என் தோழி வீட்டுக்குச் சென்ற போது
பார்த்தேன்
இருபத்தாறு வயதாம்
எலும்பின் மேல் போர்த்திய தோலாய்
பதின்மூன்று வயது தோற்றம்
பத்து வீடுகளில் சமைக்கிறாள்
காலை ஆறரை, ஏழரை, எட்டரை
ஒன்பது, பத்து மணி.
பிறகு மாலையில் ஐந்து வீடு
நாலாயிரம் ஒரு வீட்டுக்கு
அம்மாவுக்கு, தம்பிக்கு, தம்பி மனைவிக்கு,
அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு…
எல்லாம் இவள் கைகளில்
திருமணம்?
ஹா, கனவு கூட காண முடியாத
ஒரு உடைந்த கண்ணாடி
சிறு வீடு, இரண்டு அறைகள்
ஒரு அறையில் தம்பி குடும்பம்
மற்றொரு அறையில் அவ்வப்போது
வந்து போகும் தங்கை குடும்பம்
இவள்?
வராந்தாவில், கழிப்பறை அருகே
ஒரு துணியில் படுக்கிறாள்
இரவு முழுதும் கதவுகள் திறக்கின்றன
தூக்கம்?
ஒரு மறுக்கப்பட்ட கனவு
நான்கு மணிக்கு எழுகிறாள்
ஆறு மணிக்கு கிளம்புகிறாள்
வியர்வையும் புகையும்
பத்து சமையலறைகளில்
இவள் ஒரு பொலிவிய சுரங்கத் தொழிலாளி இல்லை
ஹோர்ஹே ஸான்ஹினேஸ் படத்தில் வரவில்லை
ஆனால் என் கனவில் வந்து நிற்கிறாள்
கைகளில் கறைகள்
கண்களில் எப்போதும் படிந்திருக்கும்
உறக்கம்
நான் கேட்கிறேன்:
“இது வாழ்க்கையா?”
யாரிடம் பதில் இருக்கிறது
சமைத்துக் கொண்டே இருக்கிறாள்
ஒரு கத்தியைப் போல
எல்லாவற்றையும் வெட்டி
என்னையும் வெட்டுகிறாள்