பிறந்த நாள் வாழ்த்தும் இன்ன பிறவும்…

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கோதான் சமகாலத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன். அவர்களும் பெரும்பாலும் ஜெயமோகனோடு நிறுத்திக் கொள்வார்கள். என் பக்கம் திரும்புவதே இல்லை. என் எழுத்து அவர்களுக்கு ஒவ்வாது. ஏன் என்றும் எனக்குத் தெரியும்.

இந்த நிலையில் எனக்குத் தெரிந்த, என்னை வாசிக்கும் நண்பர்கள் ஒரு ஐம்பது பேர் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஜோடிப்புறா நாவலின் பிடிஎஃப் பற்றி எழுதியிருந்தேன். அதில் இரண்டு பேர் தலா ஐயாயிரம் அனுப்பி வாங்கிக் கொண்டார்கள். மற்றவர்கள் முழு மௌனம். இதற்கிடையில் என்னை ஒரு தமிழ் அமைப்பு மூலமாக அழைக்க ஒரு நண்பர் முயற்சித்தார். முடியவில்லை. தமிழ் அமைப்புகளுக்கெல்லாம் பட்டிமன்றம் ராஜாவையும் மிமிக்ரி தாமுவையும்தான் தெரியும். அவர்களைத்தான் வருடா வருடம் அழைப்பார்கள். ராஜா அங்கே போய் செய்த அக்குறும்பு காரணமாக ஊர் நாறுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் கூட்டத்துக்கு பட்டிமன்றம் ராஜாதான் லாயக்கு. எழுத்தாளர்களாகிய நாங்கள் அல்ல.

தமிழ்நாட்டிலிருந்து மட்டும்தான் பணம் அனுப்பி வாங்குகிறார்கள். எல்லோரும் மத்தியதர வர்க்கம். என் தோழி ஒருவர் 1500 ரூ. அனுப்பி பிடிஎஃப் ஐ வாங்கி விட்டு சம்பளம் வாங்கியதும் இன்னும் அனுப்புகிறேன் என்று தெரிவித்தார். வேண்டாம், இது போதும் என மறுத்து விட்டேன். ஆனால் அமெரிக்கத் தமிழ் ஏழைபாழைகள் நம்மிடமே திருவோடு ஏந்துவார்கள் போலிருக்கிறது. ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது அவர்களின் நிலைமை.

இன்னொரு விஷயம். எனக்கு நூறு பேர் வாட்ஸப்பில் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அந்த நூறு பேரும் என் இணையதளத்தை வாசிக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஜோடிப்புறா பிடிஎஃப் பற்றி அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை இல்லை. அடடா, எனக்காகப் பிறந்தநாள் வாழ்த்தெல்லாம் அனுப்பினார்களே என்று ஜோடிப்புறா பிடிஎஃப் பற்றித் தகவல் அனுப்பினேன். பிடிஎஃப் அனுப்பவா என்று கேட்டேன். அது குறித்து நான் எழுதியிருந்தவற்றையும் அனுப்பினேன். புத்தகமாக விற்றால் நாலாயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கிறது என்ற விஷயத்தை விளக்கினேன்.

எல்லோரும் மௌனம். சிலருக்கு அனுப்பியும் வைத்தேன். கிடைத்தது நன்றி என்ற வார்த்தை. சிலர் இதயக்குறி அனுப்பியிருந்தார்கள். என் மொழிபெயர்ப்பாளருக்கு நான் பணம் அனுப்பாமல் இதயக்குறியை அனுப்பினால் துடைப்பக்கட்டையால் அடிப்பாள்.

பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அந்த நூறு பேரையும் என் ஃபோனிலிருந்து நீக்கி விட்டேன். தடை செய்து விட்டேன். இனி அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முடியாது. இனிமேல் அவர்களின் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம். ஒரு ஐநூறு ரூபாய் கூட செலவு செய்ய மனமில்லாதவர்களோடு நான் ஏன் தொடர்பில் இருக்க வேண்டும்? நானே பிச்சைக்காரன். அவர்களோ என்னை விட மோசமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பதிப்பாளருக்கும் அனுப்பினேன். (மனுஷ்யபுத்திரன் அல்ல, அவர் என் குடும்ப உறுப்பினர் போல) இந்தப் பதிப்பாளர் ஒருமுறை சொன்னார், “நீங்கள் வேறு பதிப்பகத்தில் புத்தகம் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் போதும், எனக்கு நீங்கள் ஃபோன் கூட பண்ண வேண்டாம், நான் உங்கள் வீட்டில் இருப்பேன்” என்று சொன்னவர். அப்படிச் சொன்னவர் இப்போது பிடிஎஃப் க்குப் பணமே அனுப்பாமல் மௌனமாக இருக்கிறார். நானா அனுப்பச் சொல்லிக் கேட்டேன் என்று அவர் என்னைக் கேட்கலாம். இல்லைதான். ஆனால் அனுப்பவா என்று கேட்ட போது “என்னால் பணம் தர முடியாது” என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால், ஏன் பிடிஎஃப் இல் கொடுக்கிறேன் என்பதை விளக்கி விட்டுத்தான் கேட்டேன்.

இவர்கள் அனைவரையும் நான் என் ஃபோனிலிருந்து தடை செய்கிறேன்.