அன்புள்ள சாரு..
உங்கள் மூன்று மணிநேர உரையை இரண்டாகப் பிரித்து இரு நாட்கள் நடத்தலாம் என்ற யோசனை நல்லதல்ல என்பது என் கருத்து
ஏன் ?
உங்களது எழுத்தும் உங்கள் பேச்சும் அறிமனதுடன் உரையாடுவதை விட அறிமனதில் அறிந்ததை உடைத்து ஆழ்மனதைத் தொடுபவை.
அனைத்தையும் மிகவும் அறிவுபூர்வமாகக் கட்டமைக்க முயலும் இந்தப் பைத்தியக்கார உலகில் தாக்குப் பிடிக்க நமக்கு ஒரு madness தேவை என்கிறார் கொர்த்தசார்
உங்களது உரை கல்லூரிப் பேராசிரியர் உரை அன்று. மனோதத்துவ செயல்பாடு ஒன்றை நிகழ்த்துகிறீர்கள்
அது எங்களுக்குள் நிகழ போதுமான நேரம் தேவை. ஒன்றரை மணி நேரத்தில் முடிப்பது என்பது கண் மூடி தியானத்தில் அமர்ந்து உள்ளொளி திகழ ஆரம்பிக்கும்போது தியானம் கலைந்தது போலாகி விடும்
மனப்பிறழ்வைப் பற்றி நீங்கள் பேசும்போது கீழ்க்கண்ட பிரபந்தம் நினைவு வந்தது
அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே
என்றென்றும் அன்புடன்;
பிச்சைக்காரன்
அன்புள்ள சாரு,
சுயநலமாகச் சொல்வதென்றால், இரவு எட்டு மணிக்கோ ஒன்பது மணிக்கோ ஆரம்பித்து நடுநிசி வரை அல்லது நடுநிசிக்குப் பிறகும் உங்கள் உரையைக் கேட்டு உங்களுடன் விவாதிப்பது இந்திய வாசகர்களுக்கு வசதியானது. வாசகர் வட்ட சந்திப்புகளில் விடிய விடியப் பேசுவோமே , அந்த உணர்வைத் தரவல்லது..
இரவின் ஆழ் அமைதியில் உங்கள் குரலில் உயரிய கருத்துக்கள் மூளையையும் அறிவையும் தாண்டி ஆழ்மனதுக்குச் சென்று விடுவதை வாசகர் வட்ட சந்திப்புகளில் உணர்ந்துள்ளோம்.
ஆகவே இரவில் ஆரம்பிப்பது மிக மிகச் சிறப்பானது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நேற்றைய உரையின் அனுபவத்துக்கு ஈடாகாது. இரவில் மட்டும் செயல்படும் நூலகம் பற்றிய கதை ஒன்றை எஸ்ரா எழுதியிருப்பார்.. நமது அராத்து இந்த அடிப்படையில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
ஆனால் இது சுயநலமான பார்வை
நீங்கள் இந்திய வாசகர்களுக்காக மட்டும் பேசவில்லை. மற்ற தேச வாசகர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் மலேசிய வாசகர்களுக்கு நள்ளிரவைக்கடந்திருக்கும்
அதேபோல அமெரிக்க வாசகர்களுக்கு பகல் நேரம் என்பதால் வேலைகள் இருந்திருக்கலாம் .
எனவே கேள்வி நேரத்தின்போது வருகைப்பதிவு சற்றே குறைந்தது.
ஆனாலும் பிரதான உரையின்போது அனைவரும் இருந்தனர்
ஆகவே நமக்கு இரவு உரைதான் வசதியானது , பிரத்யேக வாசகஅனுபவம் தரவல்லது என நினைக்கிறேன்.
மற்றபடி எந்த நேரமாக இருந்தாலும் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொண்டு உங்களுடன் இணைந்திருப்பதை அனைத்து வாசகர்களும் பெருமையாக நினைப்பார்கள்
அன்புடன்,
பிச்சைக்காரன்.
***
பிச்சைக்காரன் யோசிக்கின்ற ரீதியிலேயே நானும் யோசித்தேன். இரண்டு தினங்களாக உரையைப் பிரித்தால் அதில் பல சங்கடங்கள் நேரும். இரண்டு காலைகளையோ இரண்டு இரவுகளையோ நண்பர்கள் இழக்க வேண்டியிருக்கும். மேலும், நான் ஒன்றும் ரஜினி அல்ல, குடும்பமே கேட்பதற்கு. ஒருத்தர் மட்டும்தான் கேட்கிறார். மற்றவர்கள் அதை ஒரு நாள் பொறுத்துக் கொள்வார்கள். தினமும் பொறுக்க மாட்டார்கள். அம்மாதிரி சுதந்திரம் இந்திய வாழ்வில் ஆணுக்கும் இல்லை; பெண்ணுக்கும் இல்லை. இந்தக் கொரோனா காலத்தில் என் பொண்டாட்டி பண்ணும் கொடுமையைத் தாங்க முடியவில்லை என்று இன்று ஒரு எழுபது வயது ஆசாமி என்னிடம் புலம்பினார். அப்படி என்ன கொடுமை என்று கேட்டேன். அந்தப் பொருளை இங்கே வை, இந்தப் பொருளை அங்கே வை. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே. இது தப்பு. அது தப்பு. டார்ச்சர் தாங்க முடியவில்லை. இருபத்து நான்கு மணி நேர அடிமை வாழ்க்கை. ஏன், முன்னாலும் இதைத்தானே செய்து கொண்டிருந்தீர்கள் என்றேன். இல்லை. பேரன் பேத்திகளின் பள்ளிக்கூடப் பணியிலேயே சில மணி நேரம் போய் விடும். இன்னும் வாழ்க்கை வேகமாகச் சென்றதால் அவளுக்கு என் மீது கவனமும் கண்காணிப்பும் இல்லை. இப்போது அவளுக்கு என்னைக் கண்காணிப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை. பேரன் பேத்திகள்? அதுகளின் அப்பா அம்மாவும் வீட்டிலேயே இருப்பதால் அந்த வேலையை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். என்னென்னவோ பேசிக் கொண்டே போனார். பெரிய சுழல்வட்டப் புதிர்ப் பாதை. அதனால் ஒரே நாள்தான் மூன்று மணி நேரம். கேள்வி நேரம் தனி. மேலும், இந்த சந்திப்புகளை ஒருங்கிணைப்பதில் சதீஷ்வரின் பங்கும் இருக்கிறது. அவரையும் நான் இரண்டு தினங்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தக் கூடாது. எனக்கோ சுத்தமாகத் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் தெரியாது. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனவே, மாத இறுதி சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கே தொடரும்.
காலையில் வேண்டாம் என்றும் முடிவு செய்து விட்டேன். எனக்கு மட்டும்தான் அது சுறுசுறுப்பாக இருக்கும் நேரம். மற்ற பல நண்பர்கள் இரவில்தான் கலந்து கொள்ள முடியும். முக்கியமாக அமெரிக்க நண்பர்கள். அது அவர்களுக்குக் காலை நேரம். மேலும், வளைகுடா நாட்டு நண்பர்கள். சிங்கப்பூர், மலேஷியா மட்டும் அடிபடும். ஆனால் அங்கிருந்து ஒன்றிரண்டு பேர்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். அந்த ஒன்றிரண்டு பேரைத் தவிர என்னோடு தொடர்பு கொள்வோரே இல்லை. மொத்தமாக ஐந்து பேர் இருக்கலாம். அவர்களுக்கு நான் காணொலியையே அனுப்பி வைத்து விடுவேன். இன்னமும் அவர்கள் மு.வ. காலத்திலேயே இருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சம்சயம்.