பஜெநாத்தோ

மேலே உள்ள இணைப்பில் உள்ள பாடலைக் கேட்டு விட்டு இதைப் படித்தால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.  பாடலைப் பாடியவர் கார்லோஸ் பீபெஸ் (Carlos Vives).  ஸ்பானிஷில் v-ஐ b-ஆகத்தான் உச்சரிப்பார்கள்.  இந்தியாவில் வங்க மொழியிலும் அப்படித்தான்.  நாம் வசந்தி வங்காளிகள் பசந்தி என்பார்கள்.  நமக்கு ரவீந்திரநாத்.  அவர்களுக்கு ரபீந்திரநாத்.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், கொலம்பியாவின் மிகப் புகழ்பெற்ற இசை வடிவமான பஜெனாத்தோ பாணி பாடல் இது.  ரோமன் லிபியில் Vallenato.  இதன் உச்சரிப்புதான் பஜெநாத்தோ.  இரண்டு எல் வந்தால் ஜ.  Mario Vargas Llosa என்பதன் சரியான உச்சரிப்பு மரியோ பர்கஸ் ஜோஸா.  பஜெனாத்தோவின் விசேஷம் என்னவென்றால் இது கரீபியன், ஆஃப்ரிக்கன் மற்றும் ஐரோப்பிய இசை வடிவங்களின் கூட்டுக் கலவை.  அதேபோல் குவாராச்சாராக்கா (Guacharaca), காஹா (Caja) மற்றும் அக்கார்டியன் என்ற மூன்று கருவிகள்தான் இந்த இசை வடிவத்துக்கு அடிப்படையானவை. 

பின்வரும் இணைப்பில் உள்ள பாடலைக் கேட்டுப் பாருங்கள்.  கார்லோஸ் பீபெஸ் ஷகீராவுடன் இணைந்து பாடிய இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இப்போதைய லூயிஸ் ஃபோன்ஸியின் Despacito பாடல் அளவுக்குப் புகழ் பெற்றிருந்தது. 

காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் தன்னுடைய நூறாண்டுகளின் தனிமை நாவலே 350 பக்கங்களில் எழுதப்பட்ட பஜெனாத்தோ பாடல்தான் என்கிறார்.  பஜெனாத்தோ பாடல்களிலிருந்துதான் என் எழுத்துக்கான உந்துதலையே பெறுகிறேன் என்கிறார் மார்க்கேஸ்.  முழுக்க முழுக்க கொண்டாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பஜெனாத்தோ பாடல்களை ஒரு பொஹோத்தா (Bogota- கொலம்பியாவின் தலைநகர்) பப்பில் அமர்ந்து கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.