லெபனான்

சென்ற ஆண்டு ஷார்ஜா புத்தக விழா என்னைப் பெரிதும் ஏமாற்றி விட்டது.  என்னிடம் சமகால அரபி எழுத்தாளர்கள் மிக அபூர்வமான நாவல்கள் உள்ளன.  இல்லாதவை பல.  அவர்களின் படைப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக, இப்ரஹீம் நஸ்ரல்லாவின் Prairies of Fever என்ற நாவல்.  நஸ்ரல்லா ஜோர்டானில் வசிக்கிறார்.  அரபு இலக்கியத்தின் பின்நவீனத்துவ அடையாளம் நஸ்ரல்லா.  இந்த நாவலை ஜோர்டான் அரங்கில் தேடினேன்.  அரபியில் இருந்தது.  ஆங்கிலத்தில் இல்லை.  இதேபோல் நான் தேடிய எழுத்தாளர்கள் ஐம்பது பேர் இருப்பார்கள்.  எனக்கு மிகவும் பிடித்த காதா ஸம்மானையும் தேடினேன்.  லெபனான் அரங்கிலும் சிரிய அரங்கிலும்.  யாருமே கிடைக்கவில்லை.  இந்த முறை சற்று முன்னேறியிருக்கும் என்று நம்புகிறேன்.  நான் ஷார்ஜா புத்தக விழாவுக்கு 27 தேதியிலிருந்து முதல் தேதி வரை வருவேன்.  இடையில் ஒருநாள் பாலைவன இரவுக்காகப் போகலாம் என்று திட்டம்.  அன்றைய தினமும் பகலில் வருவேன். 

வாசகர் வட்ட நண்பர்களைத் தவிர வேறு யாரும் வீட்டுக்கு அழைக்காதீர்கள்.  வாசகர் வட்டத்திலேயே கூட ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய்க் கொண்டிருந்தால் ஐந்து நாட்களும் அதிலேயே முடிந்து விடும். மற்றபடி நான் தங்கியிருக்கும் ஓட்டலில் என்னைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்களை நான் சந்திக்க முடியும்.  ஆங்கிலத்தில் இதை Meet and Greet என்று சொல்வார்கள்.  அதாவது, ஒரு குழுவாக வந்து என்னைச் சந்திக்கலாம்.  அது கூட என் அறையிலேயே முடியுமா என்று தெரியவில்லை.  ஏதாவது ஒரு பார்க்கில் சந்திக்கலாம்.  ஆனால் சந்திக்க விரும்பும் ஒவ்வொருவரும் கட்டணமாக நூறு திர்ஹாம் கொடுக்க வேண்டும். இது வாசகர் வட்ட நண்பர்களுக்குப் பொருந்தாது.  அவர்கள் என் இணையதளத்துக்கு ஏற்கனவே தவறாமல் சந்தா கட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட என் பயணங்களை ஒருங்கிணைக்கிறார்கள்.  பயணச் செலவை ஏற்கிறார்கள்.  எனவே இது எதிலும் பங்கெடுக்காத வாசகர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் நூறு திர்ஹாம் கொடுக்க வேண்டும்.  நூறு என்பது குறைந்த பட்சம்.  மற்றபடி அவரவர் விருப்பம்.  இதையெல்லாம் ஏன் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறேன் என்றால், தமிழர்கள் சினிமாக்காரர்களைத்தான் கௌரவப்படுத்துகிறார்கள்.  அவர்களைத் தங்கள் ஊருக்கு (வெளிநாடு) வரவழைத்து விமானச் செலவோடு கையிலும் ஐந்து லட்சம் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இலக்கியவாதிகளான எங்களுக்கு என்ன நடக்கிறது என்றால், இப்படி ஒருசில நண்பர்கள் தங்கள் கைக்காசை செலவழித்து எழுத்தாளர்களைத் தங்கள் நாட்டுக்கு வரவழைத்தால், வேறு சில வாசகர்கள் இந்த நண்பர்களோடு ஒட்டிக் கொண்டு வந்து ஓசியில் பேசிவிட்டுப் போய் விடுகிறார்கள்.  இதில் எழுத்தாளருக்கு என்ன நஷ்டம் என்கிறீர்களா?  நேர விரயம்தான்.  ஏற்கனவே அந்த சம்பவத்தை நான் எழுதியிருந்தேன்.  ஒரு வாசகர் என் வீட்டுக்கு வந்து சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, என் புத்தகங்களில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனார்.  பிறகு தினமும் வாட்ஸப் மெஸேஜும் அனுப்பினார்.  இணைய தளத்துக்கு சந்தா கேட்டேன்.  அதோடு தொடர்பை நிறுத்திக் கொண்டார்.  அவர் அரசாங்க காண்ட்ராக்டர்.  பாலம் கட்டுபவர்.  பல கோடிகளுக்கு அதிபதி.  எனவே இனிமேல் இது போன்ற ஓசி சந்திப்புகளை நிறுத்தி விட விரும்புகிறேன்.  பச்சையாக வெளிப்படையாகப் பேசி விட வேண்டியதுதான்.  சந்திக்க விரும்புவோர் 100 திர்ஹாம் கொடுக்க வேண்டும்.  திரும்பவும் சொல்கிறேன்.  இதற்கும் வாசகர் வட்ட நண்பர்களுக்கும் சம்பந்தம் இல்லை.  இப்படியெல்லாம் பச்சையாக, வெளிப்படையாகப் பேசா விட்டால் நான் எப்படி வாழ்வது?  புத்தகம் வாங்குவது?  பயணங்கள் செய்வது?  அதனால்தான் கூச்சமில்லாமல் சொல்லி விட்டேன்.  பணத்துக்கு பயந்து கொண்டு யாரும் வரவில்லையென்றால், ரொம்பவும் நல்லது.  வாசகர் வட்ட நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்; புத்தக விழாவுக்குப் போகலாம். 

பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.  ஏற்பாடு என்றால், ஒரே ஒரு விஷயம்தான்.  படிப்பு.  இப்போதுதான் லெபனிய இலக்கியத்தின் முன்னோடியான Marun Abboud (1886–1962) இன் The Highway Robber என்ற அருமையான கதையைப் படித்து முடித்தேன். மரூன் அபூத் அடிப்படையில் ஒரு கவிஞர்.  அதே சமயம் நூற்றுக் கணக்கான இலக்கிய விமர்சனங்களும், சிறுகதைகளும் எழுதினார். ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.  மவுண்ட் லெபனான் பகுதியைச் சேர்ந்தவர்.  என் பயணத்தின் போது மவுண்ட் லெபனான் போகலாம் என்று இருக்கிறேன்.  மரூன் அபூத்தின் சிலை மவுண்ட் லெபனான் பகுதியில் அவர் பிறந்து வளர்ந்த பிப்லாஸ் (Byblos) என்ற நகரில் உள்ளது. பிப்லாஸ் என்பது கிரேக்கப் பெயர்.  இந்த ஊரை அரபியில் ஜிபெய்ல் (Jbeil) என்கிறார்கள். இந்த ஊருக்கு அவசியம் போக வேண்டும்.  மரூன் அபூத்தின் சிலையைப் பார்க்க வேண்டும்.