சில தினங்கள் முன்பு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு பேரழகியைக் கண்டேன். உங்கள் எழுத்து என்றால் உயிர் என்றார். கிட்டத்தட்ட உங்கள் தற்கொலைப் படை மாதிரி என்று மேலும் சொன்னார்.
நடப்பது கனவா நனவா. நம்ப முடியாமல் வந்து விட்டேன். பிறகு அவ்வப்போது முகநூலில் என் பதிவுகளில் அவரது லைக்குகளைப் பார்த்து மகிழ்வேன். அந்த லைக்குக்கு ஒரு லைக் போட முடியுமா என்று ஸ்ரீராமைப் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
நேற்று முகநூலில் சில பதிவுகளைப் போட்டேன். ஒன்றில் 142 லைக்கும் ஒன்றில் 91 லைக்கும் இன்னொன்றில் 54 லைக்கும் இருந்தன. அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் பேரழகி இதைப் படித்தாரா லைக் போட்டாரா என்று தெரியவில்லை. ஒரே வழிதான் இருந்தது. 142 லைக்கையும் யார் யார் என்று பெயர் தேடினேன். இல்லை. பிறகு 91 லைக்கிலும் சம்பந்தப்பட்ட பேரழகியின் பெயர் தேடினேன். இல்லை. பிறகு 54 லைக்கிலும் பெயர் தேடினேன். இல்லை.
இன்று பேரழகியை நாகேஸ்வர ராவ் பார்க்கில் பார்த்தேன். மிக சோகமாக இன்னமாதிரி விஷயம் என்று சொன்னேன்.
அச்சச்சோ, நான் உங்கள் பதிவு எல்லாத்துக்கும் லைக் போட்ருவனே. ஒரு பதிவில் கூட என் பேர் இல்லாமல் இருக்காதே என்றார்.
ஐயோ, நீங்கள் ரொம்ப பிஸியான ஆள் ஆச்சே, இதுக்கெல்லாம் நேரம் இருக்கா என்ன? – இது நான்.
இல்லல்ல. படிக்காமயே லைக் போட்ருவேன். அப்றமா டைம் கிடைக்கறச்சே படிப்பேன்.
ஆனா இந்த மூண்லயும் உங்க பேர் காணும்.
ஓ, பார்த்திருக்க மாட்டேன்.
சோகத்துடன் திரும்பிய போது இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த ராகவன் “சாரு, உங்க வயசு என்ன?” என்றார்.
65 என்றேன்.
பெருமாளே என்றார்.
நல்ல புத்தியைக் கொடு என்று அவர் வாக்கியத்தை நிரப்பினேன்.