சீலே பயணம்


கண்ணதாசன் கழகத்தின் பரிசளிப்பு விழா ஜூன் 16 தான் நடைபெறுகிறது. கோவையில். செப்டம்பர் என்று வந்திருப்பது அச்சுப் பிழை. அநேகமாக ஜூன் இறுதியில் சீலே, பெரூ, பொலிவியா மூன்று நாடுகளுக்கும் பயணப்படுகிறேன். அமெரிக்க வீசா இல்லாததால் ஒவ்வொரு நாடாக வீசா வாங்க வேண்டும். அமெரிக்க விசா இருந்திருந்தால் இந்த நாடுகளில் வீசா ஆன் அரைவலில் போயிருக்கலாம். வீசா கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற் காரணம் என்னுடைய ட்ராவல் கம்பெனிதான். அவர்கள் என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டையே விண்ணப்பத்துடன் அனுப்பவில்லை. அதனால் அமெரிக்கத் தூதரகம் உங்களிடம் போதுமான பணம் இல்லை என்று சொல்லி விட்டது. நேரில் சொல்லியிருந்தால் கையில் வைத்திருந்த ஸ்டேட்மெண்ட்டை காண்பித்திருப்பேன். டாட்டா பைபை சொல்லும்போதுதான் காகிதத்தில் காரணம் எழுதியிருக்கிறோம் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அதனால் இந்த முறை SOTC என்ற ட்ராவல் ஏஜென்ஸி மூலம் சீலே பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். எஸ்.ஓ.டி.சி.யில் கொஞ்சம் பணம் ஜாஸ்தி என்றார்கள்; பரவாயில்லை. ஏனென்றால், பணம் கம்மி என்று நினைத்து வேறு ஒரு ட்ராவல் ஏஜென்ஸி மூலம் போனதால் இப்போது கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் ஒன்றரை மாதமும் நஷ்டம். எப்படியென்றால், ஒவ்வொரு நாட்டுக்கும் வீசா வாங்க பதினைந்து பதினைந்து நாள். ஒன்றரை மாதம். ஒன்றரை லட்சக் கணக்கு என்னவென்றால், அமெரிக்கா போய் ஒரு வாரம் தங்கி வர எஸ்.ஓ.டி.சி.யில் ஒன்றரை லட்சம். நான் சீலே போகும் போதே செலவில்லாமல் அமெரிக்கா போயிருக்கலாம். எல்லாம் பக்கம் பக்கம் இல்லையா? இப்போது சீலே போய் வந்த பிறகு மீண்டும் ஒருமுறை அமெரிக்கா போக வேண்டும். இரட்டைச் செலவு. கம்மி செலவில் ஊர் சுற்றிக் காண்பிக்கும் ட்ராவல் ஏஜென்ஸியை மாற்றியதற்கு மற்றொரு காரணம், அமெரிக்க வீசாவே வாங்கத் தெரியாமல் சொதப்புபவர்கள் ஊர் தெரியாத, நண்பர்களே இல்லாத சீலேவில் ஏதாவது சொதப்பி விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்? மேலும், எஸ்.ஓ.டி.சி.யில் ஒன்றும் அப்படி ஜாஸ்தி இல்லை. மற்ற கம்பெனிகளை விட அம்பதாயிரம்தான் அதிகம். ஆனால் அதை விட ஜாஸ்தியாக வசூலிக்கும் கம்பெனிகளும் இருக்கின்றன. ஆனால் செலவு கம்மியாக ஆக ரிஸ்க் அதிகம். சீனிவாசன் மாதிரி ஒரு நண்பர் கூட இருந்தால் ரிஸ்க் எடுக்கலாம். ஏஜென்ஸியே இல்லாமல் நாமாகவே கூட போய் வரலாம். தனியாகச் செல்லும் போது ரிஸ்க் எடுக்கத் துணிச்சல் இல்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  நண்பர் ராஜேஷ் தென்னமெரிக்கா போனார்.  அங்கே இரவு ஏழு மணிக்கு மேல் சாலையில் நடமாட்டம் இருக்காது.  ஊரடங்கு உத்தரவு போட்டது போல் இருக்கும்.  சாலையில் வேகமாகச் செல்லும் கார்களைத் தவிர வேறு மனிதர்களையே பார்க்க முடியாது.  கார்கள் கூட கம்மிதான்.  அப்போது ராஜேஷ் அடப் போங்கடா என்று நினைத்தபடி வெளியே போயிருக்கிறார்.  ஒரு நீண்ட சாலை.  சாலையில் ஈ காக்காய் இல்லை.  தூரத்தில் ஒரே ஒரு ஆள் வந்து கொண்டிருப்பது தெரிகிறது.  அந்த ஊர் ஆள்.  நெருங்கி வர வர ராஜேஷ் ஒரு அடிதடிக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.  கத்தியால் குத்தினால் கூட தடுத்துக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்.  ஆனால் வந்தவன் அதிர்ஷ்டவசமாக இவரை விட உயரம் கம்மி; தடிமனும் கம்மி.  ஒண்டிக்கு ஒண்டி நின்றால் அவன் வீழ்ந்து விடுவான்.  ராஜேஷ் ஆறரை அடி உயரம்.  ஆளும் டபிள்யூ டபிள்யூ எஃப்பில் வரும் வீரர்களைப் போல் இருப்பார்.  ஆனால் சுவாரசியம் என்னவென்றால், அவன் தூரத்திலிருந்து வரும் போதே இவரைப் பொசுக்கி விடுவது போல் முறைத்துக் கொண்டே வருகிறான்.  இவரும் பதிலுக்கு அவனைத் தீர்த்துக்கட்டு விடுவது போல் பார்த்துக் கொண்டே கடக்கிறார்.  அவனும் விடாமல் திரும்பி முறைத்துக்கொண்டே போகிறான்.  கற்பனை செய்து பாருங்கள்.  சாலையில் ஈ காக்காய் கிடையாது.  இரண்டு முரட்டு ஆசாமிகள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே கடக்கிறார்கள்.  ஐயோ, எனக்கெல்லாம் பயத்தில் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும்.  ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் நானும் முறைத்துக்கொண்டே தான் போயிருப்பேன்.  உடல் வலுவுக்காகவும் தனியாகப் போவதில் உள்ள ஆபத்துக்காகவும் சொன்னேன். 

இந்தியா, மெக்ஸிகோ, தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வதென்றால் காலை பத்திலிருந்து ஆறு வரை ஆபீஸ் போய் விட்டு வீட்டுக்கு வந்து முடங்கி விட வேண்டும்.  இரவைப் பார்க்க விரும்பினால் உயிர் உங்கள் கையில் இல்லை.  இரண்டு சம்பவங்கள் சொல்கிறேன்.  ஒன்று பெங்களூர்.  மீண்டும் ராஜேஷ்தான்.  தம்பி ப்ரிகேட் ரோட்டில் கொஞ்சம் பியர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.  எம்ஜி ரோடு.  மெட்ரோ ஸ்டேஷன் வரை நடந்து போகலாம் என்று திட்டம்.  இரவு மணி ஒன்று.  அப்போது வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரை மடக்கியிருக்கிறார்கள்.  சினிமாவில் அந்த மூன்று பேரையும் அடித்து விரட்டியிருக்கிறார் ராஜேஷ்.  காரணம், ராஜேஷின் பயில்வான் உடம்பும், வடகிழக்கு மாநிலக்காரர்களின் கெச்சலான உடம்பும்தான்.  இன்னொரு காரணம், கொஞ்சம் தண்ணி போட்டிருக்கவில்லை என்றால் எனக்கு அந்த ஆவேசம் வந்திருக்காது என்றார் ராஜேஷ்.  ஆனால் அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள்; அந்தப் பையன்களிடம் கையில் கத்தி இல்லை.  தப்பினேன்.  அடுத்த முறை அவர்கள் கத்தியோடு செல்வார்கள் என்றார்.

இன்னொரு சம்பவம்.  நண்பரின் பெயரை எழுதலாமா என்று தெரியவில்லை.  சமயத்தில் நண்பர்களின் பெயரைப் போட்டு எழுதினால் அழ ஆரம்பித்து விடுகிறார்கள்.  நண்பரும் நண்பரின் தோழியும் தோழியின் சகோதரரும் கோவையில் இரவுக் காட்சி படம் பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.  மூன்று பேரும் இரண்டு ஸ்கூட்டர்களில்.  மணி இரவு ஒன்று.  மருதமலை ரோடு.  அங்கே ஒரு ஸ்பீட் பிரேக்கர் அருகே மூன்று பேர் பைக்கில் நின்றுகொண்டு இவர்களின் ஸ்கூட்டர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.  இவர்கள் நிறுத்தவில்லை.  ஆனது ஆகட்டுமென்று வேகமெடுத்துச் செல்ல அதை எதிர்பார்க்காத அவர்களில் ஒருவன் கையிலிருந்து கம்பை எடுத்து வீசியிருக்கிறான்.  அது நல்லவேளையாக நண்பரின் மீது படவில்லை.  இன்னொருவன் தன் கையிலிருந்த கயிற்றை எடுத்து வீசியிருக்கிறான்.  நல்லவேளையாக அந்தக் கயிறு முதுகில் பட்டு விழுந்து விட்டது.  இந்தியாவில் ஸ்பீடு ப்ரேக்கர் என்பது மலை மாதிரி இருக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  நிச்சயம் வேகத்தைக் குறைப்பார்கள்; திருடலாம் என்று மூன்று பேர் மூன்று பேராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  கோவையில்.  மறுநாள் போனால் அங்கே அவர்கள் இருக்க மாட்டார்கள்.  வேறு இடம் மாற்றியிருப்பார்கள்.  மூன்று திருடர்களும் நிறைபோதையில் இருந்திருக்கிறார்கள்.  இதுதான் இந்தியா.  பெரும்பாலான ஆஃப்ரிக்க நாடுகளும் தென்னமெரிக்க நாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.  அமெரிக்காவிலும் கூட பல ஊர்களில் இரவு நேரங்களில் தனியாகச் செல்ல முடியாது.  டெட்ராய்ட் ஒரு உதாரணம்.  டெட்ராய்ட்டில் வாழ வாருங்கள்; ஒரு ஆண்டுக்கு மின் கட்டணம் கிடையாது என்று டெட்ராய்ட் முனிசிபாலிட்டியில் கூவிக் கூவி விளம்பரம் செய்கிறார்கள்.  ஆனாலும் யாரும் அங்கே வசிக்கத் தயாராக இல்லை.  நிறைய பேர் டெட்ராய்ட்டில் வேலை செய்கிறார்கள்.  பிஸி சிட்டிதான்.  ஆனால் வேலை முடிந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள தங்கள் ஊர்களுக்கு ஓடி விடுவார்கள்.  நியூயார்க்கிலேயே கூட இரவு நேரங்களில் போகக் கூடாத இடங்கள் பல உண்டு.  தெற்கு ஜமைக்கா அப்படி ஒரு இடம் என்று கேள்விப்படுகிறேன். 

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிட்னியில் வசிக்கிறார்.   தூரத்து உறவு.  இலக்கிய வாசனை கிடையாது.  பத்திலிருந்து ஆறு வகையறா.  ஸாஃப்ட்வேர் ஆசாமி.  சிட்னி எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.  எனக்கு ஒன்னும் வித்தியாசமே தெரியல.  இதுதான் பதில்.  அதாவது சென்னைக்கும் சிட்னிக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.  ஆகா.  எப்பேர்ப்பட்ட ஞானஸ்தன் என்று நினைத்துக் கொண்டேன்.  சென்ற ஆண்டு அவந்திகா தெருநாய்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த ஒருத்தன் அவள் கழுத்தில் கிடந்த செயினைப் பறிக்க முயற்சி செய்திருக்கிறான்.  இவள் ராஜேஷ் மாதிரி குஸ்தி போட்டு தப்பியிருக்கிறாள்.  இந்தியா மெக்ஸிகோ மாதிரி ஆகி வெகுநாட்கள் ஆகிறது.     

எஸ்.ஓ.டி.சி. ட்ராவல் அலுவலகத்துக்கு இன்று நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும்தான் போய் வந்தோம்.  எல்லாம் சுமுகமாக முடிந்தது.  ராகவனுக்கும் என்னப் போலவே பயணத்தில் பெருவிருப்பம் உண்டு.  காசு சேர்த்து வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்க மனிதர் அல்ல அவர்.  ஜாலியாக உலகம் சுற்ற வேண்டும் என்பதே அவர் விருப்பம்.  இன்று சொன்னார், கண் பார்வை இருக்கும் போதே ப்ரஸீல் கார்னிவலைப் பார்த்து விட வேண்டும் என்று.  ப்ரஸீல் கார்னிவலைப் பார்க்க வேண்டும் என்று அவர் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே சொல்லி வருகிறார்.  சமீபத்தில்தான் மார்ச்சில் முடிந்தது.  அடுத்த மார்ச்சில் நாங்கள் இருவரும் போகலாம் என்பது திட்டம்.  அவர் கண் பார்வை பற்றிப் பேசினபோது நான் சொன்னேன்.  இருதயத்தில் 50 சதவிகித அடைப்பு இருப்பதால் எனக்கே உடம்பு பலம் பாதியாகக் குறைந்து விட்டது.  முன்பு போல் மலை ஏற முடியாது; முன்பு போல் அரக்கக் குடி குடிக்க முடியாது.  ஆனாலும் என்ன, ஊர் சுற்றாமலா இருக்கிறேன்?  கோ சுமாய் தீவில் ஒரு செங்குத்தான மலைப்பகுதியில் எந்த சிரமமும் இல்லாமல் ஏறத்தான் செய்தேன்.  அதைப் பற்றி ராகவனிடம் சொன்னேன். 

சீலே பயணத்தில் ஒன்றிரண்டு நண்பர்கள் சேர்ந்து கொள்வதாகச் சொன்னார்கள்.  இரண்டு பேராகப் போனால் கூட செலவு குறையும்.  தங்கும் அறை இரண்டு பேருக்கு ஒன்று ஆகி விடும் அல்லவா?  ஆனால் அவர்களோடு communicate செய்வதற்குள் என் சக்தி அத்தனையும் போய் விடும் போலிருக்கிறது.  எல்லாவற்றுக்கும் நானே தான் தார்க்குச்சி போட்டுப் போட்டு இழுக்க வேண்டியிருக்கிறது.  ஐயோ நம்மால் ஆகாதுடா சாமி என்று விட்டு விட்டேன்.  நாளை உங்களை அழைக்கிறேன் என்று சொன்னால் அழைக்க வேண்டும்.  முடியாவிட்டால் நாளை மறுநாள் அழைக்க வேண்டும்.  அதுவும் முடியாவிட்டால் ரெண்டு நாள் கழித்தாவது கூப்பிட வேண்டும்.  சத்தமே இருக்காது.  15 நாள் கழித்து நானேதான் அழைக்க வேண்டும்.  அருமையான, அற்புதமான பதில் கிடைக்கும்.  சரியாகி விட்டது என்று நினைப்பேன்.  மீண்டும் மகா அமைதி.  ஆஹா… ஆஹா… தனியாகவே போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன். 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai