கமல் – 40 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த மனிதன்

கமல்ஹாசன் உளறுவதற்கெல்லாம் சினிமாக்காரர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஜால்ரா அடித்து வந்திருக்கிறார்கள். பாவம் அவர்கள், கமல் கொடார்ட் என்று ஒரு பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன எழவு புரியப் போகிறது? கொதார் என்ற ஃப்ரெஞ்ச் பெயரைத்தான் அப்படி உளறுகிறார் என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஒரு இங்க்லீஷ்காரன் கேண்டி கேண்டி என்று சொன்னால் மற்ற இங்க்லீஷ் மடையன்களுக்கு அது காந்தியைக் குறிக்கிறது என்று தெரியுமா என்ன? கமல் உளறுவதற்கெல்லாம் 40 ஆண்டுகளாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். சினிமா மட்டும் அல்ல; அவர் தன் அலுவலகத்துக்கு வரவழைத்துப் பேசும் எழுத்தாளர்களும் ஜால்ராதான் அடிக்க வேண்டும். மீறிப் பேசுபவர்களை அவர் சந்தித்ததும் இல்லை; பேசியதும் இல்லை. 40 ஆண்டுகளாக ஜால்ராக் கூட்டத்துக்கு இடையிலேயே ஒருத்தர் பேசிக் கொண்டிருந்தால் கமல் இப்போது பேசுவதே ரொம்பத் தெளிவு என்பேன். யோசித்துப் பாருங்கள்; ஒருத்தர் 40 ஆண்டுகளாக ஜால்ரா கூட்டத்துக்கு நடுவில் மட்டுமே பேசிக் கொண்டிருந்து விட்டு இந்த அளவுக்கு நிதானமாக இருப்பதே உலக ஆச்சரியம். பிரச்சினையின் ஆணி வேர் என்னவென்றால், நன்கு படித்த, நல்லவிதமாக சிந்திக்கக் கூடிய, தெளிவான புத்திஜீவி என்று சொல்லக் கூடிய சாருஹாசனே கமலை ஜீனியஸ் என்கிறார் என்றால் 40 ஆண்டுகளாக கமல் வளர்ந்த, இருந்த சூழலை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கமலைப் பற்றி யோசிக்கும் போது, 40 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இல்லாமல் ஒரு குகையில் வளர்க்கப்பட்ட மனிதன் ஒருவனே எனக்கு ஞாபகம் வருகிறான். இப்போதுதான் முதல்முதலாக அந்த மனிதன் வெளி உலகைப் பார்க்கிறான். இந்துதான் முதல் தீவிரவாதி என்கிறான். எல்லோரும் கிராமத்துக்குச் செல்லுங்கள் என்கிறான். அப்படித்தான் கமலும். எனவே கமலை மன்னித்து விடுங்கள். இப்போதுதான் அவர் பேச ஆரம்பித்திருக்கிறார். மழலைப் பேச்சில் தப்பு கண்டு பிடிப்பது பர்வர்ஷன்.