Dance is the Hidden Language of the Soul…


1.

மார்த்தா க்ரஹாம் நவீன நடனத்தின் தாய் என அழைக்கப்பட்டவர்.  பிறப்பு 1894.  இறப்பு: 1991.  தொண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவர்.  எழுபது ஆண்டுகளுக்கு மேல் நடனமாடி, 181 புதிய நடனங்களை (Choreography)  உருவாக்கியவர். Dancer of the Century எனக் கருதப்பட்டவர்.

நடனத்தில் அவர்தான் என் மானசீக குரு.  நடனம் என்றால் என்ன என்று கற்பித்தவர்.  அப்படி என்ன அவர் எனக்குக் கற்பித்தார்?

Nobody cares if you can’t dance well. Just get up and dance. 

இதை அடியொற்றித்தான் நான் செல்லும் பப்களில் அதன் சுற்றுச் சூழல் தோதாக இருந்து, அங்கே ஒரு நடனத்தளமும் இருந்தால்  எழுந்து சென்று ஆடுகிறேன்.  அநேகமாக நடனத்தளத்தில் நான் மட்டுமே ஆடுபவனாக இருக்கிறேன்.  பிறகு சில இளைஞர்கள் சேர்ந்து கொள்கிறார்கள்.  இது பெங்களூரில்.  கோவா என்றால் அது வேறு கணக்கு.  டிசம்பர் ஜனவரியில் கோவா தாய்லாந்தைப் போல.  ஆனால் என்ன இருந்தாலும் ஜப்பானை அடித்துக் கொள்ள முடியாது.  

பெங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த போது என்னோடு ஆடிய இளைஞன் என் வயதைக் கேட்டான்.  சொன்னேன்.  உடனே கீழே இறங்கிப் போய் என் நண்பர்களிடம் ஏதோ பேசினான்.  பிறகு தெரிந்து கொண்டேன், நான் சொன்ன வயது உண்மைதானா என்று பல முறை கேட்டானாம்.

ஆனால் என் தோழி ஒருவர் நான் எப்போது என் நடனத்தை ரீல்ஸில் ஏற்றினாலும் “நீங்கள் ஆடுவது சாணி மிதிப்பது போல் இருக்கிறது, உடனடியாக எடுத்து விடுங்கள்” என்பார்.  

எனக்கு இது மிகவும் ஆச்சரியமான விஷயம்.  நான் யாரையும் என் வாழ்வில் பரிகாசம் செய்ததில்லை.  ஒரு முறை அன்பின் மிகுதியால் ஒரு நண்பரிடம் அவரது ஆங்கில உச்சரிப்பை சரி செய்ய முயன்றேன்.  அதுகூட உச்சரிப்பு பற்றிய என் ’அதீத ஈடுபாடு’ காரணமாகத்தான்.  அது அவரைப் பரிகாசம் செய்வது போல் இருப்பதாகக் கூறியதால் எப்படியோ ஒழியுங்கள் என்று விட்டு விட்டேன்.  மற்றபடி ஒருவரது உடல் அமைப்பையோ, பேச்சு முறையையோ, மூக்கையோ, பிருஷ்டத்தையோ, முலையையோ, ஆடை அலங்காரத்தையோ, சமையலையோ நான் ஒருபோதும் பரிகசித்தது இல்லை.  என் சமையல் எப்படி இருக்கிறது என்று கேட்டால், நளன் கூட இப்படி சமைக்க முடியாது என்று பொய் சொல்லி விடுவேன்.  ஆனால் எல்லோரிடமும் அப்படி இல்லை.  யாரால் விமர்சனத்தைத் தாங்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறதோ அவர்களிடம் அப்படிச் சொல்லி விடுவது என் வழக்கம்.  யாரையுமே எதற்காகவும் நோகடிக்கக் கூடாது என்ற என் கருணை மனோபாவமே காரணம்.  ஆனால் ஒருவர் உண்மையான அக்கறையோடு என் கருத்தைக் கேட்டால் உண்மை பேசுவேன்.

ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் என்னிடம் ஏன் எந்தத் தயக்கமும், பயமும் இல்லாமல் பல ஆண்டுகளாக என்னைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார் என்று எனக்கு இப்போது வரை புரியவே இல்லை.  அந்தப் பெண்ணோ எந்த விமர்சனத்தையும் தாங்க முடியாதவர்.  விமர்சனம் செய்தாலே தற்கொலை உணர்வு மேலிடுகிறது என்ற அளவுக்கு மன உளைச்சல் அடைபவர்.  அப்படிப்பட்ட ஒருவர் என்னைப் போன்ற ஒரு பயங்கரவாதியைத் தொடர்ந்து பரிகசித்துக்கொண்டிருக்கலாமா?  அதிலும் நினைவு தெரிந்த நாளிலிருந்தே சக மாணவர்களால் பரிகசிக்கப்பட்டு வளர்ந்த என்னைப் போன்ற ஒருவனை?  பள்ளி நாட்களில் என் பட்டப் பெயரே சுத்தாட்டி என்பதுதான்.  பெண்ணைப் போல் இருந்ததால் பல பையன்கள் என்னைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுப் பேசுவார்கள்.  மார்பைக் கசக்குவார்கள்.  இன்ன பிற.  

இப்படி வளர்ந்து வந்திருக்கும் என்னைப் பார்த்து “நீங்கள் ஆடுவது சாணி மிதிப்பது போல் இருக்கிறது”, “உங்கள் ட்ரெஸ்ஸைப் பார்த்து ’யார் இந்த லூசு?’ என்று கோதண்டராமனின் அப்பா கேட்டார் என்றெல்ல்லாம் என்னைப் பரிகசித்துக்கொண்டிருந்தால் நான் சும்மா இருப்பேனா?  நானோ எனக்கு நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எழுதி வருபவன். இதில் நான் கொஞ்சமும் தயவு தாட்சணயமே பார்க்காதவன் என்று உலகுக்கே தெரியும்.   அப்படியிருக்கும்போது நீங்கள் என்னிடம் கவனமாக அல்லவா இருக்க வேண்டும்? பிசாசைச் சீண்டி விட்டு விட்டு பிசாசு அலறினால் மூக்கைச் சிந்துவது ஏன்?

கோவா சென்றிந்த போது நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் நள்ளிரவு மூன்று மணி ஆனதும் நண்பர்களெல்லாம் உறங்கச் சென்று விட்ட நிலையில் நானும் ராஜேஷும் ஹிந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.  ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியில் நான் ஆட ஆரம்பித்தேன்.  ராஜேஷ் அதைப் பதிவு செய்தார்.  அதை உடனடியாக ரீல்ஸில் போடச் சொன்னேன்.  போட்டார்.   

சென்னை திரும்பியதும் தோழியின் பரிகசிப்பு:  “டான்ஸா அது?  படு கேவலமாக இருந்தது.  இருபது பேர் கேட்டு விட்டார்கள்.  தயவுசெய்து அதை உடனடியாகத் தூக்குங்கள்.”

சிறு பிராயத்திலிருந்தே சுதந்தரமே உயிர் மூச்சென வாழ்ந்து வரும் எனக்கு இந்த அத்துமீறலெல்லாம் படு போசமான சீற்றத்தை ஏற்படுத்தும்.  என்றாலும் பொறுத்துக் கொள்வேன்.  பொறுத்துக் கொண்டேன்.

இது போல் ஒன்றல்ல, இரண்டல்ல.  சுமாராக நூறு இருக்கும்.  அதற்கும் மேலேயே கூட இருக்கலாம்.  

ஆனால் இப்போது நான் கண்ட இரண்டு காணொலிகளால் மேற்கண்ட கருமத்தையெல்லாம் நினைவு கூர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.  

ஒன்று, சௌம்யாவின் மகள் ஆடிய ஒரு நடனத்தின் ரீல்ஸ்.  ஏழெட்டு ஆண்டுகள் நடனப் பள்ளியில் படித்த மகள் சவ ஊர்வலத்தில் போடும் குத்தாட்டத்தைப் போல் ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறாள்.  தாய்க்கு அதைக் கண்டு ரோமாஞ்சனம் ஏற்பட்டு புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார்.  தப்பே இல்லை.  ஆனால் நான் ஆடினால் சாணி மிதி.  மகள் ஆடினால் ரோமாஞ்சனம்.  என்னடா இது நியாயம்?  இப்படி ஒரு குத்தாட்டம் போடுவதற்கா ஏழெட்டு ஆண்டுகள் ஒரு உயர்தரமான நடனப்பள்ளியில் படிக்க வேண்டும் என்று நான் கேட்க மாட்டேன்.  ஏனென்றால், எப்படி ஆடினாலுமே ஆட்டம் என்பது உடலின் மொழி.  

என்னோடு பழகும் நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், நான் அவர்களின் தோள் மீது கை போட்டுப் பேசுவதால் நானும் அவர்களும் ஒன்று என நினைத்துக்கொள்கிறார்கள்.  அப்படி அல்ல அது.  நான் உங்களுக்காக என் இடத்தை விட்டு இறங்கி வருகிறேன்.  சமத்துவம் பயில வேண்டும் என உங்களுக்குக் கற்பிக்கிறேன்.  எவர் மீதும் அதிகாரம் பிரயோகிக்கக் கூடாது என ஒரு செயல்பாட்டை நிகழ்த்துகிறேன்.  

ஆனால் நீங்களோ என்னையும் உங்களுக்குச் சமமாக நினைத்துக்கொண்டு என்னைப் பரிகசிக்கிறீர்கள்.  சமீபத்தில் ஒரு தோழி ஒரு விவாதத்தின் போது வழக்கம் போல் நீங்கள் உங்களுடைய கோணத்திலிருந்தே அணுகுகிறீர்கள் என்றார்.  வழக்கம் போல் என்ற வார்த்தையைக் கேட்டு வெகுண்டு எழுந்தேன்.  பேச நேரமில்லை.  இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை என்று விட்டு வைத்திருக்கிறேன்.  நான் ஒரு சிந்தனையாளன்.  எழுத்தாளன்.  என்னுடைய கோணத்திலிருந்துதான் ஒரு தத்துவப் பிரச்சினையை அணுகுவேன்.  அணுக வேண்டும்.  கதை எழுதும்போதுதான் ஒரு ரேப்பிஸ்டின் மனசுக்குள் செல்ல வேண்டியிருக்கும்.  ஒரு கோடீஸ்வரனின் மனசுக்குள் செல்ல வேண்டியிருக்கும்.  எக்ஸைல் நாவலில் பக்கிரிசாமி என்ற அத்தியாயத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாகவே மாறி எழுதியிருப்பேன்.  அந்த நாவலில் படு சுவாரசியமான அத்தியாயம் அது.   மிஷல் ஃபூக்கோ அதிகாரம் பற்றிப் பேசிய ஒரு தத்துவவாதி.  எந்தப் பிரச்சினையைக் கொடுத்தாலும் அங்கிருந்துதான் தொடங்குவார், அவர் வழக்கத்தின்படி.  அந்த்தோனின் ஆர்த்தோ மனநிலை பிறழ்ந்தவரா, அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் தேவையிருக்கிறதா என்று லக்கானிடம் கேட்கப்பட்டது.  லக்கான் ஒரு உலகப் புகழ் பெற்ற உளவியலாளர்.  பாரிஸின் மனநோய் நிறுவனங்களின் இயக்குனர்.  ஆனால் “வழக்கம் போல்” அவர் செயல்படவில்லை.  ஒரு சராசரி மருத்துவரைப் போல் ஆர்த்தோ மனநோய் விடுதியில் அடைக்கப்பட வேண்டியவர் என சான்றிதழ் கொடுத்தார்.  

எனவே நான் என் ”வழக்கப்படிதான்” பேச வேண்டும் என்று என்னிடம் வாதிட்ட சிறுமியிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.  இப்போதைக்கு நேரமில்லை.

இந்தப் பின்னணியில் என்னிடம் நடனம் பற்றி நீங்கள் பேசுவதாக இருந்தால், என் நடனத்தைப் பற்றிப் பரிகாசம் செய்வதாக இருந்தால், நடனம் பற்றி நன்கு அறிந்த ஒரு வல்லுநரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை உங்களுக்கு இருக்க வேண்டும். 

சில உதாரணங்கள் தருகிறேன்.  

உதய் ஷங்கர் (1900 – 1977) என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இவர் 1948இல் கல்பனா என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். கிட்டத்தட்ட இது அவரது சுயசரிதைதான்.   உதய் ஷங்கரும் அவர் மனைவி அமலாவும் நடித்த திரைப்படம்.  உதய் ஷங்கர் இயக்கிய ஒரே படமும் இதுதான்.  

இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம்.  பார்க்காமல் இருக்கலாம்.  அது உங்கள் விருப்பம்.  ஆனால் இந்தப் படத்தைப் பார்க்காமல் என் முன்னே வந்து நடனம் பற்றிப் பேசக் கூடாது.  என் நடனத்தைப் பரிகாசம் செய்யக் கூடாது.  

சௌம்யா, உங்களுக்கெல்லாம் நடனம் பற்றி என்ன தெரியும்?  உலகில் உள்ள அத்தனை நடன வகைகளையும் நான் நேரில் பார்த்தவன்.  தெய்யம் என்ற நடனத்தின் மகத்தான கலைஞர்களும் நேரில் நிகழ்த்துவதைக் கண்டவன்.  

கல்பனா திரைப்படத்தில் உதய் ஷங்கர் சிவனாகவே மாறியிருப்பார்.  அந்நாளைய பாலே நடன சூப்பர் ஸ்டாரான அன்னா பாவ்லோவாவுடன் சேர்ந்து சில நடனப் படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.  இவரிடம் அன்னாவும், அன்னாவிடம் இவருமாக நடனத்தைப் பயின்றிருக்கிறார்கள்.  சில காலம் கேரளம் வந்து தெய்யம் போன்ற நடன வடிவங்களைப் பயின்றார்.

இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்க இயலாது.  ஒரு காலகட்டத்தில் உதய் பாரிஸில் இருந்த போது கையில் பணம் இல்லை.  அதனால் பப்களில் போய் நடனமாடியிருக்கிறார்.  பப்புக்குப் போனால் குடிக்க வேண்டும்.  தவிர்க்க இயலாது.  பத்துப் பதினைந்து பெக்குகளை அவரால் தாங்க முடியவில்லை.  அதனால் மாலையில் பப்புக்குப் போகும் சமயத்தில் விளக்கெண்ணையைக் குடித்து விட்டுப் போவாராம்.  எழுதியிருக்கிறார்.   

இன்னொன்று –  என்னோடு நீங்கள் நடனம் பற்றிப் பேச வேண்டுமானால், ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய டான்ஸ் ஆஃப் ஷிவா போன்ற நூல்களை நீங்கள் வாசித்திருக்க வேண்டும்.  இல்லையென்றால், நடனம் பற்றி  நான் பேசுவதை இரு கரங்களையும் மடக்கியபடி கேட்டு விட்டு ஓடி விட வேண்டும்.  என் முன்னால் நின்று என்னைப் பரிகசித்தால் இதோ இந்தக் கட்டுரைதான் வரும்.   

நடனம் பற்றி நான் எழுதியுள்ள ஆயிரம் பக்கங்களில் ஒன்றைக் கூட நீங்கள் படித்ததில்லை.  நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் டான்ஸ் ஆஃப் ஷிவா பற்றி எழுதியிருக்கிறேன்.  அதன் சுருக்கம்:

1918இல் வெளிவந்த இந்த நூல் இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை மேற்கத்திய உலகுக்கு அறிமுகப்படுத்தும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பு. இதன் மையக் கட்டுரையான டான்ஸ் ஆஃப் ஷிவாவில் குமாரஸ்வாமி, சிவ தாண்டவத்தை cosmic dance என்கிறார். இந்த நடனம் சிருஷ்டி, பாதுகாப்பு, அழிவு, மாயை மற்றும் விடுதலை என்ற ஐந்து செயல்களைக் (பஞ்சகிருத்தியம்) குறிக்கிறது. சிவன் ஒரு காலை உயர்த்தி ஆடும் போது, அது அறியாமையை விரட்டும் அபயம் மற்றும் விடுதலையின் சின்னமாகிறது. மற்றொரு கை மணியை அசைத்து, அது பிரபஞ்ச இசையை (ஓம்) உருவாக்குகிறது. அவரது உடல் நெருப்பு வளையத்தில் இருப்பது, உலகின் சுழற்சிக்கும், நித்திய இயக்கத்துக்குமான குறியீடு.

இந்த நூலின் மூலம் குமாரஸ்வாமி இந்தியக் கலையை வெறும் அழகியல் பொருளாக அல்லாமல், ஆன்மீக உண்மையின் வெளிப்பாடாக விளக்குகிறார். இந்தியக் கலை முழுக்க ஒரு “யோகம்” அல்லது தியானத்தின் வடிவம் என்று அவர் வலியுறுத்துகிறார். மேற்கத்திய கலையின் இயற்கைவாதத்துக்கு (naturalism) எதிராக, இந்தியக் கலையின் உள்ளார்ந்த உண்மை (inner reality) மற்றும் குறியீட்டு அர்த்தங்களை (symbolism) முன்வைக்கிறார்.

நடனத்துக்கும் எனக்குமான பிணைப்பு பற்றி ஜோடிப்புறாவை எங்கே காணோம்? நாவலில் கொஞ்சமாகவும், Anatomy of Dissonance நாவலில் அதிக அளவும் எழுதியிருக்கிறேன்.  

அதில் என்னுடைய பகுதியில் நடனம்தான் Leitmotif. லீட்மோடிஃப் (leading motif) என்ற ஜெர்மன் வார்த்தை இலக்கியம், இசை மற்றும் திரைப்படத்தில் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப வரும் கரு, படிமம்.  இது கதையின் உணர்ச்சி, அர்த்தம் அல்லது மையக்கருத்தை வலுயுறுத்த உதவும் ஒரு கருவி.  இது சாதாரண மோட்டிஃப் போல் அல்லாமல் லீட்மோட்டிஃப் ஆக தொடர்ச்சியான குறியீட்டுத்தன்மை கொண்டது.  உதாரணமாக, வாக்னரின் இசையில் ஒரு கதாபாத்திரத்துக்குத் தனிப்பட்ட மெலடி லீட்மோட்டிஃப் ஆக இருக்கும். 

இலக்கியத்தில் அந்த்தோனியோ ஸ்கார்மேத்தா (சீலே) எழுதிய I Dreamt the Snow Was Burning என்ற நாவலில் கால்பந்தாட்டம்தான் லீட்மோட்டிஃப். அந்த நாவலில் கால்பந்தாட்டம் வெறும் பின்னணி அல்ல.  கதையின் அரசியல், தனிப்பட்ட ஆசைகள், சமூக உறவுகள் மற்றும் வரலாற்றுச் சூழலை ஆழமாக இணைக்கும் ஒரு தொடர்ச்சியான குறியீடாகச் செயல்படுகிறது.

இந்த நாவலின் மையக் கதாபாத்திரம்  ஆர்த்துரோ ஒரு கிராமத்து இளைஞன். அவன் சாந்த்தியாகோ நகருக்கு வருவதற்கு முக்கியக் கனவாக இருப்பது, புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாக ஆக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், எக்கச்சக்கமான பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஆர்த்துரோ அரசியலைப் புறக்கணித்து தன் கால்பந்தாட்டக் கனவில் மூழ்கியிருக்கிறான்.  கால்பந்தாட்டம் இங்கே அவனது தனிப்பட்ட ஆசையாக இருக்கிறது.  நாவல் முழுவதும் வரும் கால்பந்தாட்ட நேர்முக வானொலி வர்ணனைகளும், போட்டி விவரங்களும் நாவலின் அமைப்பையே பாதிக்கிறது.   

நாவலின் கதை 1973இல் சால்வதோர் அயெந்தேவின் காலகட்டத்தில் நடக்கிறது.  அதனால் கால்பந்தாட்டம் என்ற விளையாட்டு நாளடைவில் மக்களின் ஒன்று திரண்ட போராட்டம், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் அன்றாட அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பித்தல் என்பதாக மாறுகிறது.   

நாவலின் இறுதியில் (1973 செப்டம்பர் 11 ஜெனரல் பினோசெத்தின் ராணுவப் புரட்சி கால்பந்தாட்ட மைதானமான நேஷனல் ஸ்டேடியம் சித்திரவதை மையமாக மாறும் வரலாற்று உண்மையை நாவல் தொடுகிறது. இது கால்பந்தாட்டத்தின் leitmotif-ஐ சோகமான, இருண்ட குறியீடாக மாற்றுகிறது — கனவுகள் எரிந்து போவதைப் (snow was burning) போல்.

சுருக்கமாகச் சொன்னால், கால்பந்தாட்டம் இந்த நாவலில் leitmotif ஆகச் செயல்படுகிறது. நாவல் முழுவதுமே கால்பந்தாட்டம் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப வருகிறது, கதாபாத்திரங்களின் உளவியலை வெளிப்படுத்துகிறது, தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆசைகளுக்கு இடையிலான மோதலைக் காட்டுகிறது. மற்றும் அரசியல்-வரலாற்றுச் சூழலை ஆழப்படுத்துகிறது. ஆக, இங்கே கால்பந்தாட்டம் வெறும் விளையாட்டாக இல்லாமல் சமூகத்தின் கனவு, மாயை மற்றும் சீர்குலைவின் பிரதிபலிப்பாக மாறுகிறது.  .

உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சாந்த்தியாகோ நகரில் நான் இருந்த நாட்கள், நேஷனல் ஸ்டேடியத்துக்கு நான் சென்ற அனுபவங்கள், விக்தொர் ஹாரா அந்த ஸ்டேடியத்தில் வைத்து சித்ரவதை செய்து கொல்லப்பட்டது போன்றவற்றை நான் நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதியிருப்பதை இங்கே நினைவு கூரலாம்.

அதேபோல், என் வாழ்நாள் பூராவும் என் லீட்மோடிஃப்-ஆக இருப்பது நடனம்.  நடனம் பற்றி எத்தனையெத்தனை பக்கங்கள் எழுதியிருப்பேன்?  டென் டௌனிங் பப்பில் ஒரு பெண்ணோடு நான்கு மணி நேரம் ஆடியது, கடைசியில் அவள் என்னிடம் “உங்களைப் போய் பெண் பித்தன் எனத் திட்டுகிறார்களே, இந்த நான்கு மணி நேர ஆட்டத்தில் ஒரு தப்பான ஸ்பர்ஸம் கூட இல்லையே?” எனக் கேட்டது, ஜப்பானிய பப் அனுபவங்கள்… என்னைப் பற்றி அராத்து எடுத்த ஆவணப்படம் கூட ஒரு நடனத்தோடுதான் முடியும்.  பாங்காக் நகரில் நான் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த போது யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் என்னோடு ஆடிய காட்சி அது.  அந்தக் காட்சி மட்டுமே ஒரு ஹாலிவுட் படம் போல் இருக்கும்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?  நடனம்தான் உடலின் மொழி.  நடனம்தான் என் உயிர்த்திருத்தலின் அடையாளம். 

எழுபத்து மூன்று வயதில், ஒரு பப்பில் நூறு பேர் முன்னால், கூச்சமோ தயக்கமோ இல்லாமல் நடனமாடி, அதை ரீல்ஸில் போடுவது — இது பாராட்டுதலுக்குரிய விஷயம். இதைக் கேவலமானது என்று சொல்பவர், உண்மையில் என் தைரியத்தையும், கொண்டாட்டத்தையும் பார்த்து உள்ளுக்குள் பயந்து அல்லது பொறாமைப்பட்டு பேசுகிறார். 

இந்தியாவில் அறுபது வயதைத் தாண்டிய பிறகு பலர் “வயதானவன்” என்ற லேபிளை ஏற்றுக்கொண்டு, உடலை, ஆசையை, மகிழ்ச்சியை எல்லாம் அடக்கி வைத்துக்கொள்கிறார்கள். ஹார்ட் அட்டாக், சர்க்கரை வியாதி, மரண பயம் — எல்லாம் சேர்ந்து அவர்களை “நடனமாடக் கூடாது” என்ற நிலைக்குத் தள்ளுகின்றன. அல்லது, நடனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் அதை மீறி, உயிரோடு இருப்பதை, உடலை இன்னும் உணர்வதை, இன்பத்தைத் தேடுவதை வெளிப்படுத்துகிறேன்.. இது ஹெடோனிஸம் மட்டுமல்ல, அது உயிரின் வெற்றி. என் வாழ்வியல் கோட்ப்பாட்டின் வெற்றி.  

சௌம்யா என் நடனத்தைக் “கேவலமாக இருந்தது” என்று சொன்னது என்  நடனத்தைப் பற்றியதல்ல; அது சௌம்யா போன்றவர்களின் மனதில் கிடக்கும் “வயதானவர்கள் இப்படி நடந்துகொள்ளக் கூடாது” என்ற சமூக விதியின் வாந்தி.  இந்திய சமூகம் இன்னும் வயதானவர்களை “தாத்தா-பாட்டி” ரோலில் அடைக்க விரும்புகிறது. நான் அந்த ரோலைக் கிழித்தெறிந்துவிட்டேன். அதைப் பார்க்க சௌம்யா போன்றவர்களால்  தாங்க முடியவில்லை. அதனால்தான் பரிகாசம்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், எழுபத்து மூன்று வயதில் என்னால் இன்னும் உடல் முழுவதும் உயிர்ப்போடு இருக்க முடிகிறது என்பது சாதாரண விஷயம் அல்ல. பலர் இந்த வயதில் வீட்டுக்குள் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  நான்.ஊர் ஊராக, தேசம் தேசமாக பப் போகிறேன்.  நடனமாடுகிறேன், ரீல்ஸ் போடுகிறேன் — இதுதான் உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்ற தத்துவத்தின் பொருள்.  

ஹெடோனிஸம் என்பது “இன்பத்தைத் தேடுவது” மட்டுமல்ல; அது “வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பது”. நான் அதைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன்.. அதற்காக நான் வெட்கப்பட வேண்டும் என்று சொல்பவள் முழு மூடரே ஆவாள்.  

தோழி, எழுபத்து மூன்று  வயதில் நான் நடனமாடுகிறேன் என்றால், நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள். நீயும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படு, பரிகாசம் செய்யாதே.

மேலும் ஒன்றைச் சொல்கிறேன்.  நான் இந்த வயதில் இப்படி வாழ்வது ஒரு அரசியல் அறிக்கை. “நான் இறக்கவில்லை. நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். இன்பத்தைத் தேடுகிறேன்” என்ற அறிக்கை.

2

சமீபத்தில் ஒரு எழுத்தாளர் மரணம் அடையக் கூடாத வயதில் இறந்து போனார்.  அவர் ஒரு மகாத்மாவாக வாழ்ந்தவர்.  மகாத்மா என்றால் யாருக்கும் எந்தத் துன்பமும் தராமல் வாழ்பவர் எனப் பொருள்.  எல்லோருமே அவரது இரங்கல் குறிப்பில் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்.  ஒரே ஒருவரைத் தவிர.  ஆனால் எனக்கு ஒரு சாபம்.  யார் இறந்தாலும் அவரைப் பற்றிய சில அல்லது பல கசப்பான அனுபவங்களே எனக்குள் சேகரம் கொண்டு இருக்கும்.  

சச்சிதானந்தம் என்று ஒரு மகாத்மா.  ஜாலி மகாத்மா.  அவர் இருக்கும் இடமே களி கொண்டிருக்கும்.  சிரிப்புதான்.  எக்காளம்தான்.  ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் என்னை ஒரு தீண்டத்தகாதவனைப் போல் நடத்தினார்.  அவர் எதுவுமே செய்யவில்லை.  முப்பது ஆண்டுகளாக நாங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவரும் இருந்தாலும் என் பக்கமே திரும்ப மாட்டார்.  என் முகத்தை அவர் நேருக்கு நேர் பார்த்ததே இல்லை.  அவரை நான் பாராட்டுகிறேன்.  இன்றைய மனிதனைப் போல் மனதில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு இளிக்கும் ஈனச் செயலை அவர் ஒருபோதும் செயததில்லை.  அவருக்கு என் எழுத்து மலம்.  அதனால் அவர் என் முகத்தைப் பார்த்ததே இல்லை.  அவர் இறந்ததும் நான் அடைந்த அவமானத்தை எழுதினேன்.

அப்படித்தான் ஒரு நடிகர் அகாலத்தில் இறந்தார்.  விமர்சித்தே எழுதினேன்.  அவர் ஜாதி வெறி பிடித்து அலைந்தார்.  சினிமாவில் ஹிந்துக்களைக் கேலி செய்தார்.  பிராமணர்களைத் திட்டினார்.  

இப்படி ஒவ்வொரு மனித இறப்பும் எனக்குள் மிகக் கசப்பான எண்ணங்களையே தோற்றுவிக்கின்றன.

இப்போது இறந்து போன மகாத்மாவை நான் ஒரு ஐம்பது முறை பார்த்திருப்பேன்.  சிரித்த முகத்துக்குப் பேர் போன அவர் என்னைப் பார்த்ததும் மலச்சிக்கல் கொண்டவனைப் போலவே முகத்தைக் கோணுவார்.  அவர் வழக்கத்தையும் விட முடியாது.  அந்தப் பேர் போன சிரிப்பும் இருக்கும்.  அருவருப்பு உணர்வையும் மறைக்க முடியாது.  எனக்கே பார்க்க பாவமாக இருக்கும்.  வயிற்றுவலியில் துடிப்பவன் சிரித்தால் எப்படி இருக்கும், அப்படி இருக்கும் அவர் என்னைப் பார்த்து சிரிப்பது.

உயிர்மையிலிருந்து நான் பிரிந்த சமயம்.  மகாத்மா ஒரு பதிப்பகத்தில் பதிப்பாசிரியராக இருந்தார்.  அவரைத் தொடர்பு கொண்டு என் நூல்களைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டேன்.  முதலாளியின் பெயரைக் குறிப்பிட்டு, கேட்டுச் சொல்கிறேன் என்றார்.  

ஒரு வாரம் கடந்தது.  பதில் இல்லாததால் நானே அழைத்தேன்.  முதலாளியின் பெயரைக் குறிப்பிட்டு, மறுத்து விட்டார் என்றார்.  மறுத்திருந்தாலும் அதை இவரே அல்லவா என்னை அழைத்துச் சொல்லியிருக்க வேண்டும் என்று துணுக்குற்றேன்.

பிறகு பல ஆண்டுகள் சென்று தெரிந்தது, அவர் பதிப்பகத்தின் முதலாளியிடம் கேட்கவே இல்லை என்பது.  

எப்பேர்ப்பட்ட சில்லறைத்தனம் என்று தோன்றியது.  என் எழுத்தை மலம் என நினைப்பவர்களில் ஒருத்தர்.  சச்சியைப் போல் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக இருந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

இப்போது நான் அந்த எழுத்தாளர் பற்றி எழுத நினைக்கவில்லை.  அந்த எழுத்தாளருக்கு சௌம்யா எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பைப் பார்த்து விட்டுத்தான் இந்தக் கட்டுரையையே எழுதத் தோன்றியது.

சௌம்யா மகாத்மா எழுத்தாளரை ஒரு முறையோ இரண்டு முறையோதான் சந்தித்திருக்கிறார். சரியாக எனக்கு ஞாபகம் இல்லை.  அப்போது இருவரும் உணவு அருந்தியிருக்கிறார்கள்.  அதிலும் பிரச்சினை இல்லை.  அதில் வரும் இரண்டு குறிப்புகளே இந்தக் கட்டுரைக்குக் காரணம்.

”நீங்கள் என் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட போது..”…

ஓரிரு முறையே சந்தித்திருக்கும் ஒரு அன்பர் அகால மரணம் அடைந்து விட்டால் இப்படித்தான் “என் பக்கத்தில் அமர்ந்து” என்று எழுதுவார்களா?  அதில் என்ன விசேஷம் இருக்கிறது?  

எனக்கு ஜோடிப்புறா நாவல் ஞாபகம் வந்து விட்டது.  இந்த, “பக்கத்தில் அமர்ந்து” என்பதற்கே நூறு பக்கம் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.  கண்ணாயிரம் பெருமாளுக்கும் அநுத்தமாவுக்கும் தெய்வீக நட்பு.  அந்த தெய்வீக நட்பு ஏழு ஆண்டுகளில் முறிந்து போகிறது.  ப்ரேக் அப் ஒன்றும் இக்காலத்தில் ஒன்றும் அதிசயம் இல்லை.  ஆனால் அதிசயம் என்னவென்றால், ஏழு ஆண்டுகளாக க. பெருமாளின் “பக்கத்தில்” அமர்ந்து சாப்பிட்ட அநுத்தமா க. பெருமாளை பீச்சாங்கையால் தட்டி விட்டு, இருவருக்கும் பொது நண்பனான பட்டாபியின் “பக்கத்தில்” உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறாள்.  க. பெருமாளுக்கு எதிரிலேயே,.  இதைப் பார்க்கும் க. பெருமாளின் நண்பன் கொக்கரக்கோ க. பெருமாளை ஒரு நாள் காறித் துப்புகிறான்.  

மீதிக் கதையை ஜோடிப்புறா நாவலை வாங்கிப் படியுங்கள்.  முன்பதிவு செய்யப்படுகிறது.  இன்னும் இரண்டொரு தினங்களில் கையில் கிடைக்கும்.

அது கிடக்கட்டும்.  மகாத்மா எழுத்தாளர் பற்றி சௌம்யா எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இருந்த இன்னொரு விடயம்தான் படு பயங்கரம்.  மகாத்மா பாடும் ஒரு பாடலை காணொலியில் தவழ விட்டிருக்கிறார்.

நண்பர்களே, என்னை மன்னியுங்கள்.  மகாத்மா தன் கழுதைக் குரலில் அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.  சௌம்யா எழுதியது அஞ்சலிக் குறிப்பா?  அவதூறுக் குறிப்பா?  அந்த அளவுக்கு இருந்தது அந்த எழுத்தாளரின் குரல்.  நானாக இருந்தால் காணொலி எடுத்தவரை ஒரே போடாகப் போட்டிருப்பேன்.

கவனியுங்கள்.  நடனம் வேறு.  பாடல் வேறு.  நடனம் என்பது அந்தரங்க வெளிப்பாடு.  அதில் மற்றவரைத் துன்புறுத்தும் ஒரு அம்சம் கூட இல்லை.  உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் கண்களைத் திருப்பிக் கொள்ளலாம்.  ஆனால் பாடல் அப்படி இல்லை.  காதுகளை மூட முடியாது.  பாடல் விழுந்து கொண்டே இருக்கும்.  பாடல் என்பது சத்தம்.  சத்தம் இனிமையாகத்தான் இருந்தாக வேண்டும்.  உங்கள் அருகே நின்று சிமெண்ட் தரையில் தகரத்தை வைத்துத் தேய்த்தால் தேய்க்கும் ஆளை அடிப்பீர்களா இல்லையா?  அப்படி ஒரு கொடூர வதைதான் பாடத் தெரியாதவர் பாடுவதும்.  சித்ரவதை.  

ஆக, என் கேள்வி என்னவென்றால், ஒருவர் செத்துப் போனால் அவரது கழுதைக் குரல் பாடலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுப் பாராட்டுவீர்கள்?  ஆனால் ஒருத்தன் உயிரோடு இருந்து அவன் பாட்டுக்கு அவனுடைய கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து ஆடி, அதை ரீல்ஸில் போட்டால் கேவலமாக இருக்கிறது என்று பரிகசிப்பீர்கள்?  எந்த ஊர் நியாயம் இது?  உயிரோடு இருந்தால் செருப்படி.  செத்தால் மலர்மாலையா?  என்ன கேவலம் இது?

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

வாழ்வின் அடையாளம் என்ன?

கொண்டாட்டத்தின் அடையாளம் என்ன?

உயிர்த்திருத்தலின் அடையாளம் என்ன?

Just get up and dance! 

***

நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே,

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai