தமிழ் சினிமாவில் அன்பு அன்பு என்று சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. அந்த கோஷ்டியால் இதுவரை ஒரு நல்ல சினிமா கூட கொடுக்க முடியவில்லை. அந்த கோஷ்டியின் செயல்வீரர் ராஜு முருகன். தலைவர் ராதா மோகன். (பார்க்கவும்: பிருந்தாவனம்) கற்றது தமிழ் படத்தின் மூலம் அந்தப் படத்தின் பெயரே இனிஷியலாகவும் மாறி விட்ட ராமின் தங்க மீன்கள் படத்தைப் பார்த்த போது அவரும் இந்த ‘அன்பு’ கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றே முடிவு செய்து விட்டேன். அந்தப் படம் எனக்குப் பிடித்ததா இல்லையா என்பது கூட முக்கியம் இல்லை. அந்தப் படத்தின் அடியோட்டம், அதன் பார்வை ஆகியவற்றுக்கு நான் எதிர்நிலையில் இருந்தேன். அப்படியான பார்வை சமூகத்துக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும் என்பது என் கருத்து. குழந்தை கேட்கிறது என்பதற்காகத் திருட முடியுமா? இப்படிப் பல கேள்விகள். அதன் காரணமாகவே ராமின் தரமணிக்குச் செல்லாமல் இருந்தேன். ஆனால் படம் வெளியான ஒரே நாளி, பல நண்பர்கள் என்னிடம் பார்க்கவில்லையா, உங்களுக்குப் பிடிக்கும் என்று தெரிவிக்க ஆரம்பித்ததும் பார்க்கக் கிளம்பினேன். தங்க மீன்கள் படத்தை என்னால் விமர்சனம் செய்ய முடியவில்லை. அதைத் தயாரித்த கௌதம் மேனன் மிகுந்த பணச் சிரமத்தில் இருந்ததால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாகாது என்று அப்போது சும்மா இருந்து விட்டேன். இப்போது சேர்த்துத் திட்டி விடலாம் என்ற நினைப்புடன் தான் தரமணிக்குப் போனேன். ஆனால் தரமணி என்னை உலுக்கி எடுத்து விட்டது. உடனடியாக ராமுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன், நீங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டீர்கள் என்று.
அப்படி என்ன செய்தது தரமணி? தமிழ் சினிமாவில் பெண்களின் பிரச்சினை பலவாறாக அலசப்பட்டுள்ளது. கண்ணீரும் கம்பலையுமாக விஜயகுமாரி என் கண் முன்னே வருகிறார். கண்ணா, கருமை நிறக் கண்ணாவை யாரால் மறக்க முடியும்? கண்ணாம்பா தமிழ் சினிமாவில் விட்ட கண்ணீர் சாகரம் அளவு இருக்குமே? நவீன நாயகிகளும் அவர்கள் பங்குக்கு அழுதும் ஆர்ப்பாட்டம் பண்ணியும் பெண்ணின் துயரம் சொன்னார்கள். ஆனால் எல்லாமே ஆண்களின் பார்வையால் சொல்லப்பட்டவை. தரமணியில் முதல் முதலாக பெண்ணின் கதை பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரமணி, ஆண் பெண் இருபாலருக்கும் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இந்தப் படம் ஆண்களை அயோக்கியர்கள் என்று சொல்லவில்லை. ஆண்களால் ஏன் பெண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு காதல் ஜோடி என்னிடம் ஒரு பிரச்னையைக் கொண்டு வந்தது. இருவரும் என் வாசகர்கள். உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். மணம் முடித்த ஒரே மாதத்தில் விவாகரத்து செய்யும் அளவுக்கு சிக்கல். இருவரும் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவள் போனை அவனிடம் காட்டுகிறாள். You are gorgeous என்று ஒருவனின் குறுஞ்செய்தி. ”அவனுக்கு எப்படி உன் நம்பர் தெரியும்?” ”எப்போதோ கொடுத்திருப்பேன் போலிருக்கிறது.” “இன்னும் எத்தனை பேருக்கு உன் நம்பர் தெரியும்?” அவ்வளவுதான், விஷயம் கோர்ட் வரை போய் விட்டது. இதையெல்லாம் பேசித் தீர்க்க முடியாதா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவள் ஒரு பெரிய கதை சொன்னாள். அந்தக் கதைதான் தரமணி. அந்தக் கதை எப்படி ராமுக்குத் தெரிந்தது? எப்படியென்றால், இன்று 30 வயதுக்கு உட்பட்ட எல்லா பெண்களின் கதையும் அதேதான். முகநூலில் அவளுடைய புகைப்படத்தைப் போட்டால் அது தப்பு என்கிறான். யாராவது அவள் அழகைப் புகழ்ந்தால் அவளைக் கன்னாபின்னாவென்று திட்டுகிறான். டேய், உன் அழகை ஒரு பெண் புகழ்ந்தால் அது உனக்கு மகிழ்ச்சியைத் தராதா என்று கேட்டதற்கு அவன் அவளிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா? ”ஒரு பெண் ஆணின் அழகைப் புகழ்வதற்கும் ஒரு ஆண் பெண்ணின் அழகைப் புகழ்வதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. பெண், ஆணின் அழகைப் புகழ்ந்தால் அது அழகோடு மட்டும்தான். ஆனால் ஆண், பெண்ணின் அழகைப் புகழும் போது அவளை மனதளவில் படுக்கைக்கே கொண்டு சென்று விடுகிறான். பெண், ஆணைக் காதலிக்கும் போதுதான், அவனைத் தன் மனதில் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவனோடு தன் உடலைப் பகிர்கிறாள். ஆணுக்கு அதெல்லாம் தேவையில்லை. பார்த்தாலே போதும், துகிலுரித்து விடுகிறான்.” இதெல்லாம் அந்த இளைஞன் தன் இளம் மனைவியிடம் சொன்னது. கொஞ்ச நாள் இருவரும் பிரிந்திருந்து பின்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு இப்போது மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ்கிறார்கள்.
தரமணி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக அணுகியிருக்கிறது. இரண்டு இடங்களில் என் உடம்பிலேயே பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆண்ட்ரியாவும் வசந்த் ரவியும் சண்டை போட்டுக் கொள்ளும் இடம். வெளியே போடா நாயே என்று ஆண்ட்ரியா ரவியிடம் கத்தும் போது இதயம் ஒருக்கணம் நின்று பிறகு இயங்குகிறது. வசந்த் ரவிக்கு இது முதல் படம் என்றே தோன்றவில்லை. இன்னொரு இடம், போலீஸ் தன் மனைவியிடம் “அவன் என்னை விட நல்லா செஞ்சானா?” என்று கேட்கும் இடம். தன் மனைவியைச் சந்தேகிக்கும் எல்லா ஆண் கசடர்களும் பெண்களிடம் கேட்கும் கேள்வி.
தரமணியில் இடையிடையே ராம் பார்வையாளர்களிடம் பேசுவது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நாகூரில் வசந்த் ரவி பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது, மோடியின் செல்லாத பணம் பற்றிய அறிவிப்பு வருகிறது. அப்போது ராம் பேசும் போது தியேட்டரில் ஒரே அதகளம். என்னுடைய நண்பர்கள் பலருக்கு தரமணி பிடிக்கவில்லை. எப்போதுமே புத்திஜீவிகள் எதார்த்தத்துக்கு வெளியே இருக்கிறார்கள். ஆனால் தரமணியை மக்கள் ரசிக்கிறார்கள். அது முக்கியம். தரமணியைத் தமிழின் முதல் பெண்ணியப் படம் என்றே சொல்ல முடியும். வசந்த் ரவியின் அட்டகாசங்களைப் பார்த்து, உனக்கு என்ன தாண்டா பிரச்சினை என்று தியேட்டரிலேயே கத்தியதாக மனுஷ்ய புத்திரன் எழுதியிருக்கிறார். அதுதான் எனக்கும் தெரியவில்லை மனுஷ். ஏனென்றால், நானும் பல காலம் வசந்த் ரவியைப் போல் தான் வாழ்ந்தேன்.
இவ்வளவு சிறப்பான படம் வெளிவருவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகியிருப்பது தமிழ் சினிமா உலகில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகிறது. மிஷ்கினின் சவரக்கத்தியும் இன்னும் வரவில்லை. காரணம், பெரிய நடிகர்கள் இல்லாத இது போன்ற படங்கள் ஓடாது என்று சினிமா உலகப் பிரமுகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெரிய நடிகர்களோ ஆகக் குப்பையான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு படமும் பார்த்தேன். வேலையில்லாப் பட்டதாரி-2. அதன் முதல் பாகம் நல்ல பொழுதுபோக்குப் படமாக இருந்ததால் இரண்டாம் பாகத்துக்குப் போனேன். கதறிக் கொண்டு ஓடி வந்தேன். படம் முழுக்கவும் பெண்களுக்கு எதிரான வசனங்கள். இதை ஒரு பெண் இயக்கியிருக்கிறார். கடைசி காட்சியில் பெண்ணைப் புகழ்ந்து தனுஷ் ஒரு நீண்ட வசனம் பேசுவதால் படம் முழுவதும் நடக்கும் பெண்ணுக்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் நியாயமாகி விடாது.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். அமலா பாலின் அம்மா, அதாவது தனுஷின் மாமியார், தனுஷ் வீட்டுக்குப் பக்கத்து வீடு. ஒருநாள் தனுஷ் அலுவலகத்துக்குக் கிளம்பும் போது பக்கத்து வீட்டு மதில் சுவரிலிருந்து எட்டிப் பார்க்கும் மாமியார், (சமையல்) கியாசுக்குச் சொல்லிடுப்பா என்கிறார். அதற்கு தனுஷ், “ஏன் உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுங்களேன்” என்று சொல்ல, அதற்கு மாமியார், “நீ தானேப்பா நல்லா செய்வே” என்கிறார். தியேட்டரில் ஒரே கைதட்டல். படம் முழுக்கவும் இதேதான். படத்தில் மிகவும் உறுத்திய மற்றொரு விஷயம், தனுஷ் குடிக்கும் சிகரெட். எடுத்ததற்கெல்லாம் சிகரெட். ஏதோ சிகரெட் கம்பெனியின் விளம்பரப் படம் போல் இருந்தது. எனக்கு வேறொரு சிகரெட் காட்சி நினைவுக்கு வருகிறது. NH 10 என்ற இந்திப் படம். வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட தங்கையையும் அவள் கணவனையும் கொன்று போடுகிறான் அண்ணன் சத்பீர். அந்த நெடுஞ்சாலையில் தன் இளம் மனைவி மீராவுடன் (அனுஷ்கா ஷர்மா) சென்று கொண்டிருக்கும் அர்ஜுன் அந்தப் படுகொலையைத் தட்டிக் கேட்கும்போது அவனையும் கொன்று விடுகிறான். தமிழ்ப் பெண்ணான மீரா தன் கணவனின் கொலைக்குப் பழிவாங்க சத்பீரைத் தேடிச் செல்கிறாள். ஒரு கட்டத்தில் சத்பீர் அவளிடம் ”கேவலம் ஒரு பெண்ணான நீ, எப்படி என் கண்ணைப் பார்த்துப் பேசலாம்? தரையைப் பார்த்துப் பேசு” என்று சொல்லி மிரட்டுகிறான். இறுதிக் காட்சியில், சத்பீரை மீரா தான் ஓட்டி வந்த காரால் மோதித் தாக்குகிறாள். நகரக் கூட முடியாமல் தரையில் கிடக்கிறான் சத்பீர். அப்போது மீரா ஒரு குட்டிச்சுவரின் மேல் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி தன் ஆவேசம் தீர சிகரெட் குடிக்கிறாள். அதைப் பார்த்து அடிபட்ட வேங்கையைப் போல் குமுறுகிறான் சத்பீர். சிகரெட் புகையை ஊதிக் கொண்டே அவனை ஒரு இழிவான ஜந்துவைப் போல் பார்க்கிறாள் மீரா. அந்தக் காட்சியில் அவள் குடிக்கும் சிகரெட் ஆண் ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு குறீயீடாகவே வருகிறது. மறக்கவே முடியாத ஒரு காட்சி. ஆனால் தனுஷோ நம் இளவட்டப் பசங்களுக்கு தம் அடிக்கக் கற்றுக் கொடுக்கிறார். கொடுமை!