விமர்சகர்களுக்கு ஒரு பதில்…

கீழே வரும் நீண்ட குறிப்பை எழுதியவரின் பெயர் தெரியவில்லை.  அதை எனக்கு அனுப்பிய நண்பர் நான் இதற்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார்.  பொதுவாக இது போன்ற மட்டித்தனமான குறிப்புகளை நான் படிப்பதுகூட இல்லை.  தமிழ் சமூகம் எத்தனை ஃபிலிஸ்டைனாக இருக்கிறது என்பதற்கு இந்தக் குறிப்பு ஒரு உதாரணம். 

மிஸ்டர் சாரு நிவேதிதா!

உங்கள் பதிவைப் படித்தபின், எழுத்தாளன் என்ற பெயரில் ஒரு அகம்பாவப் பிச்சைக்காரனின் கூப்பாடுதான் கேட்கிறது. தமிழ் மக்களை “புத்தகம் படிக்காதவர்கள்” என்று இழிவாகப் பேசி, உங்கள் புத்தகம் விற்காததற்கு அவர்களைப் பழி போடுவது எவ்வளவு கேவலமான மனப்பான்மை? உங்கள் “பெட்டியோ”வை யாரும் வாங்கவில்லை என்றால், அதற்கு மக்களைக் குறை சொல்வதற்கு முன், உங்கள் எழுத்தில் என்ன குறை இருக்கிறது என்று ஒரு முறை திரும்பிப் பாருங்கள். எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை இப்படி அவமதிப்பது எந்த வகையில் நியாயம்?

சினிமாவை விமர்சித்ததால் உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்கிறீர்கள். அது உங்கள் தேர்வு, அதற்கு ஏன் மக்களை இழுத்து குறை சொல்கிறீர்கள்? “தமிழர்கள் சினிமாக்காரர்களை கடவுள் ரேஞ்ஜுக்கு வைத்திருக்கிறார்கள்” என்று கேலி செய்கிறீர்கள். மக்களுக்கு பிடித்ததை அவர்கள் கொண்டாடுவார்கள். அதை நீங்கள் விமர்சிக்கலாம், ஆனால் அவர்களை இழிவாகப் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சினிமாவுக்கு ஜால்ரா அடிக்க முடியாது என்று சொல்கிறீர்கள், ஆனால் மக்களை இப்படி கீழ்த்தரமாகப் பேசுவது உங்களுக்கு ஜால்ரா அடிப்பதை விட உயர்ந்த விஷயமா?

மொழிபெயர்ப்புக்கு இரண்டு லட்சம் கேட்கிறீர்கள். ஆனால், உங்கள் பதிவு முழுக்க முழுக்க திமிரும், மக்களை அவமதிக்கும் ஆணவமுமாக இருக்கிறது. “என்னைப் பாராட்ட வேண்டும், விமர்சிக்கக் கூடாது” என்று சொல்வது எவ்வளவு அபத்தமான, தற்பெருமை நிறைந்த பேச்சு? தியாகராஜரை உதாரணம் காட்டுகிறீர்கள், ஆனால் அவர் மக்களை இப்படி அவமானப்படுத்தவில்லை. அவர் பிச்சை எடுத்தார், ஆனால் மக்களை குறை சொல்லி, காறி உமிழவில்லை.முதலில் தியாகராஜரோடு உங்களைஒப்பிடுவதே மிக மிகத் தவறு.

ஜப்பானில் புத்தகங்கள் கோடியில் விற்கிறதாம், எழுத்தாளர்கள் தீவு வாங்குகிறார்களாம். ஆனால், நீங்கள் இங்கே மக்களை “காவி கட்டியவர்கள் தீவு வாங்குகிறார்கள்” என்று இழிவாகப் பேசுகிறீர்கள். இது எவ்வளவு ஆபாசமான பேச்சு? உங்கள் எழுத்து மக்களை ஈர்க்கவில்லை என்றால், அதற்கு மக்களைக் குறை சொல்வதற்கு முன், உங்கள் எழுத்தின் தரத்தை உயர்த்த முயற்சி செய்யுங்கள். “ஸீரோ டிகிரி” வெற்றி, “பெட்டியோ” பாராட்டு என்று நீங்களே உங்களைப் புகழ்ந்து கொள்கிறீர்கள். ஆனால், மக்கள் ஏன் உங்கள் புத்தகத்தை வாங்கவில்லை? இதை ஒரு முறை யோசித்தீர்களா? உங்கள் எழுத்து மக்களை ஈர்க்கவில்லை என்றால், அதற்கு மக்களை இழிவு செய்வது தீர்வாகுமா?

எழுத்தை விட்டு விட்டு ஆங்கிலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பித்தால் ஒரே ஆண்டில் நான் கோடீஸ்வரன் என்று சொல்லும் உங்களுக்கு சில கேள்விகள்:

இப்படி பலரிடம் கையேந்துவதற்கு பதிலாக உண்மையிலே உங்களுக்குத் திறமை இருந்தால் அப்படி செய்து பணம் சம்பாத்தித்து அதன் பின் ஒரு புத்தகம் என்ன பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாமே?

அடுத்தாக ஆங்கிலத்தில் பேசி இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று ஆணவாமாகப் பேசும் உங்களுக்கு, உங்கள் நாவலை உங்களால் மொழி பெயர்க்க முடியாதா என்ன?

உங்கள் எண்ணங்களை ஆங்கிலத்தில் பேசி வெளிப்படுத்த முடிந்த உங்களுக்கு உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தெரியாதா என்ன?

இப்போது AI யூகம். அதைப் பயன்படுத்தி மிக எளிதாக மொழி பெயர்க்கலாமே அதும் மிகவும் குறைந்த செலவில். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையா என்ன?

அமெரிக்க நண்பர்கள் உங்களை விமர்சித்தார்களாம். நல்லவேளை, அவர்களுக்கு உங்கள் ஆணவம் புரிந்திருக்கிறது. ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு, பணத்துக்காகக் கையேந்தி, மக்களை இழிவாகப் பேசுவது உங்களுக்கு அழகா? உங்கள் நண்பர் “பிச்சைக்காரன்” என்று பதில் எழுதியதை வைத்து உணர்ச்சி வசப்படுகிறீர்கள். ஆனால், இந்தப் பதிவில் மக்களை “புத்தகம் படிக்காதவர்கள்” என்று கேவலப்படுத்தியது யார்? உங்கள் எழுத்து மக்களை ஈர்க்கவில்லை என்றால், அதற்கு மக்களைக் குறை சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம்?

எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை இப்படி இழிவாகப் பேசுவது உங்களுக்கு மரியாதை தேடித் தருமா? இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறீர்கள், ஆனால் இந்த ஆணவமும், மக்களை அவமதிக்கும் தொனியும் உங்களுக்கு ஒரு பைசா கூடத் தராது. மக்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் எழுத்தை மதிக்க மக்கள் முன்வருவார்கள். இல்லையெனில், இப்படியே புலம்பி, மக்களை இழிவு செய்து, உங்கள் மதிப்பை நீங்களே குப்பையில் போடாதீர்கள். உங்கள் எழுத்துக்கு மதிப்பு இருந்தால், பணம் தானாக வரும். இப்படி கையேந்தி, மக்களைக் கேவலப்படுத்தி, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

“சாரு நிவேதிதா ஒரு எழுத்தாளர் இல்லை… ஒரு walking GoFundMe link!”

சாரு நிவேதிதா நீங்கள் நினைப்பது போல உங்கள் எழுத்து மிக உயர்ந்தது என்று நினைத்தால் எனது அடுத்த பதிவில் உங்கள் மொழி பெயர்ப்பு நாவலுக்கான நிதியை எப்படி பெறுவது என்ற சில வழிமுறைக்களை சொல்லுகிறேன். உண்மையில் நீங்கள் நினைப்பது போல உங்கள் எழுத்து உயர்ந்தது என்றால் அதற்க்கான நிதி உதவி நிச்சயம் கிடைக்கும்.

***

மேற்கண்ட குறிப்பை முன்வைத்து உங்களிடம் மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தக் குறிப்பை எழுதியவருக்கு நான் சொல்லும் எதுவுமே புரியப் போவதில்லை என்பது மிகவும் நிச்சயம்.  இருந்தாலும் உங்களிடம் நான் இது குறித்து மேலும் பேசலாம்.   

ஜப்பானின் மக்கள் தொகை பன்னிரண்டரை கோடி.  அங்கே ஒவ்வொரு எழுத்தாளனின் புத்தகமும் ஐம்பது லட்சத்திலிருந்து இரண்டு கோடி பிரதிகள் விற்கின்றன.  அதன் காரணமாக, அங்கே வசிக்கும் ஜப்பானிய எழுத்தாளர்கள் வாசகர்களிடம் பிச்சை எடுக்காமல் தமிழ் சினிமாவாசிகளைப் போல் வாழ்கிறார்கள்.  தென்னமெரிக்காவிலும் அப்படித்தான்.  அங்கே எழுத்தாளர்கள் தனித் தீவையே வாங்கி அங்கே தனியாக வாழ்ந்தபடி எழுதுகிறார்கள். 

இந்தக் குறிப்பை எழுதிய நபர் என் எழுத்தில் என்ன குறை என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.  எழுத்து நன்றாக இருந்தால் நிறைய பேர் வாங்கி விடுவார்களாம்.  அடடா, எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்தாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே பிச்சைதான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சங்கப் புலவர்களின் பாடல்களே சாட்சி.  அவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடியே பரிசு பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.  அதிலும் ஒரு பாடலில் ஔவையார் ஒரு அரசனிடம் “பரிசு” கேட்கப் போய், அந்த அரசன் ஔவையாரின் மதிப்புத் தெரியாமல் விரட்டி விட, ஔவை அந்த அரண்மனையின் வாயிற்காப்போனிடம் அந்த அரசனின் கஞ்சத்தனம் பற்றிப் பாடி விட்டுச் செல்கிறார். 

தமிழர்களின் ஃபிலிஸ்டைன் மனோபாவம் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் அனைவரும் இளையபாரதி தொகுத்த ”கண்மணி கமலாவுக்கு…” என்ற நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.  சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கும்.  காச நோய் வந்த புதுமைப்பித்தனுக்கு மருந்தும் சத்தான உணவு வகைகளும் வாங்கக் காசு இல்லாமலேயே செத்திருக்கிறான். 

நோய் முற்றிய நிலையில் ஒருநாள் தன் நண்பரை விட்டு தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் புதுமைப்பித்தன்.  வாழ்நாள் பூராவும் எழுதிய அவரால் அன்றைய தினம் பேனாவைப் பிடித்து எழுதக் கூட முடியாத நிலை.  அத்தனை தளர்ச்சி.  “நான் தமிழுக்காக உழைத்தவன்.  எனக்கு இப்போது மருந்து வாங்கக் காசு இல்லை.  எனக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை.”  இதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.  இதுதான் புதுமைப்பித்தனின் வேண்டுகோளின் சாரம்.  புதுமைப்பித்தன் சொல்லச் சொல்ல நண்பர் எழுதுகிறார்.  ஆனால் சினிமாவில் நடப்பது போலவே நடந்திருக்கிறது.  இந்த வேண்டுகோளை எழுதிய மறுநாள் புதுமைப்பித்தன் இறந்து விட்டார். 

அவரைக் கொன்றது தமிழ்ச் சமூகம்தான்.  புதுமைப்பித்தன் நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன்.  அவர் எழுத்துக்கே அதுதான் கதி என்றால் நான் ஏன் இந்த சமூகத்தை விமர்சிக்கக் கூடாது?  எட்டு கோடி பேர் மக்கள் தொகை என்றால், வெறும் இருநூறு பேர்தான் என் நூலை வாங்குகிறார்கள் என்றால் அது யார் தவறு?  என் எழுத்தில் குறை இருந்தால் ஔரங்ஸேப் நாவலுக்கு அகில இந்திய அளவில் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்து க்ராஸ்வேர்ட் விருது தருவார்களா? 

இத்தனை மட்டித்தனமாக விவாதித்தால் நாம் என்னவென்று பேசுவது? 

கண்மணி கமலாவுக்கு நூலில் திரும்பத் திரும்ப புதுமைப்பித்தன் தன் வறுமை பற்றியே கமலாவிடம் சொல்கிறார்.  மனைவி கமலாவுக்கு அவர் பதில் அனுப்பத் தாமதமாகிறது. 

காரணம், கமலாவினால் புதுமைப்பித்தனுக்கு பதில் எழுத முடியாது.  தபால் கவர் வாங்க கமலாவிடம் காசு இல்லை.  அதனால் புதுமைப்பித்தன் தான் கவர் வாங்கி, அதில் ஸ்டாம்ப் ஒட்டி தன் விலாசம் எழுதி அதை ஒரு கவரில் வைத்து, தன் கடிதத்தோடு அனுப்புவது வழக்கம்.  ஆனால் அப்படி ஸ்டாம்ப் வாங்குவதற்கு புதுமைப்பித்தனிடம் காசு இல்லை.  அதனால்தான் கண்ணே, பதில் எழுதத் தாமதம், என்னைக் கோபிக்காதே என்று எழுதுகிறார் புதுமைப்பித்தன். 

தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முழுவதுமே இப்படித்தான் இருந்தது, இருக்கிறது.  சினிமாவுக்குப் போய் கை கட்டி நின்றால் மட்டுமே காசு கிடைக்கும்.  என்னால் கை கட்ட முடியாது.  இயக்குனர்தான் என் முன்னே கை கட்ட வேண்டும். 

கோபி கிருஷ்ணனின் கதையை நான் நூறு முறை எழுதி விட்டேன்.  எத்தனை முறை திரும்பத் திரும்ப எழுதுவது?  மாதம் ஐநூறு கிடைத்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்வேன் என்று என்னிடம் சொன்னார்.  அவர் கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பத்திரிகை அலுவலமாக ஏறி இறங்கினேன்.  இந்தியா டுடே வாஸந்தி மட்டுமே ஏற்றார்.  மற்ற பத்திரிகைகள் நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தபோது வாஸந்தி 1500 ரூ. கொடுத்தார்.  அந்தப் பணம் கிடைத்தபோது கோபி கிருஷ்ணன் இறந்திருந்தார். 

ஏஐ செய்யும் மொழிபெயர்ப்புகளை ஷிட் என்று மட்டுமே சொல்ல முடியும்.  அதை எடுத்துக்கொண்டு போனால் எவனுமே மதிக்க மாட்டான்.  இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் எழுதி விட்டால் அது இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகி விடாது.  சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. நாவலுக்கும், புளியமரத்தின் கதைக்கும் நடந்த துர்மரணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே?  ஜேஜேவை மொழிபெயர்த்தவர் ஒரு பேராசிரியர்.  ஆங்கில விமர்சகர்கள் அதைக் கிழித்துத் தோரணம் கட்டி விட்டார்கள்.  புளியமரத்தை மொழிபெயர்த்தவர் நாற்பது ஆண்டுகள் சென்னையின் ஒரு பிரபலமான கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவர்.  அவர் மொழிபெயர்ப்பில் ஒரு பிழை இல்லை.  ஆனால் அது பத்தாம் கிளாஸ் மாணவன் எழுதும் வியாசம் போல் இருந்தது.  கிழித்துக் குப்பையிலே போட்டு விட்டேன்.  இலக்கியம் வேறு.  ஆங்கிலத்தை இலக்கணப் பிழையின்றி எழுதுவது வேறு. 

பலரும் இன்று எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிகிறது என நினைக்கிறார்கள்.  அந்த ஆங்கிலம் நம் விளிம்புநிலை மக்கள் பேசும் தமிழைப் போன்றது.  ப. சிங்காரம், அசோகமித்திரன், தி. ஜானகிராமன், லா.ச.ரா., நகுலன், எம்.வி. வெங்கட்ராம் எழுதிய தமிழ் எங்கே?  நம் தெருவோர மக்களும் பள்ளி மாணவர்களும் எழுதும் தமிழ் எங்கே?  அதுதான் ஏ.ஐ. ஆங்கிலத்துக்கும் இலக்கிய ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசம். 

நேற்று அவந்திகா ஏசிடிக்கு ஜிபே மூலம் பணம் செலுத்தி விடு என்றாள். ஆயிரத்து எண்ணூறோ என்னமோ.  வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று பதில் வந்தது.  அதிர்ந்து போனேன்.  காரணம், இருந்த பணத்தையெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்து விட்டேன்.  இன்னும் ஒன்றரை லட்சம் கொடுக்க வேண்டும். 

இதுவரை மொழிபெயர்ப்புக்காக இருபது லட்சத்துக்கு மேல் செலவு செய்திருப்பேன்.  இதில் தோற்றது அதிகம்.  வென்றது கொஞ்சம்.  ஒரு ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு.  மொழிபெயர்த்தவர் ஃப்ரான்ஸில் வசிப்பவர்.  ஸீரோ டிகிரி மொழிபெயர்ப்பு.  பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கும்.  ஒரு லட்சம் கொடுத்தேன்.  மொழிபெயர்ப்பு குப்பையாக இருந்தது.  தூக்கிக் கடாசி விட்டேன்.  முதல் அத்தியாயத்திலேயே பார்த்திருந்தால் ஒரு லட்சம் நஷ்டமாகியிருக்காது.  அதைப் பார்த்துக்கொடுக்க அப்போது ஆள் இல்லை.  பதிப்பகம் அதைத் தூக்கிக் கடாசி விட்டது.

ஔரங்ஸேப் மொழிபெயர்ப்புக்கு மூன்று லட்சம்.  அது இந்திய அளவில் விருது வென்றது.   ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அடித்துச் சொல்கிறேன், பெட்டியோ மொழிபெயர்ப்பு நிச்சயமாக இந்திய அளவில் ஒரு அலையை உண்டாக்கும்.  இன்னும் கூட என் எழுத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல என்னால் இயலவில்லை.  லிடரரி ஏஜெண்டுகள் கிடைப்பதில்லை.  சர்வதேசப் பதிப்பகங்களை அணுக முடியவில்லை. 

வளன் ஒரு விஷயம் சொன்னான், அவனுடைய நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றிச் சொல்லும்போது சாரு நூறு நூல்கள் எழுதியிருக்கிறார் என்ற தகவலைச் சொல்லியிருக்கிறான்.  அப்படியானால் அவர் மில்லியனராக இருக்க வேண்டுமே என்றாராம் அந்த அமெரிக்கர்.  ஏனென்றால், உலகம் முழுவதும் இரண்டு புத்தகம் எழுதினாலே ஒரு எழுத்தாளர் செல்வந்தராகி விடுவார்.  இங்கே இருநூறு பிரதி விற்கிறது.  நான் பிச்சைதான் எடுக்க வேண்டும்.  நான் திருடவில்லை, சினிமாக்காரன் முன்னே இளிக்கவில்லை என்பதில் பெருமை அடைகிறேன்.  என் எழுத்தை உங்கள் முன் வைத்துப் பணம் கேட்பதில் எனக்கு எந்த இழுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஏனென்றால், அது என் ஆசான் தியாகராஜன் செய்த செயல். 

இன்னொரு விஷயம்.  நான் மக்களை மதிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார் அன்பர்.  இலக்கியம் அறியாதவன் மிருகத்துக்கு சமானம் என்று எழுதுகிறார் பர்த்ருஹரி.  மிருகம் உயர்ந்த நிலையில் இருப்பது.  இலக்கியம் அறியாதவர் நடமாடும் பிரேதம்.  அவ்வளவுதான்.  ஒரு பத்திரிகையாளர் கேட்டார், கேரளத்தில் மக்கள் போராட்டங்களில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களே, இங்கே தமிழ்நாட்டில் ஏன் கலந்து கொள்வதில்லை?

நான் சொன்னேன், இங்கே நான் மக்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறேன்.

அதாவது, சினிமா நடிகர்களைக் கடவுளாகக் கொண்டாடும் ஃபிலிஸ்டன் சமூகத்தை எதிர்த்துப் போராடுகிறேன் என்று பொருள். 

இன்னொரு விஷயமும் எழுதியிருக்கிறேன்.  நண்பர் அபிலாஷ் சந்திரன் பெங்களூரில் ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர்.  வகுப்பில் கன்னடியர், தெலுங்கர், மலையாளி, தமிழ் என்று பல பிரிவினர்.  “உங்கள் தாய் மொழியில் உள்ள உங்களுக்குப் பிடித்த ஒரு கதையை எடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயருங்கள்” என்கிறார் அபிலாஷ்.  அவரவர் அவரவரின் தாய்மொழியில் அவருக்குப் பிடித்த எழுத்தாளரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது, தமிழ் மாணர்கள் மட்டும் கெக்கெ பிக்கே என்று முழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.  காரணம், அவர்களுக்கு எந்தத் தமிழ் எழுத்தாளரையும் தெரிந்திருக்கவில்லை.  சுஜாதாவின் பெயரைக் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. 

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எட்டு பேர் என்பதையும், ஞானக்கூத்தனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பதினாறு என்பதையும், அசோகமித்திரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இருபத்தைந்து பேர் என்பதையும் எனக்குக் குறிப்பு எழுதிய அன்பருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எழுத்தாளர்களை மதிக்காத சமூகம் தமிழ்ச் சமூகம். 

என் நாவல் பெட்டியோவின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உதவ முடிந்தால் உதவுங்கள். 

பணம் அனுப்புவதற்கு விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai