பூச்சிக்கு வந்து ரொம்ப நாள் ஆகிறது. நகுலனில் மூழ்கி விட்டேன். ஞாயிறு நெருங்குகிறது.
சென்ற சனி ஞாயிறு காலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை ஃப்ரெஞ்ச் வகுப்பு. இப்போதுதான் வாழ்க்கையிலேயே முதல் முறையாக என்னால் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொண்டு விட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. முழுக் காரணமும் காயத்ரிதான். அவளைப் போன்ற ஒரு ஆசிரியரைப் பார்க்காமல் போனேன். இதுவரை ஃப்ரெஞ்ச் ஆசிரியைகள் ரொம்பவே பயமுறுத்தி விட்டார்கள். இன்னொரு விஷயம், எனக்குமே இப்போதுதான் கொஞ்சம் தைரியமும் வந்திருக்கிறது.
வயதானால் மூளை கொஞ்சம் மழுங்கும் இல்லையா? எனக்கு எதிர்மறையாக நடக்கிறது. இப்போதுதான் மூளை சின்னப் பசங்களின் மூளை போல் வேலை செய்கிறது. சொன்னால் பச்சென்று பிடித்துக் கொள்கிறது. கற்றுக் கொண்டு விடுவேன். ஒரு ஃப்ரெஞ்ச் நாவலை சரளமாகப் படிக்க முடிந்தால் வெற்றி. உச்சரிப்பில் நான் ஃப்ரெஞ்சுக்காரர்கள் மாதிரி. உலகிலேயே உச்சரிப்புக்குக் கடும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்கள். என் விஷயம் உங்களுக்குத் தெரியும். போர்ஹே போர்ஹே என்று சொல்லி போர்ஹேஸின் பெயரைக் கொலை செய்யாதீர்கள் என்று முப்பது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அடப் போய்யா என்று புத்தகத்துக்கே போர்ஹே என்று தலைப்பு வைத்து விட்டார் எஸ்.ரா. உச்சரிப்புக் கொலை செய்பவர்களில் தலைமை இடத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள். மட்டி ஜென்மங்கள் எந்தப் பெயரையும் தங்கள் இஷ்டத்துக்குக் கொலை பண்ணுவார்கள். இன்னமும் சீரியல்களில் கேண்டி கேண்டி என்று கிண்டிக் கொண்டிருக்கிறார்கள், காந்தியின் பெயரை.
ஸ்பானிஷ் கற்றுக் கொள்வதற்கும் சுலபம், உச்சரிப்பதும் சுலபம். ஆனால் ஃப்ரெஞ்ச்சும் அரபியும்தான் உச்சரிக்கக் கஷ்டம். கற்றுக் கொள்ள அரபி ஃப்ரெஞ்சை விட கொஞ்சம் எளிது. எழுத்து பார்க்கத்தான் சித்திரம் போல் இருக்கிறதே தவிர அதன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் பெண்கள் கோலம் போடுவது போல் லகுவாக எழுதி விடலாம். எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் லத்தீன் லிபிதான் அடிப்படை என்பதால் எழுத்தை எழுதக் கற்றுக் கொள்வது பிரச்சினையே இல்லை. நினைத்துப் பாருங்கள். தமிழை ஒரு ஐரோப்பியரால் எழுதக் கற்றுக் கொள்ள முடியுமா? ஆனா போடுவதற்குள் நுரை தள்ளி விடும். அதிலும் மலையாள ஆனா படு பயங்கரம். சைஃபர் சைஃபராகப் போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். இதெல்லாம் என்ன லிபியா அல்லது வட்டமும் சுழியமுமா?
ஆனால் ஃப்ரெஞ்ச் கற்றுக் கொள்ளும்போதுதான் தமிழ் எவ்வளவு பலவீனமான ஒலி அமைப்பைக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தேன். தமிழ் ஒரு அபூர்வமான அதிசயிக்கத்தக்க மொழி. தமிழ் என்றாலே சங்க இலக்கியமும் திருக்குறளும் தொல்காப்பியமும் நாலாயிரமும் தேவாரமும்தான் ஞாபகம் வருகிறது. ஆனால் நான் இங்கே ஒலி அமைப்பில் உள்ள பலவீனங்களைப் பேசுகிறேன். சம்ஸ்கிருதம் க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்களின் ஒலிகளில் நாலு வித வித்தியாசங்களைக் காண்பிக்கிறது. ஆனால் தமிழில் ஒரே ஒரு ஒலிதான். Pablo Nerudaவை இங்கே Bablo Neruda என்றுதான் சொல்கிறார்கள். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. Padma என்பது Badma. அநேகமாக இந்தத் தவறை அ-பிராமணர்தான் அதிகம் பண்ணுகிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் ஜாதி வந்து விடுகிறது, என்ன செய்ய நான்? ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களும் கிடையாது. கடன்தான். அதனால்தான் தமிழர்களுக்கு அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ள கடினமாக இருக்கிறது. ரொம்ப சொகுசான மொழியில் வாழ்ந்து விட்டோம்.
ழ பெருமையை வைத்துக் கொண்டு அலட்டிக் கொண்டிருக்கிறோம். அரபியில் இப்படி ஏழெட்டு ஒலிகள் உள்ளன. ஃப்ரெஞ்சிலும் நாலைந்து இருப்பது போல் தெரிகிறது. இன்று ஒரு ஒருமணி நேரம் R என்ற எழுத்தின் உச்சரிப்போடு போராடினேன். காரணம், நான் ஒரு உச்சரிப்பு fanatic. சரியாக உச்சரித்தே ஆக வேண்டும். ஃப்ரெஞ்ச் கற்றுக் கொள்ள விழைவோர் அனைவரும் என்னைப் போலவேதான் போராடுகிறார்களாம். ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ம்ஹும். ஒன்றும் தேறவில்லை. என் பாரிஸ் நண்பரை அழைத்துப் பேசினேன். ஃப்ரெஞ்சுக்காரர். ஆடியோவில் ஆரம்பித்தோம். சொல்லிக் காண்பித்தார். வரவில்லை எனக்கு. சரி, நான் சொல்கிறபடி செய்யுங்கள் என்று, சில ஆலோசனைகள் நல்கினார். நாக்கை மடித்துக் கொண்டு ஆர் சொல்லுங்கள், வரும்.
நான் விஜய்காந்த் செய்வது போல் இரண்டு பல் வரிசைக்கும் இடையே நாக்கின் நடுப்பகுதியைக் கொடுத்து ஆர் என்றேன். ஆ என்றுதான் வந்தது. நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. விடியோவில் வரச் சொன்னார். விஜய்காந்த் மாதிரியே செய்து காண்பித்தேன். விழுந்து விழுந்து சிரித்தார். அப்படி மடிக்கக் கூடாதாம். ஒரு பேச்சுக்கு, ஒரு உதாரணத்துக்கு, அந்த ஒலி எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி மடிக்கச் சொன்னேனே தவிர இப்படி அல்ல என்று சொல்லி விட்டு மடித்துக் காண்பித்தார். நாக்கின் முனையை கீழ்வரிசைப் பற்களின் உள்பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டு ஆர் சொல்லச் சொன்னார். சொன்னேன். ஹா என்று வந்தது. பலமாகக் கை தட்டினார். கொஞ்சம் நெருங்கி விட்டேனாம். ஓ, இப்போதுதான் எனக்குப் புரிந்தது. காயத்ரி நன்றி சொல்லும்போதெல்லாம் மெர்ஸி என்று சொல்லாமல் மெஹ்ர்ஸி என்பாள். ஓ, ஆர் சொல்லும்போது நைஸாக ஒரு ஹாவை உள்நுழைக்க வேண்டும் போல. ஆனால் அதற்கென்று அந்த ஃப்ரெஞ்ச் ஆள் ஃப்ரான்ஸ் என்று சொல்லும்போது கூட எஃப்புக்கும் ராவுக்கும் இடையே ஒரு ஹெச்சைப் போடுகிறான். டூ மச். என்னால் முடியவில்லை. அதை விட இந்த ரூஷ் (Rouge) இருக்கிறதே, அதற்கே அரை மணி நேரம் ஆயிற்று. வெறுமனே ரூஷ் என்றால் தப்பு. ஹ்ரூஷ் என்றால்தான் சரி. ஆனால் அவன் தான் டெக்னிக் சொல்லிக் கொடுத்திருக்கிறானே, அப்படிச் சொன்னேன். ஹ்ரூஷ். தப்பு. தப்பு. நான் ஹாவை ரொம்ப அழுத்துகிறேன். காறித் துப்புவது போல் பண்ணுகிறீர்கள், ஃப்ரெஞ்ச் ரொம்பவும் மென்மையான மொழி. எனவே மென்மையாக ஹாவை உள்ளே நுழைக்க வேண்டும் என்றான்.
சரி, நீ ழ சொல் பார்க்கலாம் என்றேன். ழ. ழ. ழ. ழ. ழ. ம்ஹும், எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லி ஓடி விட்டார்.
பின்குறிப்பு: ஆர் உச்சரிக்கத் தெரியாவிட்டாலும் நான் ஒரு சிறந்த மாணாக்கன்தான் என்று தெரிந்து விட்டது. காலையில் ஒரு மணி நேரமும் நின்று கொண்டேதான் பாடம் கேட்கிறேன். உட்கார்ந்தால் தொடர்பு அறுந்து விடுகிறது. என்ன பிரச்சினை என்று கேட்க வேண்டும்.
***
வரும் ஞாயிறு காலை (இந்திய நேரம்) ஆறு மணிக்குச் சந்திக்கத் தயாராக இருங்கள்.
அது பற்றிய விபரங்களை சதீஷ்வரன் அனுப்பியிருந்தார்.
Topic: Session with Charu – நகுலன்
Time: Jun 28, 2020
06:00 AM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069…
Meeting ID: 920 522 5069
Password: 7Xed4N
வழக்கமான நடைமுறைகள் தான்:
1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்.