3. உல்லாசம் உல்லாசம்
நேற்றைய கட்டுரையின் இரண்டு அத்தியாயத்திலும் பேசியதை இப்போது இங்கே தொகுத்துக்கொண்டு மேற்கொண்டு ஆடுவோம்.
உடல் மொழி
வயதை மீறுதல்
சமூக விதிகளை உடைத்தல்
ஹெடோனிசம்
உயிர்த்திருத்தல்
எழுபத்து மூன்று வயதில், ஒரு பப்பில் நூறு பேர் முன்னால், கூச்சமோ தயக்கமோ இல்லாமல் நடனமாடி, அதை ரீல்ஸில் போடுவது — இது பாராட்டுதலுக்குரிய விஷயம்.
இது சாதாரண வாக்கியம் அல்ல. என்னுடைய existential declaration.
நேற்றைய கட்டுரையின் தத்துவப் பின்னணி உண்மையில் மூன்று மரபுகளுடன் இணைகிறது.
1.நீட்ஷே
I would believe only in a God who could dance.
இது பற்றி இன்று பேச இருக்கிறோம். நீட்ஷேவைப் பொருத்தவரை நடனமே வாழ்தலின் அடையாளம்.
2. Shiva – Cosmic Dance
இதை நேற்றே பார்த்து விட்டோம்.
3. Dionysian philosophy
Nietzsche சொல்லும் இன்னொரு பெரிய கருத்து:
Dionysian life – அதாவது,:
போதை
இசை
நடனம்
எக்ஸ்டஸி
என்னுடைய பப் அனுபவங்கள் இந்த வரிசையில் இருக்கின்றன.
***
டியர் சாரு,
நேற்றைய பதிவு ஒரு சிறுகதை போலவே இருந்தது. அதை சிறுகதைத் தொகுப்பில் சேர்க்க முடியாவிட்டால் அந்தப் பகுதியை உங்கள் நாவல் ஏதாவதொன்றில் சேர்த்து விடுங்கள். ஆனாலும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. சௌம்யா போன்றவர்களின் வார்த்தைகளை ஏன் இத்தனை ஆழமாக உங்களை பாதிக்கும் அளவுக்கு எடுத்துக் கொள்கிறீர்கள்? மதிப்புக் கொடுக்கிறீர்கள்? ”உங்கள் வழக்கம் போல்” என்று சொல்லும் சிறுமிகளுக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அதுவும் சிறுமிகளின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளலாமே? ஒரு சிறுமி உங்கள் அளவுக்கு யோசிக்க முடியுமா?
நேற்றைய கதையில் லீட்மோட்டிஃப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். பெட்டியோ நாவலில் நடனம்தானே லீட்மோட்டிஃப்? அதன் நாயகி நயநதினியிலிருந்து தொடங்கி அதில் வரும் அத்தனை சிங்களவர்களும் நடனமாடிக்கொண்டே இருக்கிறார்களே?
கொழும்புவில் உள்ள பெட்டியோ என்ற பப்பில் நீங்களும் – ஸாரி, கண்ணாயிரம் பெருமாளும் நயநதினியும் ஆடும் ஆட்டத்திலிருந்துதானே நாவல் ஆரம்பிக்கிறது? அதிலிருந்துதானே எல்லா கலவரமும்? அந்த நடனம் மட்டும் இருந்திராவிட்டால் அந்த நாவலே இல்லையே? பிறகு நாவல் முழுவதுமே நயநதினியின் ஆட்டம்தானே? கடற்கரையில் ஆடும் ஆட்டம்? பெட்டியோவைப் படித்த யாராலும் அந்தக் காட்சியை மறக்க முடியுமா? பெட்டியோவும் நடனமும் என்று எழுத ஆரம்பித்தால் அந்த நாவல் அளவுக்கே போய் விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
திருகோணமலை கடற்கரையில் ஒரு சிங்கள மீனவன், ”தமிழர்களிடம் உல்லாசம் இல்லை, கொண்டாட்டம் இல்லை” என்று சொல்வதையும் நினைவுபடுத்துகிறேன். ஜாஃப்கானிஸ்தானில் சிரிப்பையே பார்க்க முடியவில்லை என்று பல பக்கங்களில் எழுதியிருக்கிறீர்கள்.
அதோடு, இன்னொரு விஷயத்தையும் நீங்கள் இங்கே சேர்க்கலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பல கட்டுரைகளில் நீங்கள் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் ம்யூசிக் இன் கூபா (1946) புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, கூபாவின் இசை மற்றும் நடனம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அலெஹோ கார்ப்பெந்த்தியரின் நாவல்கள் பற்றித்தான் பலரும் அறிவார்கள். நீங்கள் மட்டுமே அவரது ம்யூசிக் இன் கூபா நூலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதற்குப் பிறகு அந்த நூலை வாங்கிப் படித்தேன். அதில் கார்ப்பெந்த்தியர் எழுதுகிறார்::
“With them, an orchestration close to the life source is obtained, evoking the universal consent of things moving to the rhythm of the dancing…”
(அந்த இசைக்கருவிகளுடன், வாழ்க்கையின் ஆதாரத்துக்கு நெருக்கமான ஆர்க்கெஸ்ட்ரேஷன் கிடைக்கிறது — எல்லாம் நடனத்தின் ரிதத்துக்கு இணங்கி அசைவது போன்ற ஒரு பிரபஞ்ச லயத்தை எழுப்புகிறது.)
மேலும், கூட்டு நடனம் (collective dance) பற்றியும் பல இடங்களில் அந்த நூலில் குறிப்பிடுகிறார்:: “Collective dance creates around it a whole process of initiation” — அதாவது, கூட்டு நடனம் என்பது ஒரு புதிய தொடக்கத்தை, விடுதலையை, கொண்டாட்டத்தை உருவாக்குகிறது. ஐரோப்பாவில் நாட்டுப்புற நடனம் தன் “magical evocative power”ஐ இழந்துவிட்டது என்று சொல்லும் கார்ப்பெந்த்தியர் கூபாவின் சான் (Son), ரும்பா, டான்சான் (Danzón) போன்ற நடனங்கள் இன்னும் சடங்குத்தன்மையையும், கொண்டாட்டத்தையும் தக்க வைத்துக்கொண்டிருப்பதாக எழுதுகிறார்.
இங்கே, நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கோணல் பக்கங்கள் தொடரில் கூப மக்களின் நடனம் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது. சொல்லப் போனால், கோணல் பக்கங்களின் மூன்று தொகுதிகளில் ஒரு முழுத் தொகுதி அளவுக்கு நடனம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதில் நீங்கள் குறிப்பிடும் ஒரு காட்சி: ”கூபர்கள் காலையில் பால் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது தங்கள் கையிலிருக்கும் டப்பாவைத் தட்டிக் கொண்டே ஒரு பெரிய கார்னிவலையே நிகழ்த்துவார்கள்.” இதை என் ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். நீங்கள் இதைப் பல பக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
ஸ்ரீராம்
டியர் ஸ்ரீராம்,
ஒவ்வொன்றாக வருகிறேன்.
சௌம்யா என் தோழியாக இருந்திராவிட்டாலும் என் எதிர்வினை இப்படித்தான் இருந்திருக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராகச் செயல்படும் ஒரு போராளி. காந்தியும் அப்படித்தானே இருந்தார்? சமூக நம்பிக்கைகளும் அவரது கோட்பாடுகளும் முரண்படும் வேளையிலெல்லாம் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இத்தனைக்கும் அவரை சமூகம் மகாத்மா என ஏற்றுக்கொண்டது. ஈ.வே.ராமசாமி என்ன செய்தார்? அவர் காலத்திய நம்பிக்கைகள் அனைத்தையும் சுக்குநூறாக நொறுக்கிப் போட்டார். மொழி மீதும் இனத்தின் மீதும் தேசத்தின் மீதும் மக்கள் வெறி கொண்டு அலைந்த போது பாஷாபிமானம், குலாபிமானம், தேசாபிமானம் ஆகியவற்றைத் தூக்கி எறியுங்கள் என்றார். சமூகம் அவர் சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் அவரைப் பெரியார் எனப் போற்றியது. அவரது இயற்பெயரே இன்று மறைந்துபோய் பட்டப் பெயரே நிலைத்து விட்டது. அந்த அளவுக்கு சமூகம் அவரைக் கொண்டாடியது.
எழுத்தாளர்களுக்கு அந்த வசதி இல்லை. அந்த அதிர்ஷ்டம் இல்லை. அதனால் எழுத்தாளனை சமூகம் தூற்றுகிறது. தூற்றப்பட்ட எழுத்தாளன் செத்துப் போன பின், அவனைக் கொண்டாடுகிறது. பாரதிக்கு நடந்தது. புதுமைப்பித்தனுக்கும் நடந்தது. இன்னும் நடந்துகொண்டே இருக்கும்.
ஆகவே, இங்கே சௌம்யா என்பது ஒரு தனிநபர் அல்ல. என் தோழி அல்ல. அவர் என்னைக் கேலி செய்ததும் பரிகாசம் செய்ததும் சமூகக் கூட்டுமனதின் வெளிப்பாடு. அவர் வார்த்தைகளை கவனியுங்கள். ”பத்து இருபது பேர் உங்களை லூசு என்கிறார்கள்.” அப்படிச் சொல்பவர்களைத் தாக்கும் திராணி சௌம்யாவுக்கு இல்லை. ஏனென்றால், அவரே அந்தப் பத்து இருபது பேரில் ஒருவர்தான்.
என் மதிப்புக்குரிய எழுத்தாளர் நண்பர் ஒருவர் சமீபத்தில் அகால மரணமடைந்த எழுத்தாளர் பற்றிய அஞ்சலிக் குறிப்பில் அன்னாருக்கு உல்லாசப் பழக்கம் எதுவும் இருந்ததில்லை என்று எழுதுகிறார். இதுதான் நேற்றைய என் கட்டுரையின் சாரம். உல்லாசம் என்பதற்கும் பழக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. உல்லாசப் பழக்கம் இல்லாத ஒரு எழுத்தாளரை எனக்குத் தெரியும். அவரைப் போன்ற ஒரு உல்லாசப் பேர்வழியை ஒருவர் பார்ப்பது அரிது. எப்போதும் சிரிப்பு. எப்போதும் கும்மாளம். போதையில் இருப்பவன் எப்படி இருப்பானோ அப்படித்தான் எப்போதும் இருப்பார். எழுதும் வேளையில் மட்டுமே அசுரனாக மாறுவார்.
ஒன்றை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். உல்லாசம் என்பது ஒரு மனநிலை. உல்லாசத்தை ஓர் தத்துவக் கோட்பாடாக நீங்கள் கொள்வீர்கள் என்றால் உல்லாசம் உங்கள் நிழலைப் போல் தொடர்ந்து வரும். நீங்கள் கிழட்டுத்தனத்தை எட்ட விடாமல் உங்களைத் திரும்பத் திரும்ப உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும்.
உல்லாசம் என்பது நடனம் ஆடுவது மட்டுமா?
பசியில் துடிக்கும் ஒரு நாய்க்கு உணவிடும்போது உங்கள் மனதில் ஒருவித கருணை சுரக்கும் பாருங்கள், அதன் பெயரும் உல்லாசம்தான்.
உல்லாசத்தை வரித்துக்கொண்டவர்களுக்கு மரணமே இல்லை. அவர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள். நிகானோர் பார்ரா 103 வயது வரை வாழ்ந்தவர். இந்திரா பார்த்தசாரதியின் வயது இப்போது 96. இன்னும் பத்தாண்டுகளைத் தாண்டுவார் இ.பா. குஷ்வந்த் சிங் நூறு வயது வரை குடித்துக்கொண்டு இருந்தார். சாகும் அன்று இரவு கூட விஸ்கி அருந்தி விட்டுத்தான் தூங்கினார் என்று அவர் புதல்வர் சொல்கிறார். இந்த மூவரும் உல்லாசத்தைத் தன் வாழ்வியல் கோட்பாடாகக் கொண்டவர்கள்.
இ.பா.வின் வாழ்விலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன். அவர் மகள் அமெரிக்காவில் இருக்கிறார். இ.பா.வுடன் சென்னையில் யாரும் இல்லை. மனைவியும் வெகு காலம் முன்பே காலமாகி விட்டார். இந்த நிலையில் ஒரு சராசரி முதியவர் என்ன செய்வார்? அமெரிக்காவுக்கு மகள் வீட்டுக்குத்தானே போவார்? இ.பா. போகவில்லை. அமெரிக்காவுக்கே செல்ல மாட்டேன். அமெரிக்க விமான நிலையங்களில் வேலை செய்பவர்கள் லும்பன்கள் என்றார். இங்கே அவருக்கு உதவியாக ஒரு இளைஞனை வைத்துக்கொண்டார். அவனைப் படிக்கவும் வைத்தார்.
இன்னொரு உதாரணம். இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி நாவல் வெளிவந்த சமயத்தில் காஃப்கா, கம்யூ போன்ற உலக இலக்கியக் கர்த்தாக்களை வாசித்திருந்த சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் முகத்தைச் சுளித்த போது இந்திரா பார்த்தசாரதி ஒருவர்தான் ஸீரோ டிகிரி பற்றி ஒரு கட்டுரையை எழுதினார். என் நாவலைப் பாராட்டி விட்டதால் இங்கே இ.பா. பற்றி நான் பேசவில்லை. செக்ஸ் நாவல் என்று எல்லோரும் அதை நிராகரித்த போது இ.பா. அதை சிலாகித்தார். வாழ்க்கையை ஓர் உல்லாச வெளியாகப் பார்க்க முடிந்த ஒருவரால்தான் அப்படிச் செய்ய முடியும்.
நிகானோர் பார்ரா மதுவை – குறிப்பாக வைனை – ஒரு தொடர்ச்சியான படிமமாகவே பயன்படுத்தினார். குடிக்கும் உணவுக்கும் பெரும் ரசிகராக இருந்தவர். அவர் தந்தை ஒரு குடி அடிமையாக இருந்ததால் பார்ரா குடி ரசிகராக இருந்தாலும் குஷ்வந்த் சிங் அளவுக்குக் குடிக்கவில்லை. தொண்ணூறு வயதுக்கு மேல் மதுபான விருந்துகளின் போது தேநீரோ பாலோதான் அருந்தினார்.
ஆனால் இவர்கள் அனைவரின் வாழ்விலும் உல்லாசமே அடியோட்டமாக இருந்தது. நான் உல்லாசம் என்று சொல்வதை பலரும் குடித்து விட்டு மல்லாந்து விடுவது என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
உங்கள் வாழ்வில் உல்லாசம் இல்லையேல் உங்கள் விதியை நீங்களே நிர்ணயித்துக் கொள்கிறீர்கள் என்று பொருள்.
நேற்றைய பதிவைப் பற்றி இன்னும் பேசுவோம்.
சௌம்யா ஏன் என்னைப் பரிகாசம் செய்து கொண்டே இருந்தார்? கேட்டால் நட்பின் காரணமாகச் செய்தேன் என்பார். எது? ”உங்கள் ஆடை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளுங்கள், எல்லோரும் உங்களை லூசு என்கிறார்கள்” என்றும். “ரீல்ஸில் வெளியிட்டுள்ள உங்கள் டான்ஸை நீக்குங்கள், சகிக்கவில்லை, இதோடு இருபது பேர் கேட்டு விட்டார்கள்; பதில் சொல்லிச் சொல்லி மாளவில்லை எனக்கு” என்றும் சீரியஸாகவே சொல்வதுதான் நட்பினால் சொல்வதா? அப்படிச் சொல்வது என் வாழ்வியல் கோட்பாட்டின் மீது நடத்தப்படும் தடியடி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்கர்ட் அல்லது ஜீன்ஸ் அணிந்திருக்கும் பெண்ணை நீ இனிமேல் மடிசார்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்வது எப்படிப்பட்ட வன்முறையோ அதே போன்ற வன்முறைதான் சௌம்யா என் மீது வைத்த பரிகாசங்களும் ஆகும். சௌம்யாவின் பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் நான் அறுபத்தைந்து வயதிலேயே செத்திருப்பேன். உல்லாசம்தான் என் உயிர்நாடி. அதை என்னிடமிருந்து எடுத்து விட்டால் என் உயிர் தங்குமா?
ஊருக்காக வாழ்ந்தால், ஊரில் நல்ல பெயர் எடுப்பதற்காக வாழ்ந்தால் ராமனின் கதை போல்தான் ஆகும். ராமனின் சரிதம் எத்தனை துயரகரமானது? கடைசியில் அவன் மனைவி தற்கொலை செய்து கொண்டாள். ராமனின் வாழ்வில் ஒரு துளி மகிழ்ச்சி உண்டா?
நான் ஊருக்காக வாழ்வதா? எனக்காக வாழ்வதா?
இதை நீங்கள் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இறந்து போன எழுத்தாளர் பாடிய காணொலியைப் பார்த்தீர்களா? சுரணையுணர்வு உள்ள எவராவது அப்படி ஒரு காணொலியை ஒருத்தர் இறந்து போன பிறகு வெளியிடுவார்களா? அந்த எழுத்தாளருக்காவது கொஞ்சம் சுரணை இருந்திருக்க வேண்டாமா? நாம் கழுதைக் குரலில் பாடுகிறோமே? அதை இந்த சௌம்யா விடியோ எடுக்கிறாரே? இதை அனுமதிக்கலாமா? யோசித்திருக்க வேண்டாமா? பெண்கள் என்ன செய்தாலும் ஈ என்று இளித்துக்கொண்டு சும்மா இருப்பதா?
சரி, அந்த எழுத்தாளர் இறந்த பிறகு அவர் கழுதைக் குரலில் பாடியதை வெளியிடுகிறீர்களே? அவர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட்டிருப்பார் என்றாவது உங்களுக்குப் புரிகிறதா? இப்போது பாருங்கள், என் எழுத்தைத் தன் வாழ்நாள் பூராவும் வெறுத்த ஒரு எழுத்தாளருக்காக, அவர் இறந்து போன பிறகு, வழக்காடிக் கொண்டிருக்கிறேன்.
4. ராஸ லீலா
நடனம் வாழ்க்கையின் ஒரு உருவகமாகத் தோன்றுவது உலகின் பல தத்துவ மரபுகளிலும் காணப்படும் ஒரு சுவாரசியமான விஷயம். மேற்கத்திய தத்துவத்தில் இதை மிகவும் வலுவாகச் சொன்னவர் நீட்ஷே. அவரது Thus Spoke Zarathustra நூலுடன் தொடர்புபடுத்திப் பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படும் இரண்டு வரிகள் உண்டு:
“I would believe only in a God who could dance.”
“And those who were seen dancing were thought to be insane by those who could not hear the music.”
இந்த இரண்டு வாக்கியங்களின் பின்னால் ஒரு பெரிய எதிர்ப்பு இருக்கிறது. நீட்ஷே வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய நாகரிகத்தை கிறிஸ்தவ அறநெறியும் துயரத்தை மகிமைப்படுத்தும் கலாச்சாரமும் ஆட்கொண்டிருந்ததாக அவர் எண்ணினார். அந்த மரபில் உடல் சந்தேகத்துக்குரியது; இன்பம் பாவமாகக் கருதப்பட்டது; கொண்டாட்டம் ஒழுக்கக்கேடாகப் பார்க்கப்பட்டது. வாழ்க்கை ஒரு கடமையாகவும் துன்பத்தைச் சுமந்து செல்ல வேண்டிய பொறுப்பாகவும் மாறிவிட்டது. மனிதன் அங்கே ஒரு குற்றவாளி போல் தன்னை நிரூபித்துக் கொண்டு வாழ வேண்டியவனாகிறான்.. இந்தக் கண்ணோட்டத்துக்கு எதிராகவே நீட்ஷே பேசினார். மனிதன் வாழ்க்கையை மறுக்கும் அறநெறியை அல்ல, வாழ்க்கையைக் கொண்டாடும் மனநிலையைத் தேட வேண்டும் என்றார். அதனால்தான் அவரது தத்துவத்தில் நடனம் ஒரு முக்கியமான உருவகமாக வருகிறது. நடனம் என்பது அவருக்கு உயிரின் சுதந்திரம்; உடலும் ஆன்மாவும் ஒன்றாகச் செயல்படும் லயம்; வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு நிலை.
இந்தச் சிந்தனை இந்திய மரபிலும் வேறொரு வடிவத்தில் தோன்றுகிறது. அது லீலை என்ற கருத்து. உலகம் கடமையாலோ தண்டனையாலோ உருவாக்கப்பட்டதல்ல; அது ஒரு லீலை — ஒரு விளையாட்டு, ஒரு கொண்டாட்டம் என்று வேதாந்த மரபு கூறுகிறது. இந்தக் கருத்தின் மிக அழகான உருவகமே கிருஷ்ணன் பற்றிய ராஸ லீலை. கிருஷ்ணனும் கோபிகைகளும் சேர்ந்து ஆடும் நடனம் வெறும் மதக் காட்சியாக மட்டும் அல்ல; வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
உலகம் கடமையாக அல்ல, லயமாக அனுபவிக்கப்படும் தருணம் அது. உலகம் ஒரு நீதிமன்றம் அல்ல; அது ஒரு மேடை. மனிதன் குற்றவாளி அல்ல; அவன் ஒரு நடனக் கலைஞன்.
அதைக் கருத்தில் கொண்டுதான் என் நாவலுக்கு ராஸ லீலா எனப் பெயரிட்டேன்.
நீட்ஷேவுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள ஒற்றுமையை கவனியுங்கள். நீட்ஷே வாழ்க்கையை உறுதிப்படுத்தும் சின்னமாக நடனத்தைப் பேசுகிறார்; இந்திய மரபில் கிருஷ்ணனின் ராஸ லீலை உலகத்தை ஒரு லீலையாகக் காணும் பார்வையை வெளிப்படுத்துகிறது. இரண்டிலும் ஒரு பொதுவான எண்ணம் உள்ளது: வாழ்க்கை தண்டனையோ சுமையோ அல்ல; அது ஒரு கொண்டாட்டம்.
உல்லாசம் பற்றி நான் சொல்வதும் இதையேதான். அது வெளிப்படையான கும்மாளம் அல்ல. அது ஒரு தத்துவம் — வாழ்க்கையை கடமையாக அல்ல, ஒரு லீலையாக அனுபவிக்கும் மனநிலை.
5. காற்றினிலே அசைந்தாடும் இலைகளைப் போலே…
என்னோடு பழகும் நண்பர்கள் — ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் — அனைவருமே “நீங்கள் ஒரு குழந்தை” என்று சொல்வார்கள். இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. ஏனென்றால், குழந்தைகள் சுயநலம், பிடிவாதம் போன்ற துர்குணங்களைக் கொண்டிருப்பதால் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது. ஆனால் என்னைக் குழந்தையோடு ஒப்பிடும் நண்பர்கள், என் வெகுளித்தனம், எதையும் யாரையும் எளிதில் நம்பிவிடும் தன்மை போன்ற காரணங்களால் அப்படிச் சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.
இன்னொன்றும் இருக்கிறது. என் வயது எழுபத்து மூன்று. என் நண்பர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களே. சிலர் நாற்பது. ஒன்றிரண்டு பேர் ஐம்பது. அதற்கு மேல் மூத்தவர்கள் ஒருவர் கூட என் நட்பு வட்டத்தில் இல்லை. இருந்தால் செத்தேன் — எழுபத்து மூன்று வயதுள்ள யார் என்னோடு சேர்ந்து பப்புக்கு வருவார்?
பப்களில் உள்ள நடனத்தளம் பெரும்பாலும் காலியாகவே இருக்கும். இப்போது இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பப்பில். முந்நூறிலிருந்து ஐநூறு பேர் இருக்கிறார்கள். நானும் என் முப்பது வயதுக்குக் கீழான நண்பர்களும் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறோம். எதிரே நடனத்தளம். நடனத்தளத்தில் யாருமே இல்லை. இசை அந்தப் பப் முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. எல்லோருடைய உடலும் உள்ளுக்குள் ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் நடனத்தளம் காலியாக இருக்கிறது. “நாம் மட்டும் போய் ஆடினால் பரிகசிப்பார்களே” என்று எல்லோருக்கும் தயக்கம். நான் மட்டும் எழுந்து போய் ஆடுகிறேன். பத்து நிமிடம் ஆடியதும் சில இளைஞர்கள் என்னோடு வந்து சேர்ந்துகொள்கிறார்கள்.
நான் இன்னும் குழந்தைத்தன்மை கொண்டிருப்பதால்தான் அப்படி யாருமே இல்லாத ஒரு நடனத்தளத்தில் சென்று ஆட முடிகிறது என்று நினைக்கிறேன். இதை எழுபத்து மூன்று வயதில் உங்களால் நிகழ்த்த முடியுமா? முடியுமானால் நீங்கள் மரணத்தை வென்றவராவீர்கள்.
இதை எழுதும்போது எனக்கு 13 Going on 30 (2004) ஹாலிவுட் திரைப்படம் ஞாபகம் வருகிறது. நாயகி ஜென்னா — வயது முப்பது, ஆனால் பதின்மூன்று வயது மனம். ஒரு அலுவலக பார்ட்டியில் சலிப்பாக உணரும் அவள், சக நண்பர்களை உற்சாகப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள். திடீரென்று மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர் பாட்டை போடச் சொல்லி, அந்த zombie-style நடனத்தை முழு உற்சாகத்துடன் ஆட ஆரம்பிக்கிறாள். தன்னுள் இருக்கும் சிறுமியை வெளியே கொண்டு வருகிறாள்.
அவளுடன் இழுத்து வரப்படுபவர் அவளது குழந்தைப் பருவ நண்பர் மேட்- மார்க் ருஃபாலோ. முதலில் அவர் ரொம்பவே தயங்குகிறார், சங்கடப்படுகிறார். படப்பிடிப்பின் போதுகூட மார்க் ருஃபாலோ “இந்தக் காட்சி எனக்கு ஒத்து வராது, படத்தை விட்டு விலகுகிறேன்” என்ற அளவுக்கு அசௌகரியம் அடைந்தார். ஜெனிஃபர் கார்னர் (ஜென்னா) அவரை இழுத்து, தள்ளி, கையைப் பிடித்து நடனத்தளத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
த்ரில்லர் பாடலுக்கு ஜென்னா ஆடும் தருணத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? பதின்மூன்று வயது மனம் முப்பது வயது உடலை ஆட்டுவிக்கிறது. தயக்கம், அசௌகரியம், சிரிப்பு, விடுதலை — எல்லாம் ஒன்றாகக் கலந்து, நடனம் ஆன்மாவின் மறைந்திருக்கும் மொழியாக மாறுகிறது. மார்க் ருஃபாலோவின் இயல்பான தயக்கமே காட்சியை இன்னும் அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் ஆக்கி விடுகிறது. சுற்றி இருந்த சலித்துப் போன மனிதர்கள் மெல்ல சேர்ந்து ஆட ஆரம்பிக்கிறார்கள்.
இதையே நான் பப்களில் தனியாக எழுந்து ஆடும்போது உணர்கிறேன். எனக்குள் ஒரு பதின்மூன்று வயது சிறுவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். முதலில் அவனும் தயங்குகிறான், சங்கடப்படுகிறான். ஆனால் என் எழுபத்து மூன்று வயது உடல் அவனை இழுத்து, தள்ளி, கையைப் பிடித்து நடனத்தளத்துக்குக் கொண்டு வருகிறது. அப்போது அவன் மெல்ல விடுதலையாகி சிரிக்க ஆரம்பிக்கிறான். சில இளைஞர்கள் அவனோடு சேர்ந்துகொள்கிறார்கள்.
Zorba the Greek படத்தின் இறுதிக் காட்சியும் இதைத்தான் சொல்கிறது. எல்லாம் தோற்று, கேபிள் கார் திட்டம் நொறுங்கிய பிறகு, பாசில் ஸோர்பாவிடம் “எனக்கு நடனம் கற்றுக் கொடுப்பாயா?” என்று கேட்கிறான்.
ஸோர்பா: “நடனமா? நடனம் என்றா சொன்னாய்? கமான் மை பாய்!”
பிறகு இருவரும் சிர்டாக்கி நடனத்தை ஆரம்பிக்கிறார்கள். ஸோர்பா “Whoopa! Whoopa!” என்று கத்துகிறான். வார்த்தைகள் குறைவு — ஆனால் அந்த நடனமே வாழ்க்கையைக் கொண்டாடும் மொழியாக மாறுகிறது.
ஸோர்பா தன் மகன் இறந்தபோது சொன்னது இன்னும் முக்கியமானது.
“When my little boy, Dimitri, died… everybody was crying. Me? I got up, and I danced… It was the dancing—only the dancing—that stopped the pain.”
மேலும்:
“A man needs a little madness, or else… he never dares cut the rope and be free.”
ஸ்ரீராம் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியது போல, என் எழுத்தில் நடனம் ஒரு முக்கிய லீட்மோட்டிஃப். அதை முழுமையாக வெளிப்படுத்திய நாவல் பெட்டியோ. கொழும்பு பெட்டியோ பப்பில் — அந்த இருண்ட, புகை மண்டிய, இசை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் சிறிய இடத்தில் — நயநதினியின் ஆட்டத்திலிருந்துதான் நாவல் தொடங்குகிறது.
நயநதினி ஆடும்போது அவளது இடுப்பு சர்ப்பத்தைப் போல் அசையும். தோள்கள் துடிக்கும். கண்கள் ஒருவித உற்சாகத்துடன் மின்னும். அவளது உடல் முழுவதும் இசையின் லயத்துக்கு அடிமையாகி, சுதந்திரமாக, எந்தத் தடையுமின்றி ஆடும். அந்த ஆட்டம் வெறும் நடனம் அல்ல — அது உடலின் மொழி, எதிர்ப்பின் மொழி, விடுதலையின் மொழி. அந்த ஆட்டத்தில் திடுதிப்பென்று சேர்ந்து கொள்கிறான் கண்ணாயிரம் பெருமாள். அதற்குப் பிறகுதான் எல்லா கலவரங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், வாழ்க்கையின் முரண்களும் உருவாகின்றன. நாவல் முழுவதும் நயநதினியின் ஆட்டம்தான் — பெட்டியோ பப்பில், கொழும்பு தெருக்களில், கடற்கரையில், வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் அவள் ஆடிக்கொண்டே இருக்கிறாள்.
பெட்டியோவைப் படித்த யாரும் அந்தக் காட்சிகளை மறக்க முடியாது. பெட்டியோ பப்பில் நயநதினியின் ஆட்டம் இல்லையென்றால் பெட்டியோ நாவலே இல்லை.
திருகோணமலை கடற்கரையில் ஒரு சிங்கள மீனவன் சொன்னான்: “தமிழர்களிடம் உல்லாசம் இல்லை, கொண்டாட்டம் இல்லை.” ஜாஃப்கானிஸ்தானில் சிரிப்பையே பார்க்க முடியவில்லை. நடனம் இல்லாத வாழ்க்கை மரணத்துக்கு நிகரானது.
இதே கொண்டாட்ட உணர்வை இன்னும் ஆழமாக, இன்னும் உயிரோட்டமாகக் காணலாம் கூபாவில். கூபா நடனத்தின் தேசம். அங்கே நடனம் வெறும் பொழுதுபோக்கு அல்ல — அது வாழ்க்கையின் மொழி, துயரத்தைத் தாண்டும் மந்திர மொழி, வறுமைக்கும் அரசியல் அழுத்தத்துக்கும் எதிரான கொண்டாட்டம். “La vida es un carnaval” — வாழ்க்கை ஒரு கர்நிவால் என்ற உணர்வு அங்கே குருதியில் ஊறியிருக்கிறது.
காலையில் பால் வாங்க வரிசையில் நிற்கும்போதுகூட கூபர்கள் தங்கள் கையிலிருக்கும் டப்பாவைத் தட்டிக்கொண்டே நடனம் ஆடுவார்கள். ஒரு சாதாரண வரிசை பெரிய கார்னிவலாக மாறிவிடும். தெருக்களில், சதுக்கங்களில், வீடுகளில், மரண வீடுகளில் என்று எல்லா இடங்களிலும் நடனம் ஆடியபடியே இருக்கிறார்கள் கூபர்கள்.
ரும்பா — ஆப்பிரிக்க அடிமைகளிடமிருந்து பிறந்த செக்சுவல், ஃபிளர்ட்டி நடனம். சான் — ஸ்பானிஷ் மற்றும் ஆஃபிரிக்க இசையின் கலவை, தெரு வாழ்க்கையின் சுவாசம். டான்சான் — கூபாவின் அதிகார பூர்வ தேசிய நடனம், மெதுவான, நேர்த்தியான ஜோடி நடனம். இந்த நடனங்கள் வெறும் அசைவு அல்ல; அவை சமூக ஒற்றுமை, எதிர்ப்பு, மகிழ்ச்சி, விடுதலை- எல்லாவற்றின் சின்னங்கள்.
கூப இலக்கியத்தில் இதை அழகாகப் பதிவு செய்தவர் நிகோலாஸ் கியெயென் (Nicolás Guillén). அவரது Motivos de son (1930) தொகுப்பு முழுவதும் சான் நடனத்தின் ரிதத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. அவர் சான்-ஐ “a passionate dance born of the Negro-white encounter under Caribbean skies… the basic substance of the elemental poetry which Guillen intuitively felt as the expression of the Cuban spirit” என்று வர்ணித்தார். நடனம் கியெயெனுக்கு வாழ்க்கையின் துடிப்பாகவும், அடையாளமாகவும், அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாகவும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் திகழ்ந்தது.
இதை மேலும் அழகாக விளக்கியவர் அலெஹோ கார்ப்பெந்த்தியர். அவரது Music in Cuba (1946) நூலில் அவர் எழுதுகிறார்:
“With them, an orchestration close to the life source is obtained, evoking the universal consent of things moving to the rhythm of the dancing…”
(அந்த இசைக்கருவிகளுடன், வாழ்க்கையின் ஆதாரத்துக்கு நெருக்கமான ஆர்கெஸ்ட்ரேஷன் கிடைக்கிறது — எல்லாம் நடனத்தின் ரிதத்துக்கு இணங்கி அசைவது போன்ற பிரபஞ்ச லயத்தை, உலகளாவிய ஒப்புதலை அது எழுப்புகிறது.)
கூட்டு நடனம் பற்றி கார்ப்பெந்த்தியர் சொல்கிறார்:
“Collective dance creates around it a whole process of initiation” — கூட்டு நடனம் ஒரு புதிய தொடக்கத்தை, விடுதலையை, சடங்கு சக்தியை, கொண்டாட்டத்தை உருவாக்குகிறது.
ஐரோப்பாவில் நாட்டுப்புற நடனம் தன் “magical evocative power”ஐ இழந்துவிட்டது என்று சொல்லும் கார்ப்பெந்த்தியர், கூபாவின் சான், ரும்பா, டான்சான் போன்றவை இன்னும் அந்த சடங்குத் தன்மையையும், உயிர்த்துடிப்பையும், ஆஃப்ரிக்க-ஸ்பானிஷ் கலவையின் உண்மைத்தன்மையையும் தக்க வைத்திருப்பதாக எழுதுகிறார்.
நான் பப்களில் ஆடும்போது ஏற்படும் தயக்கமும், பிறகு வரும் விடுதலையும் — Zorbaவின் “little madness” உடனும், கூபர்களின் கூட்டு நடனத்துடனும், பெட்டியோவில் நயநதினியின் ஆட்டத்துடனும் இணைத்துப் பார்க்கத் தக்கவை.
நடனம் என்பது ஆன்மாவின் மறைந்திருக்கும் மொழி.
அதைப் பேச அனுமதித்தால் போதும் — உள்ளம் தானாகவே ஆடத் தொடங்கிவிடும்.
விடுதலை, உல்லாசம், உற்சாகம், கொண்டாட்டம் – இதெல்லாம்தான் நடனத்தின் உண்மையான சாரம். நான் பப்களில் ஆடும்போது யாராவது என்னைப் பார்த்து சிரித்தாலும், “சாணி மிதிப்பது போல் ஆடுகிறாய்” என்று பரிகசித்தாலும், நான் அந்தத் தயக்கத்தைத் தாண்டி ஆடுவேன். ஏனென்றால், நடனம் என்பது யாருக்காகவும் அல்ல — என் ஆன்மா தன்னிடம் மறைக்கப்பட்டிருந்த மொழியை என் உடல் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த மொழியைப் பேச அனுமதித்தால் போதும் — உள்ளம் தானாகவே ஆடத் தொடங்கிவிடும்.
ஆனால் பப்களில் அப்படி யாரும் யாரையும் பரிகசிக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ரியாலிட்டியில் – கொண்டாட்ட வெளியில் – இருப்பவர்கள். ஆனால் என் நடனத்தைப் பரிகசிப்பவர்கள் அனைவரும் நான் நடனமாடும் கொண்டாட்ட வெளிக்கு வெளியே இருப்பவர்கள். என் நடனத்தை நேரில் பார்க்காமல் யூட்யூபில் இமேஜாகப் பார்ப்பவர்கள். இமேஜுக்கும் பௌதிக உருவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது? விருந்து என்ற வார்த்தைக்கும் உண்மையான விருந்துக்குமான வித்தியாசம் அது. ரியாலிட்டிக்கும் ஹைப்பர் ரியாலிட்டிக்குமான (Reality Vs Simulatrion) வித்தியாசம். என் ஆட்டத்தை வெளியிலிருந்து விமர்சிப்பவர்கள் கொண்டாட்டத்துக்கு வெளியே இருப்பவர்கள். அவர்கள் கொடுந்துயரிலும், தனிமையிலும் இருப்பவர்கள். சமூகத்தின் ஒழுக்க நெறிகளின் கயிறுகளால் கழுத்து இறுக்கப்பட்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள்.
***
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் என்னைக் கேட்டான்.
Why do you write?
I said, I write like a bird flies.
இப்பொது என்னிடம் யாரேனும் ஏன் நடனம் ஆடுகிறீர்கள் என்று கேட்டால் என் பதில்:
காற்றினிலே அசைந்தாடும் இலைகளைப் போலே ஆடுகிறேன்.
***
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே,
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai