கெட்ட பய, அராத்து !
சாருவின் மனைவி அவந்திகாவுக்கு என்னை பிடிக்காது என்று சாரு நேற்று எழுதி இருந்தார். ஆஹா இது ஒரு நல்ல மேட்டர் ஆச்சே , இதைப்பத்தி நாமும் ஒரு சின்ன கட்டுரை எழுதி விடலாம் என்று தோன்றியது.
அவந்திகாவுக்கு மட்டும் அல்ல , என்னுடைய எந்த நண்பரின் மனைவிக்கும் என்னை பிடிக்காது. அதோடு விஷயம் முடிவதில்லை. என்னுடைய எந்த தோழியின் கணவருக்கும் என்னை பிடிக்காது. என்னுடன் பழகக்கூடாது என்று கடுமையாக எச்சரிப்பார்கள். இதற்கே இந்த கணவர்கள் எல்லாம் பழமையான ஆட்கள் அல்ல. நவநாகரீக கோமான்கள் தான். மிகவும் சுதந்திரத்தோடு மற்ற ஆண் தோழர்களோடு பழக அனுமதிக்கிறவர்கள் தான். பார் , பப் , கிளப் போன்ற இடங்களுக்கு போக அனுமதிப்பவர்கள் தான். எல்லாவற்றிலும் சுதந்திரம் , அராத்துவுடன் பழகுவதைத் தவிர்த்து.
ஆனால் பாவம் , இப்படி கண்டிஷன் போடுவதால் என்ன ஆகிறது. மற்றவர்களை விட என்னுடன் தான் அதிகம் நட்பாக இருக்கிறார்கள்.அதிகம் பழகுகிறார்கள். என்ன எழவு “கள்ள நட்பு” !
ஆணோ பெண்ணோ , காதலில் கள்ளக்காதல் போல நட்பில் என்னுடன் கள்ள நட்பைத்தான் மெயிண்ட்டெயின் செய்ய வேண்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் என் பழக்க வழக்கமோ , என் கேரக்டரோ அல்ல. என்னைபற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கெல்லாம் முழுக்காரணம் , என் போஸ்டுகள் , என் கதைகள் மற்றும் அவ்வப்போது டிவியில் பேசும் பேச்சுக்கள்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசியதைக் கேட்டு , இனி இவனுடன் நட்பு பாராட்டாதே என்று ஒரு தோழியின் கணவர் தடை போட்டதாக தோழி வருத்தத்துடன் என் மனைவியிடம் புலம்பிக்கொண்டு இருந்தார். அதற்கு என் மனைவி சிரித்துக்கொண்டே , புக் ரிலீஸ் ஃபங்ஷன்ல பேசினதை கேட்டதுக்கே தடையா ? நேர்ல பேசறதை கேக்கணும் என்று சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரக்க , தோழியும் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
அவந்திகாவுக்கு என்னை பிடிக்காமல் போனதற்கு முக்கியமான காரணம் , நான் சாருவைக் கெடுத்து விடுவேன் என்பதுதான்!
மற்ற பல நண்பர்களின் மனைவிகளின் பயமும் இதுவே. அராத்து கூட சேந்து கெட்டு போய்விடுவார் நம் கணவர் என்று பயப்படுகிறார்கள்.
இது இன்று ஆரம்பித்தது இல்ல. பள்ளி நாட்களிலேயே என் நண்பர்களின் பெற்றோர்கள் என்னைப்பார்த்து மிரளுவார்கள். அவர்களின் பிள்ளையை கெடுத்து விடுவேன் என்ற பாசம் கலந்த பயம். ஓரிரு நண்பர்களின் வீட்டைத்தவிர யார் வீட்டுக்கும் செல்ல மாட்டேன். அவர்களின் பெற்றோர்களிடம் , சகோதர சகோதரிகளிடம் பழக மாட்டேன். சாரு சொன்னது போல , நைசாக தெரு முக்கில் நின்று கொண்டு சிக்னல் கொடுத்தால் வந்து சேர்ந்து கொள்வார்கள். பிறகு என்ன ? கூத்தடிப்போம்.
எங்கள் வீட்டில் இந்த பிரச்சனை இல்லை. என் தாய் தெளிவாக இருப்பார்கள். டேய் சீனு , ஜெயக்குமார் பாவம்டா , அவனை கூட்டிகிட்டு சுத்தி அவனைக் கெடுத்துடாதடா என்று என்னிடம் சொல்வார்கள். என்னை யாராலும் கெடுக்க முடியாது , நான் யாரையாவது கெடுத்தால்தான் உண்டு என்று தெளிவாக இருந்த அந்த தாயுள்ளத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
இதைச்சொன்னால் சிலர் வருத்தப்படக்கூடும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எனக்கு ஒருவருடன் நட்பு என்றால் அவருடன் மட்டுமே நட்பாக இருக்க முடிகிறது. நண்பனின் மனைவி , தாத்தா , மாமியார் , சகலை போன்றவர்களிடம் அந்த நட்பை நீட்டிக்க முடிவதில்லை. அதை செய்வது பிரம்மப் பிரயத்தனம். ஆக்சுவலி நண்பனின் அம்மாவை , மனைவியை , அப்பாவை சுலபமாக என்னால் இம்ப்ரெஸ் செய்ய முடியும். ஏன் ? எதற்கு எஃபர்ட் எடுக்க வேண்டும் ? என்ற திமிர்த்தனம் தான் அப்படி செய்யாமல் விடுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் . இந்த குடும்பத்தோடு உறவு பாராட்டுவது என்பது எனக்கு அலர்ஜி. நண்பன் வீட்டில் ஒண்ணு மண்ணு ஆகிவிட்டோம் என்று வையுங்களேன். அவர்கிட்ட நீங்க சொல்லக்கூடாதாண்ணா என்று மனைவி எப்போதேனும் கண்ணை கசக்கலாம். இதெல்லாம் தாண்டி ஆயிரெத்தெட்டு பாலிடிக்ஸ் வரும். போலியாக கன்னா பின்னாவென நடிக்க வேண்டி வரும். ஹி ஹி என்று வழிய வேண்டி வரும். முள்ளங்கி என்னா வெலை விக்கிது என்று அங்காலாய்ப்புகளுக்கு மண்டையை எட்டுத்திக்கும் ஆட்ட வேண்டி வரும். தேவையா ?
எனக்கு இந்த ஃபேமிலி பிரண்ட்ஸ் என்ற கான்சப்டே புரிவதில்லை. அது எப்படி ஐயா ஒரு ஃபேமிலியே இன்னொரு ஃபேமிலியிடம் நட்பாக இருந்து நட்பு பாராட்ட முடியும் ? விசித்திரமாக இருக்கிறதே !
இதற்குத்தான் நான் என்னுடைய சொந்த பந்தங்களிடமே வைத்துக்கொள்வதில்லை. அவன் அப்படித்தான் , நல்ல பயதான் , ஒரு மாதிரி கோவக்காரன் என்று என்னை தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் செல்வகுமார் கணேசன் மற்றும் கருப்புசாமி வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கிறேன். மூன்றாவது மாடியில் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும், அங்கே போய் பூந்து கொள்வேன். கருப்பின் மனைவியோ , செல்வாவின் மனைவியோ சமைத்து மேலே அனுப்புவார்கள். இதுவரை அவர்களை நான் பார்த்ததே இல்லை. ஒரு ஹாய் சொன்னது கூட இல்லை.
கடைசியாக மெயின் மேட்டருக்கு வருவோம். ஊர் என்னைப் பார்த்து கெடுத்து விடுவான் என்று பயப்படுவது இருக்கட்டும், வீட்டிலேயே அதே நிலைமைதான். நான் ஆழியிடம் என்ன சொன்னாலும் , அப்படியாம்மா ?என்று அம்மாவைக் கேட்பான். உண்மையாம்மா அப்பா சொல்றது? அப்பா சொல்றதை செய்யட்டுமாம்மா ? அப்பா இதைக் குடுக்குறாரு , சாப்பிடட்டுமாம்மா ? என்று கேட்டுத்தான் செய்வான். இமயா கொஞ்சம் மெச்சூர்ட் என்பதால் , அம்மாவைப் பார்ப்பாள். அம்மா சிக்னல் கொடுத்தால்தான் கேட்டுக்கொள்வாள். அம்மா, அப்பா கெடுத்து விடாதபடிக்கு டியூன் செய்து வைத்து இருக்கிறாள். இந்த செக்கையெல்லாம் மீறித்தான் என்னால் முடிந்த அளவுக்கு ஆழியையும் இமயாவையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு என்ன பெரிய பெருமை என்றால் , சாரு நிவேதிதா ஊரையே கெடுத்து குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறார் என்று அனைவரும் கரித்துக்கொட்டிக்கொண்டு இருக்க , அவரையே நான் கெடுத்து விடுவதாக அவந்திகா பயப்படுவதும் , என்னை வெறுப்பதும் , செம ஜாலியாக இருக்கிறது. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் ! இது எவ்வளவு பெரிய இடம் என்று அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும் !
உலகம் முழுக்க நல்லவர்களால் நிறைந்து கிடக்கிறது. நான் ஒருவன் மட்டும் தான் எல்லோரையும் கெடுக்க வேண்டும். எவ்வளவு சிரமமான காரியம். தனி ஒருவனாக இந்த காரியத்தை செய்வது பயங்கர சவாலான , சிரமமான விஷயம்.என்னால் முடிந்த அளவுக்கு செய்து முடிப்பேன் எனதை உறுதி பட தெரிவித்துக்கொள்கிறேன்.
அராத்து