விநோத ரச மஞ்சரி

சாரு ஆன்லைனுக்குக் கட்டணம் கட்டியும் படிக்கலாம்; கட்டாமலும் படிக்கலாம்.  பணம் என்பது எப்போதுமே என் சிந்தனையில் இருந்ததில்லை.  அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் ஒரு காகிதம் என்ற அளவில் மட்டுமே பணத்தை மதிக்கிறேன்.  அதே சமயம், இனிமேற்கொண்டு எதையுமே இலவசமாகச் செய்வதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன்.  விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு.  சமீபத்தில் ந. சிதம்பர சுப்ரமணியனின் புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன்.  இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறேன்.  ஆனால் நாகேஸ்வர ராவ் பூங்காவில் என் நடை சகாவான சுந்தரத்திடம் நான் பணம் பற்றியே பேசவில்லை.  ந. சிதம்பர சுப்ரமணியனின் புதல்வர் சுந்தரம். அவருக்கு இந்தப் பண விஷயம் பற்றியே தெரியாது.  அவரிடம் இது பற்றி நான் பிரஸ்தாபிக்கவே இல்லை.  காரணம், சுந்தரம் ந.சி.யின் biological son என்றால் நான் ந.சி.யின் எழுத்து வாரிசு.  என் முன்னோர் அனைவருமே எனக்கு ஆசான்களும் தந்தையரும் ஆவர்.  ஆசானிடம் ஞானத்தை மட்டுமே பெற முடியும்.  பணம் பெறுவது அதர்மம். 

இலவசமாக எதையும் செய்வதில்லை என்பதை சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  நாய்க்கும் பூனைக்கும் மாதம் 20,000 ரூபாய் ஆகிறது.  நான் வளர்க்கும் பூனைகள் அல்ல; தெருப் பூனைகள்.  இதோ இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஸிஸ்ஸி நான் சாப்பாடு கொண்டு வருவேன் என்று காத்துக்கொண்டிருக்கும்.  கடவுளாகப் பார்த்து எனக்குக் கொடுத்த வேலை அது.  அதிலிருந்து நான் பின்வாங்க முடியாது.  அதில் நான் பணக் கணக்கும் பார்க்க முடியாது.

இலவசமாக எதையும் செய்வதில்லை என்று என் 66-ஆவது வயதில் முடிவெடுக்கிறேன்.  அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  என் 22 வயதிலிருந்து இலக்கியப் பத்திரிகைகளில் பணம் வாங்காமல்தான் எழுதினேன்.  இந்த வாக்கியத்தை ஒரு அமெரிக்கனால் புரிந்து கொள்ள இயலாது.  உங்கள் வயது 40க்குள் என்றால் உங்களாலும் புரிந்து கொள்வது கடினம்தான்.  அதாவது, இலக்கியப் பத்திரிகையில் பணம் கேட்பது என்பது ஒரு தாய் பால் கொடுக்கும் தன் குழந்தையிடம் பணம் கேட்பதைப் போன்றது அது.  இலக்கியப் பத்திரிகைகளை அதன் ஆசிரியர்கள் தன் குடும்பத்தைப் பட்டினி போட்டு, தன் மனைவியின் நகைகளை விற்றுத்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  அவர்களிடம் போய் எப்படிப் பணம் கேட்க முடியும்?  இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  கோவிலுக்கு ஊர் கூடித் தேர் இழுக்கிறது.  நீங்களும் ஒரு கை வடம் பிடித்தால் மேலே பார்த்து வடம் பிடிக்கக் காசு கொடு என்று கேட்பீர்களா?  அது ஒரு தர்ம காரியம்.  சமூகச் செயல்பாடு.  இஷ்டப்பட்டால் நீங்கள் செய்யலாம்.  இல்லாவிட்டால் கம்மென்று இருக்கலாம்.  அப்படித்தான் 22 வயதிலிருந்து 44 ஆண்டுக் காலம் இலவசமாகவே எழுதினேன்.  ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் 750 ரூ கொடுப்பார்கள்.  ஒரு கட்டுரைக்கு.  அதற்குப் பெயர் கூலியா என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.  எழுதுவதற்கே 3000 ரூ செலவு ஆகும் சாமிகளா.  புத்தகம், சி.டி., பல இடங்களில் உறுப்பினர் கட்டணம், பயணம்.  எல்லாவற்றுக்கும் நீங்கள் செலவு செய்து விட்டு 750 ரூ. கூலி வாங்க வேண்டும்.  அப்படியும் நீங்கள் எத்தனை காலத்துக்கு அதில் எழுத முடியும்?  அதிக பட்சம் ஆறு மாதம்.  அதோடு தொடர் நின்று விடும்.  இதுவரை விகடனில் நான் ஆறு மாதம் மட்டுமே எழுதியிருக்கிறேன்.  அவ்வளவுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த இடம்.  அதனால் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதும் இலவசத்தில்தான் அடங்கும்.

தமிழ் எழுத்தாளர்களிலேயே என்னுடைய நிலைமை கொஞ்சம் விசேஷம்.  15 ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்மையில் என் புத்தகங்கள் வெளிவரும் வரை நானேதான் என் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தேன்.  ஒரு பதிப்பகம் கூட என் புத்தகங்களைப் பதிப்பிக்கத் தயாராக இல்லை.  என் சம்பாத்தியம், அவந்திகாவின் சம்பாத்தியம் அனைத்துமே இதற்குத்தான் செலவாயிற்று.

இப்போது 66 வயதில் என் எழுத்துக்குக் கட்டணம் செலுத்துங்கள் என்கிறேன். தப்பா? அதிலும் விருப்பமானவர்கள் மட்டுமே செலுத்தலாம்; மற்றவர்கள் வேண்டாம் என்றும் சொல்கிறேன்.  சில நண்பர்கள் தங்கள் நேரத்தை எனக்குத் தருகிறார்கள். விலை மதிக்க முடியாதது அவர்களின் நேரம்.  அவர்கள் எல்லாம் என் குடும்பத்தினர்.  சரி.  இதையெல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன்?  இப்படி என் எழுத்து இயக்கத்துக்கு பணத்தாலோ நேரத்தாலோ உதவ இயலாதவர்கள் என்னை ஏன் உபத்திரவம் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.  ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து போன் செய்து போன் செய்து போன் செய்து டார்ச்சர் தருகிறார்.  ஐயா, என் நேரத்தை உங்களுக்கு நான் இலவசமாகத் தர முடியாது.  எழுத்தை இலவசமாகப் பெறுகிறீர்கள் அல்லவா?  அதற்கு நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் மெயில் எழுதி பணம் கேட்டேனா?  இல்லை அல்லவா?  எழுத்தை இலவசமாகத்தானே படிக்கிறீர்கள்?  அப்புறம் ஏன் எழுத்தோடு என் நேரத்தையும் இலவசமாகக் கேட்கிறீர்கள்? 

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு அன்பர்.  அவர் பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.  எனக்கு போன் செய்து ”நான் ஒரு எழுத்தாளர், எனக்கு மலையாள மொழிபெயர்ப்பாளர்களின் தொலைபேசி எண் வேண்டும்” என்று கேட்டார். 

மேலே உள்ள பத்தியை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள்.  அதில் உங்களுக்கு எந்தத் தவறும் தெரியாது.  ஆனால் இது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.  ஒரு காதல் ஜோடி இருக்கிறது.  நாலைந்து ஆண்டுகளாகக் காதல்.  அப்போது காதலன் காதலியிடம் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கலாம்.  அது நாலைந்து வருட காதலில் அனுமதிக்கப்படலாம்.  ஆனால் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை சாலையில் பார்த்து ஏதோ மணி கேட்பது போல் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் செருப்படிதானே கிடைக்கும்?  செருப்படியோடு ஜெயிலும் கிடைக்கும் அல்லவா? அது போன்றதுதான் மேற்கண்ட விசாரிப்பும்.  ரஜினியின் நண்பர் ஒருவர் (க்ளாஸ்மேட்) எனக்கும் நண்பர்.  அவருக்கு நான் ஒரு போனைப் போட்டு ரஜினி போன் நம்பர் குடுங்க என்று கேட்க முடியுமா?  மொழிபெயர்ப்பாளர் என்றால் சும்மாவா?  ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு முயன்றேன்.  50,000 ரூ செலவு.  கடைசியில் அது நடக்கவே இல்லை.  ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு முயன்றேன்.  ஒரு லட்சம் செலவு.  மொழிபெயர்ப்பு குப்பை.  ஒரு நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்றேன்.  இரண்டு லட்சம் செலவு.  குப்பை.  இன்னும் இதுபோல் பல முயற்சிகள்.  மொத்தமாக மொழிபெயர்ப்புக்கு பத்து லட்சம் செலவு செய்திருப்பேன். ஆனால் யாரோ ஒரு ஆள் போகிற போக்கில் என்னிடம் மொழிபெயர்ப்பாளர் நம்பர் குடுங்க என்று கேட்கிறார்.

மலையாள மொழிபெயர்ப்பாளர்களின் போன் நம்பர் கேட்டவரிடம் முதலில் என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.  கத்தினால் உடனடியாக எனக்கு நெஞ்சு வலி வரும்.  அதனால் நாளை போன் செய்யுங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன்.  மறுநாள் பல்வேறு நேரங்களில் பத்து முறை அந்த நபரிடமிருந்து போன் வந்தது.  நான் எடுக்கவில்லை.  எல்லாமே ஓசியில் வேண்டும்.   இப்படித்தான் அந்த அமெரிக்கவாசியையும் கருதுகிறேன்.  அவருக்கு இணையத்தில் இலவசமாகப் பதிவு செய்யப்படும் என் எழுத்து வேண்டும்.  அவருக்கு என் எழுத்து பிடிக்கும்.  ஆனால் ஓசியிலேயே என் நேரமும் வேண்டும்.  முந்தாநாள் போன் செய்தார்.  ஐந்து நிமிடம் பேசினார்.  எல்லாமே என் எழுத்து பற்றி புகழ் மொழிகள். லஜ்ஜையுடன் கேட்டுக் கொண்டேன்.  நேற்று நான்கு முறை போன் செய்தார்.  நான் எடுக்கவில்லை.  ஆனாலும் இதெல்லாம் எனக்கு அனாவசியமான மன உளைச்சல்தானே?  வடம் பிடிக்கக் கூப்பிட்டால் ”இல்லை, நான் வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்” என்கிறார்கள்.  ஆனால் வடை மட்டும் வேண்டும்!!!

எனக்கு சில கதைகளும் சம்பவங்களும் ஞாபகம் வருகின்றன.  பண்டிதமணி கதிரேசன் செட்டியார் எழுதிய விநோத ரச மஞ்சரி என்ற புத்தகத்தில் வரும் ரசமான சம்பவம் இது:  ஒரு பிரபுவுக்குத் தானும் கலா ரசிகர் என்ற பெயர் பெற வேண்டும் என்று ஒரு ஆசை உண்டாகிறது.  அதனால் ஒரு நல்ல சங்கீதக் கலைஞரை தன் சபைக்குப் பாட அழைத்தார்.  கலைஞரும் நன்கு பாடினார்.  பிரபு அந்தப் பக்கத்திலேயே மற்ற பிரபுக்களைக் காட்டிலும் நல்ல செல்வந்தர்.  அது அவரது தோற்றத்திலேயே தெரிந்தது.  மார்பே தெரியாத அளவுக்கு தங்க, நவரத்தின ஆபரணங்கள்.  பத்து விரலிலும் மோதிரங்கள்.  இரண்டு கைகளிலும் தண்டி தண்டியான தங்கக் காப்புகள்.  கலைஞரோ தமிழ் மரபுப்பட பரம பிச்சைக்காரர்.  ஆஹா, பிரபு அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று தன் வித்தையையெல்லாம் காண்பித்துப் பாடினார்.  அற்புதமான கானம்.  பிரபுவும் ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உமக்கு தட்டுகளில் தங்கம் தருகிறேன்; உமக்கு நூறு யானைகளைத் தருகிறேன்; நூறு குதிரைகளைத் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.  இப்படிப்பட்ட வள்ளலை நாம் பார்த்ததே இல்லையே, ஆஹா, நம் வாழ்நாள் பிச்சைக்காரத்தனம் விலகியதே; இனிமேலாவது வீட்டுக்காரியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல் கௌரவமாக வாழலாமே என்று ஆனந்தப்பட்ட கலைஞரும் தன் உயிரை விட்டுப் பாடினார்.  மூன்று மணி நேரம் இசை வெள்ளம் முடிவு பெற்றது.  கடைசியில் கலைஞரிடம் போய் வாருங்கள் என்றார் பிரபு.  அதிர்ச்சியும் குழப்பமுமாக கலைஞர் ஐயா பிரபு, தாங்கள் கொடுப்பதாகச் சொன்ன பொன்னும் பொருளும் வரவில்லையே என்று தயங்கித் தயங்கிக் கேட்க, அதற்கு பிரபு அட்டகாசமாகச் சிரித்தபடி சொன்னார்.  ”அடப் பைத்தியக்கார கலைஞரே… பாடத் தெரிகிறதே தவிர உலக நடப்பு தெரியவில்லையே!  நீர் நல்லபடியாகப் பாடி என் செவிகளைக் குளிர்வித்தீர்.  நானும் அந்தப்படியே நாலு நல்ல வார்த்தைகளைச் சொல்லி உம் செவிகளைக் குளிர்வித்தேன்.  சரியாகப் போயிற்று.  போய் வாரும்..”  

கோவித்துக் கொள்ளாதீர்கள்.  முக்கால்வாசி அமெரிக்கவாழ் தமிழ் வாசகர்கள் என்னிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.  இன்று காலை ராமசேஷன் என்னிடம் கேட்டார், உங்கள் அமெரிக்க வாசகர்கள் – அதாவது தமிழர்கள் – உங்கள் ராஸ லீலாவுக்குப் பணம் அனுப்பினார்களா?  எத்தனை பேர் அனுப்பினார்கள்?  ஒரு நண்பர் அனுப்பினார் என்றார்.  மாதக் கட்டணம் கட்டுகிறார்களா என்று தொடர்ந்தார்.  ஒருத்தர் அனுப்புகிறார்;  அவரே தான் இவர் என்றேன். 

சிரித்தபடி சொன்னார்.  ராமசேஷன் சிறிது காலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர்.  ”அனுப்ப மாட்டார்கள்.  பணம்தான் அவர்களுக்குத் தெரிந்த உலகம்.  அதை அவர்கள் அமெரிக்கர்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.” அது உண்மைதான் போல.  வீசாவுக்காக அமெரிக்க மையத்துக்குச் சென்ற போது அந்த அதிகாரிக்கு நான் சொல்வதையே புரிந்து கொள்ள முடியவில்லை. 

”நியூயார்க்கில் உங்களுக்கு யார் செலவு செய்வார்?  எங்கே தங்குவீர்கள்?” 

“என் நண்பர் வீட்டில்தான் தங்குவேன்.  என் நண்பர்தான் செலவு செய்வார்.”

என் பதிலை அந்த அமெரிக்கப் பெண்மணியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஐந்து நிமிடம் அவருக்கும் எனக்கும் உரையாடல் நடந்தும் அவருக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை.  கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.  அது எப்படி உங்களுக்காக ஒரு நண்பர் இத்தனை செலவு செய்ய முடியும்?  அண்ணன் தம்பியாக இருந்தால் பரவாயில்லை.  அது எப்படி ஒரு நண்பர்…  

நான் பார்க்கும் படங்களிலும் அப்படித்தான் காண்பிக்கிறார்கள்.  டின்னருக்கு அழைத்தால் உன் செலவா? என் செலவா?  இதுதான் முதல் கேள்வியே.  இங்கே இந்தியாவில் நட்புக்காகக் கொலை கூட செய்து விட்டு ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்கள் உண்டு.  ஆனால் இந்த அமெரிக்கக் கலாச்சாரத்தை இந்தியர்கள் பின்பற்றுவதில் அர்த்தம் இல்லை.  அமெரிக்கா எழுத்தாளர்களுக்குத் தரும் மரியாதையே வேறு.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி நியூயார்க்கில் தெருக்களில் வாழ்ந்த எழுத்தாளன்.  ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் அவரை அமெரிக்க இலக்கிய ஸ்தாபனம் கொண்டாடியது.  ஒரு கோடீஸ்வரனால் கூட வாழ முடியாத வாழ்க்கையை ப்யூகோவ்ஸ்கி வாழ்ந்தார்.  பர்ரோஸ் மெக்ஸிகோவில் தன் மனைவி தலையில் ஆப்பிளை வைத்து துப்பாக்கியால் சுட்டு விளையாடிய போது மனைவி இறந்து, பர்ரோஸ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது அமெரிக்க அரசாங்கம் தலையிட்டு அவரை விடுதலை செய்ய வைத்தது.  இந்தியாவில் இது நடக்குமா?  ”எழுத்தாளனா? அவன் கொன்றிருப்பான். அவனுக்கு ஆயுள் தண்டனை வேண்டாம்.  தூக்கில் போடுங்கள்” என்று சொல்லும் இந்திய அரசு.  எனவே அமெரிக்கர்களின் பழக்கத்தைத் தமிழர்கள் கடைப்பிடிப்பது முட்டாள்தனம்.

சரி, அது அவரவர் விருப்பம்.  என்னை ஏன் ஐயா தொந்தரவு செய்கிறீர்கள்?  எனக்கு எல்லாம் ஓசியிலேயே வேண்டும்; உன் நேரமும் வேண்டும் என்றால் நான் என்ன கேணையனா?  லண்டனிலிருந்து ஒரு நண்பர் வாரம் ஒருமுறை அழைப்பார்.  நீண்ட நேரம் பேசுவார்.  சகித்துக் கொண்டேன்.  இப்படியே ஒரு வருஷம் போனது.  விடுப்பில் இந்தியா வருகிறேன் என்றார்.  முதல் வேலையாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்றார்.  வந்தார். வந்த அன்று போன் செய்தார்.  அவ்வளவுதான். அதோடு சத்தமே இல்லை.  ஒரு வருடம் ஆயிற்று.  இனிமேல் போன் செய்ய மாட்டார்.  முன்பெல்லாம் தண்ணி போட்டால் தேவடியாளிடம் போவார்கள்.  இப்போது சாருவுக்கு ஒரு போன் போடு என்று போடுகிறார்கள்.  சென்னை வசை மொழிதான் ஞாபகம் வருகிறது.  இனிமேல் இப்படிப்பட்ட ஒரு போனைக் கூட நான் எடுப்பதாக இல்லை.  இப்படி எழுதுவதால் பெரும் நஷ்டம் எனக்குத்தான்.  என் நெருங்கிய நண்பர்கள் கூட சாருதான் இப்படி எழுதியிருக்கிறாரே, அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்து ஃபோன் செய்யாமல் விட்டு விடுவார்கள்.  நான் வடம் பிடிக்க வராதவர்களை மட்டுமே இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.  என் பொருட்டு உங்களின் விலை மதிக்க முடியாத நேரத்தையோ அல்லது என் பயணங்களுக்குத் தேவைப்படுகின்ற பணத்தையோ எனக்காகக் கொடுப்பவர்களுக்கு இது பொருந்தாது.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். 

பாரதியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகம் வருகிறது.  புதுச்சேரியில் இருக்கிறார் பாரதியார்.  பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை.  நெருங்கிய நண்பர் ஒருவர் செல்வந்தர்.  அவரிடம் ஐந்து ரூபாய் வேண்டும் என்று கேட்டு ஒரு சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்புகிறார் பாரதி.  சீட்டு போய்ச் சேர்ந்தது.  பணம் வரவில்லை.  அன்று மாலையில் பாரதி வாக்கிங் போகும் போது அந்த செல்வந்தரை சாலையில் பார்க்கிறார்.  அந்தக் கூமுட்டை வாயை மூடிக் கொண்டு போய்த் தொலைந்திருக்க வேண்டியதுதானே?  அது பாரதியிடம் சொன்னதாம்.  ”உம் சீட்டு கிடைத்தது பாரதி.  ஆனால் பணத்தை அனுப்பி வைத்தால் உம்முடைய நெருப்பு அணைந்து போகும்.  அதனால்தான் பணம் அனுப்பவில்லை.”  அதற்கு பாரதி “என் உயிர் இருக்கும் வரை என் முகத்தில் விழிக்காதீர்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாராம்.  பல அமெரிக்க வாசகர்கள் எனக்கு அந்த செல்வந்தரையே நினைவூட்டுகிறார்கள்.   

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai