லூசிஃபர்

“என் மகள் காலை ஆறரை மணிக்கு ஏதோ ஒரு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலைநாள் வேறு.  இதெல்லாம் சரியா என்று கேட்டு திட்டினேன்.  போப்பா, இதெல்லாம் உனக்குப் புரியாது, உன் வேலையைப் பார் என்று சொல்லிவிட்டாள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நண்பர்.  ஜிஓடி தானே பார்த்தாள் என்று கேட்டேன்.  இல்லை; ஏதோ கேம் என்று வந்தது என்றார்.  ”அட என்னங்க நீங்க, இந்த அளவுக்கு generation gap ஆகிப் போச்சு உங்களுக்கு?  கேம் ஆஃப் த்ரான்ஸ் என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை; அதுதான் ஜிஓடி” என்றேன்.  ”ஜிஓடி பார்க்கவில்லை என்றால் நீங்கள் இந்த வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.  ஏற்கனவே சைவ உணவுப் பழக்கத்தால் சாப்பாட்டு உலகின் பல அற்புதங்களை இழந்து விட்டீர்கள்.  இன்னும் இழக்காதீர்கள்.  ஆனாலும் எனக்கு என்னவோ உங்களுக்கு ஜிஓடியை விட ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்றேன்.  இந்த உரையாடலில் கடைசி வாக்கியத்தை மட்டும் நீக்கி விட்டு மீதியை அவர் தன் மகளிடம் சொல்லியிருக்கிறார்.  அதற்கு அவள் சொன்னாளாம்.  உனக்கெல்லாம் ஜிஓடி பிடிக்காதுப்பா; உனக்கு ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்தான் பிடிக்கும்.  நண்பர் இதுவரை எந்தத் தொலைக்காட்சி சீரீஸும் பார்த்திராதவர்.  அவரிடம் வாட்ஸப்பே இல்லை. 

அவருக்கு ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்தான் பிடிக்கும் என்பதை எப்படி யூகித்தேன் என்றால், நண்பர் செஸ் பிரியர்.  நானோ கால்பந்தாட்டம் ரசிப்பவன். 

என்னால் ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் ஒன்றிரண்டு எபிசோடுகள்தான் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் சலிப்பாகி விட்டது.  நெட்ஃப்ளிக்ஸில் பெரும்பாலான சீரீஸைப் பார்த்து விட்டேன்.  பார்க்காதவை கம்மியாகவே இருக்கும்.  பார்த்ததிலேயே பயங்கர த்ரில் எதில் என்றால், The Night Of.  ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இது வெறும் பொழுதுபோக்கு சீரீஸ் அல்ல.  மிகவும் சீரியஸான, ஒரு ஆர்ட் ஃபில்ம் என்று சொல்லத்தக்க அளவுக்குக் கதைப் பின்னணி கொண்ட எட்டு எபிசோடுகளை மட்டுமே கொண்ட டெலிப்ளே.  சஸ்பென்ஸ் காரணமாக எனக்கு நெஞ்சுப் படபடப்பு வரும்போல் தெரிந்ததால் கடைசி எபிசோடைப் பார்த்து விட்டுத்தான் மற்ற எபிசோடுகளைப் பார்த்தேன்.  நியூயார்க் நகரத்தில் வசிக்கும் ஒரு பாகிஸ்தானி குடும்பத்தைப் பற்றிய கதை.  அமெரிக்க நீதித் துறையின் அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டும் தொடர். இதைத்தான் நான் பார்த்த தொலைக்காட்சித் தொடர்களிலேயே ஆகச் சிறந்த தொடராகச் சொல்லுவேன்.  ஜிஓடி?  அதையெல்லாம் வேறு எதோடும் ஒப்பிடுவதே தவறு.  அது வேறு ஏதோ லெவலில் நிற்கிறது.

ஆனால் A Night Of தொடரில் ஜாலி எதுவும் இல்லை.  ரொம்ப சீரியஸ் தொடர்.  அதுதான் ஆர்ட் ஃபில்ம் என்று சொன்னேனே.  அப்படி.  அதனால் இதுவரை பார்த்ததிலேயே படு ஜாலியான தொடர் எது என்று கேட்டால், Lucifer என்றே சொல்வேன்.  பொதுவாக ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் Strong language, sex, drugs, violence இந்த நான்கும் இருக்கும்.  கேம் ஆஃப் த்ரான்ஸில் வரும் பல காட்சிகளை நீலப்படங்களில் கூட பார்க்க முடியாது.  அவ்வளவு பச்சையாக, அவ்வளவு வெளிப்படையாக இருக்கும்.  ஆனால் லூசிஃபர் பதிமூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடப் பார்க்கலாம். No strong language, no sex, no drugs, no violence.  கடைசி மூன்றும் வருகிறது.  ஆனால் ரொம்ப subtle ஆக இருக்கும்.  நான் மிகவும் ரசித்துப் பார்த்த காட்சி இது:

லூசிஃபர் நரகத்தின் தலைவன்.  நரக வாழ்க்கை சலித்துப் போய் பூமிக்கு வந்தான் லூசிஃபர்.  அழகான இளைஞன்.  எந்தப் பெண் பார்த்தாலும் அவன் மீது காதல்வசப்பட்டு விடுவாள்.  வீனஸுக்கு உரியவன் ஆயிற்றே?  பார்ப்பதற்கும் படு கவர்ச்சியாக இருப்பான்.  பணமோ கொட்டுகிறது.  நியூயார்க்கில் லக்ஸ் என்று ஒரு நைட்க்ளப் வைத்திருக்கிறான்.  பியானோ வாசிப்பான்.  பிரமாதமாகப் பாடுவான்.  சாத்தான் என்பதால் குண்டு பாய்ந்தால் சாக மாட்டான்.  மனிதர்களூடே பிறந்து வாழ்ந்திராததால் அவனுக்கு எதைப் பற்றியும் மனத்தடை இருப்பதில்லை.  அவனுக்குப் பிரியமான க்ளோயி பக்கத்தில் இருக்கும் போதே தன் சட்டை பேண்ட்டையெல்லாம் அவிழ்த்துக் கொடுத்து இஸ்திரி போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்வான்.  அவனுக்கு நிர்வாணம் தவறு என்பதெல்லாம் அறவே தெரியாது. எந்தப் பெண் பார்த்தாலும் அவன் கண்களைப் பார்த்து மயங்கி விடுவார்கள்.  அவனோடு செக்ஸ் வைத்துக் கொள்ள அலைவார்கள்.  அப்படிப்பட்ட நிலையில் ஒரே ஒரு பெண் மட்டும் அவனிடம் மயங்க மாட்டாள்.  அவன் விருப்பத்துக்கும் இணங்க மாட்டாள்.  அவள் பெயர் க்ளோயி.  நியூயார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  கணவனைப் பிரிந்தவள்.  அவள் அருகில் இருக்கும்போது மட்டும் லூசிஃபர் தன் சாத்தான் தன்மையைக் கொஞ்சம் இழந்தவனாக இருக்கிறான்.  உதாரணமாக, அவனைச் சுட்டால் அவனுக்கு எதுவும் ஆகாது.  அந்த தைரியத்தில் ஒரு கொலைகாரியை விசாரித்துக் கொண்டிருக்கிறான் லூசிஃபர்.  (அவன் நியூயார்க் போலீஸ் துறைக்குக் கன்ஸல்டண்டாக இருக்கிறான்).  கொலைகாரி அவனைக் கத்தியால் குத்த வருகிறாள்.  இவனுக்குத்தான் துப்பாக்கியால் சுட்டால்கூட ஒன்றும் ஆகாதே?  அதனால் சிரித்துக்கொண்டே குத்து குத்து என்கிறான்.  அவள் குத்துகிறாள்.  இவனுக்கு ரத்தம் வருகிறது.  ஒரு மனிதனைப் போலவே சாகப் பார்க்கிறான்.  அவனுக்கே ஆச்சரியம்.    க்ளோயிதான் இங்கே இல்லையே?  அப்புறம் எப்படி ரத்தம் வருகிறது,  வலிக்கிறது.  ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டு அந்தக் கொலைகாரியினால் கழுத்து நெறிபட்டு சாகப் போகும் தறுவாய்.  நரகத்தின் அதிபதியான நான் இப்படியா சாக வேண்டும்?  ஏய் பெண்ணே, நான் இந்த விதமாகச் செத்தேன் என்பதை யாரிடமும் சொல்லி விடாதெ, ப்ளீஸ் என்று கெஞ்சுகிறான்.  அப்போது அங்கே க்ளோயி வருகிறாள்.  அவள் அந்த வீட்டின் உள்ளே செல்வதற்காக சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தபோதுதான் லூசிஃபரின் உடலிலிருந்து ரத்தம் வந்தது. 

இப்போது எனக்குப் பிடித்த அந்தக் காட்சி:  ஒருநாள் க்ளோயி வீட்டில் இரவு விருந்துக்கு லூசிஃபரை அழைக்கிறாள். அவளுடைய எக்ஸும் இருக்கிறான்.  க்ளோயியின் அம்மாவும் ஊரிலிருந்து வந்திருக்கிறாள்.  டைனிங் டேபிளில் அமர்ந்து விருந்து சாப்பிட ஆரம்பிக்கும் நிலையில் பேச்சின் இடையே க்ளோயியின் அம்மா அவளிடம் என்ன நடக்கிறது உனக்கும் உன் எக்ஸுக்கும்?  மீண்டும் சேர்ந்து விடுவீர்கள் போல் தெரிகிறதே என்கிறாள்.  அதற்கு லூசிஃபர் ”ஓ, க்ளோயி… அதனால்தான் நீ என்னோடு செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாயா?” என்று பச்சையாகப் போட்டு உடைக்கிறான்.  இதைக் கேட்டவுடன் எக்ஸ் ”எனக்கு இந்தச் சாப்பாடே வேண்டாம்” என்று கிளம்பி விடுகிறான்.  அவன் கிளம்பினாலும் மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு கொலை விஷயமாக சந்தேகக் கேஸில் இருக்கும் ஒருத்தனை அன்றைய டின்னருக்கு சமைக்கும்படி அங்கே அழைத்து வந்திருக்கிறான் லூசிஃபர்.  அதிலும் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்றவன் அவன்.  அப்படிப்பட்டவனை நம்பி எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லி மற்றவர்களும் கிளம்பி விடுகிறார்கள். 

க்ளோயி

மற்றொரு இடம்:  க்ளோயி ஒருநாள் தண்ணியைப் போட்டு விட்டு லூசிஃபரின் வீட்டுக்குப் போய் அவனை முத்தமிட முயல்கிறாள்.  இப்படியெல்லாம் செய்தால் உடனடியாக வேலையை ஆரம்பித்து விடும் லூசிஃபர் அவளைத் தடுத்து – நம் எம்ஜியார் படம் மாதிரி – படுக்கையில் படுக்க வைக்கிறான். சுவாரசியம் இதில் இல்லை.  ஆனால் மறுநாள் இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாமல் தனக்குத் தெரிந்த ஒரு ஸைக்கியாட்ரிஸ்ட் பெண்ணை அணுகுகிறான்.  செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று வருபவளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளாதது மட்டுமல்லாமல் அதைப் பற்றி சந்தோஷம் வேறு அடைகிறேனே, மனிதர்களெல்லாம் இத்தனை அசடுகளா?  என்ன உணர்வு இது? என்று கேட்கிறான்.  பதிலுக்கு அந்த ஸைக்கியாட்ரிஸ்ட் இந்த உணர்வின் பெயர் காதல் என்று சொல்வார்கள் என்கிறாள்.

ரொம்பக் குறும்பான பல இடங்கள் உண்டு.  ஆரம்ப எபிசோடில் – அவனுடைய நைட்கிளப்பில் ஒரு மேனேஜர் பெண் உண்டு.  முதல் காட்சி.  அங்கே போகிறான் லூசிஃபர்.  அவள் ஸ்டூலில் அமர்ந்திருக்கிறாள்.  அவளுடைய மார்புக்குக் கீழே தெரிவதில்லை.  பெரிய தடுப்பு மறைக்கிறது. பாரில் பார்டெண்டர்களின் அருகிலேயே உயர ஸ்டூலில் அமரும் இடம்.  அவள் உள்ளே அமர்ந்திருக்கிறாள்.  லூஸிஃபர் அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருத்தன் தரையிலிருந்து எழுந்து கொள்வான்.  லூசிஃபர் திடுக்கிட அவள் சிரித்தபடி கீழே ஒரு பொருளைப் போட்டு விட்டேன் என்கிறாள்.  இப்படி பல அஜால்குஜால் காட்சிகளும் உண்டு.  13 வயதுக்கு மேலே பார்க்கலாம் என்பதால் நேரடி பாலியல் காட்சிகள், நிர்வாணம் எதுவும் இல்லை. 

செமையாகப் போகிறது.  வசனங்களில் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.  You are a mockery of everything divine என்று ஒரு வசனம்.  ஆனால் ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் பிடித்தவர்களுக்கு லூசிஃபர் பிடிக்காது என்று நினைக்கிறேன்.    

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai