To You Through Me – 10

லவ்லி சாரு, 

உங்களுடைய நகுலன் உரையைக் கேட்க முடிந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கும் சதீஷ்வரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

உங்கள் வாசகர்கள், நண்பர்கள் எல்லாரும் மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்: ஒரு ஆன்மிக அனுபவம் என்றும், ஒரு trance நிலை என்றும். எனக்கும் அதே தான் தோன்றியது. 

நேற்று ஒரு விஷயத்தை கவனித்தேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் உதாரணங்கள், reference கொடுத்து பேசும்போது, உங்கள் வாசகர்கள் மின்னல் போல செயல்பட்டு அந்த reference-க்கு உரிய Wikipedia இணைப்பு அல்லது வேறு எது கிடைத்தாலும் அதை chat box-ல் பதிவிட்டனர். இது பேருதவியாக இருந்தது. உங்கள் வாசகர்களும் உங்களைப் போலவே அன்புள்ளம் கொண்டிருப்பதிலே தெரிகிறது எப்படி உங்கள் எழுத்தோடு அவர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என்று.  Love you Charu, umma Charu என்று அவர்கள் சொன்ன எதிலும் துளி கூடப் போலித்தனம் கிடையாது என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி என்று நினைக்கிறேன். 

(மிக விரைவில் சந்தா அனுப்ப முயற்சி செய்கிறேன், சாரு) 

நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் நலமாய் வாழ பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

உங்கள் மாணவன், 

– ஈஷ்வர்

அன்புள்ள ஈஷ்வர்

ஹைதராபாத் இஃப்ளூவில் சேருவதே பெரிய விஷயம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  கடுமையான உழைப்பும் கல்வியில் தீவிர ஆர்வமும் தேவைப்படும் நிறுவனம் அது.  அதிலும் நீங்கள் எனக்குப் பெரிதும் இஷ்டமான ஃப்ரெஞ்ச் துறை.  நீங்கள் அதில் முழு உழைப்பையும் செலுத்தி முன்னுக்கு வந்து பாரிஸ் ஸோர்போனில் ஆய்வு செய்ய வேண்டும், ஆசிரியப் பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.  அதுவரை பணம் அனுப்ப வேண்டாம்.  நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இல்லையா, உங்களில் எது சிறந்ததோ அதை சமூகத்துக்கு அளியுங்கள்.  எனக்கும்தான்.  எனக்கு நீங்கள் செய்ய வேண்டியது, செல்லப்பா, க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன் போன்றோரது ஒவ்வொரு கதையை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தினால் போதும்.  அதை இங்கே உள்ள ஃப்ரெஞ்ச் அறிந்தவர்கள் யாருமே செய்யவில்லை.  திரும்பத் திரும்ப ஃப்ரெஞ்சிலிருந்துதான் இங்கே இறக்குமதி செய்தார்கள்.  அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸிலும் அவர்களுடையதை இங்கே இறக்குமதி செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கின்றனர்.  அந்த மூடர்களுக்கு இங்கே தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகளில் ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதிகளைக் குறித்து மிக நீண்ட விவாதங்கள் நடந்தது பற்றியோ அவர்களின் கட்டுரைகள் பேட்டிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது பற்றியோ ஒரு எழவும் தெரியாது.  நானும் நாகார்ச்சுனனும் எம்.டி. முத்துக்குமாரசாமியும் இணைந்து கொண்டு வந்த கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான அமைப்பியல் ஆய்வும் என்ற சிறுகதைத் தொகுப்பில் மிஷல் ஃபூக்கோவின் ஆர்க்கெயாலஜி புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்து கதைகளின் இடையிடையே வெளியிட்டோம்.  அதற்காக நானும் நாகார்ச்சுனனும் விவாதித்த இரவுகள் எத்தனை எத்தனை.  இதெல்லாம் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் கவனித்திருக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?  இதற்காக நான் ஒண்டியாளாக ஒரு இயக்கமே நடத்தியிருக்கிறேன்.  ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழகத் தெருக்களில் இழுத்துக் கொண்டு திரிகிறார் சாரு என்றெல்லாம் எழுதினார்கள்.  ரொலான் பார்த்தின் எழுத்தாளன் இறந்து விட்டான் என்பதை மொழிபெயர்த்துப் போட்டதற்காக எத்தனையோ அடி வாங்கியிருக்கிறேன், சக எழுத்தாளர்களிடமிருந்து.  அடி என்றால் நிஜ அடி.  அதெல்லாம் நூறு பக்கங்கள் சொல்ல வேண்டிய கதை.  இது பற்றிய ஒரு சுண்டு விரல் அசைவு கூட இங்கே இருந்த ஃப்ரெஞ்ச் அறிந்த நிரட்சரகுட்சிகளுக்குத் தெரியாது.  அவர்களின் ஒரே இலக்கு ஷெவாலியே விருது.  எனக்கு பாரிஸ் போக வீசா கேட்டால் மறுத்து விட்டான்.  பெரிய கதை அது ஈஷ்வர்.

பணம் வேண்டாம்.  நம்முடைய முன்னோடிகளை அங்கே அறிமுகம் செய்யுங்கள்.  அதற்காக உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.  நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும்.  அப்போதுதான் நம்மைத் திரும்பிப் பார்ப்பான்.  நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பான்.  அதற்கு நாம் அவன் ‘மொழியில்’ பேச வேண்டும். 

உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

சாரு