  மேலும், இந்திய ஆங்கில இலக்கியத்தின் மீது கடும் அதிருப்தி கொண்டவன் நான்.  ஆனால் தருணின் ஆல்கெமியைப் படித்ததும் கடவுளைக் கண்டது போல் உணர்ந்தேன்.  என் வாழ்நாளிலேயே அப்படி ஒரு புத்தகம் படித்ததில்லை.  இலக்கியத்தை விடுங்கள்.  என் வாழ்க்கையையே யாரோ பக்கத்திலிருந்து வேவு பார்த்து எழுதியது போல் இருந்தது.  மிரண்டு போனேன்.  பிறகு, அவருடைய story of my assassins நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  இதன் நாயகனுக்கு இரண்டு மனைவிகள்.  இவனுக்கு ஒரு குருநாதரும் உண்டு.  அவர் ஒரு துறவி.  அந்தத் துறவி இவனிடம் பேசும் வார்த்தைகள் எல்லாம் கடவுளே நம்மிடம் பேசுவது போல் உள்ளது.

குரு அவனிடம் சொல்கிறார்.  நான் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றாதே.  ”உன்னிடம் ஒரு குவளையைக் கொடுத்து கடல் நீரைக் காலி செய் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?” என்று அவனைக் கேட்கிறார். அவன் முழிக்கிறான். அவர் அப்படிச் சொல்வதன் மூலம் அவனுக்குப் பொறுமையைக் கற்றுத் தரவில்லை.  ஒரு செயல் எவ்வளவு அர்த்தமற்றதாக இருக்கக் கூடும் என்பதையே அவர் அவனுக்குக் கற்பிக்கிறார். ஒரு முட்டாள் சீடன் தன் வாழ்நாள் முழுவதும் அந்தக் குவளையால் கடல் நீரை மொண்டு மொண்டு ஊற்றி விட்டுச் சாகிறான்.  ஆனால் புத்திசாலியான சீடனோ குவளையைத் தூக்கி எறிந்து விட்டு அறத்தை (Wisdom) நோக்கிச் செல்கிறான்.  The disciple must not only perform the task, he must also contemplate the task.

Alchemy of Desire அதன் தலைப்பில் உள்ளது போலவே desire பற்றிப் பேசுகிறது.  அதன் அடிநாதம், காமம்.  The Story of My Assassins அறம் பற்றிப் பேசுகிறது. இன்னும் நாவலை முடிக்கவில்லை.  என் மேஜையின் மீது எல்லா புத்தகங்களின் மேலே வைத்திருந்தேன்.  எங்கள் வீட்டு பப்பு ஒரு ஞானி.  ஆனால் ஸோரோ ஒரு குழந்தை.  நான் கணினியில் டைப் செய்யும் போதும் படிக்கும் போதும் என் காலடியிலேயே படுத்துக் கிடக்கும்.  பாத்ரூம் போனால் அதன் வாசலில் வந்து படுத்துக் கொள்ளும்.  பாத்ரூம் கதவைத் திறந்து கவனமாக அடியெடுத்து வைக்காவிட்டால் அதை மிதிக்க வேண்டியதுதான்.  நான் உறங்கும் போதும் நான் படுத்திருக்கும் கட்டில் பகுதியின் அடியில் தரையில்தான் உறங்கும்.  குளிர்கிறது என்று சொல்லி அவந்திகா ஏர்கானை நிறுத்தி விட்டால் நான் வேர்த்துப் புழுங்கி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து என் அறையில் படுப்பேன்.  ஸோரோவும் உடனே இறங்கி வந்து என் மெத்தையின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொள்ளும்.  கிட்டத்தட்ட என் உயிருள்ள நிழல்.  இப்போது காலை எட்டு மணிக்கு இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது கூட மேஜையின் கீழே என் கால்களின் மீதுதான் படுத்துக் கிடக்கிறது.

ஸோரோவுக்கும் பப்புவுக்கும் தோசை என்றால் ரொம்பப் பிடிக்கும்.  ஒருநாள் ஸோரோவுக்கான தோசையைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்த அவந்திகா அது கொஞ்சம் சூடாக இருந்ததால் மேஜையின் மேல் இருந்த Story of My Assassins மீது வைத்தாள்.  அவ்வளவுதான்.  அந்தத் தெருவுக்கே கேட்பது போல் கத்தினேன்.  வசவு என்றால் அப்படி ஒரு வசவு.  கடைசியில் சொன்னேன், உன்னுடைய புனித நூலைப் போன்றது அந்தப் புத்தகம் என்று.  ஒரு கிறிஸ்தவருக்கு விவிலியம் எப்படியோ அப்படி எனக்கு அந்தப் புத்தகம்.  தருண் கையெழுத்துப் போட்டு அனுப்பியதால் அல்ல.  அந்தப் புத்தகத்தில் உள்ள அறம் என்னை அப்படி ஆக்கியது.

இன்னொரு சம்பவம்.  ஒருநாள் காலையில் அவந்திகா கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஒருவன் அந்தக் கோலத்தை அழித்துக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினான்.  அவந்திகா மிகப் பணிவுடன் இங்கே நிறுத்த வேண்டாம் என்றாள்.  இது அரசாங்க இடம் என்றான்.  என்றாலும் எங்கள் காரை வெளியே எடுக்க முடியாமல் போகும் என்றாள் அவந்திகா.  உடனே காரை எடுக்கப் போனவன் அவளைப் பார்த்து “நீ சீக்கிரம் செத்துருவே” என்றான்.

நான் யோசிக்கவே இல்லை. ஓடிப் போய் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன்.  ரத்தம் வழிந்தது.  என் உடலில் வலு இல்லாவிட்டாலும் நான் ஒரு பழைய குத்துச் சண்டைக்காரன்.  எங்கள் ஊரின் இரண்டு விளையாட்டுகளில் ஒன்று குத்துச்சண்டை.  (இன்னொன்று, கால் பந்தாட்டம். அது எனக்குத் தெரியாது.)  அந்தக் காலத்தில் ரவிச்சந்திரன் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ஃபரீது காக்கா எங்கள் ஊரைச் சேர்ந்தவர் தான்.  இப்போது அங்கே குத்துச் சண்டை இல்லை.  நிஜச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.  உடற்பயிற்சிக் கூடத்தில் மணல் மூட்டையைத் தொங்க விட்டு மணிக் கணக்கில் குத்திக் கொண்டே இருப்போம்.   மணல் மூட்டை முழுவதும் ரத்தக் களறியாக இருக்கும்.  உறங்கும் போது தெரியாமல் அவந்திகாவின் மீது கை போட்டு விட்டால் “ஐயோ மூச்சு முட்டுகிறது; என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்று கத்துவாள்.

என்னை வாடா போடா என்று சொன்ன போது சும்மா இருந்தவன் அவந்திகாவை ஒருவன் திட்டியதும் குத்தினேன்.  வெறும் திட்டா அது?  கற்பழிப்பை விட மோசமான வன்முறை அது.  அதனால்தான் ரத்தக் காயம் வர அடித்தேன்.

எந்த இடத்தில் மௌனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கவனம் வேண்டும்.  இது பற்றியும் தருண் சொல்கிறார்.  அதே Assassins நாவல்தான்.  Silence has to be a strategy; not a refuge.  A weapon; not an escape.

இந்தக் கட்டுரை தருண் பற்றியது அல்ல; பப்பு, ஸோரோ பற்றியதும் அல்ல.  உதாரணத்துக்காக இழுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரை, என் வாசகர்கள் பலர் வாசகர் வட்டத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் மிக மோசமான, அருவருப்பான அமைதி காத்தது பற்றியது.

ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  தமிழ்நாட்டில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் சினிமாக்காரர்களை விமர்சித்து விடக் கூடாது.  ஏனென்றால், தமிழர்களுக்கு சினிமாக்காரன் தான் கடவுள்.  நான் அந்த இசையமைப்பாளர் பற்றி ரெண்டு வரி எழுதியதும் ரொம்பப் பேருக்குப் புடுங்கிக் கொண்டு விட்டது.  அதனால் வாசகர் வட்டத்தில் நுழைந்து என்னைத் தாறுமாறாகத் திட்டியிருக்கிறார்கள் மூன்று பேர்.  அது விமர்சனம் அல்ல; திட்டு.  வசை.  உனக்கு (ஆமாம், ஒருமையில்தான்) இசை பற்றி என்னா தெரியும்?  என்னா கேட்ருக்கே நீ?  எங்க ஆளு ஐரோப்பாவுல பிறந்து இருந்தா இந்நேரம் பீத்தோவனுக்கும் மேல போயிருப்பார் தெரியுமா?  என்னா நீ சீன் காமிக்கிறியா?

இந்த வசை வாசகர் வட்டத்தில் ஒரு முழு நாள் இருந்துள்ளது.  நான் கவனிக்கவில்லை.  என் கணினி நேற்று வேலை செய்யாததால் எதேச்சையாக டேப்ளட் மூலம் பார்த்ததில் இந்த அசிங்கத்தைக் காண நேர்ந்தது.  அட்மின்கள் என்ன செய்கிறார்கள்? செல்வகுமாருக்கு போன் செய்தேன்.  அவர் வட இந்தியாவில் இருந்தார்.  பார்க்கவில்லை.  குமாருக்கு போன் போட்டேன்.  Switched off.  இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்றாவது நபர் என்னைத் திட்டி எழுதியிருந்ததற்கு அட்மின் குமார் லைக் போட்டிருந்தார்.  அவர் மட்டும் அல்ல; நிர்மலும்.  அராத்துவை அழைத்துக் கேட்டேன்.  அவரும் அந்த அசிங்கத்தைப் பார்க்கவில்லை. இதைப் பார்த்த வாசகர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவில்லை.  தருண் சொன்னது போல் escape escape GREAT ESCAPE.  ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. எவனோ எவனையோ திட்டினால் நமக்கென்ன?  ஒரே ஒருவர் மட்டும் வந்து எலிக்குஞ்சைப் போல் “இது நம்முடைய வாசகர் வட்டமா? அல்லது, வேறு இடமா?” என்று காமெண்ட் போட்டு விட்டு நழுவி விட்டார்.

ஏன்யா, நான் கேட்கிறேன்.  உன் தாயிடமோ, சகோதரியிடமோ, மனைவியிடமோ, மகளிடமோ ஒருவன் தவறாக நடந்து விட்டான்.  நீ என்ன செய்வாய்?  இதைத்தான் நிர்மலிடம் கேட்டேன்.  கோபமாகக் கேட்டேன்.  அவர் சொன்னது, மூன்றாவது ஆள் என்னைத் திட்டவில்லை.  திட்டியவர்களைக் கிண்டல் செய்தார்.  அதனால் லைக் போட்டேன்.

ம்ஹும்.  எனக்குத் திருப்தி இல்லை.  ”நான் உன் தாய் இல்லையா?”  பத்து நிமிடம் நிர்மலிடம் நான் கத்தியது இதுதான்.  அவந்திகா பதற்றத்துடன் என் பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டாள்.  அவளுக்கு நான் அவளிடம் மட்டுமே கத்தலாம்.  வேறு யாரிடமும் நான் அந்த உரிமையை எடுத்துக் கொண்டு விடக் கூடாது.

நிர்மலிடம் பேசி முடித்து விட்டு, குமாரின் இன்னொரு நம்பரில் அழைத்தால் எடுத்தார்.  கேட்டேன்.  திட்டவே வழியில்லை.  திட்டுவதற்குக் கூட நீங்கள் இடம் கொடுத்தால்தான் நடக்கும் நண்பர்களே.  என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.  நீ ஏன் என்னிடம் எப்போதுமே உண்மை பேசுவதில்லை?  அதற்கான இடத்தை (space) அவர் என்றுமே எனக்குக் கொடுத்ததில்லை.  எனவேதான் நான் அவரிடம் மட்டும் உண்மையைப் பேசுவதே இல்லை.  அதே போல் திட்டுவதற்குக் கூட இடம் கொடுக்க வேண்டும்.  குமார் சொன்னதைக் கேட்டு எனக்கு வருத்தமே ஏற்பட்டது.  அவர் அந்த வசவுகளை ஏச்சுகளைப் படிக்கவில்லை என்று சொல்லி விட்டார்.  அந்த வசவுகளைக் கிண்டல் செய்து ஒருவர் காமெண்ட் போட்டதற்கு லைக் போட்டாராம்.  அதிகபட்ச கவனக் குறைவு.  என்னை ஏசியதைப் படிக்கவில்லை.  ஆனால் அந்த ஏச்சைக் கிண்டல் செய்தவருக்கு லைக்.  எனக்கு லாஜிக் புரியவில்லை.  சரி, குமார் என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.

என் கோபம், வருத்தம் எல்லாம் எதனால் என்றால், என்னைத் திட்டுபவன் தனியாக ப்ளாக் வைத்துக் கொண்டு செய்யட்டும்.  என்னைத் திட்டுவதற்கு இடமா இல்லை?  என் வீட்டுக்குள் புகுந்து ஒருவன் எப்படிச் செய்யலாம்?  அதை வாசகர் வட்டம் எப்படி அனுமதித்தது?  யாருமே கவனிக்கவில்லை என்றால் இரண்டு முக்கியஸ்தர்களே எப்படி லைக் போட்டார்கள்?  நானே தான் வாழ்நாள் பூராவும் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா?  நீங்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பீர்களா?  உங்கள் மௌனம் வெறும் தப்பித்தல்.  எஸ்கேப்.

நிர்மலிடம் பேசி முடித்ததும் அவந்திகா சொன்னாள்.  Wife கிட்ட கத்தினா பரவால்ல. Friends கிட்ட கத்தினா hurt ஆகாதா?

Hurt ஆகக் கூடாது; ஏன்னா எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் என் வைஃபை விட முக்கியம்.

இப்படி நீங்கள் உங்கள் மனைவியிடம் சொன்னால் என்ன ஆகும்?  அவந்திகா பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி போய் விட்டாள்.  ஏனென்றால், நான் சொல்வது உண்மை என்றும், அதன் ஆத்மார்த்தமான அர்த்தமும் அவளுக்குத் தெரியும்.

என் நண்பர்களே, உங்களுக்குத் தெரிகிறதா? தெரிந்தால் நான் பாக்கியசாலி.

நிர்மலிடம் பேசி விட்டு, ”Sorry for my outburst; don’t mistake” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  அனுப்பிய பிறகு ‘என்ன இது, ஒருக்கணம் நிர்மலை நாம் அந்நிய ஆள் மாதிரி நினைத்து விட்டோம்; இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கக் கூடாது’ என்று நினைத்தேன்.

இன்று காலை எழுந்ததும் நிர்மலின் இந்தக் கடிதம்:

சாரு

இப்போதுதான் வெளியே போய்விட்டு வந்தேன், நீங்கள் போன் செய்யும் போது நான், எனது மனைவி, எனது தங்கை பிறகு குழந்தைகள் எல்லோரும் ஷாப்பிங் செல்லுவதற்காக வண்டியில் உட்கார்ந்திருந்தோம்.

போனை எடுத்ததும் சாரு, என்று சொல்லி வண்டியை விட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தேன்.  பேசி முடித்ததும் ”என்னாச்சி, ஏதோ ஹெட்மாஸ்டரிடம் செம திட்டு வாங்கியது போல இருக்கிறாய்” என கேட்டார்கள், விபரம் சொன்னேன், சரி சரி இனியாவது ஒழுங்காக படித்துவிட்டு லைக் போடு என அட்வைஸ் செய்து முடித்துக் கொண்டார்கள். மேலும் இவ்வளவு பெரிய எழுத்தாளர், போன் செய்து பேசும் அளவுக்கு பெர்ண்ட்ஸிப்பா எனவும் சொல்லிக் கொண்டார்கள்.

உறவுகளின் செய்கைகள் எதிர்பாராத விதத்தில் அமையும் போது உரிமையோடு கேட்டுவிட வேண்டும், அதுவே உறவுகளை இன்னும் பலப்படுத்தும். நீங்கள் என்னை உரிமையோடு கேட்டது மிகவும் பிடித்திருந்தது. இதில் நிர்மல் எனும் பெயரை பார்த்ததும் எனக்கு போன் செய்தது சரியே, நமக்குப் பிடித்தவர் அல்லது விரும்புகிறவர் தவறு செய்யும் போது கண்டிப்பாக சுட்டிக் காட்டி விளக்க வேண்டும்.  எனது கோபம் என்னை நேசிப்பவர்களிடம் மட்டுமே வருகிறது. அதுதான் சரியெனவும் படுகிறது.  அதுதான் நேசம் என்று அடிக்கடி எனது மனைவியிடம் சொல்லுவேன். டிவியில் சிலர் பேட்டியில் எனது கணவர் என் மீது ஒரு முறை கூட கோபப் பட்டது இல்லை என சொல்லக் கேட்டு வியந்திருக்கிறேன். அதெப்படி  சாத்தியம் என இன்று வரை புரியவில்லை. இந்தப் புரிதல் கூட உங்களை வாசித்ததின் பின்தான்.

உங்களைப் பற்றி எங்கு எழுதினாலும் மிகுந்த பயத்தோடுதான் எழுதுவேன் பேசுவேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் சாருவின் மனம் எரிச்சல் அடைந்து விடக் கூடாது எனபதில் எப்போதும் கவனமாக இருப்பவன். இதில் எப்படியோ தவறுதலாகப் போய்விட்டது.

இந்த இளையராஜா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும், சிலர் உங்களை உராய்ந்து பார்கிறார்கள்.

உங்களின் இளையராஜா vs பாப் மார்லி ஓப்பிடுதலின் சாரம் புரிந்தவன் மட்டுமே உஙகளை புரிந்து கொள்ளமுடியும். பாப் மார்லியை நினைக்கும் போதெல்லாம் கண்ணிர் வருகிறது. அவனின பாடல்களில் இருக்கும் விடுதலை உணர்வு ஆன்மிகத்தை மிஞ்சுகிறது. இதெல்லாம் சொல்லித் தந்தது உங்கள் எழுத்துக்கள்தான்.

http://www.youtube.com/watch?v=VNkr86zZaP4

Reggae ஸ்டையிலில் இல்லாமல் வெறும் கிட்டார் இசையில் மார்லியின் இந்த பாடலை தினம் காரில் கேட்டுவிடுகிறேன். இது அவன் இறப்பதற்க்கு முன் எழுதிய கடைசி பாடலாம். எவ்வளவு தீர்கமான வரிகள்.  நிங்கள் மகாபலிபுரத்தில் வைத்து சொன்னதுதான் ”அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருவது என்பது அடுத்தவனை அடிமைபடுத்துவதாக இருக்க கூடாது. அது இந்த பாடலில் அப்படியே வருகிறது – இதுவே மிகச்சிறந்த ஞானமாக கருதுகிறேன்.

Emancipate yourselves from mental slavery;

None but ourselves can free our minds.”

cheers

Nirmal M

ஒரு முக்கிய விஷயம்.  நிர்மல், அப்படியெல்லாம் நீங்கள் என் கோபம் பற்றிப் பதற்றம் அடைய வேண்டாம்.  நார்மலாக இருங்கள்.  அப்போதுதான் தவறு நடக்காது.  இன்னொன்று,  என் கோபம் என்பது ஒன்றுக்குப் போவது மாதிரிதான்.  பை காலியானதும் சாதாரணமாகி விடுகிறீர்கள் அல்லவா; அப்படித்தான் எனக்குக் கோபம்.  அந்தக் கணத்தோடு முடிந்து விடும்.  மூட் அவுட் என்பதே என் வாழ்க்கையில் கிடையாது.  ஆனால் இது பரவாயில்லை.  கோபம் தான் எனக்கு டாய்லட் போவது மாதிரி.  பல கோடி இந்தியருக்குக் காமமே டாய்லட் மாதிரி இருக்கிறது.  Poor guys… they just empty it in a hole and go away…

Comments are closed.