அக்கப்போர் (திருத்தியது)

மா சே துங் நான் ஐம்பது புத்தகத்துக்கு மேல் எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை. ஆனால் எண்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் அறுபது புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன. எண்பதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைதான் என்று அவர் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நான் எழுதியவை எதுவுமே புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. அதையும் வெளியிட்டால் இன்னும் இருபது புத்தகம் வரும்.

ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் முன்னூறு புத்தகங்கள் எழுதியிருப்பார்கள். எண்ணிக்கை விஷயம் அல்ல. ஆனால் டெலிஃபோன் டைரக்டரியிலிருந்து என் பெயரை நீக்கும் ஆட்களுக்கு மா சே துங்கே அடியெடுத்துக் கொடுக்கிறாரே என்றுதான் வருத்தம். பரவாயில்லை, கொலை மிரட்டல் கொடுக்கும் அளவுக்குப் போனவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஏன் இந்தக் கொலை மிரட்டல் விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், தமிழ் எழுத்தாளர்களிலேயே என் ஒருத்தனுக்குத்தான் தொடர்ந்து முகநூலில் கொலை மிரட்டல் என் சக எழுத்தாளர்களால் விடுக்கப்பட்டு வருகிறது. ஒருமுறை உன்னைக் கொல்ல முயன்றேன். மனுஷ் காப்பாற்றினார். அடுத்த முறை உன்னைக் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள் என்று ஒரு ஆள் எழுதினார். கவிஞர். பத்திரிகை ஆசிரியர். அவர் சொல்லும் சம்பவம் நடந்ததும் உண்மைதான். பெரும் உருவம் உள்ள அவர் என் வயிற்றின் மீது அமர்ந்து என் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தார். மனுஷ்தான் என்னைக் காப்பாற்றினார்.

இன்னொரு நாவலாசிரியரும் எனக்கு முகநூலில் கொலை மிரட்டல் விட்டார். நேரிலும் ஒரு மேடையில் அவதூறு செய்தார். எனக்கு முன்னாலேயே. அப்போதும் மனுஷ்தான் காப்பாற்றினார். இப்போது என் அருகில் இருந்தவரே “இப்படியே போனால் அதைத்தான் செய்ய வேண்டும்” என்று எழுதுகிறார். ஏன் நண்பரே, தொடர்ந்து வன்கலவி செய்யப்பட்ட ஒரு பெண்ணிடம் “ம்ம்ம்… இப்படியே நீ என்னைப் படுத்திக் கொண்டிருந்தால் உன்னை ரேப் தான் பண்ணுவேன்” என்று சொல்வீரா? விளையாட்டுக்குக் கூட? இப்படிப்பட்ட அவதூறுகளைச் சுட்டிக் காட்டினால் அவர் என்ன சாருவா, குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு வர? என்கிறார். யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் கூட என்னைத் திட்டிவிட்டுத்தான் அன்னாரைப் பாராட்ட வேண்டியிருக்கிறது.

மேலும் ஒரு விஷயம் கவனித்தேன். என்னைக் குப்பை என்று சொல்லும் சிறுவர்கள் அத்தனை பேரும் ஜெயமோகனுக்கு அடுத்த வீட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு ஜெ. காரணம் அல்ல. ஆனாலும் ஜெ.வைப் புகழ இந்தச் சிறார்களுக்கு இன்னொருத்தனை இகழ வேண்டியிருக்கிறது. போட்டுத் தள்ளு சாருவை என்று ஆரம்பிக்கிறார்கள். இவர்களை மா சே துங்குக்குப் பிடிக்கிறதாம். ஆஹா ஆஹா!

அந்த சிறுவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய எழுத்து உனக்குப் பிடிக்கவில்லை என்றால்தான் என் எழுத்து சரியான திசையில் நகர்கிறது என்று பொருள். நோ ஆனியன் நோ கார்லிக் உணவு சாப்பிடுபவனுக்கு மாட்டுக் கறி எப்படிடா பிடிக்கும் முட்டாள்? உனக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் எனக்குப் பெருமை. உன்னை மா சே துங்குக்குப் பிடிக்கிறது என்பதே அவரை எனக்கு அடையாளம் காட்டுகிறது.

என் உச்சபட்ச எழுத்தான ராஸ லீலாவே குப்பை என்கிறான் ஒரு பொடியன். அவனிடம் போய் எங்க சாருவைப் பார்த்தியா அவருடைய பெருமையைச் சொல்ல ஒரு புஸ்தகம் இல்லியே என்று அங்கலாய்க்கும் மா சே துங்கின் மண்டையை நினைத்து அலுப்பாக இருக்கிறது.