
இரண்டு விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. ஜனவரி புத்தக விழாவுக்கு முன்பு இப்படி ஒரு நாவல் எழுதுவேன் என்று கனவு கூட கண்டதில்லை. 120 பக்கம் கொண்ட இந்த நாவலை ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். நான் தொடர்ந்து தட்டச்சு செய்துகொண்டே இருந்ததைப் பார்த்த அவந்திகா “எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது” என்றாள். அந்த அளவுக்கு இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தேன்.
இதை எழுதக் காரணம் மேலே கேட்கப்பட்ட கேள்வி. இன்னொரு காரணம் கீழே காணும் புகைப்படம். புகைப்படத்தில் உள்ள பெண்மணியின் பெயர் அவந்திகா. வயது அறுபத்தைந்து. என் வயது எழுபத்து மூன்று. முப்பது ஆண்டுகளாகிறது தாம்பத்ய வாழ்க்கை. புகைப்படத்தில் காணப்படுவது போன்ற தருணங்கள் மேற்கத்திய சமூகத்தில் வெகு சாதாரணம். இந்தியாவிலும் மேட்டுக்குடியில் காணக்கூடியதுதான். ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சாதாரண மத்தியதர வர்க்கத்தில் – அதுவும் புத்தக விழா போன்ற ஒரு பொது நிகழ்வில், பெரும் கூட்டத்துக்கு நடுவில் இப்படி ஒரு தருணம், இப்படி ஒரு புகைப்படம் சாதாரணமாக நிகழக் கூடியது அல்ல. இந்தப் புகைப்படத்தின் கதைதான் “ஜோடிப்புறாவை எங்கே காணோம்?”

இந்த நாவல் பற்றி செல்வகுமார் எழுதியுள்ள எதிர்வினையைக் கீழே தருகிறேன்:
அன்புள்ள சாரு,
“எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்” எப்படி ஒரு வாசகனை அவனுடைய கம்பர்ட் ஸோனுக்கு வெளியில் தள்ளியதோ, “ஜோடிப்புறாவை எங்கே காணோம்” அதையே இன்னும் ஒழுங்காக, இன்னும் கச்சிதமாக, இன்னும் திட்டமிட்ட
தீவிரத்துடன் செய்கிறது. இது ஒரு நாவல் மட்டும் அல்ல; வாசகரின் ‘பழைய வாசிப்பு’ பழக்கங்களை உடைக்கும் பிரதி.
முன்னுரையில் நீங்கள் முதலில் வாசகனின் குறைபாட்டை தெளிவாகச் சுட்டிக்காட்டி விடுகிறீர்கள். கதையை நிஜ வாழ்வுடன் இணைத்து, சக மனிதர்களை அடையாளம் காண முயல்வது — மிக சராசரி அல்லது மூட வாசகனின் செயல்பாடு என்கிறீர்கள்.
ஒரு பிரதிக்குள் நுழைகிறபோதே வாசகனுடன் ஒரு விளையாட்டை இதன் மூலம் தொடங்கிவிடுகிறீர்கள். கதையை நிஜ வாழ்க்கையுடன் இணைத்து மனிதர்களை அடையாளம் காண
முயல்வது தவறு என்று முன்னுரையிலேயே எச்சரிக்கிறீர்கள். அதனால் வாசகர் தனது வழக்கமான வாசிப்புப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது. ‘நிஜம்’ மற்றும் ‘புனைவு’ என்ற இரண்டிலும் முழுமையாக நின்று கொள்ள முடியாத இடத்தில் வாசகர் சிக்கிக்கொள்கிறார்.
கதையில் நிஜத்தைத் தேடுபவன், கிசுகிசு வாசிப்பை விரும்புகிறவன், அது சரியல்ல, இதை முழுக் கற்பனை என்றெண்ணி வாசிப்பதும் போதாது. இது வாசகனுக்குப் பழக்கமான கம்ஃபர்ட் ஸோனை அழித்துவிடுகிறது. என் உள்ளுணர்வுகளையே சந்தேகிக்கத் தொடங்குகிறேன். “நான் யாரைத் தேடுகிறேன்? யாரை அடையாளம் காண முயல்கிறேன்?” என்று.
நீங்கள் சில கதாபாத்திரங்களை முன்வைக்கிறீர்கள். அவற்றை ‘நிஜ’ மனிதர்களின் நிழல்களாகப் படிக்காமல் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள். அதாவது — நினைவுகளை அழிக்கச் சொல்லுகிறீர்கள். உணர்வுகளை ஒதுக்கச் சொல்லுகிறீர்கள். பிரதியை மட்டும் வாசிக்கச் சொல்லுகிறீர்கள்.
ஒருவேளை, பிரதியிலிருந்தும் ‘நிஜம்’ ஒழிக்கப்பட முடியாதபோது, மொத்த நாவலையும் வெறும் புனைவாக எடுத்துக்கொள்ளலாம் என்ற குறுக்குவழியை யோசிக்கிறேன். ஆனால், பலவித விவாதங்களால், கதை மாந்தர்களை உண்மையை உணர்ச்சியுடன்
பேச விடுகிறீர்கள். சரி, அதை முழுக்க ‘உண்மை’ என்று படித்தால், அது கிசுகிசுவாகச் சுருங்கிவிடும். இந்த இரு துருவங்களுக்கிடையில் பெண்டுலத்தை சீராக ஆட வைத்திருப்பதே உங்கள் யுக்தி.
அங்கேதான் பிரதியில் உள்ள கலைத் தன்மை வேலை செய்கிறது. கிசுகிசுவை விரும்புபவன், தவறான வாசகன். அவன் ட்ராப்பில் தப்பிக்க இயலாமல், Inception திரைப்படத்தில் கனவிலேயே தங்கி விட விரும்பும் மனிதன் போல, தன் மாயையைத்
தேர்ந்தெடுப்பவனாகிறான்.
நாவலின் மொழியை, சம்பவங்களை, நிஜங்கள்-பொய்களை, இவற்றை கருவியாக மட்டும் பார்ப்பவன் சரியான வாசகன். கதாபாத்திரங்களின் சூழல்களை, அனுபவங்களை ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ செய்துகொண்டிராமல், அவற்றைத் தாண்டி நீங்கள் உருவாக்கும் கலையை அடையாளம் கண்டுகொள்வது விளையாட்டின் வெற்றி எனக் கொள்ளலாம்.
பட்டீஸ்வரம் சிவன் கோயில் பிரகாரத்தில் பைரவர் சன்னதி உண்டு. அவருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடும் பழக்கம் இருக்கிறது.
வெற்றிலை — யோனியின் குறியீடு எனத் தோன்றும்.
நூற்றுக்கணக்கான யோனிகளை மாலையாக அணிந்த கடவுள். அந்த பைரவரும் எளிய அலங்காரத்துடன் ஆனால், நாதஸ்வரம் தெரிய காட்சிக் கொடுப்பார். இந்த நாவலில் அப்படி ஒரு பைரவ தரிசனம் கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் அப்படி ஒரு நிர்வாணம் தெரிகிறது, உடல்களின் நிர்வாணம் மட்டும்
அல்ல. நிஜங்களின் நிர்வாணம். நீதி, ஒழுக்கம், சமூக ஒப்பந்தம், இவையெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் ஜ்வாலையின் வெளிச்சத்தில் நாவல் நின்றிருக்கிறது. அந்த
வெளிச்சம் தமிழுக்குப் புதிதானது என்று நினைக்கிறேன்.
செல்வகுமார் கணேசன்
நாவலின் பிடிஎஃப் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விலை எதுவும் இல்லை. நீங்கள் தரும் நன்கொடைதான்.
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai