To You Through Me – 11

அன்புள்ள சாரு,

உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து  கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 

முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் நகுலன் குறித்து உங்கள் கட்டுரையை (வரம்பு மீறிய பிரதிகள்) மறுவாசிப்பு  செய்ததால்  தெரியவந்தது. உங்கள் உரையின் நடுவில் இடையூறு செய்ய விரும்பாததால் இப்பொழுது எழுதுகிறேன்.

இரண்டாவதாக உங்களிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவு பெற நினைக்கிறேன். உங்களின் நகுலன் உரையில் சாருவை  வாசிப்பதனால் அவமானப்படுத்தப்படுவதாக வாசகர் ஒருவர் கூறியதற்கு அதிகாரம் வாய்ந்த இடத்தில்  நீங்கள் இருந்தால் உங்களை அப்படி அவமானப்படுத்த மாட்டார்கள் என்று கூறினீர்கள். அதற்கு ஒரு வாசகர் chatbox-ல் அதிகாரத்தின் உச்சியிலிருந்த அப்துல் கலாமே தனக்கு வைரமுத்துவையும் விவேக்கையும் பிடிக்கும் என்று கூறிவிட்டாரே என்று பதிவிட்டார்.

நிற்க.

உங்கள் வாசகர் ஈஸ்வர் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கையில் நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதிகாரத்தை மறுக்கும் நீங்கள் அதே அதிகாரத்தை நோக்கிச் செல்லச் சொல்வது முரணாக உள்ளது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

நன்றி 

நேஹால்

அருமை நேஹால்.  நகுலன் இறப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன் நான் சந்தித்தது சுத்தமாக மறந்து விட்டது.  அடுத்த சந்திப்பு தெளிவாக ஞாபகம் உள்ளது.  நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது.  நான் அப்போது கேரளத்தில் பிரபலமாக இருந்ததால் நான் நகுலனைச் சந்திப்பதை காணொலியாக எடுத்துத் தொலைக்காட்சியில் போடுவதற்காக என்னோடு ஒரு குழுவும் கேமராக்கள் சகிதம் வந்து விட்டது.  இது முதல் முறை நடந்ததா, இரண்டாம் முறையா என்பதும் ஞாபகம் இல்லை.  நகுலனுக்கு இந்த வெளிச்சம் எல்லாம் பிடிக்காது என்பதால் ரொம்பவே மிரண்டு போனார்.  இவ்வளவு பெரிய கூட்டமெல்லாம் வரும் என்று என்னிடம் யாரும் சொல்லவில்லையே என்றார்.  எனக்குமே முன்கூட்டியே தெரியாது நகுலன் என்றேன்.  வேண்டுமானால் அவர்களைப் படம் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்று நான் சொல்ல, வேண்டாம், பிடிக்கட்டும் என்றார்.  அது எந்தத் தொலைக்காட்சி என்று தெரியவில்லை. 

அதிகாரம் பற்றி: ராமகிருஷ்ணர் சொன்ன கதைதான் இதற்கு பதிலாக அமையும் என நினைக்கிறேன்.  இன்றைய உலகில் அதிகாரத்தைப் பயன்படுத்தாவிட்டால் உயிர் போய் விடும்.  என் அன்புக்குரிய மூத்த வாசகர் பாலசுப்ரமணியன் காலையில் இரண்டு மின்னஞ்சல் அனுப்பினார்.  பெங்களூரில் வசிக்கிறார்.  ”தமிழ்நாட்டில் இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன, ஒன்று கொரோனா, இரண்டு போலீஸ்.  ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருங்கள்” என்றது அவர் கடிதம்.  எனக்கு உடனடியாக ஜெயமோகன் ஞாபகம் வந்தது.  மோடியின் பர்ஸனல் ப்ராஞ்சில் இருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஜெயமோகனின் வலதுகரமாக விளங்குபவர்.  அவர் இப்போது வேறோர் இடத்தில் இருக்கிறார்.  ஜெயமோகனின் மிகத் தீவிர வாசகர்.  எனக்கும் நண்பர்.  ஆனால் ஜெ.தான் முதல்.  ஆனால் ஜெ. என்ன செய்வார் தெரியுமா?  அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்தாமல் அடியோ திட்டோ வாங்கிக் கொண்டு வருவார்.  இத்தனைக்கும் நல்ல கட்டுமஸ்தான நாயர் தேகம்.  இது விஷயத்தில் எனக்கு எல்லா மலையாளிகளின் மீதும் பொறாமை உண்டு.  தேகக்கட்டில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது.  நின்றால் நாலு ஆளை அடிக்கக் கூடிய பலம் உண்டு.  ஆனால் இவர் போய் ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார்.  அந்த ரவுடியை அல்லவா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்க வேண்டும்?  ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காண்பி என்றால் சாத்தான் குளம் போலீஸ்காரன் மாதிரி அடித்தே கொன்று விடுவான்.  அங்கே நாம் அதிகாரத்தைக் காண்பிக்கவே வேண்டும்.  அதே நாகர்கோவிலில் அதே கடையில் நான் இருந்திருந்தால் அவனோடு சண்டையெல்லாம் போட்டிருக்க மாட்டேன்.  அந்த நிமிடமே மாவட்டப் போலீஸ் அதிகாரிக்கு ஃபோன் போட்டு அந்த ரவுடியை இழுத்துக் கொண்டு போக வைத்திருப்பேன். 

பாலா அவர்களுக்கும் என் பதில் இதுதான்.  சென்னையில் போலீஸ் அதிகாரிகள் பலர் எனக்கு நண்பர்கள்.  தலைமை அதிகாரியோடு ஒன்றாகப் படித்தவர் எனக்கு அடாபோடா நண்பர்.  அப்படியெல்லாம் ரோட்டில் போகும்போது என் மீது யாரும் கை வைத்து விட முடியாது.  வைத்தால் தண்ணியில்லாக் காடுதான்.  மேலும், நான் போலீஸ்காரர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டவன்.  அவர்களுக்குத் தேவை மரியாதை.  அதை நான் அள்ளி அள்ளிக் கொடுக்கக் கூடியவன்.  இன்னொரு விஷயம்.  நான் கடைகளுக்கெல்லாம் போய் நாள் ஆகிறது.  ஏனென்றால், சராசரி மனிதர்களோடு பேசுவதே இல்லை.  சென்ற ஆண்டு ஒரே ஒரு நாள் பூனை உணவுக்காக பெட் ஷாப் போனேன்.  பில்லைப் பார்க்கவில்லை.  கார்டில் ஒன்றேகால் லட்ச ரூபாய் கழிந்து விட்டது.  1250க்கும் அதை அடுத்த இரண்டு பூஜ்யங்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய புள்ளி இல்லை.  1250 ரூ. 1,25,000 ரூபாய் ஆகி விட்டது.  அதை அந்தக் கடைக்காரரிடமிருந்து திரும்ப வாங்குவதற்குள் விழி பிதுங்கி விட்டது.   இங்கே லோக்கல் தாதா என் நண்பர்.  அவரிடம் சொல்லி விடலாமா என்று கூட யோசித்து விட்டேன்.  ஏனென்றால், போலீஸிடம் போனால் விஷயம் மேலும் சிக்கலாகத்தான் ஆகும். 

இந்தியாவில் அதிகாரத்தைக் காண்பிக்காவிட்டால் அடிமையாக்கி விடுவார்கள்.  அதிகாரத்தின் பக்கம் போகக் கூடாது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அடிமையாகவும் ஆகக் கூடாது என்பது.  அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதே என் முடிவு.  இதை நான் ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து பேசுகிறேன்.  7 Years in Tibet  படத்தில் என்ன சொல்கிறார் அந்தத் திபெத்தியப் பெண்?  நீங்கள் அது வேண்டும் இது வேண்டும் என்று மேலே மேலே மேலே றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறீர்கள்.  நாங்களோ இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒவ்வொன்றாக எங்களிடமிருந்து வெட்டிக் கொண்டே போகிறோம்.  இது ஒரு துறவு நிலை.  என் சொந்த வாழ்க்கையில் நான் அதிகாரத்தை மறுத்தவன்.  பணத்தை ஒதுக்கியவன்.  ஆனால் உயிராபத்து என்கிறபோது அதைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.  ஏனென்றால், எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் ஆயிற்றே?

ராமகிருஷ்ணர் சொன்ன கதையை என் உரையைக் கேட்காதவர்களுக்காக இப்போது ஒருமுறை சொல்கிறேன்.  சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு இடத்தில் ஒரு நாகமும் வசித்தது.  அதைக் கண்டு பயந்த சிறுவர்களுக்கு அங்கே விளையாட முடியாமல் போயிற்று.  அதைப் பார்த்த அவ்வழியே சென்ற ஒரு ஞானி அந்த நாகத்திடம் “ஏன் இப்படி சிறுவர்களை பயமுறுத்துகிறாய்?  யாரையும் துன்புறுத்தாதே, யாரையும் கடிக்காதே” என்று புத்தி சொன்னார்.  ஞானியே சொல்லி விட்டதால் நாகம் அதோடு தன் இயல்பை விட்டு விட்டது.  அதற்குப் பிறகு அங்கே வந்து விளையாடிய சிறுவர்கள் அந்தப் பாம்பு ஒரு வெறுமனே போவதைக் கண்டு, அதன் வாலைப் பிடித்தார்கள்.  நாகம் சீறவில்லை.  சிவனே என்று இருந்தது.  ஒரு துடுக்குச் சிறுவன் வாலைப் பிடித்து பாம்பை எடுத்து ஒரு சுழற்று சுழற்றித் தரையில் அடித்தான்.  இன்னொருவனும் அடித்தான்.  எல்லோரும் அடித்தார்கள்.  நாகம் எதுவுமே செய்யவில்லை.  ஞானி சொல்லி விட்டாரே.  குற்றுயிரும் குலையுயிருமாகத் தன் இடத்துக்குப் போய் விட்டது.  அதோடு அந்தச் சம்பவத்தையும் மறந்து விட்டது.  சில தினங்கள் கழித்து அங்கே வந்த ஞானி நாகத்தின் நிலை கண்டு அதிர்ந்தார்.  என்ன நடந்தது என்றார்.  நாகமோ ஒன்றுமில்லையே என்றது.  ஞானி விடாமல் கேட்ட பிறகு ஞாபகப்படுத்திப் பார்த்து நடந்ததைச் சொன்னது.  ஞானி சொன்னார், உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதானே சொன்னேன்?  சீற வேண்டாம் என்றா சொன்னேன்?

இந்தியா போன்ற ஒரு காட்டுமிராண்டி தேசத்தில் சீறினால்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.  இதுதான் அதிகாரத்துக்கும்.  உங்கள் கடிதத்தில் கலாம் வைரமுத்து விவேக் விஷயம் சற்றும் புரியவில்லை.  கலாம் தன் அதிகாரத்தைக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எத்தனையோ நற்காரியங்களைச் செய்திருக்கலாம்.  அதெல்லாம் அவருக்குத் தெரியாது.  ஈஷ்வர் அப்படி இருந்துவிடக் கூடாது என்பதே என் கடிதத்தின் சாரம்.  அதிகாரம் கிடைத்தால் அதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியே தீர வேண்டும். 

***  

அன்புள்ள சாரு,

நீங்கள் நகுலன் உரையை ஆரம்பிக்கும்போது, இந்த உரை மிக முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டீர்கள். உண்மைதான் சாரு. சந்திப்பில் வாசக நண்பர்கள் குறிப்பெடுத்தது மிக அதிகம். கல்லூரி காலங்களில் யாரோ ஒரு ஆசிரியரின் வகுப்பில் இருந்த உணர்வு.

நீங்கள் சொன்ன பல ஆங்கில மற்றும் தென்னமெரிக்க ஆசிரியர்கள் எனக்குப் பரிச்சயம் இல்லை . மிக முக்கியமாக நீங்கள் நகுலனின் படைப்புகளில் மறைந்திருக்கும் இந்தியத் தத்துவ அம்சங்களை அழகாக வெளிக்கொண்டுவந்தீர்கள். உதாரணமாக தி,ஜா. மற்றும் நகுலன் இருவரும் ஸ்ரீவித்யா முறையில் மிக ஈடுபாடுகொண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்தப் பிரக்ருதியை பெண்ணாக, அன்னையாக, இயற்கையாக வழிபடுவார்கள். சித்த புருஷர்கள் பாலாவாக வழிபடுவார்கள். இந்த ஆராதனைகள் ஒரு அடித்தளமாக இருக்குமே தவிர ஒரு சக்திவழிபாடாக படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியாது . மாறாக அவை தத்துவ அடுக்குகளாக வெளிப்படும்.

நீங்கள் மிக அற்புதமாக புருஷா, ப்ரக்ருதி என்ற சங்கியா தத்துவங்களை அடுக்கியதும், .Neti – Neti என்று அத்வைத சித்த்தங்களில் வரும் நியாய, தர்க்கங்களும் அருமை.  மனம் புலன்களை, உடலை, புகழ் மற்றும் இத்யாதிகளைக் கடந்து ஒரு புள்ளியில் பயணிக்கும்போது வரும் சொல்லாடல்களெல்லாம் உங்கள் உரையின் போது நினைவில் வந்தன.

சென்ற செல்லப்பா சந்திப்பிற்கு இடம் கிடைக்கவில்லை…. இந்தக்  கூட்டத்திற்கு 20 நிமிடம் முன்னரே லாகின் செய்து காத்திருந்தேன். வாங்கிக்கொள்ள முடியவில்லை சாரு. ஒரு வள்ளல் அள்ளிக்கொடுக்கும் போது என்னிடமிருந்தது மிகச் சிறிய பைதான். பழுப்பு நிறப் பக்கங்கள் போல் இதுவும் வாசகனை நகுலனிடம் அழைத்துச்செல்லும்.

என்றும் அன்புடன்

செந்தில்.

செந்திலின் கடிதத்தைப் போலவே பலரும் எழுதியிருந்தனர்.  அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து பதிவு செய்திருக்கிறார்கள்.  அப்படியானால் ஐம்பது பேரின் அரை மணி நேரம் வீணாகி இருக்கிறது.  25 மணி நேரம் வீண்.  அதனால் ஒரு யோசனை தோன்றுகிறது.  இன்னும் நூறு பேருக்கு இடம் அளிக்க 20 டாலர் ஸூமுக்கு செலுத்த வேண்டும்.  யாரேனும் இதைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் அப்படிச் செய்யலாம்.  யாரும் ஏமாந்து திரும்ப வேண்டியிருக்காது. மிகப் பலரும் ஆறு மணிக்கு வந்து இடமின்றித் திரும்பியிருக்கிறார்கள்.  அதிகாலையில் இப்படி ஒரு ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.  இரண்டு பேர் பத்துப் பத்து டாலர் ஏற்றுக் கொண்டால் இந்த ஏற்பாட்டைச் செய்யலாம்.  என்ன சொல்கிறீர்கள்?

அடுத்த சந்திப்பு ஜூலை 26-ஆம் தேதி ஞாயிறு காலை ஆறு மணிக்கு.  க.நா.சு.  செம ஜாலியாக இருக்கும்.  க.நா.சு.வின் வாழ்க்கை அத்தனை வண்ணமயமானது.  ஒரு விஷயம்.  பழுப்பு நிறப் பக்கங்களில் உள்ள விஷயங்கள் எதுவுமே இந்தத் தொடரில் திரும்ப வராது.  இதில் நான் பேசும் விஷயங்கள் வேறு.  எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai