நேற்று நடந்த என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி ஒரு இதழில் விரிவாக எழுத இருப்பதால் இப்போது இங்கே எழுதவில்லை. மற்றபடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி. உங்கள் அன்புக்கு பதிலாக என்னால் செய்யக் கூடியது இன்னும் அதிகமாகவும் இன்னும் சிறப்பாகவும் எழுதுவதுதான். அதைச் செய்வேன்.
இங்கே நேற்று நடந்த ஒரு வேடிக்கைச் சம்பவம் பற்றி. டாக்டர் ஸ்ரீராம் எனக்கு செய்து வரும் உதவிகள் பற்றி, பணிகள் பற்றி நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். விக்கிபீடியாவில் என்னைப் பற்றி வந்துள்ள தகவல்களைப் பார்த்தாலே தெரியும். கிட்டத்தட்ட அதை ஒரு வாழ்க்கை வரலாறு போல் தயாரித்திருக்கிறார் ஸ்ரீராம். எக்ஸைல் நாவலின் ப்ரூஃப் ரீடிங்கும் இன்னும் பல நூல்களின் ப்ரூஃப் ரீடிங்கும் அவர் செய்ததுதான். எக்ஸைலில் சில இடங்களில் ஃப்ரெஞ்ச் வார்த்தைகள், வாக்கியங்கள் உண்டு. அதில் ஒரு வார்த்தையில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கண்டு பிடித்துச் சொன்னார் ஸ்ரீராம். இத்தனைக்கும் ஸ்ரீராமுக்கு ஃப்ரெஞ்ச் தெரியாது. எப்படி இத்தனைத் துல்லியமாக ஒரே ஒரு எழுத்து பிழையாக இருப்பதைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்ட போது ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து ஃப்ரெஞ்ச் அகராதியில் போட்டுப் போட்டுப் பார்த்தேன் என்றார். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டிய கிருஷ்ண பரமாத்மா தான் ஸ்ரீராமாக வந்து என் காரியங்களை நடத்தித் தருகிறார் என்றே நான் நம்புகிறேன். அவ்வளவு அசாத்தியமான வேலை அவர் செய்வது. சமீபத்தில் வந்த 15 Incredible Authors என்ற தகவலைக் கூட தேடி எடுத்து நமக்கு வாசிக்கக் கொடுத்தது ஸ்ரீராம் தான். இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். தினந்தோறும் என் பெயரை Charu Nivedita, Charu Nivethitha, Charu Nividitha என்றெல்லாம் போட்டுப் போட்டுத் தேட வேண்டும் என்றார். தினந்தோறும் என்பது முக்கியம். அவர் இல்லாவிட்டால் சாருஆன்லைன் இந்த ஜென்மத்துக்கு வேலை செய்திருக்காது. எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது. அதைப் பிழைக்கச் செய்ததே அவர் தான். கோடி ரூபாய் கொடுத்தால் கூட இதைத் துல்லியமாகச் செய்து முடிக்க ஆள் கிடையாது. கடந்த மூன்று மாதமாக ஒரு பெரிய நிறுவனமே அந்தத் தளத்தை உயிர்ப்பிக்க முயன்று ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியவில்லை. ஸ்ரீராம் தான் வேறு நிறுவனத்தை அணுகி ஆயிரத்தெட்டு ஃபோன் செய்து – எல்லாம் தாலியறுக்கிற வேலை – செய்து முடித்தார். இதற்குப் பதிலாக அவருக்கு என்னிடமிருந்து கிடைப்பது திட்டு. (அப்படியா என ஆச்சரியப்படாதீர்கள். கட்டுரை முடிவில் உங்களுக்குப் புரியும்.) இப்படிப்பட்ட நண்பர்கள் எனக்குக் கிடைத்திருப்பது என் கொடுப்பினை தான்.
ஆனால் வாழ்க்கை வினோதமானது. வேடிக்கையானது. சமயங்களில் புதிரானதும் கூட. எல்லாவற்றையும் நான் வேடிக்கை பார்க்கிறேன். நீதி வழங்குவதில்லை. யாரையும் எடை போடுவதில்லை. புன்முறுவலுடன் வேடிக்கை பார்க்கிறேன். அவ்வளவுதான்.
நேற்றைய வரவேற்பு நிகழ்ச்சி விருந்தை வழங்கியவர் பட்டப்பா. பாரதிராஜா பொதுவாக நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் சாப்பிட மாட்டார். அதுவும் எட்டு மணிக்கு என்றால் அது பற்றிப் பேச்சே இல்லை. சாப்பிடச் சொன்ன போது, உங்களுக்குத் தெரியாதா சாரு என்னைப் பற்றி என்றார். நான் அவரிடம் டைனிங் ஹாலைக் காண்பித்து ஒரு பெரும் கலைஞன் அங்கே அமர்ந்திருக்கிறார்; அவரது நளபாகத்தை ஒரே ஒரு விள்ளல் போட்டு அவரை கௌரவப்படுத்துங்கள் என்றேன். மறுவார்த்தை பேசாமல் போய் பிரமாதமாக முழுமையாகச் சாப்பிட்டார்.
பட்டப்பாதான் நான் குறிப்பிட்ட கலைஞன். இன்று காலை ஸ்ரீராம் என்னை ஃபோனில் அழைத்தார். பட்டப்பா சமையலில் அக்கார அடிசிலும் இளநீர் பாயசமும் மட்டுமே நன்றாக இருந்தது; மற்றதெல்லாம் சும்மா என்றோ வேஸ்ட் என்றோ ஏதோ அந்த மாதிரி ஒரு வார்த்தை சொன்னார்.
கிருஷ்ண பரமாத்மா ஷேக்ஸ்பியரை முட்டாள் என்கிறான். என்ன செய்ய, சண்டையா போட முடியும்? எனக்குத் தேரோட்டும் பரமாத்மா ஆயிற்றே? வாழ்க்கையின் வினோதத்தை நினைத்துச் சிரிக்கிறேன்.
வினோதம் நேற்றே ஆரம்பித்து விட்டது. அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல் அலைந்து கொண்டிருந்த என்னை அழைத்த பரமாத்மா, “சாரு, உங்களுடைய ஷூ இந்த ட்ரெஸ்ஸுக்கு ஒத்து வரவில்லை. ஒரு மாதிரி இருக்கிறது” என்றார். துடித்துப் போய் விட்டேன். ஏனென்றால், இம்மாதிரி விஷயங்களில் நான் ஒரு மதத் தீவிரவாதியைப் போல் கவனம் எடுத்துக் கொள்பவன். அந்த ஷூ கேத்தினி பிராண்ட். எந்த உடையுடனும் பொருந்தும். அவர் அப்படிச் சொன்னதும் மனம் ரொம்பவே உடைந்து போய் என் தோழி ஒருவரிடம் கேட்டேன். எவன் சொன்னது என்று திட்ட ஆரம்பித்தார். அங்கிருந்து நகர்ந்து அராத்துவிடம் கேட்டேன். யார் அந்த லூசு என்று அவரும் திட்டத் தொடங்கினார். சரி என்று விட்டு விட்டேன்.
இதையெல்லாம் ஒரு நாவலில் எழுதினால் செமயாக இருக்கும்.
டாக்டர் ஸ்ரீராம் மட்டும் அல்ல; என்னைச் சுற்றிலும் இப்படிப்பட்ட பல பரமாத்மாக்கள் உளர். அவர்களின் லீலா வினோதங்கள் பற்றிப் பிறகு எழுதுகிறேன். முதல் கதையை அவந்திகாவிடமிருந்தே தொடங்க வேண்டும். ஏனென்றால், அவளுக்கு அராத்துவைக் கண்டால் ஆகாது. எனவே அராத்துவிடமிருந்து ஃபோன் வந்தால் நான் எடுக்க மாட்டேன். அவள் இல்லாத போது மட்டுமே பேசுவேன். அவர் என்னை எங்காவது அழைத்துப் போக வேண்டுமென்றால், தெரு முனையில் வந்து காரை வைத்துக் கொண்டு நிற்பார். நான் அங்கே நடந்து போய் காரில் ஏறிக் கொள்வேன். ஏனென்றால், அவரைப் பார்த்தாலே அவந்திகாவுக்கு ஆகாது. ஏனென்று கேட்டால் அவர் என்னை மதிக்கவில்லை என்பாள். அதற்கு நான் என்ன செய்யட்டும்? ஒவ்வொரு நண்பரிடமும் போய் என் மனைவியை மதி என் மனைவியை மதி என்றா மிரட்ட முடியும்? மேலும், இதெல்லாம் ரஷோமான் படம் மாதிரிதான். அராத்துவைக் கேட்டால்தான் என்ன பிரச்சினை என்று தெரியும். ஆறு ஆண்டுகளாக அதை நான் கேட்கவில்லை. கேட்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அராத்து என்னுடைய நண்பர். அவந்திகாவுக்கு அவரைப் பிடிக்காதது என் பிரச்சினை இல்லை. மேலும், என் மனைவிக்கு என் நண்பர்களைப் பிடிக்காமல் இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். எனவே குடும்பத்தில் வாழும் ஒரு ஹஸ்பண்ட் ஒரு கள்ளக் காதலி வைத்துக் கொண்டு அவளோடு உறவாடுவது போல் தான் அராத்துவோடு பழகிக் கொண்டிருக்கிறேன். அவர் ஆணாக இருந்து தொலைத்தாலும் இதில் ஒரு த்ரில் இருப்பதால் அப்படியே விட்டு விட்டேன்.
இன்று காலை அவந்திகா என்னிடம் வந்து எனக்கு இந்த அராத்துவைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றாள். ஓ வெரி குட், அவரை உனக்குப் பிடிக்காததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஒரு விஷயம் தெரியுமா, எனக்கே அவரைப் பிடிக்காமல்தான் பழகிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது, எனக்குக் கன்னாபின்னா என்று உதவிக் கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றால் நான் செத்தேன் என்றேன். (விளையாட்டு இல்லை; நேற்று இந்த ஷூ விஷயத்தில் டாக்டர் ஸ்ரீராம் எனக்குள் ஏற்படுத்திய தற்கொலை உணர்வை நீக்கியதே அராத்து தானே? இப்படி ஒவ்வொரு நாளும் அவர் செய்யும் உதவிகளை வைத்து நான் ஒரு நாவல் தான் எழுத வேண்டும்.)
”பேச்சை மாற்றாதே, நேற்று அவர் என்ன செய்தார் தெரியுமா?”
“என்ன செய்தார்?”
“’பட்டப்பா தளிகை நன்றாக இல்லை. யாரும் சாப்பிடாதீர்கள்’ என்றார். என் காதால் கேட்டேன்.”
எனக்கு உடனே எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவல் ஞாபகம் வந்தது. ம்ஹும். சேடிஸ்ட், சேடிஸ்ட் என்று என்னையே திட்டிக் கொண்டு, ”அராத்து அப்படிச் சொல்லியிருந்தால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றுதான் அர்த்தம். அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீயும் பொய் சொல்ல மாட்டாய். அதனால் நான் அவரிடம் பிறகு கேட்டுக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.
“சாரு. அவர் அப்படிச் சொன்னது உண்மை. ஒருவேளை அவர் யாரிடமாவது பகடி செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொன்னார்.”
நான் நகர்ந்து விட்டேன். பிறகு அராத்துவிடம் கேட்டேன். அராத்து சொன்னது உண்மை. ஆனால் தளிகையை அல்ல. டைனிங் ஹாலுக்கு வெளியே பானி பூரி, பேல் பூரி, தஹி பூரி வகையறா வைத்திருந்தார்கள் பட்டப்பா குழுவினர். அதாவது தளிகைக்கு முன்னதாக மாலை நேர நொறுக்குத் தீனி அது. அது சுத்தமான வட இந்திய நொறுக்குத் தீனி. அதை வட இந்தியர்கள் மட்டுமே செய்ய முடியும். நான் பானி பூரிக்கு அடிமை. எனவே குடித்துப் பார்த்தேன். ம்ஹும். தேறாது என்று விட்டு விட்டேன். வட இந்தியர்கள் செய்யும் பானி பூரிக்கு அருகில் கூட நெருங்க முடியாது. இதைத்தான் அராத்து சொல்லியிருக்கிறார். ”டேய் பசங்களா, இது அவ்வளவு நன்றாக இல்லை. இப்படி நன்றாக இல்லாததைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளாதீர்கள். உள்ளே தளிகை இருக்கிறது. அதை ஒரு கை பார்க்க வேண்டும்.” இதுதான் அவந்திகாவிடம் பட்டப்பா சமையல் நல்லா இல்லை என்று மருவினது.
ஸ்ரீராம் ஒரு பரமாத்மா. அவந்திகா இன்னொரு பரமாத்மா.